பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

11

செவ்வி: அண்ணாகண்ணன்
பேராசிரியர் அண்ணாமலை
பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.

இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

மனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு.

ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.

பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் வல்லமை.காம் ஆசிரியர் , மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பெற்ற பதில்கள் இவை:

 

தமிழின் உண்மையான வயது என்ன?

 

ஒரு இலக்கியத்தின் வயதைக் கணிப்பதை விட ஒரு மொழியின் வயதைக் கணிப்பது கடினமானது. பிற மொழியினர் எழுதிய வரலாற்று ஆவணங்கள், பிற மொழியில் உள்ள கடன் சொற்கள் போன்ற புறச்சான்றுகள் ஒரு கால எல்லைக்குப் பின்னால் போவதில்லை. ஏனென்றால், மொழி பேசப்படும் ஒன்று. பேச்சுக்கு எச்சம் இருப்பதில்லை. அதனால், தொல்லியல் எந்த ஆதாரத்தையும் தரமுடியாது. இது தமிழுக்கும் பொருந்தும்.

பிறப்பால் தொடர்புடைய  மொழிகளை ஒப்பிட்டு மூலமொழியை இனம்காண மொழியியல்  சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. மூலமொழியிலிருந்து மொழிகள் பிரிந்து தனி மொழிகளாகும் காலத்தையும் தோராயமாகக் கண்டறியலாம். இந்த வழிமுறையில்  ஊகங்கள் அதிகமாக இருப்பதால் இதன் முடிவு முழுவதும் நம்பக்கூடியது அல்ல. மேலும், இந்த முறை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் போகப் பயன்படுவதில்லை.

எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னால் மூலமனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து  வெளியேறி மெதுவாக உலகில் பரவ ஆரம்பித்துப் பல்லாயிர ஆண்டுகளுக்குக்குப் பின்தான் மனித மொழிகள்  தோன்றின. அவை இன்றுள்ள மொழிகள் போல இலக்கண முதிர்ச்சி அடைய இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். தமிழ் உட்பட உலக மொழிகளின் வயதை இந்தக் காலத்திற்குப்பின்தான் கணக்கிட வேண்டும்.

தமிழின் வயதைப்  பற்றிப் பேசுவதைவிட அதன் இன்றைய  வீரியத்தைப் பற்றிப் பேசுவது தமிழுக்கும்  நல்லது, தமிழருக்கும் நல்லது.

* உலகின்  முதல் மொழி தமிழ் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

 

இல்லை. முதல் மொழி என்பதற்கு உலகில் முதலில் தோன்றிய மொழி, உலக மொழிகளின் மூலமொழி என்ற இரண்டு பொருள் உண்டு. உலக மொழிகள் யாவும் ஒரு மொழியிலிருந்து பிறந்தன என்ற கொள்கையை ஒப்புக்கொண்டால்தான் இரண்டு பொருளுக்கும் வேறுபாடு இருக்காது. இந்தக் கொள்கையை எல்லா மொழியியலாளர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. இரண்டு பொருளிலும் தமிழ் உலகின் முதல் மொழி என்று சொல்ல முடியாது.

மனித மொழி  முதன்முதலாக எப்போது தோன்றியது என்பதில் மொழியியலில்  முடிந்த முடிபு இல்லை. முதல் மொழி பற்றிய  ஆய்வுகளில் ஊகங்களே நிறைந்திருப்பதால் இது பற்றிய ஆராய்ச்சி எதையும் வெளியிடுவதில்லை  என்பது அமெரிக்க மொழியியல் கழகத்தின்  முடிவு. இந்த நிலையில் அந்த முதல் மொழி தமிழ்தான் என்று சொல்வது ஆசையின் வெளிப்பாடே. ஆய்வின் முடிவு அல்ல.

இன்று உலகிலுள்ள  ஆறாயிரத்திற்குச் சற்று அதிகமான மொழிகள்  ஒரிடத்தில், ஒரு இனத்திடம் பிறக்கவில்லை என்ற  பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக்கொண்டால், மூலத்  தாய்மொழி தமிழா என்ற கேள்விக்கு இடம்  இல்லை.

தமிழ் உலகத்தின்  முதல் மொழியா என்னும் விவாதத்தைவிட, அது தமிழ்நாட்டிலேனும் முதன்மை மொழியாவதற்குத் தமிழர்கள் கல்வித்துறை துவங்கித் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே இன்றைய தேவை.

* தங்கள் மொழிகள் தமிழிலிருந்து வந்தவை அல்ல என இதர திராவிட மொழிகள் சில சொல்லி வருகின்றனவே?

 

இது சரிதான். இதர  திராவிட மொழிகள் தமிழின் சகோதர மொழிகள். சில நெருங்கிய கால இடைவெளி உள்ளவை; சில தலைமுறைகள் தள்ளியவை. ஒரு மொழிக் கூட்டத்தின் பிறப்பு மூலத்தை மொழிகளின் பொதுக் கூறுகளையும் புதிதாக விளைந்த கூறுகளையும் வைத்துக் கண்டறியச் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன் மூலம் கட்டமைக்கப்படும் மொழிநிலை ஒரு கட்டுமானமே. மூலத் திராவிடம் என்பது இப்படியொரு கட்டுமானம். இதிலிருந்து மாற்றங்களால் வேறுபட்டு வேறுபட்டு மொழிகள் தனித்துவம் பெறுகின்றன. இப்படித் தனித்துவம் பெற்ற பல மொழிகளில் ஒன்று தமிழ். தமிழ் தோன்றியபின், அதிலிருந்து மாற்றம்பெற்று இருளம், மலையாளம் தனி மொழிகளாயின.

சகோதர உறவும் குடும்ப உறவுதானே?

* ‘தமிழின் எழுத்துகளைக் குறைத்து விடலாம்; குறைவான எழுத்துகளுடன் இருந்தால், மொழியை வேகமாகக் கற்கலாம்; மொழியும் வேகமாக வளரும்’ என்ற கருத்துகளைச் சிலர் முன் வைக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

 

ஒரு மொழியின் எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்த மொழியை எளிதாகக் கற்கலாம் என்று சொல்வதற்குக் கொள்கை அடிப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்தச் சான்றும் இல்லை.

அதே போல, உயிர்மெய்யெழுத்துக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் போல், உயிருக்கும் மெய்க்கும் மட்டும் எழுத்துக்கள் இருந்தால் அது கற்பதற்கு எளிய மொழி என்றும் சொல்ல முடியாது. தாய்மொழியைக் கற்பதில் எத்தகைய மொழியையும் பேசக் கற்பதில் எந்தக் குழந்தையும் சிரமப்படுவதில்லை. எழுதக் கற்பதில் சொற்களைக் கற்பதுதான் முக்கியமானது. சொற்களைக் கற்றால் அதில் உள்ள எழுத்துக்களைக் கற்பது தனியாகச் சிரமம் தரக்கூடிய ஒன்று அல்ல. ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் பள்ளியில் பயில்வதற்கும் இது பொருந்தும்.

சொற்களின் எழுத்தமைப்பை(spelling)க் கற்பதில் சிறிய அரிச்சுவடி உதவும் என்று சொல்ல முடியாது. ஆங்கிலச் சொற்களின் எழுத்தமைப்பைக் கற்பதில் உள்ள இடர்ப்பாடுகள் இதற்குச் சான்று. குறைந்த எழுத்துகள் இருக்கும்போது ஒவ்வொரு எழுத்தும் பல உச்சரிப்புகளை ஏற்கிறது. எழுத்தை அது வரும் இடத்திற்குத் தகுந்த அதன் உச்சரிப்போடு படிக்கத் தனி முயற்சி தேவை.

தமிழில் அடிப்படை எழுத்துகள் முப்பதே. உயிர்மெய்யெழுத்துகளைக்  கற்பது மெய்யையும் உயிரையும் சேர்க்கும் விதிமுறைகளைக் கற்பதேயென்றி எழுத்தெழுத்தாகக் கற்பது இல்லை.

* தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் வா.செ.குழந்தைசாமி  உள்பட பலரும் பலவித மாற்று வடிவங்களை வலியுறுத்தி வருகிறார்கள். இது தேவையா? ஆமெனில் எந்த மாற்று வடிவங்களை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?

 

தமிழ் எழுத்துச்  சீர்திருத்தம் எழுத்துகளின் வடிவத்தைப்  பற்றியும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் மட்டுமே பேசுகிறது. இதைப் பற்றிய யோசனைகள் எழுது கருவிகளுக்கு ஏற்புடையதாகத் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையிலும், விதிவிலக்குகளைக் குறைப்பது பகுத்தறிவுக்கு உகந்தது என்ற கொள்கை அடிப்படையிலும் முன்வைக்கப்படுகின்றன. இதனாலேயே மாற்றம், சீர்திருத்தம் எனப்படுகிறது.

மொழியின் கூறுகள் அறிவுசார்ந்து மட்டுமல்லாமல், கலாச்சார உணர்வின் அடிப்படையிலும் காக்கப்படுகின்றன. கருவிகள் மாறிக்கொண்டே இருக்கும். தட்டச்சுக் கருவியில் இருந்த இடநெருக்கடி கணினியில் இல்லை. இத்தகைய புறக் காரணங்கள் மொழிபற்றிய சித்தாந்தங்களிலிருந்து பிறப்பவை. மொழியிலிருந்து பிறப்பவை அல்ல.

மொழியின் அகக் காரணங்களால் ஏற்படும் எழுத்து மாற்றங்களே மொழியின் அடிப்படைத் தேவையான கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணையாக வருகின்றன. தமிழுக்குப் புதிய சொற்கள் வந்து சேர்ந்தபோது கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட்டன பகரத்தின் உரொசொலியைக் கொண்ட சொற்களை எழுத ஆய்த எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

இன்று பேச்சுத்  தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதும் தேவை ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது. இதுவும் ஒரு அகக் காரணம். இந்தத் தேவையை நிறைவேற்ற, சில புதிய எழுத்துகள் – முக்கியமாக உயிரெழுத்துகள்- தமிழுக்குத் தேவைப்படலாம்.

எழுத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணத்தைவிட எழுத்தை  மொழியின் வளர்ச்சிக்குத் தகுந்தபடி மாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவசியமான ஒன்று.

* இக்காலச் சூழலுக்கு ஏற்ப, தமிழுக்குப் புதிய இலக்கண நூல் தேவையா?

 

இக்காலத்தில் மாறியுள்ள  தமிழுக்கு ஏற்ப புதிய இலக்கணம் எழுத வேண்டும். தமிழின் இலக்கணம் மாறிவிட்டது. மாறிய இலக்கணத்தை வரையறைப்படுத்தும் இலக்கண நூல்தான் இல்லை. இந்தத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும். அது மாணவர்களுக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் முக்கியமாகத் தேவை.

தமிழுக்கு ஒரு இலக்கண மரபு உண்டு. இந்த மரபில் சில இன்றைய தமிழின் இலக்கணத்தை விவரிக்கப் போதுமானவையாக, பொருந்துவனவாக இல்லை. மொழியின் இலக்கணத்தைப் பற்றி இன்றைய மொழியிலாளர்கள் புதிய கருத்துகளைக் கூறுகிறார்கள். இரண்டையும் உள்வாங்கிப் புதிய இலக்கண நூல் எழுதப்பட வேண்டும்.

* செம்மொழி  அறிவிப்பின் மூலம் தமிழ்  பெற்ற பயன்கள் எவை எவை?

 

செம்மொழி அறிவிப்பின்  மூலம் தமிழுக்குத் செம்மொழித் தகுதி வரவில்லை. அந்தத் தகுதி அதற்கு ஏற்கனவே இருந்தது. கல்வியாளர்கள் இந்தத் தகுதியை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இந்தத் தகுதியை அரசு தர வேண்டும் என்று கோரியது அரசு  முத்திரைக்குத் தமிழர்கள் தரும் மதிப்பால்தான். இந்தக் கோரிக்கையின் ஒரு நோக்கம் சமஸ்கிருதத்திற்குச்  சமமான தகுதியை இந்திய அரசு தமிழுக்குத் தர  வேண்டும் என்பது.

இதனால் வரும் பெருமையும் பணமும் தமிழுக்கும் கிடைக்க வேண்டும் என்பது. இந்திய அரசோ செம்மொழிப் பட்டியல் என்ற ஒன்றைப் புதிதாக உருவாக்கித் தமிழை அதில் சேர்த்தது. சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, அரேபியம் முதலான மொழிகள் இந்தப் பட்டியலில் சேரவில்லை.

இந்திய அரசு  செம்மொழித் தமிழ் ஆய்வுக்காக ஒரு நிறுவனத்தைச் சென்னையில் நிறுவியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வுத் திட்டங்களால் தமிழுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செம்மொழி என்ற  அரசுத் தகுதியால் தமிழுக்குப் பயன் என்று  சொல்ல வேண்டுமானால் பின்வரும் நிகழ்வுகள்  ஏற்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் செம்மொழி இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்து ஆய்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். தற்கால இலக்கியப் படைப்பாளிகளிடம் செவ்விலக்கியத்தின் பாதிப்பு ஏற்பட வேண்டும். தங்கள் மொழி செம்மொழி என்று பெருமைப்படும் தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவு தர வேண்டும். இவையெல்லாம் நடந்தால் செம்மொழி அறிவிப்பின்மூலம் தமிழ் பயன் அடைந்தது என்று சொல்லலாம்.

* தமிழுக்குச் சரியான முறையில் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டுள்ளதா? 1500 ஆண்டுகளாக வாழும் மொழி என்ற அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை 2000 என மாற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறதே?

 

எந்த  மொழிக்கும் செம்மொழித் தகுதி அரசு தருவதே சரியான முறை இல்லை. அரசின் முடிவுகளில் அரசியல் கணக்கு இருக்கும். அரசு போட்ட கணக்கு பலித்தால் அரசைப் பொறுத்தவரை சரியான முடிவுதான்.

காலப் பழமை மட்டுமே செம்மொழித் தகுதியை நிர்ணயிப்பதில்லை. ஆயிரம் ஆண்டு என்றோ இரண்டாயிரம் ஆண்டு என்றோ வரையறுப்பது தன்னிச்சையான ஒன்று. காலம் மொழி வாழும் காலம் அல்ல; மொழியில் எழுத்திலக்கியம் தோன்றிய காலம். அந்த இலக்கியம் உன்னதமானதாக, தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த இலக்கியத்தில் அறிவிலக்கியமும் சேரும். செவ்விலக்கியம் இல்லாத செம்மொழி இல்லை.

* தமிழைப் போலவே தங்களுக்கும் செம்மொழி அந்தஸ்தினை அளிக்க வேண்டும் என தெலுங்கு, கன்னட மொழியாளர் கோரிப் பெற்றதில் நியாயம் உண்டா?

 

செம்மொழித் தகுதியை அரசியல் கணக்குப் போட்டுக் கேட்கும்போது, தரும்போது யாரும் அரசியல் ஆதாயம் தேடுவதை எப்படி நியாயம் இல்லை என்று சொல்ல முடியும்? அரசியல் காரணத்துக்காக இந்திய அரசு எத்தனையோ மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்கலாம். எட்டாவது அட்டவணையில் புதிதாக மொழிகளைச் சேர்ப்பது போல செம்மொழிப் பட்டியலில் புதிய மொழிகளை அரசு சேர்ப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.

=====================================================

பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் தமிழ் மொழியியல் குறித்தான உங்கள் கேள்விகளை எழுப்பலாம். தக்க வினாக்களுக்கு அவர் பதில் அளிப்பார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: vallamaieditor@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

  1. “…தமிழ் உலகத்தின் முதல் மொழியா என்னும் விவாதத்தைவிட, அது தமிழ்நாட்டிலேனும் முதன்மை மொழியாவதற்குத் தமிழர்கள் கல்வித்துறை துவங்கித் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே இன்றைய தேவை…”

    அக்ஷரலக்ஷம் கொடுக்கலாம், இந்த அறிவுரைக்கு.

  2. பேரா. அண்ணாமலை அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. கேள்விகளும் அதற்கு பேராசிரியர் தந்த மறுமொழிகளும் மிகவும் அருமை. ஒரு சில இடங்களில் பேராசிரியரின் கருத்துகளோடு என்னால் ஒன்ற இயலவில்லை. எடுத்துக்காட்டுக்கு இரண்டு:

    1)//இன்று பேச்சுத் தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதும் தேவை ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது. இதுவும் ஒரு அகக் காரணம். இந்தத் தேவையை நிறைவேற்ற, சில புதிய எழுத்துகள் – முக்கியமாக உயிரெழுத்துகள்- தமிழுக்குத் தேவைப்படலாம்.//

    கருத்து: புதிய எழுத்துகளைச் சேர்க்கலாம்தான், ஆனால் இப்படியே சேர்த்துக்கொண்டே போனால் உருப்படாமல் போகும். நாளை சீன மொழி தலை தூக்கும், அல்லது வேறொரு மொழி தலைதூக்கும். இதற்காக எல்லா மொழி ஒலிகளுக்கும் எழுத்துகள் உருவாக்கத் தேவை இல்லை. ஆங்கிலத்திலே, இலத்தீன் எழுத்துகளைக் கொண்டு, ஆங்கிலத்தில் உள்ள ஒலியன்களைக் கொண்டே திருவனந்தபுரம், தூத்துக்குடி என்று எழுத இயலும். ஆனால் ஏன் அவர்கள் அவ்வாறு வழங்காமல் Trivandrum, Tuticorin என்று எழுதி வழங்கினார்கள்? Gandhi, Kannan, Buddha என்னும் எளிய சொற்களைக் கூட ஆங்கிலேயர்களால் சரிவர ஒலிக்க இயலவில்லையே. இவற்றில் உள்ள ஒலியன்கள் ஆங்கிலத்தில் இல்லையா என்ன?
    ஒவ்வொரு மொழிக்கும் தன்னியல்பான உள்ளிசை, ஒலிகளுக்கு இடையே
    நல்லாறான உள்ளிசைவுகள் உண்டு. இதனை தற்கால மொழியலாளர்கள் மதிப்பதில்லை. மொழியியல் என்னும் போர்வையில் ஒருவகையான ஆங்கிலமொழி
    சார்ந்த மொழித்திணிப்பாண்மை பெருகுவதை பேரா. அண்ணாமலை போன்றோர்
    எப்படி அணுகின்றார்கள் எனத் தெரியவில்லை. இராபர்ட் பிலிப்ஃசன் அவர்களின் Linguistic Imperialism, அலசிட்டேர் பென்னிக்குக் அவர்களின் நூல்களையும்
    (English and the discourses of colonialism, The cultural politics of English)
    குறிப்பிடலாம்.

    2) //தமிழுக்கு ஒரு இலக்கண மரபு உண்டு. இந்த மரபில் சில இன்றைய தமிழின் இலக்கணத்தை விவரிக்கப் போதுமானவையாக, பொருந்துவனவாக இல்லை. மொழியின் இலக்கணத்தைப் பற்றி இன்றைய மொழியிலாளர்கள் புதிய கருத்துகளைக் கூறுகிறார்கள்.//

    கருத்து:சிறு திருத்தங்கள் செய்யலாம், ஆனால் பெரிதாக திருத்தங்கள் செய்ய எந்தத் தேவையும் இல்லை. பலவும் செய்து தமிழைக் குட்டிசுவராக்கலாம், அதற்குப்
    புதுமை, முன்னேற்றம் என்னும் பெயர்களும் சூட்டலாம். குறிப்பாக பேரா. அண்ணாமலை, பேரா. இழ்சிப்மன் போன்றவர்களின் பேச்சுத்தமிழ் சார்ந்த கருத்துகளை
    மறுத்துப் பேச நிறைய உள்ளன. ஆனால் இங்கு செய்தல் இயலாது, கூடாது, பொருந்தாது.

    பேரா. அண்ணாமை போன்றவர்கள், தமிழ் மரபை அறிந்தவர்கள், இன்னும் துணிவாக
    எண்ண வேண்டும், தற்கால மேற்கத்திய வன்சாய்வுகளை இனம்கண்டு துணிந்துரைக்க
    வேண்டும் என்பது என் போன்றோர் அவா.

    செல்வா
    வாட்டர்லூ, கனடா

  3. மின் அஞ்சல் வழியான நேர்காணல் மிகவும் அற்புதமான யோசனை. உலகத்தை இன்னும் துக்கிணியூண்டாகக் குறுக்க வைக்கிற விஷயம். அருமை.

    மிக நல்ல கேள்விகைளைத் தேர்ந்தெடுத்து நல்ல பதில்களையும் பெற்று இருக்கிறீர்கள். மிக நல்ல துவக்கம்.

    மனமார்ந்த வாழ்த்க்கள் கண்ணன்.

    அசாத்தியமான வல்லமையுடன் தொடருங்கள்.

    யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

  4. மொழியியல், மொழிசார் ஒலியியல், கணினி மொழியியல், பேச்சு – எழுத்துரை, எழுத்துரை – பேச்சு, எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, இவற்றில் தராதரம், இவை தொடர்பான வினாக்களுக்கும் விடை கேட்டிருக்கலாமே.
    முதல் மொழிக் கற்பனையிலேய வல்லமை வாசகர்களை முடக்கிவிடாதீர்கள்.
    கனடாவிலிருந்து செல்வா கூறியனவும் வினாக்களாக்கலாம்.

  5. பேராசிரியர் அண்ணாமலை அவர்களின் கருத்துக்களில் அறிவார்ந்த அணுகுமுறை தெரிகிறது.இது, உணர்ச்சி சார்ந்த அணுகுமுறையின் காலம் முடிந்துபோனதைக் காட்டுகிறது.மொழி குறித்த சிந்தனைகளில் அடிப்படை வாதம் பயன்படாது.
    தமிழ் குறித்த எண்ணங்கள் ,திட்டங்கள் இவை எல்லாம் இன்று இன்றியமையாது அனைத்து நிலைத் தமிழரையும் சுற்றி அமைய வேண்டும்.
    இன்று கல்வி கற்ற தமிழரே தமிழுக்கு இடம் தர மறுக்கிறார்கள் என்பதே உண்மை .வழக்குத் தமிழ் ஆங்கில ஆடை அணிந்து கொள்வதில் ஆனந்தம் அடைவதைக் காண்கிறோம்.
    தமிழ்நாட்டில் தமிழர் உருளைக் கிழங்கென்று சொல்லிப் பின், அதாவது ‘பொடேடோ’என்று விளக்க முற்படும் அவல நிலையைத்தான் காண்கிறோம்.
    இதை அண்ணாமலையார் வலியுத்தி இருப்பதாகச் சொல்லலாம்.
    நல்ல ஒரு நேர்காணலைப் படித்த நிறைவு ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.