பூத்திடும் புத்தாண்டு
சக்தி சக்திதாசன்
பறந்தோடியது ஒரு வருடம்
பாய்ந்து வந்தது புது வருடம்
புதுப் புது நம்பிக்கைகளை
பொலிவிக்கும் புத்தாண்டு
கடந்து செல்லும் வருடத்தினுள்
புதைந்து போன கனவுகள்
புதிதாய் மீண்டும் அரும்பாகி
புதுமலர்களாய் புத்தாண்டில்
மாற்றம் காண்பது இயற்கை நியதி
மாற்றி வைப்பது இறையின் கணக்கு
மனிதன் மனதில் கொள்வது ஒன்றே
மங்கா விளக்காய் நம்பிக்கையை
கேட்டது கிடைக்கவில்லை என்று
கொடுத்தது திரும்பவில்லை என்று
எடுத்தது நிலைக்கவில்லை என்று
எத்தனையோ ஏமாற்றங்கள் இருந்தாலும்
அடுத்தொரு வருடம் பிறந்திடும் போது
அதற்குள் கிடைத்திடும் மகிழ்ச்சிகள் எனும்
அசைக்க முடியா நம்பிக்கையுடனே
அடியெடுத்து வைப்போம் புதிய ஆண்டினுள்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது எதுவும் வந்து விடட்டும்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அதையும் தாங்கி இனிதே வாழ்ந்திடுவோம்
இழப்பது என்றும் எமது இல்லை
கிடைப்பதை எவரும் தடுத்திட வழியில்லை
அடுத்தவர் வாழ்வைக் கெடுக்கா வண்ணம்
அன்புடன் வாழ்ந்தால் தோல்வி இல்லை
நெஞ்சினில் துணிவோடு நடந்து
இதயத்தினில் கருணைதனை வளர்த்து
நாளைகள் எல்லாம் நலமாய் வருமெனும்
நம்பிக்கையுடன் நுழைவோம் புத்தாண்டிற்குள்
அனைத்து நெஞ்சங்களையும் உளம் நிறைந்த
அன்பு வாழ்த்துக்கள் தூவி மகிழ்ந்து
அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ
அன்புடன் எனது புத்தாண்டு வாழ்த்துகள்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படத்திற்கு நன்றி : http://www.meme4u.com/ecards/holidays/bengali_new_year/card_1103.htm
————————————————