2012 புத்தாண்டே வருக !வருக! வருக!

1

செழியன்

பனி பொழியும்
மார்கழியில் மலரும் புத்தாண்டே !
நீ வருக !வருக ! வருக !
வளமும் நலமும் தருக !தருக !தருக!
மனம் உருக வேண்டுகிறோம் .
நீ …எங்களுடன்
உறவு கொள்வது என்னவோ 12 திங்கள்
அந்த 12 மாத உறவு காலத்தில்
விதைகள் முளைக்கிறது .
முளைத்த செடிகள்
அரும்பு வைக்கிறது .
அரும்பு மொட்டாகிறது .
மொட்டு மலராக விரிகிறது .
மணம் வீசுகிறது .
மலர் மாலை ஆகிறது .
மாலையானது …..
கருவறைக்கும் செல்கிறது
கல்லறைக்கும் செல்கிறது .
இடையில்தான் எத்தனை தடைகள் .
விதைத்த வித்தே
வீரியம் இல்லாமல் செத்து விடுவதுண்டு .
முளைத்து மூணு இலை விடுவதற்குள்
இளைத்து விடுகிறது பூச்சிகளால் .
களைத்துவிடாமல் எழுந்தாலும்
அரும்பு விடுவதற்குக் கூட விரும்பாமல்
ஆடுகள் கடித்துவிடுகிறது .
ஆடுகளின் தேடுதல் இல்லாத இடத்தில
வளர்ந்த செடிகளின் மலர்கள் …..
மழை மற்றும் வெயில்
கடந்து
கடைக்கு வந்து
மாலையாகி வாடுவதற்குள்
சாமிகளையும் -ஆசாமிகளையும்
அலங்கரித்து முடித்துக் கொள்கிறது வாழ்வை .
மலர்கள் நம்மை
வாசத்தால் மகிழ்விக்கிறது.
வண்ணத்தால் மகிழ்விக்கிறது .
எண்ணத்தால் எந்தொரு
எதிர்பார்ப்பும் இல்லாமல் .

புத்தாண்டே ! நீ ..வருக !
மலரின் எதிர்பார்ப்பு இல்லாத
எண்ணத்தை எங்களுக்கு தருக !

பொய்யாமல் பெய்யும் மழை
எங்களுக்கு வேண்டும் .
பெய்யாமல் பொய்யாகும் மழை வேண்டாம் .
நிற்காமல் பெய்து …நாங்கள்
நிற்கக்கூட முடியாமல்
நிலை தடுமாருமபடி இனியும் பெய்துவிடாதே .
நெஞ்சமெல்லாம்
ஆசைகளை அடைகாத்து -அவை
பொரிப்பதற்குள் அந்த பிஞ்சுகள்
எரிந்து போன கும்பகோண கொடுமை
இனி எங்கும் வேண்டாம் .
ஆர்ப்பரித்த கடல் —-சுனாமி என்ற பெயரில்
ஆயிரகணக்கான உயிர்களைப்
பறித்த நிகழ்வுகள் இனி வேண்டாம் .
நெருப்பால் ஏற்பட்ட ரணம்
ஆறுவதற்குள்
நீரால் பலருக்கு மரணம் .
புத்தாண்டே !
எங்களுக்கு மாற்றம் தேவை .
இதுபோன்ற ..தடுமாற்றமும் -ஏமாற்றமும்
எங்களுக்கு வேண்டாம் .
காவி அணிந்து கொண்டு
கொலை வெறி பிடித்தாடும்
பாவி எங்களுக்கு வேண்டாம் .
துறவு கோலம் பூண்டு
உறவு வைத்து கொள்ளும்
வேடதாரிகள் வேண்டாம் .
கொலையை கலையாக செய்யும்
தலைகள் வேண்டாம் .
தீவீரவாதி வேண்டாம் .
சந்தர்ப்பவாதி வேண்டாம் .
மிதவாதி-மதவாதி வேண்டாம் .
இந்த வாதிகள்
நாட்டில் பாதி ஆவதற்குள்
மழையாலும் -புயலாலும்
நீராலும் -நெருப்பாலும்
விபத்துகளாலும் வீழ்த்திவிடு அவர்களை .
ஏதும் அறியாத பிஞ்சுகளை -நெஞ்சுகளை வீழ்த்தாதே .

எங்கும் ….எதிலும்
அகிம்சை என்று இருந்த காலத்திலேயே
காந்திக்கு பரிசு துப்பாக்கிக் குண்டுகள் .
இன்றையச் சூழலில்
காந்தி இருந்தால் அவரே ….
ஏந்தி இருப்பார் AK 47 .
ஒரு ..
முண்டாசு கவிஞனையும்
மோகன் தாஸையும் நாங்கள் கேட்கவில்லை .
அவர்களுக்கு நாட்டுப் பற்று இருந்தது .
இன்றைய அரசியல்வாதிகளிடம்
நாட்டு பற்று அதிகமாகவே இருக்கிறது .
எதற்கு ?
நாட்டைப் பற்ற .
பற்று இருந்தால் தானே
வரவு இருக்கும் .
வரவு தனியாக வந்துவிடுமா?
பற்று இருந்தால்தானே வரும் .
பற்றுக பற்றற்றான் பற்றை -இது
வள்ளுவன் வாக்கு .
பற்றுக வளம் வற்றும் வரை பற்றுக .-இது
இன்று
அரசியலில் உள்ளவன் வாக்கு.

கொடி காத்தான் குமரன் .
குண்டடி பட்டு ஆனான் அமரன் .
அது நாட்டுப் பற்று .
இன்றும் கொடி காக்கிறார்கள் -கட்டுகிறார்கள் -எதற்கு ?
நாட்டுப் பற்றா? அல்ல
நாட்டைப் பற்ற .
நாட்டுக்காக …
செக்கு இழுத்தார்
செல்வந்தர் சிதம்பரம்பிள்ளை .
இன்று …
நாட்டுக்காக என சொல்லி
செக் மட்டுமல்ல …DD யும் இழுக்கிறார்கள் ….தாங்கள்
செல்வந்தர் ஆக ..
எங்களுக்கு …
புத்தன் வேண்டாம் .
புத்தன் வந்தால்
போதி மரம் கேட்பான் ஞானம் பெற .
இன்று எல்லோரும் ஞானம் பெற
இங்கு போதி மரம் இல்லை .
போதி மரம் மட்டுமல்ல
போதிய மரமும் இல்லை .
மீறி போதி மரம் கிடைத்தாலும்
ஞானம் பெற்று விழிப்பதற்குள்
பாதி மரத்தை இனிய தளத்தில்
விற்று விடுவார்கள் இன்றுள்ளவர்கள் .
எங்களுக்கு ..கலாம் வேண்டும் .
ஒன்றல்ல …
ஆயிரமாயிரம் கலாம்களை
எங்களுக்குத் தந்து கொண்டே இரு .
இந்தியாவின் தலைமகன் ….ஐந்து ஆண்டு காலம்
ஒரு விஞ்ஞானி இருந்திருக்கிறார் .
வியப்பாகவும் விசித்திரமாகவும் உள்ளது
அண்டை நாடுகளுக்கு .

புத்தாண்டே !
இந்தப் பத்தாண்டுகளில்
எங்கும் கணினி மயம்
எதிலும் கணினிமயம்.
இனி கணினி இல்லாத
வாழ்வும் -வணிகமும் இல்லை .
கணினியே ….
எங்களுக்கு கனி நீயே !
என்கிறது இளைய சமுதாயம் .
கனி கிடைக்காததாலே தந்தை இடம்
கோபித்துச் சென்றான் அன்றைய பாலமுருகன் .
கணினி கிடைக்காவிட்டால்
தந்தையிடம் கோபித்துக் கொள்கிறான்
இன்றைய பாலமுருகன் .
மனத்துக்கண் மாசிலன் வேண்டும் .
என்றார் வள்ளுவர் .
அவர் சொல்லி 2000 ஆண்டுகள் கடந்து விட்டது .
இன்னும் மனம் மாசுடனே இருக்கிறது .
மனம் மட்டுமல்ல
சுற்றுச் சூழலும் மாசு பட்டு விட்டது .
சற்றும் யோசிக்காமல்
அவர் அவர் பங்குக்கு
மாசை உற்பத்தி செய்கிறார்கள்
காசை பெறுவதற்காக .
அன்று
படிக்காத மேதை ஜி.டி. நாயுடு
வெடித்த பஞ்சில் வண்ணம் காட்டினார் .
வண்ண நீர் ஊற்றாமல் .
அது சாதனை .
உறக்கம் இழந்து கண்டுபிடித்த அவருக்கு
ஊக்கம் தரவில்லை .உயர்பதவி இல்லை .உதவித் தொகை இல்லை .

இன்று….
உற்பத்தி -தொழில் -அந்நியச் செலாவணி
என்று சொல்லி
நீரையும் மாசுபடுத்துகிறார்கள்
நிலத்தையும் மாசுபடுத்துகிறார்கள்
ஆழ்கிணறு தோண்டினால்
பல வண்ணங்களில் நீர் வருகிறது.
பார் பார் என்கிறார்கள் .
வண்ணப் பருத்தி காட்டியது சாதனை .
வண்ண நீர் காட்டுவது வேதனை .
புத்தாண்டே !
இந்த நிலை எங்களுக்கு வேண்டாம் .

புத்தாண்டே !

மாசில்லாத மனம் கொண்ட
மனிதன் வேண்டும் .
அந்த மனதில்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளதாக இருக்கவேண்டும்.
இன்னா செய்தாரை ஒறுக்காத குணம் வேண்டும் .
அந்த குணத்தால் உயர்ந்த சிந்தனைகள்
உள்ளத்தில் ஊற்று எடுக்கவேண்டும் .
மனித நேயம் மலர வேண்டும் .
மலரும் 2012 ஆம் ஆண்டே
நாங்கள் உன்னிடம்
வேண்டுவதும் விரும்புவதும் இதுதான் .
வருக ! வருக! தருக ! தருக !

 

* மகிழ்ச்சியாய் இரு ! மற்றவர்களை மகிழ்ச்சியாக்கி !!*

 

படத்திற்கு நன்றி : https://www.google.com/search?sourceid=chrome&ie=UTF-

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “2012 புத்தாண்டே வருக !வருக! வருக!

  1. a analytical poetry on present world and the existing situation of india u have rightly written what a real change with persons and personolities in india besides a change in the resources the nature what the god has provided to the nation solution is love one another as one loves himself manitha neyam mattumae kappatrum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.