பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 14

2

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

தமது முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் மீண்டும் எழுப்பியுள்ள கேள்வி.

“எழுத்து குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே.” இந்த எனது கூற்றினைத் திரும்பவும் ஆய்ந்து பதில் தாருங்கள். உலகில் மனிதர்களினால் எழுப்பக்கூடிய ஒலிகளில் அதிக எண்ணிக்கையானவை பேச்சுத் தமிழில் உண்டு. இது ஏன்? எங்களுக்கு தமிழ் ஏன் சரியாகப் புரியவில்லை? தமிழ் இலக்கணம் என்ன கூறுகின்றது?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

எழுத்து குறிப்பது ஒலிகளை. ஒலிகள் அவை பிறக்கும் இடத்தையும் முறையையும் வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. /ப்/ என்ற ஒலி பிறக்கும் இடம் உதடுகள்; பிறக்கும் முறை உதடுகள் மூடுதல். ஒரு மொழியிலுள்ள எல்லா ஒலிகளுக்கும் எழுத்து தேவை இல்லை. சொல்லில் ஒரே இடத்தில் வந்து பொருள் வேறுபாடு தரும் ஒலிகளுக்கு மட்டும் எழுத்து இருந்தால் போதும். இப்படிப்பட்ட ஒலிகளை மொழியியலில் ஒலியன்கள் என்பார்கள். ஒரு ஒலியனின் உச்சரிப்பு அது சொல்லில் வரும் இடத்தைப் பொறுத்து வேறுபடலாம். இப்படி வேறுபடும் ஒலிகளுக்குத் தனி எழுத்துகள் தேவை இல்லை. எழுத்து வரும் இடத்தால் அதன் உச்சரிப்பு பெறப்படும். தமிழில் கிழங்குகள் என்ற சொல்லில் முதலில் வரும் /க்/ உயிர்ப்பொலியாக இல்லாமல்  /k/ என்றும், மெல்லெழுத்துக்கு அடுத்து வரும் இரண்டாவது /க்/ உயிர்ப்பொலியாக /g/ என்றும், மூன்றாவதாக இரண்டு உயிர்களுக்கு இடையே உள்ள /க்/ உரசொலியாக /h/ என்றும் உச்சரிக்கப்படுகின்றன. மூன்று ஒலிகளும் வருமிடத்தால் வித்தியாசப்படுவதால் அவற்றைக் குறிக்க /க்/ என்னும் ஒரு எழுத்தே போதும். ஒரு ஒலியன் மூன்று ஒலிகள். எழுத்துகள் ஒலியன்களின் அடிப்படையில் அமைவது எழுத்து முறையின் சிக்கனத்தை, திறனைக் கூட்டும்.

இருப்பினும், பல மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கையும் எழுத்துகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பதில்லை. ஏனென்றால் ஒரு மொழியின் நெடுங்கணக்கு மரபுவழிப்பட்டது. மரபு, ஒலியனியலின் அடிப்படையில் அமையாமல் இருக்கலாம். மொழி மாறினாலும் மரபு மாறாமல் இருக்கலாம்.

உலக மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை நாற்பதுக்கு மேல் இருப்பது அபூர்வம் என்று மொழியியல் ஆய்வு காட்டுகிறது. இந்தப் பொது விதிக்குப் பேச்சுத் தமிழ் விலக்கு அல்ல. எழுத்துத் தமிழில் ஆய்த எழுத்தையும் கிரந்த எழுத்துகளையும் சேர்த்து எழுத்துகளின் எண்ணிக்கை 36. ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா என்னும் நாட்டில் பேசப்படும் !Xந்ம்  என்ற மொழியில் 112 ஒலியன்கள் உள்ளன. பாப்பா நியுகினியில் பேசப்படும் Rotokas என்ற மொழியில் 11 ஒலியன்கள் உள்ளன. இவை புறநடை.

தமிழ் இலக்கண நூல்கள், தமிழைப் பிற மொழிகளோடு ஒப்பிடும் ஒப்பிலக்கண நூல்கள் அல்ல. அதனால் அவை தமிழின் ஒலிகள் கூடுதல் என்றோ, குறைவு என்றோ கூறுவதில்லை.

மொழிகளின் பொது விதியின் புறநடையாகப் பேச்சுத் தமிழின் ஒலிகள் அதிக அளவில் இல்லாததால், ஒலிகளின் எண்ணிக்கை பேச்சுத் தமிழைக் கற்பதற்குத் தடையாக இருக்க முடியாது; அது புரிவதற்கு இடராக இருக்க முடியாது. தான் வளரும் சூழ்நிலையில் உள்ள தாய்மொழியைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ, அதில் எத்தனை ஒலிகள் இருந்தாலும் அதன் இலக்கணம் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும், ஒரு குழந்தைக்கு எந்த இடர்ப்பாடும் இருக்காது. கேள்வியில் உள்ள ‘எங்களுக்கு’ யாரைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. பேசும் தமிழை எழுதும்போது அதிக வித்தியாசம் வருவதால் எழுத்துத் தமிழைப் பள்ளிகளில் கற்கக் குழந்தைகள் நேரம் எடுக்கிறார்கள்.

தமிழைக் கற்பதில் மட்டுமல்ல, தமிழில் கருத்துகளையும் கற்பனைகளையும் வெளியிடும் திறனின் சக்தியைப் பெருக்கவும் தமிழ் வீட்டிற்குள் உறவாட உதவும் மொழி என்ற நிலையில் நிற்காமல் உலகோடு உறவாட உதவும் மொழி என்ற நிலையிலும் இயங்கத் தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளி நெருங்கிவர வேண்டும். மக்கள் பேசுவதை எழுத்தை நோக்கி மாற்ற இயலாது; அவர்கள் எழுதுவதைப் பேச்சை நோக்கி மாற்ற முடியும். இந்த மாற்றம் உச்சரிப்பைப் பற்றியது மட்டுமல்ல. பல அம்ச மாற்றம், ஊடகங்களிலும் கறபனை இலக்கியத்திலும் மெல்ல நடந்துகொண்டிருக்கிறது. இது பள்ளிகளில் எல்லாப் பாடங்களிலும் நிகழ வேண்டும்.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 14

  1. எங்களுக்கு என்ற ஈழ வழக்கு, நமக்கு என்ற தமிழக வழக்குக்கு இயைபானது.
    வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின் ஆங்கில, இந்தி, தெலுங்கு, கன்னட தாக்கங்களால் தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்கமுடியாது.
    தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி.
    பிபிசியின் நான்காவது வழித்தட உச்சரிப்பே ஆங்கிலத்தின் தராதர உச்சரிப்பு. ஆக்சுபோர்டு அகராதி தருவன தரமான ஆங்கிலச் சொற்கள், புதிய சொற்கள், பழைய சொற்களுக்குப் புதிய பொருள், இவை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் அகராதியால் தரமாகின்றன.
    விக்கிப்பீடியாவில் வருகின்ற ஈழத்தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?
    பேராசிரியர் அண்ணாமலை அவர்களுக்குப் புரியாதனவா நாம் சொல்லமுடியும்?

  2. பேராசிரியரே
    நீங்கள் சொல்லும் “தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளி நெருங்கிவர வேண்டும்”என்பது, முற்றும் யதார்த்த்ரீதியாகவும், பலனளிப்பவதாகவும் உள்ளது.

    உதாரணமாக க, ப, த, ச போன்ற எழுத்துகள் எங்கிருந்தாலும் , ஒவ்வொருவரும் – அதாவது தமிழ் பெசும் போது – ஒவ்வொரு விதமாக உச்சரிக்கின்றனர். ‘பம்மல்’எனும் ஊர்ப்பெயரை, /p/ம்மல், /b/ம்மல் என சொல்கிரனர், செல்வம் என்பதை /che/ல்வம் அல்லது /se/ல்வம் என உச்சரிக்கின்றனர். ஆங்கிலத்தில் சொல்வது போல், இவை மூழ்கிக்கிடக்கும் ஐஸ் மலையின் உச்சிதான் . டிகுளோசியாவைத் தவிர , இந்த எழுதும் சொல்லை உச்சரிப்பதிலும் பல குழப்பங்கள் உள்ளன.

    இதைத் தவிர இலக்கணமும் – அதாவது மரபு இலக்கனமும் – தற்காலத் தமிழை கையாள முடியவில்லை.

    அதைத் தவிர தமிழ் எழுத்தில் உள்ள ர/ற , உச்சரிக்கும் போது எந்த வித்தியாமும் கேட்க முடியாது. அதைப் போலத்தான் ந/ன வித்தியாசமும். இரு எழுத்துகள் ஒரே ஒலிக்கு.

    இதையெல்லாம் படித்த தமிழர்கள் எப்பொழுது , திட மனத்துடன் அலசி மாற்ரங்களை கொண்டு வரப் போகின்ரனர் என தெரியவில்லை.

    என் கணிப்பில் அப்படி நடக்கும் வரை, தமிழ் , தமிழ்நாட்டில், ஆங்கிலத்திற்க்கு இரண்டாம் வரிசையில் தான் நிற்க்கும் என்பது. நம் வாழ்க்கையில் அதன் தாக்கம் குறைந்து கொண்டு வரும். அதற்க்கு காம்பென்சேஷன் (நஷ்ட ஈடு) கொடுக்கும் வகையில் தமிழ் துதி வளரும்.

    விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *