ஊழலே, உனக்கு அழிவே இல்லையா?

1

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiஇந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஊழல் குறையாதது மட்டுமல்ல, மிகவும் அதிகமாகிக்கொண்டே போயிருக்கிறது. சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட சில தியாகிகளே கூட ஊழல் வசப்பட்டனர் என்று கூடச் சொல்லலாம். 1975இல் நடந்த தேர்தலின் போது அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அதுவரை எவ்வளவோ ஊழல்கள் புரிந்திருந்தும் பிடிபடாமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசின் பணத்தை உபயோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தேர்தலில் அவர் ஆறு வருஷங்களுக்குக் கலந்துகொள்ளக் கூடாது என்று தீர்ப்புக் கூறப்பட்டது. நீதிபதியின் முடிவை ஏற்றுக்கொள்ளாத இந்திரா காந்தி, அவசர காலச் சட்டத்தை அமல்படுத்தினார். ஜூன், 15, 1975ஆம் நாள் இந்திய வரலாற்றின் இருண்ட நாளாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு ஒன்றரை வருஷங்களுக்குப் பிறகு அவசர காலச் சட்டத்தை ரத்து செய்து இந்திரா காந்தி தேர்தல்களை நடத்த உத்தரவிட்டார். அதுவரை காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சி செலுத்தி வந்தது. 1977இல் நடந்த இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளில் சில ஒன்று சேர்ந்து ஜனதா கட்சியை ஆரம்பித்தனர். ஊழலைக் கட்டுப்படுத்த விரும்பிய ஜனதா கட்சி, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்பதற்கு லோக்அயுக்தா என்னும் அமைப்பை உருவாக்கி, ஊழலை ஒழிக்கப் பாடுபடுவதாக வாக்குறுதி கொடுத்தது.

சில மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் லோக்அயுக்தா, உபலோக்அயுக்தா ஆகிய அமைப்புகளை நிறுவி ஊழலைக் குறைக்க முயன்றன.  இவற்றில் கர்நாடகாவும் ஒன்று. 1984இல் ராமகிருஷ்ண ஹெக்டே முதன்மந்திரியாக இருந்த போது லோக்அயுக்தாவை நிறுவினார். இந்த அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரோ அல்லது மாநில உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியோ நியமிக்கப்படுவார்.

உபலோக்அயுக்தா பதவிக்கு மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த அமைப்பிற்கு முதன்மந்திரி, மற்ற மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அலுவலர்கள் மற்றும் வாரியங்களின் தலைவர்கள் என்று பொதுத்துறை ஊழியர்கள் அனைவர் மீதும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு ஆதாரங்களோடு அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. 1984இல் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருந்தும் ஊழல் குறையவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது புதிதாக கர்நாடகாவிலுள்ள அந்த அமைப்பு பற்றிய செய்திகள், சென்ற சில வாரங்களாக பத்திரிக்கையில் வந்துகொண்டிருக்கின்றன.

கர்நாடகத்தில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த சந்தோஷ் ஹெக்டே என்பவர், மிகவும் நாணயமான நீதிபதி. கர்நாடகத்திலுள்ள பெல்லாரி, ஹாஸ்பெட், சந்தூர் ஆகிய இடங்களிலிருந்து சட்ட விரோதமாக இரும்புத் தாது தோண்டப்பட்டு பெலிகெரி என்னும் துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்குக் கள்ளத்தனமாக அனுப்பபட்டு வந்தது. சுமார் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள இரும்புத் தாது இப்படி சட்ட விரோதமாகச் தோண்டப்பட்டு வந்ததாம். லோக்அயுக்தா சந்தோஷ் ஹெக்டேயின் கவனத்திற்கு இது வந்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு ஆணையிட்டார். ஆனால் கர்நாடக அரசு இவர்களை விடுவித்ததும் அல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த வனத் துறையைச் சேர்ந்த அதிகாரியையும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்தது.

லோக்அயுக்தாவால் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட அதிகாரிகளைப் பேருக்கு கொஞ்ச நாள் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக்கி வைத்துவிட்டு மீண்டும் பதவியில் அமர்த்தியிருக்கிறது அரசாங்கம். தன்னோடு ஊழலை ஒழிப்பதில் ஒத்துழைக்காததோடு தனக்கு எதிராகச் செயல்பட்ட அரசின் போக்கை எதிர்த்த ஹெக்டே, தன் பதவியிலிருந்து விலகினார். ஆளுநரிலிருந்து பலர் ஹெக்டேயை அவர் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டியும் அவர் தான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இவ்வளவு தூரம் இந்த விஷயம் முற்றிப் போயும் முதன்மந்திரி எடியூரப்பா வாயே திறக்கவில்லை. மும்முரமாக தன் இரண்டாண்டு ஆட்சியின் சாதனைகளை விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார். எதிர்க் கட்சியான காங்கிரஸ், அரசின் மீது குறை கூறி, அரசு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது, இவர்கள் ஆட்சியில் இம்மாதிரி ஊழல்களே இல்லாதது மாதிரி.

பி.ஜே.பி. கட்சியின் மேல்மட்டத்தைச் சேர்ந்த அத்வானி போன்ற தலைவர்கள் தலையீட்டால் எடியூரப்பா கொஞ்சம் மசிந்து கொடுத்து, இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்ததும் சந்தோஷ் ஹெக்டே தன் பதவி விலகலை ரத்து செய்துவிட்டு மீண்டும் பதவியில் சேர்ந்துள்ளார். மேலிடம் தலையிட்டு எடியூரப்பாவை வழிக்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. ஊழலை ஒழிக்க உருவாக்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி தான் ஒரு வித்தியாசமான கட்சி என்று பெருமை அடித்துக்கொள்கிறது. இந்தக் கட்சி ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் லோக்அயுக்தாவால் தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியவில்லை. ஊழலையே தங்கள் மூச்சாகக் கொண்டிருக்கும் கட்சிகள் ஆட்சியில் லோக்அயுக்தாவிற்கு ஏது இடம்?

திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து திடீரென்று ஹெக்டே தன் பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் சேர்ந்தார்.  ஹெக்டே நாணயத்திற்குப் பெயர் போனவர் என்பதால் இரும்புத் தாது ஏற்றுமதி ஊழலை விசாரிப்பதில் அரசு உண்மையாகவே ஒத்துழைப்புக் கொடுக்கும் என்று நம்புவோம். அரசைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது தன் சுயநலத்திற்காகவோ ஹெக்டே மீண்டும் பதவியில் அமர சம்மதித்திருக்க மாட்டார் என்று நம்புவோம்.

லோக்அயுக்தாவின் தலைவர் ஊழல் புரிபவர்களின் மீது தானாகவே நடவடிக்கை எடுக்க (suo moto power) இப்போது அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்மந்திரி, மற்ற மந்திரிகள், அரசு அதிகாரிகள் இப்படி நடவடிக்கை எடுக்கப்படக்கூடியவர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதற்காகவும் ஊழல் புரிபவர்களை உடனுக்குடன் தண்டிக்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தபட்ட இந்த அமைப்பின் அதிகாரத்திலிருந்து இவர்கள் மட்டும் ஏன் நீக்கப்பட வேண்டும்? இதற்கு எப்படி சந்தோஷ் ஹெக்டே ஒப்புக்கொண்டு பதவியில் சேர்ந்தார்? இந்த அளவாவது அரசு தான் செய்யும் காரியங்களுக்கு உதவும் என்று எண்ணி, மறுபடி பதவியில் சேர்ந்தாரா?

தமிழ்நாட்டில் ஏன் லோக்அயுக்தா போன்ற அமைப்புகள் உருவாகவில்லை? திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் பதவிக்கு வந்த பிறகு தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று நினைத்துவிட்டார்களா? சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு நான் போனபோது கேட்ட சில பொன்மொழிகள். அந்த அதிகாரி தானாக லஞ்சம் கொடுக்கும்படி கேட்க மாட்டார். யாராவது கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள்வார். இது எப்படி இருக்கு? லஞ்சம் கொடுக்கும் கான்ட்ராக்டர்கள், லஞ்சத்தை வாங்காவிட்டால் அடிப்பார்கள் என்பதற்காக இன்னொரு இஞ்சினியர் லஞ்சம் வாங்கிக்கொள்கிறாராம்! இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ இப்போது மரபாகி விட்டிருக்கிறது. நிர்வாணமாக இருப்பவர்கள் மத்தியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். இப்போது நாணயமான அதிகாரிகளின் கதியும் இதுதான். எந்த அரசு அலுவலகத்திற்குப் போனாலும் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது என்பது படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். நாம் ஏதாவது கேட்டால் இதில் என்ன இருக்கிறது என்பது போல் நம்மை விசித்திரமாகப் பார்க்கிறார்கள்.

இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் மிக்கது என்று பெருமை அடித்துக்கொள்கிறோம். இப்போது அந்தப் பெருமை எல்லாம் எங்கே போயிற்று?  அவற்றை எங்கே தொலைத்தோம்? எப்போது தொலைத்தோம்? நம் பாரம்பரியத்தைக் காக்க வேண்டுமென்று இப்போது யாருக்கும் தோன்றவில்லையா? வாழ்க்கையின் மதிப்பீடுகள் ஏன் இவ்வளவு தூரம் கீழே இறங்கிவிட்டன? நம் கலாச்சார மதிப்பீடுகளைத் திரும்பவும் இந்தியக் கலாச்சாரத்தின் அங்கமாக ஆக்க வேண்டும் என்று ஏன் யாரும் நினைப்பதில்லை? உன் கடமையைப் பிரதிபலன் எதிர்பாராமல் செய் என்னும் கீதையை உலகிற்குத் தந்த இந்தியாவில் அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதற்கு, தாங்கள் பெறும் சம்பளத்திற்கு மேலாக, ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள்? மிகப் பெரிய இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் நமக்குக் கற்றுத் தந்த வாழ்க்கை மதிப்பீடுகள் எல்லாம் என்னவாயின? காந்திஜி பிறந்த மன்ணில் காந்தியிசத்தின் சுவடுகளைக் கூட காண முடியவில்லையே? இதற்கு யார் பொறுப்பு? சிந்திப்போம்.  லஞ்சம் கொடுக்காமல், அதனால் வரும் இழப்பைத் தாங்கிக்கொண்டு, செயல்படுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஊழலே, உனக்கு அழிவே இல்லையா?

  1. The right key to the problem of corruption lies in changing the very system of democratic governance.We need to do away with group representation called party politics and go in for individual representation. All the political parties, without exception , have lost people’s faith.They are the people who practise and perpetrate corruption.With their removal there is scope for cleansing the system.
    Who will bell the cat?Right minded people will have to garner public support thru discussions and debates at every public forum and at every opportunity.The intellectuals who are spiritually inclined and secular may have to take the lead.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *