முல்லை பெரியாறு : இயக்குநர்கள் சங்க உண்ணாவிரத போராட்டம் ரத்து – செய்திகள்

முல்லை பெரியாறு பிரச்சினையை முன்வைத்து ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தேனி மாவட்டம் வீரபாண்டியில் வரும் 08 ஜனவரி 2012 அன்று நடத்துவதென தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தை ரத்து செய்து தற்போது இயக்குநர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு:

“இந்தப் போராட்டத்திற்கு அனைத்து திரைப்பட சங்களின் ஆதரவையும் இயக்குநர்கள் சங்கம் கோரியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முடியாது’ என்றும் 1979ம் ஆண்டு முதல் 136 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. அதனால் அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தாலும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் உத்தரவு பிறப்பித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் கோரிக்கையை நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு நிராகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளதையொட்டி கேரள – தமிழக எல்லைகளில் ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டு இயல்பான நிலைமை திரும்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வரும் 8ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை இப்போதைக்கு கைவிடும்படியும், மீண்டும் அவசியம் ஏற்பட்டால் மொத்தத் தமிழ் திரையுலகமும் இணைந்து போராடலாம் என்று பல திரையுலகப் பிரமுகர்கள் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து 8 ஜனவரி 2012 அன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வது என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவு தேவை என்று கடிதம் எழுதியவுடனே, செயற்குழுவைக் கூட்டி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்த நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி மற்றும் நிர்வாகக்குழுவினருக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறது.

இப்படியொரு போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அதில் தாங்கள் கலந்துகொள்வதாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு உறுதியளித்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் உணர்ச்சிபூர்வமான ஒத்துழைப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறது.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *