வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது

0

சக்தி சக்திதாசன்

sakthidasan

எப்போது பிறந்தோம் என்பது எத்துணை தெளிவாக இருக்கிறதோ, அத்துணை குழப்பமாக இருக்கிறது எமது வாழ்க்கையின் முடிவு.

அப்படிப்பட்ட இந்த நிலையற்ற வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து முடிப்பது எவ்வாறு?

இதற்கு நாம் ஒவ்வொருவரும் எமது நெஞ்சங்களில் ஒரு வரைமுறை வைத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை.

வாழ்க்கையின் வெற்றி என்பதற்கு என் மனத்தில் எழும் எண்னங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுவது என் மனத்துக்கு இனிக்கிறது. எண்ணங்கள் எழுத்துகளாகக் காகிதத்தை நிறைக்கும் போது மனம் ஏனோ கொஞ்சம் இலேசாகிறது.

ஒருவர் தனது வாழ்க்கையை முழுவதுமாக வெற்றிகரமாக வாழ்ந்து முடித்துவிட்டார் என்பதை எதை வைத்து அளவிடுவது? ஏனெனில் ஒருவரின் நிலை வாழ்வில் மற்றையவரின் நிலையைப் போலிராது.

பணத்திலே குளிக்கும் ஒருவர் வாழும் அதே நிலத்தில் கண்ணீரில் குளிக்கும் மற்றொருவர் இருப்பார். உணவுகளை அள்ளியெறிந்து விளையாடும் அதே சூழலில் குப்பைத் தொட்டியில் விழும் ஒரு ரொட்டித் துண்டுக்காக தெருநாய்களோடு சண்டையிடும் அதிர்ஷ்டமில்லாதோர் பலர் இருப்பார்.

இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். இத்தகைய நிலையிலே அனைவராலும் வெற்றிகரமாக வாழ்ந்துவிட முடியுமா? அங்கேதான் முடியும் என்கிறது ஒருகோணக் கருத்து.

எப்படி?

வாழும் வரை நன்மை செய்துவிடு அதுவே நீ வாழ்ந்த வாழ்க்கை வெற்றிகரமானது என்பதை நிர்ணயித்துவிடும் என்பதே அக்கருத்தாகும்.

இங்கே பல கேள்விகள் துள்ளி விழுகின்றன. தேவைக்கதிகமான செல்வத்தையுடைய ஒருவர் நன்மை செய்கிறோம் என்று எதை எதையோ அடுக்கடுக்காகச் செய்யலாம் ஆனால் அடுத்த நேர உணவுக்கே அல்லாடும் ஒருவனால் நன்மை என்று எதைப் பெரிதாகச் சாதித்துவிட முடியும் என்னும் ஒரு கேள்வி எழுவது இயற்கையே.

நன்மை என்னும் சொல்லின் அர்த்தங்களை மிகவும் ஆழமாக அலசிப் பார்க்க வேண்டும். நன்மை என்பது வெறுமனே மற்றொருவருக்குப் பணத்தின் மூலமோ அன்றி வேறு பொருட்களின் மூலமோ செய்யும் உதவி என்னும் கருத்தே பலரின் மனங்களில் மேலோங்கியிருக்கும்.

இல்லை, நன்மை என்னும் சொல், பல வடிவம் எடுக்கிறது. மற்றொருவருக்கு மனத்தால் கூடத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளுவதும் நன்மை என்றே கொள்ளப்பட வேண்டும்.

இது அனைத்து மனிதர்களாலும் செய்யப்படக் கூடியதொன்றே. இதற்கு நம்மிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது அன்றி வசதி இருக்கிறது என்று தெரியத் தேவையில்லையே!

அப்படியானால் மனிதனின் மனத்தில் இத்தகைய தூய்மையான எண்ணங்கள் தான் எப்போது நிலை கொண்டிருக்குமா? இது சாத்தியமில்லையே! எம்மையறியாமல் சில வேளைகளில் ஆத்திர உணர்வுகளால் உந்தப்படும் போது மற்றையோரின் மீது தீங்கான எண்ணங்கள் ஏற்படுவது சகஜம் தானே!

பலரின் மனங்களிலே எழும் கேள்வி, என் மனதிலும் எழாமலில்லை. ஆமாம் நானும் அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன், இன்னும் ஆளாக்கப்படக்கூடும். அப்படியாயின் நான் சொன்ன கருத்து “வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது” என்பது எவ்வகையில் பொருந்தும்?

மனிதர்கள் எப்போதுமே தூய்மையான எண்ணங்களை மட்டும் மனத்தில் கொண்டிருந்தார்களேயானால் அவர்கள் தெய்வீக நிலையை அடைந்து விட்டார்கள் என்பதுவே பொருள். அதனால் தான் கடவுள் மனிதனின் மனங்களிலேதான் இருக்கிறான் என்பது பொதுப்படையான கருத்தாக விளங்குகிறது.

மனிதர்கள் என்னும் போது நிச்சயம் சமயங்களில் மனம் நிலைதடுமாறுவது சகஜம். ஆனால் அப்படி நடக்கும் நிலைகளை மீளப் பரிசோதித்து நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யும் தன்மையை அடைந்து விட்டோமானால் எமது பரீட்சையில் நாம் சித்தியடைந்து விட்டோம் என்பதுவே பொருள்.

அத்தகைய நிலையில் மற்றையோருக்குத் தீங்கிழைக்காமல் வாழ்வது என்னும் லட்சியத்தை அடையும் வேட்கையின் வெற்றியை அண்மித்து விட்டோம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அப்படியான வேட்கையை மனத்தில் வரித்துக்கொண்டு வாழ முயலுபவர்கள் அனைவரினது வாழ்க்கையும் வெற்றிகரமான வாழ்க்கை என்பதுவே உண்மையாகும்.

அன்பு நண்பர்களே! நான் அனைத்தும் கற்றுத் தேர்ந்தவன் என்னும் பாணியில் அறிவுரை கூறவில்லை. வாழ்க்கை என்னும் பாடத்தில் பல அத்தியாயங்களையும் வாழ்க்கைப் பயணத்தில் பல அனுபவ மைல்களையும் கடக்க வேண்டியவன்.

மனத்தில் எழுந்த என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதேயன்றி வேறொரு நோக்கமுமில்லை.

எதையாவது தவறென்று நீங்கள் கருதியிருந்தால் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *