‘பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியீட்டு விழா

1

காந்தளகம் பதிப்பித்துள்ள, ஒலியியல் பேராசிரியர் புனல் க. முருகையன் அவர்களின் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா, சென்னையில் 2010 ஜூன் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவள விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவு இயக்குநரும் தமிழ் மொழித் துறைப் பேராசிரியருமான  ந.தெய்வ சுந்தரம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஒலியியல் பேராசிரியர் புனல் க. முருகையன் அவர்கள் தமிழின் பேச்சொலிகளைப் பற்றிய தனது ஆய்வு அடிப்படையில் ” பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு ” என்ற நூலைத் தயார் செய்துள்ளார். காந்தளக வெளியீட்டகம் (மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் உதவியால்)  அந்நூலை வெளியிடுகிறது. அதன் வெளியீட்டு விழா, 2010 ஜூன் 15 ஆம் தேதி அன்று மாலை 5.30 மணிக்குச் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவள விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது.

இந்நூல் கணினி மொழியியல் ( Computational Linguistcs) ஆராய்ச்சிக்கு ஒரு நல்ல வரவு. பேச்சுரையை எழுத்துரையாக மாற்றும் மென்பொருள் ( Automatic Speech Recognizer – ASR) , எழுத்துரையைப் பேச்சுரையாக மாற்றும் மென்பொருள் ( Text to Speech – TTS) ஆகியவற்றை உருவாக்குவதற்கு மிக அடிப்படையாக அமைகிற ஒரு நூல் இது. இதுவரை இதுபோன்ற ஒரு ஆய்வு வெளிவந்துள்ளதாகத் தெரியவில்லை.

95 பேச்சொலிகள் ( Phones) தமிழ் எழுத்துரையை வாசிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அவை என்னென்ன பேச்சொலிகள், எந்தெந்த மொழிச் சூழலில் அவை பயின்றுவருகின்றன, அவற்றைக் குறிக்க உலக ஒலியியல் கழகத்தின் குறியீடுகள் (International Phonetic Association scripts)  என்ன என்பவற்றைப் பற்றி மிகத் தெளிவாக இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளை சைவ ஓதுவார்கள் ஓதுவதை ( reciting) அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர் முருகையன் அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தில் ஒலியியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். அதனுடைய இயக்குநராகவும் பணியாற்றியவர். இங்கிலாந்த்தைச் சேர்ந்த பிரபல ஒலியியல் பேராசிரியர் டேவிட் ஆபர்குரோம்பியிடம் பயின்றவர். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் ஒலியியல் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருபவர்.

மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிறது. தமிழக அமைச்சர்கள் மாண்புமிகு துரைமுருகன், மாண்புமிகு பெரிய கருப்பன், மாண்புமிகு திருமதி பூங்கோதை , திருப்பனந்தாள், தருமபுரம், திருவாடுதுறை ஆகிய திருமடங்களைச் சார்ந்த தம்பிரான் சுவாமிகள், இந்து அறநிலையத் துறை ஆணையர் சம்பத், சிங்கப்பூர் தமிழ்ப்பேராசிரியர் சுப. திண்ணப்பன், ஆஸ்திரேலியா தமிழ்ப்பேராசிரியர் ஆ. கந்தையா ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

தமிழ்க் கணினி மொழியியல் கழகத்தின் சார்பாக இவ்விழா நடைபெறுகிறது. கணினித் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் ந.தெய்வ சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “‘பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியீட்டு விழா

  1. வல்லமை மின்னிதழ் தமிழ்க் கணினி மொழியியலுக்கு ஆற்றும் அரிய பணி. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.