பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 3

4

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாஸ் எழுப்பிய கேள்வி:

தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே. ஒலிகளை அல்ல. இன்று ஆசிரியர்கள் தமிழ் எழுத்து என்றால் என்ன என்பதைத் தவறாக அறிந்து வைத்துள்ளனர். பிறப்பிடத்தினை அசைத்து இயக்கும் விதத்தில் ஒலியன்கள் பிறக்கின்றன. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

எழுத்து என்ற சொல், தமிழ் இலக்கண நூல்களில் நாவால் ஒலிக்கும் ஒலி, கையால் எழுதும் எழுத்து என்னும் இரண்டு பொருளிலும் வழங்குகிறது. இன்றைய தமிழிலும் அதன் இலக்கண நூல்களிலும் இந்தச் சொல் இரண்டாவது பொருளில் மட்டுமே வழங்குகிறது. தமிழாசிரியர்கள் இந்தப் பொருளிலேயே இந்தச் சொல்லை விளங்கிக்கொள்கிறார்கள். இதில் தவறு எதுவும் இல்லை.

தொல்காப்பியம் தமிழை ஒலிக்கும் முறையையே விளக்குகிறது. மெய்யெழுத்துகளின் மேல் புள்ளி வரும் என்ற ஒரு சிறு குறிப்பைத் தவிர சமகாலத்து பிராமி எழுத்தை எழுதும் முறை பற்றி ஒரு செய்தியும் இல்லை.

ஒரு மொழியின் எந்த ஒலியையும் ஒலி பிறக்கும் இடம், ஒலியைப் பிறப்பிக்கும் முறை என்ற இரண்டு செய்தியையும் வைத்து விளக்கலாம். தொல்காப்பியம் முன்னதை வைத்தே தமிழ் ஒலிகளை விளக்குகிறது. நாவின் எந்தப் பகுதியும் அண்ணத்தின் எந்தப் பகுதியும் சேர்ந்து மெய்யெழுத்துகளை ஒலிக்கச் செய்கின்றன என்று பேசுகிறது. உயிரெழுத்துகளின் ஒலிப்பைப் பேசும்போது இந்த விபரமும் இல்லை. ஒலியைப் பிறப்பிக்கும் முறை, மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பகுப்பதோடு நின்றுவிடுகிறது.

ஒலியைப் பற்றிக் குறைந்த அளவே பேசினாலும், தொல்காப்பியரின் ஒலி பற்றிய அறிவு இன்றைய ஒலியிலாளர்களின் அறிவோடு ஒன்றுபட்டதாகவே உள்ளது.

=======================================

சின்சின்னாட்டி வேந்தன் அரசு எழுப்பிய கேள்வி:

எழுத்துச் சீர்திருத்தம் பற்றிப் பல வாதங்கள் சார்ந்தும் மறுத்தும் எழுந்துகொண்டு உள்ளன. இந்த உகர, ஊகாரக் குறிகள் சீர்திருத்தம், பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனைக் கூட்டுமா? அது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

கிரந்த எழுத்துகளின் உகர, ஊகாரக் குறிகளை எல்லா மெய்யெழுத்துகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற கருத்து, அரசு ஆணையிட்ட எழுத்துச் சீர்திருத்தத்தோடு முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழ் எழுத்துகளை எழுதுவது – முக்கியமாகக் கருவிகளின் துணைகொண்டு எழுதுவது, கற்பது எளிது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இது கள ஆய்வின் அடிப்படையில் வைக்கும் வாதம் அல்ல. அரிச்சுவட்டில் ஒழுங்குமுறை இருக்க வேண்டும், அதுவே தமிழின் நவீனத்திற்கு அடையாளம் என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் வைக்கும் வாதம். எழுத்துச் சீர்திருத்தத்தில் கருத்தாக்கம் பற்றி நான் முன்னொரு கேள்விக்கு எழுதிய பதிலைப் பார்க்கவும்.

=====================================

தேவ் எழுப்பிய கேள்வி:

தமிழகத்தின் சமய வரலாறு என்ன? அது ஆசீவகத்திலிருந்து தொடங்குகிறதா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

நான் சமயம் பற்றிய ஆய்வாளன் இல்லை. என்னுடைய ஆய்வு, மொழியைச் சார்ந்தது. தமிழ் அறிஞர்கள், தமிழ் தொடர்பான எந்தத் துறை பற்றியும் அந்தத் துறையின் சிறப்புப் பயிற்சி இல்லாமல் ஆய்வுக் கருத்துகள் கூறுவது ஆழமானதாக இருக்காது என்பது என் நிலைப்பாடு. இலக்கியம் காட்டும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் சமூகவியலும் படித்திருக்க வேண்டும். தமிழகத்தின் சமய வரலாறு பற்றி என் ஆய்வுக் கருத்துகளைச் சொல்ல எனக்குச் சமயத் துறையில் பயிற்சி இல்லை.

இருப்பினும், தமிழ் மாணவன் என்ற முறையில் நான் புரிந்திருக்கிற கருத்தைச் சொல்கிறேன். பிராமிக் கல்வெட்டுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் முன்னால் இருந்த தமிழர்களின் சமய மரபுகளைப் பற்றிச் சொல்ல நாம் இன்னும் போதுமான அகழாய்வு செய்யவில்லை.

நமக்குக் கிடைத்துள்ள எழுத்துப் பிரதிகளின்படி, நாட்டுச் சமயம், வைதீகச் சமயம், சமண சமயம், புத்த சமயம் எல்லாம் ஒரே காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவற்றில் சமண சமயத்தின் இருப்பு, தூக்கலாகத் தெரிகிறது. கடைசி மூன்று சமயங்களும் தமிழகத்திற்கு வெளியே இருந்து வந்தவை. அவை கிட்டத்தட்ட ஒரே காலக் கட்டத்தில் வந்திருக்கலாம்.

=====================================

சிவஹரி எழுப்பிய கேள்வி:

நாம் தமிழில் எழுதும் போது என் தோழி என்பதை என்றோழி என்று எழுதலாமா? வன்+தொடர் குற்றியலுகரம் = வன்றொடர் குற்றியலுகரம் என்பது போல?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

இப்படி எழுதுவது செய்யுள் மரபு. இதற்கு யாப்பிலக்கணம் காரணமாக இருக்கலாம். இது தமிழ் இலக்கண மரபும்கூட. நாவின் அசைவுகளைக் குறைத்து ஒலிகளை ஒரே பிறப்பிடத்திலிருந்து வரும்படி மாற்றி, ஒலிப்பு எளிமையைத் தருவது இந்தச் சந்தியின் பயனாக இருக்கலாம். இன்றும் ஒரு சொல்லுக்குள்ளே வரும் அகச் சந்தியில் இந்தத் திரிபு கட்டாயமாக இருப்பதைக் காணலாம். (எ-டு) தின் + த் + ஆன் > தின்றான்
ஆனால் இரண்டு சொற்களிடையே நடக்கும் புறச் சந்தியில், இந்த மாதிரியான திரிபு படிக்கும் எளிமை கருதி பெரும்பாலும் போய்விட்டது. சில தொகைச் சொற்களில் மட்டும் இத்தகைய திரிபு தொடர்வதைக் காணலாம். (எ-டு) பல் + பொடி > பற்பொடி & பல்பொடி. ஆனால், புல் + தரை > புல்தரை; புற்றரை என்று இன்று எழுதுவது அபூர்வம்.

தற்காலத் தமிழில், சந்தியில் எளிமையாக்கம் பற்றிய என் விரிவான கருத்துகளை க்ரியா வெளியிடவிருக்கும் Social Dimensions of Modern Tamil என்ற நூலில் காணலாம்.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார்.)

மேலும் படியுங்கள்:

பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 1

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 2

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 3

  1. எழுத்து குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே.
    இந்தக் எனது கூற்றினை திரும்பவும் ஆய்ந்து பதில் தாருங்கள்.

    உலகில் மனிதர்களினால் எழுப்பக்கூடிய ஒலிகளில் அதிக எண்ணிக்கையானவை பேச்சுத் தமிழில் உண்டு. இது ஏன்? எங்களுக்கு தமிழ் ஏன் சரியாக புரியவில்லை? தமிழ் இலக்கணம் என்ன கூறுகின்றது? இவைகளை அக்கறையுடன் ஆய்ந்துவிட்டு திரும்பவும் பதில் தாருங்கள்? சரியாக முன்னெடுப்போம்!!! இது உங்கள் கடமை.

    இப்படிக்கு
    ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *