பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 1
பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்கள், தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க இசைந்துள்ளார் என வல்லமை இதழில் அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகள் சிலவற்றுக்குப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அவை இங்கே:
முனைவர் தி.நெடுஞ்செழியனின் கேள்வி:
உலகில் முதலில் தோன்றிய மொழி, உலக மொழிகளின் மூலமொழி என்ற இரண்டு பொருளிலும் தமிழ் உலகின் முதல் மொழி என்று சொல்ல முடியாது என்பது தங்களின் கருத்து. தங்களின் ஆசிரியர் நோம் சோம்ஸ்கி அவர்கள், உலக மொழிகளுக்குத் தாய்மொழியாக ஆப்பிரிக்காவில் பேசப்படும் சுவாகிலி மொழியும் இந்தியாவில் பேசப்படும் தமிழ்மொழியும் அமைந்துள்ளன என்றும் இம்மொழிகளிலிருந்தே உலக மொழிகளின் வேர்சொற்கள் அமைந்துள்ளன என்று பிரண்டலைனில் கொடுத்த பேட்டியை ஒட்டி தினமணியில் செய்தி வெளிவந்துள்ளது.
பேரா. இ.அண்ணாமலை பதில்:
நான் அறிந்தவரையில் சாம்ஸ்கிக்கு மேலே உள்ள கருத்து இல்லை. அவருடைய பேட்டியின் நகலை அனுப்பினால் அவர் அந்தப் பேட்டியில் என்ன கருத்தைச் சொன்னார் என்று சொல்ல முடியும். எனக்குத் தெரிந்தவரை நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது மொழியிலாளர்கள் இந்தக் கருத்தை உடையவர்கள் அல்ல.
1. தமிழில் டிக்லோசியா – அதாவது பேச்சு, எழுத்து தமிழிற்குள் உள்ள பெரும் வித்தியாசத்தைக் குறைக்கும் வழிகள் – ஸ்ட்ரேடஜி யாவை?
2. தமிழ் செம்மொழியாக பிரகடனப்படுத்தியது இந்த டிக்ளோசியாசை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதா?
பேரா. இ.அண்ணாமலை பதில்:
டைகுளோசியா (diglossia) என்ற இரட்டை வழக்கின் இடைவெளி தமிழில் நெருங்கி வருகிறது. (Digolossic Convergence என்ற என் கட்டுரையை க்ரியாவின் வெளியீடாக வரவுள்ள Social Dimensions of Modern Tamil என்ற என் நூலில் காணலாம்). இரட்டை வழக்கு, சொற்றொடர் அமைப்பிலும் சொல்லின் பொருளிலும் நெருங்கி வருகிறது. வெளிப்படத் தோன்றும் சொல்கூட்டிலும் (spelling of words and suffixes) சொல்லின் ‘தூய்மையிலும்’ இரட்டை வழக்கின் இடைவெளி, பள்ளிப் படிப்பின் மூலம் காக்கப்படுகிறது.
இரட்டை வழக்கின் உயர் வ்ழக்கு மேலே சொன்ன நெருக்கத்தால் இப்போது செந்தமிழாக இல்லை. செந்தமிழ், பண்டிதர்களின் நடையாகச் சுருங்கிவிட்டது. செம்மொழித் தமிழுக்குத் தரும் பாராட்டு, செம்மொழி நடையைப் பிரதிபலிக்கும் செந்தமிழின் பெருமையைத் தமிழ் மாறிவரும் சூழ்நிலையில் காக்கத் துணை செய்யலாம். (இதைப் பற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள் நடத்தும், ‘நோக்கு’ என்ற இதழில் எழுதியிருக்கிறேன்). இதைத் தவிர, அரசு தந்த செம்மொழி அங்கீகாரம், தமிழின் இரட்டை வழக்கு நெருங்கிவரும் போக்கில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
செல்வா, வாட்டர்லூ, கனடா கருத்து:
1) இன்று பேச்சுத் தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதும் தேவை ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது. இதுவும் ஒரு அகக் காரணம். இந்தத் தேவையை நிறைவேற்ற, சில புதிய எழுத்துகள் – முக்கியமாக உயிரெழுத்துகள் – தமிழுக்குத் தேவைப்படலாம் என்னும் உங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை.
புதிய எழுத்துகளைச் சேர்க்கலாம்தான், ஆனால் இதற்காக எல்லா மொழி ஒலிகளுக்கும் எழுத்துகள் உருவாக்கத் தேவை இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் தன்னியல்பான உள்ளிசை, ஒலிகளுக்கு இடையே நல்லாறான உள்ளிசைவுகள் உண்டு. இதனை தற்கால மொழியலாளர்கள் மதிப்பதில்லை. மொழியியல் என்னும் போர்வையில் ஒருவகையான ஆங்கிலமொழி சார்ந்த மொழித்திணிப்பாண்மை பெருகுகிறது.
பேரா. இ.அண்ணாமலை பதில்:
இக்காலத் தமிழை எழுதச் சில புதிய எழுத்துகள் தேவைப்படலாம் என்றபோது தமிழ்ப் பேச்சைத் தமிழில் எழுதும்போது ஏற்படும் தேவையைப் பற்றிச் சொன்னேனே தவிர, ஆங்கிலப் பெயர்களையும் சொற்களையும் தமிழ் எழுத்தில் எழுதும் தேவையைப் பற்றிச் சொல்லவில்லை. முன்னது தமிழில் எழுதும் முறை பற்றிய பிரச்சனை. பின்னது தமிழில் எழுத்துப் பெயர்ப்பு செய்வது பற்றிய பிரச்சனை.
ஆங்கிலம் உட்பட, பிற மொழிகளிலிருந்து கடன் பெற்ற சொற்களைத் தமிழில் எழுதும்போது தமிழ்ப்படுத்துவது பற்றிய விதிகள் தமிழ் இலக்கண நூல்களில் உண்டு. கடன்பெற்ற சொற்கள் பெருகும்போது சில புதிய எழுத்துகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கிரந்த எழுத்துகள், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ் அரிச்சுவடி எல்லாக் கிரந்த எழுத்துகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் தேவையை நிறைவு செய்துகொள்ளும்.இயல்பு மொழிக்கு உண்டு.
2) தமிழுக்கு ஒரு இலக்கண மரபு உண்டு. இந்த மரபில் சில இன்றைய தமிழின் இலக்கணத்தை விவரிக்கப் போதுமானவையாக, பொருந்துவனவாக இல்லை என்ற உங்கள் கருத்துக்கு எதிர்வினை.
சிறு திருத்தங்கள் செய்யலாம், ஆனால் பெரிதாக திருத்தங்கள் செய்ய எந்தத் தேவையும் இல்லை. பலவும் செய்து தமிழைக் குட்டிசுவராக்கலாம், அதற்குப் புதுமை, முன்னேற்றம் என்னும் பெயர்களும் சூட்டலாம். பேரா. அண்ணாமலை போன்றவர்கள், தமிழ் மரபை அறிந்தவர்கள், இன்னும் துணிவாக எண்ண வேண்டும், தற்கால மேற்கத்திய வன்சாய்வுகளை இனம்கண்டு துணிந்துரைக்க வேண்டும்.
பேரா. இ.அண்ணாமலை பதில்:
இலக்கணத்தில் மாற்றம் செய்வது இலக்கண ஆசிரியர்களின் கையில் இல்லை. அது மொழியைப் பேசும் மக்களின் கையில் இருக்கிறது. அவர்கள் செய்யும் எல்லா மாற்றங்களையும் ஏற்காமல், இலக்கண ஆசிரியர்கள் தங்கள் கொள்கை அடிப்படையில் சிறிதாகவோ பெரிதாகவோ பழைய இலக்கணத்தில் திருத்தங்கள் செய்யலாம். இந்தத் திருத்தங்களைத் தங்கள் அதிகாரத்தின் வழி வகுப்பறைகளிலும் தேர்வுத் தாளிலும் நிலைநிறுத்தலாம். ஆனால், மக்கள் நாவில், எழுத்தில் திணிக்க முடியாது. இது மொழி பற்றிய வரலாற்று உண்மை. இதில் மேற்கத்திய சாய்வு எதுவும் இல்லை.
(பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)
தமிழ் எழுத்துக் குறிப்பது பிறப்பிடங்களை மட்டுமே. ஒலிகளை அல்ல.
நேரடியாக ஒலிகளை அல்ல. நேரடியாக பிறப்பிடங்களை மட்டுமே தமிழ் எழுத்துக் குறிக்கின்றது. இது எழுத்து என்பதன் மற்றய மொழிகளின் இலக்கணத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, சரியானது, விஞ்ஞானமுறை கொண்டது. இது என் அசைக்கமுடியாததும் சரியானதுமான கருத்து. பல ஆண்டுகளாக இந்த பிறப்பிடம் என்றால் என்ன எனும் எனது கருத்தை நடைமுறையாக்க முயன்றுவருகின்றேன். இன்று புலவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் எழுத்து என்றால் என்ன என்பதை தவறாக அறிந்துவைத்துள்ளனர். இதை சீர்மைப்படுத்தவேண்டும். உங்கள் கருத்து என்ன? பிறப்பிடத்தினை அசைத்து இயக்கும் விதத்தில் ஒலியன்கள் பிறக்கின்றன. இதுதொடர்பான உங்கள் கருத்து என்ன?
அன்புடன்
ஆவரங்கால் சின்னத்துரை சிறிவாச்̖.
sisrivas@yahoo.com
வணக்கம்..
நாம் தமிழில் எழுதும் போது என் தோழி என்பதை என்றோழி என்று எழுதலாமா? அது சம்பந்தமான விளக்கம் எனக்குத்தேவைப்படுகின்றது.
தெரிந்த அறிஞர் பெருமக்கள் விளக்கம் அளிக்க வேண்டிக்கொள்கின்றேன்!!
அதாவது
என்+ தோழி = என்றோழி
எ.கா:-
வன்+தொடர் குற்றியலுகரம் = வன்றொடர் குற்றியலுகரம் என்பது போல..
தண்டியலங்காரம் நோக்கினால் “த”கரம் வருமிடங்களில் “ற”கரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது..
விளக்கம் அளிப்பீர்
நல்வரவு. ஒரு ஐடியா. சில மடல்களில் பேசும் தமிழ் உபயோகித்தால், வாசகர்கள் கூடலாம்.