தேவை, தமிழில் பக்தி தொலைக்காட்சி

1

விசாலம்

“என் பையன் ஐ.ஐ.டி.யில் நல்ல ரேங்க் எடுத்திருக்கான். மேல் படிப்புக்கு அமெரிக்கா போகப் போறான்” என்று மிக மகிழ்ச்சியாகச் சொன்னார் கோபாலன். அவர் மனைவிக்கும் இதில் மிகப் பெருமையே. சில வருடங்கள் கழிந்தன.

இப்போது அவர்கள் மூத்த குடிமக்கள். அன்று மகிழ்ந்த அவர்களின் மனம் இன்று சோர்ந்து போய் நிற்கிறது. “நம் ஒரே மகனை ஏன் அங்கு அனுப்பினோம்? ஒரு ‘மாரல் சப்போர்ட்டு’க்குக்கூட ஒருவரும் இல்லை” என ஏங்குகின்றனர். வெளியில் ஒப்புக்குத் தாங்கள் குஷியாக இருப்பது போல் காட்டினாலும் உள்ளே இருக்கும் வேதனையைக் கண்டுகொள்ள முடிகிறது.

மாலை வேளையில் நேரம் போக, முதியோர் பலர், டாக்டர்கள் சொல்லியபடி நடக்கின்றனர். சிலருக்குச் சர்க்கரை நோய், சிலருக்கு மூட்டுவலி மற்றும் சிலருக்குப் பெருத்த உடல்.

இதில் கணவர் முன் நடக்க, ஒரு பத்தடி பின்னால் மனைவி மூச்சு வாங்கியபடி நடக்கிறாள். அந்தக் கணவர் அவளுக்கு நிற்பதில்லை. அந்தக் கால மனிதர்……..

அந்தத் தாய்க்கு தன் மகனின் ஞாபகம் வருகிறது.

“அம்மா மோட்டார் வரது பாத்து…… பாத்து” என்றபடி ஆசையாகக் கையைப் பிடித்து அழைத்துப் போகிறான் அந்த மகன். ‘பாலூட்டிச் சீராட்டி, அவனுக்கென்று லோன் எடுத்து, வீடு கட்டி, மகனுக்கும் மகளுக்கும் தனி அறை அமைத்து, அவர்கள் விருப்பப்படி அலங்கரித்து……… ஹும்      இன்று அந்த அறைகள் காலியாக இருக்கின்றன. அவர்கள் நிழற்படங்கள் மட்டும் வரவேற்கின்றன.

படிப்புக்கு வெளிநாட்டிற்குப் போகும் மகன், மகள் திரும்பி வருகிறார்களா? இல்லையே…… அங்குக் கிடைக்கும் கை நிறையச் சம்பளமும் வசதியாக வாழும் விதமும் அவர்களை அங்கேயே கட்டிப் போட வைக்கின்றன. தங்கள் பெற்றோர்கள் நிலைமையை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஏதோ மாயாஜாலம் போல் மயங்கிக் காதலிலும் ஈர்க்கப்பட்டு, பிடித்த பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டு விடுகின்றனர். குழந்தையின் சந்தோஷம் தான் தங்கள் சந்தோஷம் என்று பெற்றோர்கள் விட்டுக் கொடுக்கின்றனர். இருப்பினும் தங்கள் செல்வங்களின் தொலைபேசி அழைப்பு எப்போது வரும் என்று சனி, ஞாயிறில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கோயில், பூஜை என மனத்தைச் செலுத்திய பின்னர் மீதி நேரத்தை “டெலிவிஷம்… இல்லை.. இல்லை.. ‘டெலிவிஷன்’ என்ற டிவி முன் அமர்ந்துவிடுகின்றனர்.

அதாவது பார்க்கப் பிடிக்கிறதா? எந்தச் சேனல் திறந்தாலும் “படக் படக் டான்ஸ், அத்துடன் இரட்டை அர்த்தங்களுடன் ஒரு பாட்டு,  பார்க்கச் சகிக்காத தொடை தெரியும்படி உடை, மேலே பிரா போன்ற அமைப்பில் ஒரு உடை, இது இளஞர்களுக்கு ரசிக்கும். அவர்கள் வயது அப்படி. ஆனால் மூத்த குடிமக்களுக்கு எப்படி ரசிக்கும்? அதுவும் பழைய கலாச்சாரத்தில் தன் யௌவன வாழ்க்கையைக் கழித்து, பின் பழசுமில்லாமல் புதிய கலாச்சாரத்திலும் ஒட்ட முடியாமல் திரிச்ங்குப் போல் திண்டாடும் மூத்த குடிமக்களுக்கு இது போல் பார்க்க எப்படிப் பிடிக்கும்?

சரி, வேறு சீரியலைப் பார்க்கலாம் என்றால் எல்லா சீரியலிலும் பழிக்குப் பழி, சொத்துச் சண்டை, குடுமபத்திற்குள் பகை, பிஞ்சில் பழுத்த காதல், கள்ளக் காதல், பெரியவர்களிடம் மரியாதைக் குறைவு என்று பல காட்சிகள் வந்து இவர்கள் முகத்தைச் சுழிக்க வைக்கிறது. கருத்தரங்கு பார்க்கலாம் என்றால் அங்கு இருக்கும் தலைப்பு, மனத்தில் கசப்பைத் தருகிறது. தாலியே அவசியமில்லை என்று வாதாடும் ஒரு கட்சி, காதல் கல்யாணம் தான் சிறந்தது என்ற ஒரு கட்சி…….. இன்னும் கொஞ்சம் நாளில் அக்னி வலம் வராமலே கல்யாணம் செய்யலாம் என்று சொல்பவர்களும் வரலாம்.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள என் தெருவில் பலர் வீட்டிற்குச் சென்றேன்.

என் வீட்டுக்குக் கீழுள்ள வீட்டில் வசிக்கும் பங்கஜம் மாமி வீடு……

“மாமி என்ன டிவி பாக்கறேளா?”

“ஆமாம் வேளுக்குடி கீதை கேட்கறேன், இதைவிட்டால் வேறு என்ன பார்க்க முடிகிறது? எல்லாம் ஒரே மாதிரி டான்ஸ்…. பார்க்க நன்னாவா இருக்கு?”

இரண்டு வீடு விட்டு ஒரு கிருஸ்துவ வீடு……

“ஹலோ மிஸஸ் ஜார்ஜ், டிவியிலே என்ன ஓடறது?”

“நான் டிவியே போடறதில்லை. நியூஸ் மட்டும் கேட்கிறேன்”

“ஏன் அப்படி?”

“பார்ப்பது போல் என்ன வரது? காலை எட்டு மட்டும் தான் நம்ப வயசுக்குத் தகுந்தாற்போல் வரது”

இதே போல் மேலும் பல வீடுகளில் இதைப் பற்றிக் கேட்க, எல்லோரும் ஒரே மாதிரி பதில் தான் சொன்னார்கள். ஆக மொத்தம், மூத்த குடிமக்களுக்குத் தேவை உடனடியாக ஒரு பக்திச் சேனல்.

காலை நேரத்தில் யோகா, ஸ்லோகங்கள், கோயில் உலா, குறள், பொன்மொழிகள், இன்றைய நற்சிந்தனை எனப் பல கேட்க முடிகிறது. அதன் பின் அவர்கள் ருசிக்கு ஒன்றும் வருவதில்லை.

பல மாகாணங்களில் வயதானவர்களுக்காகத் தனி பக்திச் சேனல் இருக்கிறது. இதைப் பஞ்சாப், மஹராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற பல மாகாணங்களில் காணலாம். ஹிந்தியில் சம்ஸ்கார், ஆஸ்தா என இரண்டு வருகின்றன. சங்கராவும் சில இடங்களில் காட்டப்படுகிறது. இதில் பல ஆன்மீகத் தலைவர்களின் சொற்பொழிவைக் காட்டுகிறார்கள். ஆங்கிலத்திலும் வருகிறது. தெலுங்கில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மிக
அருமையாக இருக்கிறது. அதில் நாத நீராஞ்சனம் நிகழ்ச்சியும் இசை, நடனம், கதாகாலக்ஷேபம், பஜன் என்று பல நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பாக வருகின்றன. ஆனால் தெலுங்கு பலருக்குப் புரிவதில்லை. இதேபோல் ஹிந்தியும் பலருக்குப் புரிவதில்லை. ஆகையால் நம் தமிழ்நாட்டின் முதியோர்களுக்கு நிச்சயம் ஒரு பக்தி டிவி சேனல் தேவை.

இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஏராளமான மிகச் சிறப்புகள் வாய்ந்த, மிகப் பழமையான சரித்திரப் பிரசித்தி பெற்ற பல இடங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், கோயில்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இந்தப் பக்தி சேனலில் காட்டலாம். அதைத் தவிர மேல்நாடுகளிலும் தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்கள், அங்கிருக்கும் கோயில்கள் போன்றவற்றையும் காட்டலாம்.

எடுக்க எடுக்கக் குறையாமல் வருமளவுக்கு நம் நாட்டில் ஆன்மீக விஷயங்கள் பெருகிக் கிடக்கின்றன. ஆனால் அதை எடுத்துச் சொல்ல ஒருவருக்கும் நேரம் இருப்பதில்லை. முதியோர்களை மனத்தில் கொண்டு ஒரு புது பக்தி சானல் ஆரம்பித்து, அதை மேலும் வளர்த்தால், முதியோர்களின் டென்சன், கவலைகள் குறையும்.

யாராவது பணக்காரர் இதை நடத்த முன் வந்தால் முதியோர்களுக்கு மகிழ்ச்சி பிறக்கும். இதுபோல் ஒன்று வந்தால் மூத்த குடிமக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் தான்.

தொலைக்காட்சி நடத்துபவர்கள், செல்வச் சீமான்கள் இதைப் பற்றி யோசிப்பார்களா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *