உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை

26

திவாகர்

விமானத்து எஞ்சினின்  சத்தம் உள்ளே மிக மெலிதாக  கேட்டாலும், திலீபனுக்கு  ஒருவேளை தாலாட்டு போல இருந்ததோ என்னவோ, அவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்ததை  பக்கத்திலே சாய்ந்துகொண்டு ஒருமுறை பொறாமையாகவே பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டேன்.

இத்தனைக்கும்  அவன் என்னை விட சற்று  இளையவன், ஆனால் படு டென்ஷன்  பார்ட்டி, எமோஷனல் மனுஷன்.. எதற்கெடுத்தாலும் தன் ஈழத்து சோகத்தை பேச்சில் கொண்டுவந்து  ஒருமுறை அழுதுவிட்டு பிறகு  சுறுசுறுப்பாகிவிடும் ஒருவிதமான டைப். அவன் இரண்டு தங்கைகளில் ஒருத்தி தியாகி பெண்புலி. அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணிபுரியும்போது, கொழும்புவில் தற்கொலைப் படையில் பணியாற்றிய போது யாராலோ எப்போதோ சுடப்பட்டு பலியானவள். அப்பாவும் அம்மாவும் ஈழத்தில் எங்கோ காவல் முகாம் ஒன்றில் இருக்க, இவனும்  இன்னொரு தங்கையும் கனடாவில் என்றோ, எப்படியோ குடியுரிமை பெற்று, இவன் எங்கள் கம்பெனியில் கனடா ஒட்டாவா கிளையில் வேலை செய்கிறான். இவன் தங்கை கனடாவில் கன்ஸ்யூமர் செயின் இல் வேலை செய்கிறாள். இருவருக்குமே நல்ல சம்பளம்தான் ஆனால் பாதிப் பணம் இன்னமும் ஈழத்துக்காகப் போய்விடுகிறது.. அது இவனுக்குப் பிடித்தது கூட.. தாய்நாடு என்றால் அது ஈழத்துக்கு இணையாகுமா என்ற பாட்டு அடிக்கடி பாடுவான். பிரபாகரன் கொல்லப்பட்ட விஷயம் இவனுக்குத் தெரியும் என்றாலும் ‘அது இருக்க முடியாது, என்றாவது ஒருநாள் திடீரென வருவார் சார், நீங்களே பாருங்கள்.. தலைவர் அப்படிப்பட்டவர்தான்’ என்று கூட அடிக்கடி சொல்வான்.. ‘சரி.. இது அவன் பாடு, நமக்கென்ன.. பிரபாகரன் உயிரோடு வந்தாலும் வராவிட்டாலும் என்னைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வேனே தவிர அவனிடம் அப்படி சொல்லமாட்டேன்.

பக்கத்தில்  திலீபனின் மெல்லிய குறட்டைச் சத்தம் இன்னும் வேகமாய்க் கேட்டது. எப்படித்தான் நினைத்த நேரத்தில் தூங்குகிறானோ… ஊம்ஹூம்.. நமக்கு இந்தப் பிறவியில் இவனைப் போல இந்த அதிருஷ்டம் கிடைக்காதுதான்.

என்னைப் பற்றிக்  கேட்கிறீர்களா.. சரி, இப்போது இப்படி பறக்கும் நேரத்திலேயே சொல்லிவிடுவது நல்லது. நான் பீற்றிக்கொள்ளவில்லை.. உண்மை.. லண்டனில் கீழே இறங்கினால் நான் எதுவுமே, என்னைப் பற்றிப் பேசமுடியாது. அப்படிப் பேசவும் பப்பி விடமாட்டாள். பப்பி அதாவது பத்மினி பிரியதர்சினி என்னுடைய காரியதரிசி.. இப்போது கூட அவள் முதல் விமானத்திலேயே அங்கு சென்று எனக்காகத் தயாராகக் காத்திருப்பாள். அப்படியே அவளிடம் என்னைப் பற்றி நீங்கள் கேட்க நினைத்தாலும் அவள் அடுத்த மாதத்தில் ஒரு இரவு நேர டின்னர் அப்பாயிண்ட்மெண்ட் போட்டுக் கொடுத்து, ‘அப்போது அவரிடம் பேசுங்கள் சார்..’ என்பாள்.. ரொம்ப ஸ்டிரிக்ட். இவளும் என்னைப் போல ஒரு தொழில்முறை மெண்டாலிடி.. நானே அவளிடம் பயப்படுவதாக என் மனைவியே சில முறைகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சொன்னதையெல்லாம் இங்கே விவரித்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையினால் இதோ இப்படி விமானத்தில் பறக்கும்போதே என்னைப் பற்றித் தெரிந்துகொண்டு விடுவது ரொம்ப நல்லது.

நான் ரொம்ப யதார்த்தவாதி, ரொம்ப ரொம்ப புரொஃபஷனல் னு எல்லோருமே சொல்வார்கள். அது உண்மைதான். இது வேகமான உலகம். அதிவேகமாகப் போகும் காலக்கட்டம்.. பாருங்கள் காலையிலே ‘ரேகி’யைக் கொஞ்சிவிட்டு, சென்னையிலிருந்து ஃப்ளைட் ஏறி, சுமார் இரண்டாயிரம் மூன்றாயிர,ம் மைல் தாண்டியாகிவிட்டது. மத்தியானம் கூட ஆகவில்லை.. இன்று மாலையில் லண்டன் ஏர்போர்ட்லேயே இரண்டு மணிநேர இடைவெளியில் முக்கிய சந்திப்பு.. அதற்காகவே திலீபனைக் கூட புராஜக்ட் ரிப்போர்ட்டோடு சென்னை தருவித்தேன்.. நாளை காலை நியூயார்க்.. அங்கே போய்விட்டால் நேரமாவது.. மண்ணாவது.. கிளையண்ட் கூடவே நான்கு நாள் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.. பிறகு மறுபடியும் ரிடர்ன் டு சென்னை.. மறுபடியும் இரண்டு நாள் ஆபீஸ்.. உடனே வழக்கப்படி ஆபீஸ் மீட்டிங்ஸ்; இதைப் போல ஊர் சுற்றல், அடுத்த ஊர் சுற்றல் நிகழ்ச்சி நிரல் எல்லாம் பப்பியைக் கேளுங்கள். அவள்தான் சொல்ல வேண்டும்.. என்னுடைய மொபைல் போனையே அவள்தான் நிர்வகிக்கிறாள்.

அப்படியும்  என்னிடம் வேறொரு மொபைல் வைத்திருக்கிறேன், அது ரேகி எனக்கெனவும், அவளுக்கெனவும் கொடுத்தது.. இப்படி நான் தனியாக வைத்திருப்பது பப்பிக்குப் பிடிக்காதுதான். அலுவல் வேளையில் அவளையும் மீறி அந்தக் குறிப்பிட்ட என் செல் போன் ஒலிக்கும்போதெல்லாம் முகத்தை வேறெங்கோ காண்பித்துக்கொண்டிருப்பாள், அதாவது நான் செய்வது அவளுக்குப் பிடிக்கவில்லை என்ற பாவனை.. நானும் சீக்கிரமாகவே ரேகியிடம் பேசிவிட்டு வைத்துவிடுவேன்.. பப்பியை அதிகம் வெறுப்பேத்துவது எனக்குத்தான் நல்லது அல்ல என்பதை அறிந்தவன், அதே சமயத்தில் பப்பியும் என்னைப் போலவே யதார்த்தவாதி, புரொஃபெஷனல் என்பதையும் உடனடியாக காண்பித்துவிடுவது போல, போன் பேச்சு முடிந்த அடுத்த வினாடியே வேலையில் இறங்கி விடுவாள். அதாவது நான் யாருடன் பெர்ஸனலாகப் பேசினாலும் தனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையென.

ரேகி ரொம்ப  அன்பானவள்.. ரேகா என்று முழுவதும் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் முகம் சுழிப்பாள். ரேகி என்னைப் புரிந்தவள்.. என் மனைவியாக அவள் வாய்த்ததற்கு நான் அதிருஷ்டம் செய்தவன் தான். இருந்தாலும் அவள்மேல் சரியாக அவளுக்கு நிகராக என்னால் அன்பு காண்பிக்க முடியவில்லைதான். என்ன செய்வது.. வேலை.. பிஸி.. பிஸி வேலை.. இன்று என்னுடைய பாஸ் உலகின், இந்த ஆண்டின் முதல் ஐம்பது டாப் பணக்காரர்களில் ஒருவன் என்று ‘டைம்ஸ்’ எழுதியதற்கு என்னுடைய உழைப்பும் ஒரு காரணம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.. அவன் அடுத்த வருடம் டாப் டென் இல் வருவதற்கு நான் கொஞ்சம் கூடவே உழைக்கவேண்டும்.. அதே போல பப்பியும் கூட.. அதே போல இன்னும் சில ஆட்களும் கூட, இதெல்லாம் வேகமான வாழ்க்கையின் அசாதாரணமான வேடிக்கைகள். சில, பலர் வாழ்க்கையைத் தியாகம் செய்ய, அந்தத் தியாகங்களிலிருந்து ஒருவர் கொழிக்கும் உன்னதமான விளையாட்டுகள்.. அவ்வளவுதான்.

ரேகியும் என் ஐந்து வயது குட்டிப் பெண் ராதியும் இன்று மாலத்தீவு போகிறார்கள். போகட்டும் ஒரு இரண்டு நாளாவது இவள் தன் பெற்றோருடன் ஜாலியாக இப்படி எங்காவது சென்று வரட்டும். குழந்தைக்கு என்னோடு எங்காவது வருவதென்றால் ஒரே ஆசைதான்.  நான் வெளியே ஒவ்வொரு தடவை செல்லும்போதெல்லாம் ராதியின் ஏக்கப் பார்வை என்னை என்னவோ செய்யும். அடுத்த வருடம் எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று ஒரு இரண்டு நாள் இவர்களுடன் ஒரு டூர் போடவேண்டும்.. இதை அடிக்கடி ரேகியிடம் சொல்லும்போதெல்லாம் அவள் அதற்கு அழகாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, முதலில் ஒரு முழுநாள் எங்களுடன் இந்தச் சென்னையில் இருந்து பாருங்கள், என்பாள்..

அவள் சொல்வது  சரிதான். ஆகா.. முழு நாளா.. ஒருமுறை பப்பியிடம் கூட இதை வேடிக்கையாகச் சொன்னேன். அவள் சீரியஸ் ஆக எடுத்துக் கொண்டு, ‘இன்னும் இரண்டு வருடம் வரை அந்த சான்ஸ் இல்லை சார்.. என் ஹஸ்பெண்டும் இப்படித்தான் என்னைப் போட்டு நச்சரிக்கிறார்.. பட்.. நான் முழுவதும் செக் பண்ணியாயிற்று.. இரண்டு வருடங்கள் வரை எந்த சந்தர்ப்பமும் இல்லை சார்.. ஒரே ஒரு சான்ஸ், நாம சீரியஸா ஏதாவது ‘சிக்’ ஆகவேண்டும், இல்லைன்னா நாம இந்த குரூப்லேர்ந்து ராஜினாமா பண்ணாதான் உண்டு சார்.. அப்ப கூட சான்ஸ் கிடைக்காதுன்னு நினைக்கிறேன். இப்போ நாம ரிசைன் பண்ணா, நம்மைக் கொத்திட்டுப் போக ஒரு கூட்டமே இருக்கு சார்’ என்று சொல்லிவிட்டாள். பப்பி என்னை விட படு பிராக்டிகல்..

இன்னும் நான்கு மணிநேரமாவது ஆகும். இந்த திலீபன் என்னைப் போல எந்த விதக் கவலையும் இல்லாதவன் போல இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். பப்பி லண்டனில் இந்நேரம் படு பிஸியாக இயங்கிக்கொண்டிருப்பாள். கூடவே வேறு சில வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். மாலை அவர்களுடன் விமான நிலையத்திற்கு வருவாள்.. ஆச்சு, திலீபனிடம் புரொஜெக்ட் ரிப்போர்ட் கைவசம் கச்சிதமாக வைத்திருக்கிறான். அங்கே ஏர்போர்ட்டிலேயே கையெழுத்தானதும், அடுத்த விமானத்தில் நான், பப்பி, திலீபன் மூவரும் அமெரிக்கா சென்று வழக்கப்படி ஓடவேண்டும்..

விமானத்தில் திடீரென ‘குர்ர்’ ரென மைக் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், படுத்திருந்த எல்லோரும் அசைந்துகொண்டே தலையை நிமிர்த்திப் பார்த்தனர். விமானத்தில் பைலட் பேசினான். லண்டன் விமானத் தளம் மூடப்பட்டுள்ளது. புகை மண்டலம் காரணமாக பல மேற்கு ஐரோப்பிய விமானத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. நாம் இன்னும் அரை மணிநேரத்தில் ‘பெய்ரூட்’ விமானத் தளத்தில் இறங்கப் போவதாகவும், அங்கே சில மணி நேரங்கள் கழித்து, வான்வெளி சிக்னல் கிடைத்தவுடன் லண்டன் பயணப்படுவோம் என்றும் ஆறுதல் கூறினான். திலீபன் இதைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் பேசினான்..

“சார்.. சில  மணிநேரங்கள் என்றால் எத்தனை மணிநேரமோ, நாம லண்டன்  முடிந்ததும் நியூயோர்க் போகணுமே சார்”

“கவலைப்படாதே  திலீபன்.. இது செயின் ரியாக்சன்.. லண்டன் ஏர்போர்ட் மூடிவிட்டார்கள் என்றால்  அங்கிருந்து எந்த விமானமும்  கிளம்பக் கூட முடியாது.. அதைப்  பற்றி பப்பி பார்த்துக்கொள்வாள்..”

என்னை மறுபடியும் வெட்டினான் திலீபன். “சார்! ஆனால் பெய்ரூட் ஏன் சார் இறங்கவேணும்.. ரொம்ப அபாயகரமான விமானத் தளம் சார்.. குறைந்தபட்சம் பேரீஸ் போனாலும் சுகமாய் இருக்குமே”

அவன் கவலையை மறுபடி மைக் மூலம் வந்த பைலட்டின் குரல் அதிகப்படுத்தியது.

‘பெய்ரூட்டில் பாதுகாப்புப் படையினர் ஏர்போர்ட்  வளாகத்தில் பிரயாணிகள் இறங்க  அனுமதி மறுக்கிறார்கள். ஆகையினால் அங்கே இருக்கும் காலம் வரை விமானத்திலேயே நாம் இருக்க வேண்டும். குளிர்சாதன வசதி, சாப்பாடு இவை அனைத்துக்கும் நாங்கள் பொறுப்பேற்கிறோம். அதிகம் கவலை வேண்டாம். கூடிய விரைவில் சிக்னல் கிடைக்க முயற்சி செய்கிறேன்’

சக பிரயாணிகள்  கசமுசாக்கள் காதில் விழ ஆரம்பித்தாலும், இந்த நேரத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற யதார்த்தம் என்னுள் இருந்ததால், அடுத்த சில நிமிடங்களுக்குள் கேட்டுக்கொண்டபடி என் சீட் பெல்ட்டைக் கட்டிகொண்டு, பெய்ரூட் இறங்கும் விமானத்தில் என்னை நானே கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருப்பது போலக் காட்டிக் கொண்டேன்,

ஆனால் திலீபன்  கண்களில் ஏதோ கலக்கம். அவசரம் அவசரமாக சீட் பெல்ட்டைப் போட முயன்று கொண்டிருந்தான். ‘ஹேய் கூல் மேன்.. நிதானமாக இரு.. இது ஒரு தற்காலிக நிறுத்தம்தான்.. உடனே இரண்டு மணிநேரத்தில் எடுத்துவிடுவார்கள்”

“யெஸ் சார்! ஆனால் இந்த பெய்ரூட் விமானத் தளத்தைச் சாதாரணமாக மட்டும் நினைத்துவிடாதீர்கள் சார்.. உலகத்துலேயே பயங்கரவாதம் அதிகமுள்ள இடத்துக்கு அருகில் உள்ள ஏர்போர்ட் இது… எந்த நேரத்திலும் எங்கேயிருந்தாவது ராக்கெட் மிஸில் போடுவார்கள். யார் யார் மேல பாம்ப் போடறாங்கன்னே கண்டுபிடிக்க முடியாது.. நிறைய பயங்கரவாதப் பிரிவுகள் இங்கே இருக்கு..”

இவனா இப்படிச் சொல்வது.. அங்கே இவன் விரும்பும் புலிகளின் இயக்கத்தைத்தான்  படு பயங்கரவாதிகளாக அரசாங்கங்கள் முடிவுசெய்து சட்டமே போட்டிருக்கின்றன. பெய்ரூட்டில் ஒரு இரண்டு மணிநேரம் இருப்பதில்தான் எத்தனை ஒரு கற்பனையான பயத்தை இவனே சிருஷ்டித்துக்கொண்டு தன்னை மட்டுமல்லாமல் பிறரையும் டென்ஷனில் ஆழ்த்திவிடுகின்றான்..

“கவலைப்படாதே  திலீபன்.. உன் உயிருக்கு  நான் கியாரண்டி.. உன்னைப்  பத்திரமாக ஒட்டாவா சேர்த்துவிடுகிறேன்.. ஓகே.. ரிலாக்ஸ் சம் டைம்ஸ்..”

விமானம் கீழே தரையிறங்கி நின்றது. எல்லோருமே, நான் முதற்கொண்டு, கைபேசியை தட்ட ஆரம்பித்தோம்.. ஊம்ஹூம்.. சிக்னல் இல்லை.. போகட்டும்.. நான் ரேகியிடம்தான் பேசவேண்டும். அவள் இந்நேரம் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து மாலத்தீவுக்கு பறந்துகொண்டிருப்பாள். இந்தக் குட்டி ராது கண்ணாடி ஜன்னல் வழியாக வெறும் வெள்ளை மேகங்களையும் நீலக் கடலையும் கீழே அதிசயமாகப் பார்த்துக்கொண்டே அம்மாவைத் தொல்லை செய்துகொண்டிருப்பாள்.. இப்போது போன்கால் போட்டாலும் பேச முடியாதுதான்..

திலீபன் கூட  தன் செல்போனை முயற்சிசெய்து  முடியாமல் சற்றுநேரம் தவித்துவிட்டு, பிறகு சாய்ந்துகொண்டான். விமானப் பணிப்பெண் ஒருத்தி எங்களருகே குளிர்பானத்தோடு வந்தாள். அவளையே சற்று அநாகரிகமாகப் பார்க்கும் திலீபனை சற்றுக் கிள்ளி அடக்கி வாசிக்கும்படி கண்ணால் வலியுறுத்தினேன். ஆனால் திலீபன் கண்கள் ஏனோ சற்றுக் கலங்கியிருந்தன..

“சார்.. தியாகம் செய்த என்னுடைய இளந்தங்கை மல்லிகை போலவே அப்படியே இவள் முகம் இருக்கிறது சார்.. இந்தப் பெண் நல்ல வெள்ளை. ஆனால் என் தங்கை நல்ல கருப்பு.. அவ்வளவுதான்.. கருப்பு மல்லின்னே அவள் பெயர்.. அவள் முகத்துல ஒரு களை எப்பவுமே வெளிச்சம் போல நம்மை இழுக்கும்.. அவள் கண்கள் ரொம்ப ரொம்ப அழகு சார்.. தியாகம் செய்துவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டாள்.. நேற்றிரவு கூட சென்னை ஹோட்டலில் கனவில் வந்தாள் சார்.. ‘சென்னை வரை வந்தீரே.. இதோ பக்கத்தில் கிளிநொச்சி.. இங்கே தானே, போகட்டும், நான் இறந்து போன கொழும்புக்காவது வந்து பார்த்துப் போகக்கூடாதா’ என்று கேட்டாள் சார்..”

இரண்டு குளிர்பானங்களை அந்தப் பெண்ணிடமிருந்து எடுத்துக்கொண்டு, அவள் தந்த செயற்கையான சிரிப்புக்குப் பதிலாக நானும் செயற்கைச் சிரிப்பைக் கொடுத்துவிட்டு, அவள் அகன்றவுடன், திலீபனின் கையில் குளிர்பானத்தைக் கொடுத்தேன்.

“திலீபன்.. ரொம்ப  உணர்ச்சிவசப்படுகிறாய்.. முதலில் இதைச் சாப்பிடு..” அவன் குடித்தவுடன் அவனிடமிருந்த ஆவேசம் சற்றுக் குறைந்தது போலப் பட்டது எனக்கு.

“திலீபன்.. கிளிநொச்சி உங்கள் சொந்த ஊரா.. அது சிலோனில் சரியாக எங்கே இருக்கிறது..”

“சிலோனில் இல்லை  சார் அது..”

“இல்லை திலீபன்.. சிலோன், ஐ மீன் இலங்கையில்தான் இருக்கிறது”

“சார், உங்கள் பார்வையில் அது சரியாக இருக்கலாம்தான், ஆனால் கிளிநொச்சி, ஈழத்தில் உள்ளது.. அப்படித்தான் சொல்லவேண்டும்..”

திலீபனை ஆச்சரியத்தோடு  பார்த்தேன். இந்த இளம் வயதில் அவனுக்கு எப்படி இவ்வளவு  ஒரு வெறி.. ஆமாம் அது வெறிதான்.. என்னதான் நானும் தமிழன் என்றாலும் வெளியில் பேசும்போது சென்னை எங்கே உள்ளது என்றால் அது  இந்தியாவில் தென்கிழக்கே உள்ளது என்றுதான் எல்லோரும் சொல்வோம். இப்படி ஒரு பெரிய நாட்டிலேயே இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் இலங்கை சிறிய தீவு, இவர்களுக்குள் இந்தச் சிறிய தீவுக்குள் இப்படி ஒரு பிரிவினை வாதமா.. இல்லை.. நம்மால் முடிந்தவரை இவனை மாற்றவேண்டும், ஒற்றுமையான நாட்டின் வெற்றியையும் சக்தியையும் இவன் உணரவேண்டும்.. இன்னும் கொஞ்ச நேரம் சும்மாதானே இங்கே இருக்கப்போகிறோம்.. நம்மால் முடிந்ததைச் சொல்லித் திருத்துவோம்..

“திலீபன்.. உன்  தாய்நாட்டின் மீதுள்ள பக்தி நல்லதுதான்.. ஆனால் இப்போதுள்ள உலகச் சூழ்நிலை வேறு.. உலகம் மிகச் சுருங்கிவிட்டது.. பார்.. இன்னும் இருபது வருடம் போனால் நமது நாடுகளுக்கிடையே எல்லைகளே இல்லாமல் போய்விடும் என்பது போல நிலைமை மிக வேகமாக மாறிவருகிறது..” என்னைத் திலீபன் சட்டென வெட்டினான்.

“சார். நாம  இப்போ லெபனோன்ல இருக்கோம். இங்கே எல்லைத் தகராறுகள் அதிகம். பக்கத்தில் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் எல்லைத் தகறாறு தீரவே தீராது.,.அவ்வளவு ஏன் சார். உங்கட காஷ்மீர் தேசம் யாரோடதுன்னு உங்களால் சொல்ல முடியுமா.. உங்களடதுன்னா, பாகிஸ்தான்காரன் மறுப்பான்.. இல்லை சார்.. தாய்நாடு வேணும்.. தாய்நாடும் தாயும் இல்லைனா மனுஷன் மனுஷனே இல்லை சார். எங்கட தாய், எங்கட தாய்நாடு எங்களுக்கு வேணும் சார்.”

“கரெக்ட்தாம்பா.. நான் சொல்லவர விஷயம் இதுக்காக இல்லை! என் தாய்நாடு இந்தியா என்பதில் எனக்கு ரொம்பப் பெருமை.. நான் சொல்ல வரது இந்த உலகத்தோட வெகு வேகமான வளர்ச்சியில் தேசங்களுக்கிடையே ரொம்ப நெருங்கிய நட்பு வேணும்.. இப்போ மேற்கு ஈரோப்ல பார். நாடுகள் நிறையதான். ஆனா அங்கே ஒரு நெருங்கிய தொடர்பை அழகா தங்களுக்கென்று உள்ள நாடுகளைப் பிரிக்காமல், அதே சமயம் இணைக்காமலும் டீசண்டா வெச்சுருக்காங்க.. நல்ல நாகரிகத்தின் அடையாளம் ரொம்ப உணர்ச்சிப்படுதல் எப்போதும் கூடாது..  அதனாலதான் சொல்லறேன்.. சிலோன்ல, ஐ மீன், ஈழத்துல உள்ள தமிழ்க்காரங்களும், சிங்களக்காரங்களும் ஒத்துப் போகக் கத்துக்கணும்.. ஒரே நாடா இருந்தாதான் டெவலப்மெண்ட் நல்லா ஆகும்.. டெவலப் ஆயிட்டா உங்கள்ட்ட எந்த மாதிரி அதீத உணர்ச்சிப் போக்கும் வரவே வராது.. என்ன, நான் சொல்றது புரியுதா..”

ஒரு குழந்தைக்கு  எடுத்துச் சொல்வது போல  நான் அவனுக்கு சொன்னது என்  மகளுக்கு எப்போதாவது நேரம்  கிடைக்கும் நேரத்தில் சில  வெளிநாட்டுப் புகைப்படங்களை  விவரிக்கும் விதம் நினைவுக்கு திருப்பியது.. மனைவியும் குழந்தையும் இந்நேரம் மாலத்தீவு இறங்கியிருப்பார்களா.. இறங்கும் நேரம்தான்.

திலீபன் கண்கள் கலங்க என்னைப் பார்த்தான். “சார்.. அடிப்படையா சில விஷயங்கள் நீங்கள் புரிந்துகொள்ளணும்.. எங்களுக்கும் சிங்களவருக்கும் யுத்தம் இல்லே.. எங்கட மனுஷாளுக்கும், ஓர்மிக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் நடக்கற போராட்டம் இது. கனடாவில் எங்கட கூட கொஞ்சம் சிங்கள ஆளுங்க செட்டில் ஆயிருக்காங்க.. அதே போல எத்தனயோ கண்ட்ரில சிங்களனும் ஈழத்துக்காரனும் கூடவே இருக்காங்க.. ஆனா தாய்நாட்டுல நடக்கற அநியாயம், சிங்கள மக்களின் தலைவர்கள்னு பேருல ஓர்மியும் அரசாங்கமும் செய்யற அட்டூழியங்களை உங்களுக்குச் சொன்னா ஆச்சரியப்படுவீங்க.. கோபப்படுவீங்க… அவங்க மாறவே மாட்டாங்க சார்.. இப்போ எங்கட அம்மாவும் அப்பாவும் அகதிகள் கேம்ப் இல் இருக்காங்க.. வெளியே அவங்க வீட்டுக்கும் விடமாட்டேங்குறாங்க.. போன வருஷம் இவங்க எப்படியோ தப்பிச்சுட்டாங்க சார்.. ஆனா சிங்கள வெறிபிடிச்ச ஓர்மி ஆயிரக்கணக்குல மனுஷங்களை நிக்கவெச்சு பன்னிங்களைச் சுடற மாதிரி சுட்டுச் சாகடிச்சுட்டாங்க சார்.. எங்கட சொந்தக்கார ஜனங்க பதினோரு பேருங்க, அதுல மூணு பேரு பொம்பளைங்க.. அங்கேயே ஸ்பாட் ல அவுட்.. கொடுமை சார்..”

“திலீபன்!, நடந்தது நடந்து போச்சு.. இதுக்கெல்லாம் ஆதிக் காரணம்னு யோசிச்சா யாரு தப்புன்னு பாக்கணும், நீ சிங்கள அரசாங்கம் மேல தப்பு சொல்றா மாதிரி, அவங்க திருப்பி உங்கள் மேல சொல்லறதுக்கு ஏராளமா இருக்கு. உங்க தலைவர்கள் தங்களுக்குப் பிடிக்காத, ஒத்துவராத தமிழ் மக்களையே அழித்த கதையையெல்லாம் எப்படி மறக்க முடியும்..? இது முடிஞ்சுபோன ஒரு சோகக் கதை. இனிமேலாவது நாம புத்திசாலியாக வாழக் கத்துக்கணும்.. நான் சொல்லறது புரிஞ்சுதா..”

விமான பைலட்  மறுபடியும் வந்தார். இன்னும்  இரண்டு மணிநேரம் பிடிக்கலாம், வான்வெளி சிக்னல் கிடைக்கச் சற்று தாமதமாகும், மன்னிக்கவும் என்று சொன்ன போது சில பயணிகள் அவரிடம், வான்வெளி சிக்னல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், முதலில் ஸெல்போன் சிக்னல் கிடைக்க வழி செய்யுமாறு வற்புறுத்தினர்.

நான் இதுவரை சொன்னது எதுவும் திலீபனைச் சற்றும் சலனப்படுத்தவில்லை என்பதை மறுபடியும் அவன் நிரூபித்தான்.

“சார்.. நீங்க ரொம்ப சாதாரணமா பேசிடுறீங்க சார்.. எங்கட ஜனங்க இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா.. என்ர மாதிரிதான். ஒரு குடும்பத்துல அண்ணன் கனடாவோ, அவுஸ்த்ரேலியாவுலோ இருப்பான், தம்பிக்காரன் ஈழத்துல அவதிப்பட்டுண்டு கிடப்பான்.. அம்மா, அப்பா, அக்கா, சித்தியாள் இந்த உறவெல்லாம் ஒரேயடியாப் பிரிச்சுக் குதறி எடுத்துட்டான் சார்.. நம்ம சொந்தம்னு யாரைய்ன்னு எதிர்காலத்துல உலகத்துக்குக் காண்பிக்கப் போறிங்களோ அவங்க இப்போ இல்லை.. எப்படி சொன்னா நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு எனக்கு விளக்கத் தெரியலே..”

நான் தலையசைத்தேன். “திலீபன்.. போனது போகட்டும், இப்பவும் உறவுகள் ஏதாவது ஒரு காலத்துல சேர்ந்து வர சந்தர்ப்பம் வரும். இல்லைன்னா, இனியும் பிரிக்க முடியாதபடி, புது உறவுகளை நீயும், உன் தங்கையுமா உங்க திருமண வாழ்க்கை மூலம் புதுப்பிச்சுக்கலாம். எனக்குப் புரியுது உங்க பழைய நிலைமை. இப்ப வரை இழந்துபோனதுக்கு என்ன பதில் ன்னு நீ கேக்கறே.. ஆனா.. இதுக்கெல்லாம் பதில் இல்ல.. காலம் போகற போக்குல நாம் உணர்ச்சிகளை மட்டுப்படுத்தி, உலகத்தோடு அப்படியே ஒத்துப் போகறதுதான் புத்திசாலித்தனமான வழி”

திலீபன் கண்களில் சட்டென கண்ணீர் தட்டுப்பட, அவன் கைக்குட்டையை எடுத்துத்  துடைத்துக்கொண்டான். “நீங்கள் யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லறீங்க சார்.. அது உங்களை மாதிரி கஷ்டமே பாக்காதவங்க வாழ்க்கைக்குத்தான் பொருத்தம்.. எங்களுக்கு அது பொருந்தாது சார்.. உண்மையைச் சொல்லட்டுமா.. நேத்து இரவு கனவுல என் தங்கச்சி வந்தா’ன்னு சொன்னேனில்லே.. இன்னிக்கு காலைல கூட நினைச்சேன் சார்.. நாம் போகற விமானம் ஒரு நாளைக்கு கேன்ஸல் ஆகி, அந்த இடைவெளில, கொழும்பு போயிட்டு தங்கச்சி சமாதியான இடத்தையாவது பார்த்தால்தான் என்னன்னு தோணிச்சு..’ ஆனா,, பாருங்க சென்னைல அப்படி நடக்கல.. இப்போ பெய்ரூட்ல வந்து மாட்டிக்கொண்டு இருக்கோம்.. ’..

“ஹேய்! ஜாலியா எஞ்சாய் பண்ணப்பா.. ரொம்ப  எமோஷனல் ஆயிடாதே,, கமான்  திலீபன்..”

அவன் போன் ரிங்கிங் சப்தம் மெலிதாகக் கேட்க ஆவலுடன் எடுத்துப் பேசினான். ஆனால் பலவீனமான சிக்னல் காரணமாக அது கட் ஆகிவிட்டது.. “சார்.. பப்பி மேடம் நம்பர்.. லைன் கட் ஆயிடுத்து.. வீக் சிக்னல்.. எனக்கு எதுக்கு சார் முயற்சி பண்றாங்க.. உங்களுக்கே பேசலாம் இல்லையா..”

“ஓ.. இல்லை.. என்னிடம் என் அலுவலக ஸெல் இல்லை. என்னிடம் இப்போது இருப்பது என் மனைவியுடன் பேசும் பெர்ஸனல் மொபைல்.. அதில் எக்காரணம் கொண்டும் பப்பி பேச முடியாது.. ஒன்று, இந்த நம்பர் தெரியாது அவளுக்கு, இரண்டாவது உன் நம்பர் தெரியும் இல்லையா.. மறுபடி நீயே முயற்சி செய்து பார்.. நானும் என் மனைவிக்கு முயற்சி செய்கிறேன்”

எனக்கும்  வீக் சிக்னல்தான்.. ரேகி நம்பருக்கு அது போகவில்லை.. திலீபனுக்கும்  கிடைக்கவில்லை. அவனும் முயன்று  பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.

திடீரென என் செல் ஒலித்தது.. மிக மோசமான சிக்னல்.. கொஞ்சம் விட்டு விட்டுப் பேசும் ரேகியின் குரல்.. “என்னங்க.. நல்ல காலம் நீங்களே லைன்’ல வந்தீங்க.. எங்க உங்களை காண்டாக்ட் பண்ண முடியாதோன்னு நினைச்சுட்டேன். உங்க மிஸ்ஸ்ட் கால் வந்ததால கொஞ்சம் தெம்பு வந்தது.”

என் விமானம்  பெய்ரூட்டில் இறக்கப்பட்டது  அவளுக்கு யாராவது தகவல்  கொடுத்திருப்பார்கள் போலும்.. அதனால் சற்று பயப்படுகிறாளோ..

“ரேகி! நான் நல்லா இருக்கேன்.. என்னைப்  பத்தி பயம் வேண்டாம்..”

“அது இல்லீங்க.. இங்க நானும் குழந்தையும்  அப்பா அம்மா எல்லோரும்  கொழும்புல இருக்கோம். எங்க விமானத்துல யாரோ பாம்ப் புரளி  கிளப்பி விட்டுட்டாங்க.. உடனே இம்மீடியட் ஏர்போர்ட்.னு இங்கே கொழும்புல இறங்கிட்டோம். ஆனா பயம்லாம் ஒண்ணும் இல்லே.. ஒரு ஆறு மணிநேரம் இங்கதான் ஹோட்டல்’ல  அர்ரேஞ்ச் பண்ணிட்டாங்க.. கொஞ்ச நேரம் இங்கே கூட சிடி டூர் போகலாம்னு இருக்கோம்.. அதுக்காகத்தான் இப்போ மினி பஸ் கீழே வெயிட் பண்ணுது.. நம்ம சென்னைல ‘ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்’ னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி ஆயிடுச்சு இப்போ.. நாங்க மாலத்தீவு டூர் போகலாம்னு கிளம்பினா, எக்ஸ்ட்ரா கொழும்பு டூர் இலவசம்.. எப்படி..”

ரேகி ரொம்ப  ஜாலி மூடில் இருப்பது எனக்குப் பிடித்துப் போயிற்று,, “ஓ.. எஞ்சாய்.. எங்கே குட்டிகிட்ட கொடு.. ராதி எப்படி இருக்கிறாள்..”

“ஐய்யோ.. அவதான் உங்க பொண்ணாச்சே.. ஊர் சுற்றலாம்னா ரெடி.. ன்னு கிளம்பிண்டிருக்கா.. இருங்க, அவகிட்டே ஒரு வார்த்தை பேசிடுங்க..” ராதி லைனில் வந்தாள். குரல் உடைந்து கேட்டாலும் குட்டியின் மகிழ்ச்சி ஏராளமாக அதில் ஒலித்தது. “டாட்! வீ ஆர் எஞ்சாயிங்.. யூ?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாள். “நானும்தாண்டா.. எஞ்சாய்.. அம்மாகிட்டே கொடு..”

“ரேகி! உனக்கு ஒரு விஷயம் தெரியுமா,, நாம் ‘மேட் ஃபார் ஈச் அதர்ஸ் ஜோடி’. உன் விமானம் மாதிரியே என் விமானமும் நடுவுலே பெய்ரூட்’ல நிப்பாட்டிட்டாங்க.. ஆனா.. என்னால வெளியே போக முடியாது.. ஆனா நான் பெய்ரூட்’ல இறங்கினதாலதான் உன்னோட பேசவே முடிஞ்சுது..”

“பெய்ரூட் ஏர்போர்ட்டா.. ஐய்யோ.. என்னங்க ஆச்சு!”

“கவலைப்படறா மாதிரில்லாம் ஒண்ணும் இல்லே.. ஸ்டாப் கேப் அர்ரேஞ்ச்மெண்ட். இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கிடுவான்.. டோண்ட் வொர்ரி. நல்லா எஞ்சாய் பண்ணுங்க.. பை..”

அவள் சற்றுக்  கவலையாக ‘பை’ சொல்லி முடித்ததைக்  கவனித்தேன். ரேகி எப்போதுமே  அப்படித்தான்.. நார்மலா எல்லாமே  இருக்கணும்.. கொஞ்சம் அப்படி இப்படி என்றால் கூட அவளுக்கு பயம் வந்துவிடும்..

திலீபன் தன்  போனில் இன்னமும் முயன்று கொண்டிருந்தான். நானும் இரண்டு மூன்று முறை லண்டனுக்கு முயற்சி செய்து பார்த்தேன்.. இல்லை.. போகவே இல்லை. நிறைய பயணிகளுக்கும் அப்படியே.. சில பேருக்கு என்னைப் போல இன்கமிங் கால் வேலை செய்ய, மிகவும் உரத்த குரலில் தங்கள் நிலையை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

“விட்டுடு திலீபன்! பப்பியே ட்ரை பண்ணட்டும்.. உனக்குத் தெரியுமா.. நாம் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கோமே, அந்தச் சிங்கள நாட்டுத் தலைநகரில் என் மனைவி, குழந்தை, என் மாமா, மாமி எதிர்பாராமல் இறங்கியுள்ளார்கள். கொழும்புவில் சிடி டூர் போகறாங்களாம்.. இப்போதான் ஜாலியாகச் சொன்னாள்”

திலீபன் சற்று  ஆச்சரியமாகப் பார்த்தான்.

“சார்.. ஒரு  விஷயம் உங்களுக்குப் புரிந்ததா.. நான் காலையில் என்ன நினைத்தேன், இந்த விமானத்துக்கு ஏதாவது இடையூறு வந்து நின்று போகாதா’  ன்னு சொன்னேனே.. அது அப்போ  ஆகலை. ஆனா இப்போ ஆயிடுச்சு.. நேத்து இரவு கனவுல தங்கை வந்ததா சொன்னேன்.. எங்கே நான் கனவு விஷயத்தை மறந்து போகக்கூடாதுங்கற மாதிரி அதே தங்கை முகத்தோட இந்த விமானத்துல ஒரு ஏர்ஹோஸ்டெஸ்.. அதே போல நாம் எந்த இடத்தைப் பத்தி உணர்ச்சிவசமா பேசினோமோ, அந்த இடத்தில் உங்க பெண்டு, பிள்ளைகள் இருக்காங்க. இதெல்லாம் எதேச்சையா நடக்கறதா நினைக்கிறீங்களா சார்..”

“ஹேய்! புரியும்படியாப் பேசு.. இதுக்குக் கூட ஏன் உணர்ச்சிவசப்படறே?”

“உணர்ச்சிதான் சார்.. காலைலேயே நான் கொஞ்சம்  சின்சியரா திருவாசகம் பிரார்த்தனை பண்ணியிருந்தா இந்த லண்டன் புகை மூட்டம் செய்தி அப்பவே வந்திருக்கலாமோ என்னவோ.. நான் இன்னமும் சின்ஸியரா முயற்சி பண்ணினா கொழும்பு டெம்பரரி விஸா கிடைச்சு ஒரு ரவுண்ட் கொழும்பு போயிட்டு, என் கருப்பு மல்லி தியாகம் செய்து மறைஞ்சு போன சாலைக்காவது போயிட்டு வரதுக்குக் கூட சந்தர்ப்பம் கிடைச்சிருக்கும்.. அதுதான் நமக்கு இப்படியெல்லாம் ‘ஹிண்ட்’ கொடுக்குது.. நீங்க நம்பணும்..”

ம்ஹூம்.. இவனைத் திருத்தவே முடியாது.. இவன் உணர்ச்சிக் கடல், உணர்ச்சிப் பிழம்பு, இன்னும் இப்படி என்னவெல்லாம் தமிழில் சொல்லலாமே அத்தனையும் சொல்லலாம்.

அடுத்த அரைமணி நேரத்தில்  லண்டன் போக சிக்னல் கிடைக்க, விமானம் மேலே எழத் தொடங்கியது. திலீபனிடமிருந்து ‘நமச்சிவாய வாழ்க’ என திருவாசகம் வரத் தொடங்கியதைக் கவனித்தேன். பைத்தியக் கார திலீபன்.. இதோ இதற்கு என்ன பதில் சொல்வான்.. விமானம் ஒரு முழு நாளும் இவன் பிரேயர் செய்தால் நின்று விடுமாம். இவன் கொழும்பு சென்று இவள் தங்கையின் ஆவியைப் பார்த்து வருவானாம். ரொம்ப எமோஷனல் க்ரூக்.. இதோ லண்டன் கிடைக்க சிக்னல் கூட கிடைத்தாயிற்று..

அடுத்த அரைமணிநேரம்  நான் அவனிடம் ஏதும் பேசவில்லை. பிறகு மெல்ல அவனிடம்  வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துச் சொன்னேன்.. எதிர்பாராத விதத்தில் கொழும்பு சென்றால் கூட அங்கும் யதார்த்தமாக ஊரைச் சுற்றிப் பார்க்க விரும்பும் என் மனைவியைப் பற்றிச் சொன்னேன்.

“அதிகம் உணர்ச்சிவசப்பட்டு  உங்கள் மக்களில் நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை தியாகம்  செய்த காலம் இனிமேல் கடந்த காலமாக இருக்கட்டும். உன்னால் முடிந்தவரை அவர்களுக்கும்  எடுத்துச் சொல், யதார்த்தமாகவே  வாழ்க்கையைப் பார்ப்பது நல்லது. வருவதை நம்மால் நமக்காக எடுத்துக்கொள்ளப் பழகவேண்டும்.. இருப்பது எந்த ஊர்.. எந்த நாடு என்றாலும் தம் தாய்நாடு போல பார்த்துப் பழகினால் எல்லாமே காலப் போக்கில் சரியாகிவிடும். அந்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்காவில் இப்போது வாழும் பிரிட்டன் இனத்தாரை நினைவுக்குள் அவ்வப்போது கொண்டுவந்து பார். அப்போது புரியும். உணர்ச்சிகளின் வேகத்தில் நாம் நம் வாழ்க்கையை இழக்கக் கூடாது என்பதும்.. உறவுகளின் பலம் நம்மை பலவீனத்தில்தான் கொண்டுவிடும் என்பதையும் நினைவில் வை..”

அவன் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். மூன்று மணிநேரம் தாமதமாக லண்டன் விமான நிலையம் வந்தபோது நான் கொஞ்சம் திருப்தியுடன் கீழே இறங்கினேன். திலீபன் இனி எமோஷனலாக அவ்வளவாக பேசமாட்டான்.. இப்படி கனவில் வந்த தங்கை கூப்பிட்டாள் என்று உடனே கொழும்பு போகவேண்டும் என்று இனியும் நினைக்கமாட்டான். அடிக்கடி கண்ணில் நீரும் விட்டுக்கொண்டிருக்க மாட்டேன்..

இந்த என்னுடைய முயற்சி சாதாரணமாகத் தொழில் முறையில் நான் கன்வின்ஸிங் செய்யும் முயற்சிதான். யதார்த்தமாகவே  யதார்த்தமான வாழ்க்கையை அனுபவிக்கச் சொல்லியுள்ளேன். மிக எளிமையான வழிதானே..

ஏர்போர்ட்டில் பப்பி ரொம்ப டென்ஷனாக இருப்பது போலக் காணப்பட்டாள். ‘ஹை.. நான் கொஞ்சம் டென்ஷனாகிவிட்டேன். பட்.. இட் இஸ் ஓகே.. எல்லாமே கொஞ்சம் தாமதம்தான் ஆனால் வரிசைப்படுத்திவிட்டேன்’ என்றாள்.

சரி, இனி நம்  கதை சாதாரணம்தான்.. அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன் ரேகியிடம்  பேசிவிடலாம். நான் லண்டன் வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். இருக்கும் மீதி நாட்களை கவலையில்லாமல் போக்குவாள்’ என்று நினைத்துக்கொண்டே ரேகி கொடுத்த மொபைலை ‘ஸ்விச் ஆன்’ செய்தேன். உடனே அங்கேயிருந்து மொபைல் அலறியது. ரேகிதான்.. பாவம்.. என்னை முயற்சித்துக் கொண்டே இருந்திருப்பாள்..”

“ஹாய் ரேகி, நான் லண்டன்..” என்று முடிப்பதற்குள் ‘மாப்ளே’ என்று என் மாமனாரின்  அலறல் கேட்டது. பயந்துவிட்டேன். ‘மாப்பிளே.. ரொம்ப கோரம்  நடந்துபோச்சு மாப்பிளே.. நம்ம ராது குட்டி”

“ஐய்யய்யோ.. என்ன ஆச்சு மாமா ராதுக்கு.. எங்கே ரேகி..” நான் பதிலுக்கு அலறினேன்.

“மாப்பிளே! ராதிக்குக் கால்ல குண்டு போட்டுட்டான் இந்த படுபாவிப் பசங்க.. திடீர்’னு கொழும்பு ரோடுல  நாங்க போகறச்சே யாரோ துப்பாக்கியாலே யாரையோ சுட்டுருக்காங்க.. எங்க பஸ் ஓரமா நிறுத்தி எல்லோரும் அரக்க பரக்க பக்கத்து பில்டிங்’ல ஓடச் சொன்னாங்க.. ஏது என்னன்னு தெரியாம அரக்க பரக்க ஓடினோம் மாப்பிளே.. அப்படி ஓடறச்சே, யாரோ ஒருத்தன் நம்ம கூட ஜாயின் ஆயிட்டான்னு, இந்த வெறி பிடிச்ச ஸ்ரீலங்கன் மிலிடரிக்காரங்க டூரிஸ்ட் ஜனங்கன்னு கூட பார்க்காம எங்களோட இருந்த அவன் மேல் மெஷின் துப்பாக்கியால குண்டு போட்டாங்க, அதுல ஒரு குண்டு நான் தூக்கிண்டு ஓடறச்சே வெளியே நீட்டிண்டிருந்த குழந்தை கால்ல உரசிண்டு போயிடுச்சு. அய்யோ.. என்னன்னு சொல்லுவேன்.. துடிச்சுப் போயிட்டாளே,, அவ உசிருக்கு ஆபத்தில்லே.. ஆனா குழந்தை அப்பா, அப்பா ன்னு முனகிண்டிருக்கு மாப்பிளே.. நீங்க எப்படியாவது ஏதாவது விமானம் பிடிச்சு கொழும்பு வாங்க.. ரேகி வேற மயக்கம் போட்டு பக்கத்துப் படுக்கைல முனகிண்டுருக்கா.. ஒரு தடவை கண்ணைத் திறந்து ‘நீங்க எங்கே’ ன்னு கேக்கறா.. ஐய்யோ.. எனக்கு ஒண்ணுமே தோணலே மாப்பிளே.. யாரோ யாரையோ கொல்ல, நம்ம குழந்தை போய் ஏன் மாப்ளே மாட்டணும்.. நீங்க உடனடியா வரணும்.. இங்க இண்டியன் எம்பஸிக் காரங்க எல்லா உதவியையும் நமக்குப் பண்ணுறேன்னு சொல்லறாங்க..”

எத்தனை நிமிஷம்  உறைந்துபோய் நின்றேனோ, எனக்குத் தெரியாது, என்னிடமிருந்த  போனை வாங்கிக் கொண்டு என்  மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் பப்பி என்பது கூட பிறகுதான் உணந்தேன்.

“சார்.. என்ன பண்ணலாம் சார்..”

என் கண்ணில்  கண்ணீர் பொங்கியது. “பப்பி, கேன்ஸல் ஆல் தி புரொக்கிராம்ஸ். எது எப்படி வேண்டுமானாலும் போகட்டும், எனக்கு உடனடியாக எந்த விமானம் கொழும்புவுக்கு செல்கிறதோ அதில் ஒரு  டிக்கெட் ஏற்பாடு செய்..”

“சார்.. இந்த காண்ட்ராக்ட் பேப்பர்ஸ்..” மிக மெல்லமாகத்தான் பப்பி கேட்டாலும் அது எனக்கு நாராசமாக ஒலித்தது.

“இதோ பார்.. இப்போது என்னிடம் எந்த அலுவல் விஷயத்தையும் பேசாதே.. தயவு செய்து நான் சொன்னபடி செய்.. எனக்கு இந்தக் காண்டிராக்ட் பற்றி எந்த விதக் கவலையும் இல்லை. இப்போது என் மகள்.. மனைவி மட்டுமே முக்கியம்.. வேறெதுவும், யார் எப்படி போனாலும் அது முக்கியமில்லை.. மைண்ட் இட்.. உடனடியாக டிக்கெட் புக் பண்ணு.. டூ வாட் ஐ ஸே!”

நான் உரக்க  கத்தி இருக்கவேண்டும். பயந்துவிட்டாள் பப்பி. திலீபன் என் அருகே  வந்து ஆறுதலாக என் கையைப் பற்றினான். “சார்.. உங்கட நல்ல மனசுக்கு ஒண்ணும் பாதகம் வராது சார்..”

திரும்பிச்  சென்ற பப்பியை மறுபடி கூப்பிட்டேன்.

“பப்பி! இதோ  திலீபனும் என்னோடு கொழும்பு வருகிறான். அவனுக்கும் சேர்ந்து டிக்கெட் புக் பண்ணிவிடு.. நீயும் சென்னைக்குக் கிளம்பிப்  போ.. நாலு நாள் உன் கணவனோடு எங்காவது சென்றுவா..போ.. போ..”

நான் திலீபன்  கைகளைத் திருப்பிப் பிடித்தேன். “திலீபன்.. உணர்ச்சிகள் பற்றி  பேசினோம் இல்லையா.. என்னோடு கொழும்பு வா.. உன் தங்கையின் ஆத்மாவையும் திருப்திப் படுத்தலாம்..”

நான் மறுபடி மாமனாரைத் தொடர்பு கொண்டேன். “மாமா.. உடனே புறப்படறேன். என்னோடு திலீபன்னு ஒருத்தர் வரார்.. அவருக்கும் நம்ப எம்பஸிலே பேர் கொடுத்து ஸ்பெஷல் பர்மிஷன் வாங்குங்க, யார் அவர்னு கேட்ட உங்க பிள்ளைன்னும், அடிபட்ட குழந்தைக்கு மாமான்னும் சொல்லுங்க. ராதியையும் ரேகியையும் ஜாக்கிரதையா பாத்துக்குங்க மாமா.”

என் கண்ணில் வரும் கண்ணீரை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை..

பதிவாசிரியரைப் பற்றி

26 thoughts on “உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை

 1. எக்சலண்ட் திவாகர்! ரொம்பவே மனசை பாதிச்சது இந்தக் கதை! எதார்த்த நடை, கதைக்கு வலிமை சேர்க்கிறது. பாராட்டுகள்!

 2. பழமொழிகள் பொய்ப்பதில்லை!

  தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்!

  தனக்கு தனக்குன்னா படக்கு படக்குங்குமாம்!

 3. Though it seemed to be dragging on in a kind of court argument-style, the conclusion seems logical. I suppose such a geneorus percentage of English words in a Tamil story has become inevitable. Congratulations to Sri dhivakar.
  Prema Nandakumar

 4. மனதைத் தொட்ட கதை. கண்ணீர் வர வைச்சது. யதார்த்தம் கதையின் முடிவிலும்.

 5. அருமையான சிறுகதை.
  உண்மை எப்போதுமே தாமதமாகமே புரியும்
  புரியும்போது அது கசக்கும்.. ஆனாலும் அதுவும் உண்மைதானே..

  இதில் இரெஅண்டு விசயம். 1, அடுத்தவர் உணர்ச்சிகளுக்கு பெயரளவில் இல்லாமல் உண்மையாகவே மதிப்பு கொடுக்கவேண்டும். 2. ஊருக்கு உபதேசம் செய்வதை தங்களளவில் குறைத்துக் கொள்ளவேண்டும்..

  இன்னும் எத்தனையோ விஷயம் பேசுகின்றன.. மனது ஆறமாட்டேன்கிறது..

 6. வெகுவாகப் என்னைப் பாதித்து விட்டது இந்தக் கதை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,என்பதற்கு உண்மையாகவே அந்தப் பிள்ளை திலீபன் உணர்ச்சிகள் நடத்திக் காண்பிதுவிட்டன. யதார்த்த நடையில் இருப்பதால் நிஜமாக நடந்த மாதிரி இருக்கிறது. உலகமே இது போல அன்பு (பாஸ் அண்ட் அஸ்ஸிச்டண்ட்) கொண்டால் மாறுவதற்கு நிறைய காலம் ஆகாது.

 7. In the conflict between reason and emotion, the latter ultimately wins. Excellent piece. Congrats. —- Sampath

 8. ஓம்.
  ஒரு மருத்துவ நிபுணர் தன் மகளுக்கு மருத்துவம் செய்ய மற்றவரை நியமிக்கிறார். ஒரு திறமையன ஆசிரியர் தன் மகனைப் பிறர் ஒருவரின் போதனை வகுப்புக்கு அனுப்புகிறார்.
  உணர்ச்சிகள் வலுவினில் இருக்கும் போது பொதுவான கடமைகள் மறைகின்றன.சிந்தனை சிதறுகின்றது.திலீபனின் திருவாசகம் பயன் தந்தது போலும்.
  கதை இயல்பாக அழைத்துக் கொண்டு பயணம் செல்கின்றது.
  வெ.சுப்பிரமணியன் ஓம்

 9. typical Dhiva kadai. Super! அந்த கடைசி நிமிட பரபரப்பு நமக்கும் தொத்திக்கொண்டுவிட்டது! ராதிக்கு ஒண்ணும் இல்லைன்னு இவர் தடர் எழுதி, திலீபன் கருப்பு மல்லியின் சமாதி போனான்னு எழுதினாதான், நாம் சமாதானம் ஆவோம்போல! டென்ஷன்!

 10. Divakar’s style of expressing emotions in a casual way has subsided the story’s happenings. a very good attempt to express the value of emotions in life. Congarts. Gowtham

 11. ஒரு சிறுகதையின் எல்லா லக்ஷணங்களும் இருக்கின்றன, திவாகர். சுவையும் நன்கு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
  இன்னம்பூரான்

 12. I am reading OSHO’s lectures. He repeatedly says that the world should run on heart and not on head, with so many examples. He says all the wars are happening because every “Head”of the State thinks with Head and not with heart…

  This story would have been appreciated by OSHO had he read it..

  Loved the thought, the style and the final message…

  Well done Dhivakargaru!

 13. உண்மையை வெகு சிறப்பாக உணர்த்தியுள்ள கதை.
  இயல்பாக கதை நம் எதிரே நடப்பது போல நிக்ழ்கிறது.
  சிறப்பான எழுத்து.

 14. excellent narration Sir. I have no words to comment.This was the best short story in tamil I read so far

 15. 1. மிக அருமையான செய்தி. கதைக் கருவாக இழையோடும் உணர்வுப் பூக்கள்.
  2. பிரேமா நந்தக்குமார் அம்மையார் கூறும் ஆங்கில வாடையை நானும் கவனித்து அதே உணர்வுடன் பார்த்தேன்.
  3. மேற்கோள்: எந்த ஊர்.. எந்த நாடு என்றாலும் தம் தாய்நாடு போல பார்த்துப் பழகினால் எல்லாமே காலப் போக்கில் சரியாகிவிடும். மேற்கோள் நிறைவு.
  ஈழம் தமிழரின் தாய்நாடு. தாய்நாடைத் தாய்நாடாப் பார்த்துப் பழகவேண்டும் எனக் கோடானுகோடிமுறை தமிழகத்திலும் இந்தியாவிலும் கூறக்கேட்டு வருகிறேன். தொடர்ச்சியாக நாடோடுபவர்களுக்குப் பொருந்துவதை, வேர்களுக்கு உரமாக வாழ்பவருக்குப் பொருத்தலாம்?

 16. Unarchikalin velloottaththil adiththu sella muyalum kathai. Today’s life is very fast and no place for emotions. This is fact. But the story telling is somewhat an exaltation. Congrats.

 17. கதை களமும், கருத்தின் ஆழமும், வாத-பிரதி வாதங்களும் பறக்கும் விமானத்தை விட அதீத உயரத்துக்கு எம்மை கொண்டு செல்கின்றன.

 18. காலம் தாழ்ந்து இன்று தான் இந்த கதையைப் படித்தேன். நீங்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டீர்கள். கேட்க வேண்டியவற்றை எல்லாம் கேட்டு விட்டீர்கள்.
  உணர்ச்சிக்கும்,அறிவுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகத் தெரிந்தாலும், நீங்கள் சொன்னவை எல்லாம் சத்தியம். ஒரு பக்கம் சார்ந்து பேசுவதால் மட்டுமே, பிரச்னை தீர்ந்து விடாது. நன்றி, இப்படி ஒரு கதையைத்(?) தந்ததற்கு.

 19. A very moving story; aptly describing the fast pace of today’s life where nobody have time to think about feelings, emotions etc. Vaazthukkal!

  anamika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *