பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 2
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
தேவ் எழுப்பிய கேள்விகள்:
1. தமிழ்ச் சொற்களுக்கான வேர்களின் தொகுப்பு தனியாக இருக்கிறதா?
2. இந்தச் சொல்லுக்கு இதுதான் வேர் என்று கணடறிவது எப்படி?
3. தற்சமம், தற்பவச் சொற்களின் தொகுப்பு தனியாக வெளியிடப்பட்டுள்ளதா?
4. திருவாளர்கள் அருளி, தேவநேயர் போன்றோர் தொகுத்த வேர்ச்சொல் அகராதி இலக்கண முறைப்படி அமைந்ததுதானா?
5. இவர்களுக்குமுன் அறிஞர்கள் இத்தகைய முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை?
6. தமிழில் பிராகிருதம், பாலி மொழிகளின் பாதிப்பு உண்டா?
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
தமிழ்ச் சொற்களின் வேர்களின் தொகுப்பு என்று தனியாக ஒரு நூல் என் பார்வைக்கு வரவில்லை. இதைப் போன்றே தற்சம, தற்பவச் சொற்களின் தொகுப்பும். வின்ஸ்லோ தன் தமிழ் – ஆங்கில அகராதியில் சமஸ்கிருதச் சொற்களை உடுக்குறியிட்டுக் காட்டியிருக்கிறார். தூய தமிழில் எழுத விரும்புவோருக்குத் துணையாக, தமிழில் வழக்கில் உள்ள சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலான தமிழ்ச் சொற்களைத் தரும் பட்டியல்களும் உண்டு. தேவநேயப் பாவாணரை ஆசிரியராகக் கொண்டு தொடங்கிய வேர்ச்சொல் அகராதித் தொகுதி, தமிழ்ச் சொற்களுக்கு வேர் கண்டுபிடித்துத் தருகிறது. அகராதியின் எல்லாத் தொகுதிகளும் வெளிவந்த பின் அவற்றில் உள்ள வேர்களைத் தனியாகத் தொகுத்தால் அது ஒரு தமிழ் வேர் அகராதி ஆகும். இன்னொரு ஆசிரியர் காணும் வேர்கள், இதிலிருந்து வேறுபடலாம். ஒரு ஆசிரியர் தமிழ் வேர் என்று இனங்காண்பது மற்றொரு ஆசிரியருக்கு சமஸ்கிருத வேராக இருக்கலாம். ஆய்வாளர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் வேர் காணக் கையாளும் அலசல் முறைகளால் இருக்கலாம்; ஆசிரியர்களின் மொழிக் கொள்கை (language ideology) அடிப்படையில் பிறந்தவையாகவும் இருக்கலாம்.
சமஸ்கிருத வேராக இருந்தாலும், பல சொற்கள் பிராகிருதம், பாலி வழியாகத் தமிழுக்கு வந்தவை. சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாகச் சொற்கள் தமிழுக்கு வருவதற்கு முன்னரே பிராகிருதம், பாலியின் சொல் வடிவங்கள் சமணம், பௌத்தம் மூலம் தமிழுக்கு வந்தன. தொல்காப்பியர் வடசொல் என்று கூறுவது மேலே உள்ள மூன்று மொழிச் சொற்களையும் குறிக்கும் என்பது என் கருத்து. வேர்ச்சொல் ஆராய்ச்சி ஒரு வேரிலிருந்து உருவாகும் பல சொற்களைப் பற்றிய சொல்லாக்க ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒரு சொல் இன்னொரு மொழியிலிருந்து வந்த சொல்லா என்ற சொல் வரலாற்று ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை ஒப்பிட்டு அவை ஒரு மூல மொழியிலிருந்து பிரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையா என்று அறியும் மொழி ஒப்பீட்டு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.
இவற்றில், தமிழைப் பொறுத்தவரை, இரண்டாவதிலும் மூன்றாவதிலும் ஓரளவு ஆய்வு நடந்திருக்கிறது. இங்கும் வரலாற்றுத் தொடர்புடைய சொற்களை அடையாளம் காணபதில் உள்ள ஆர்வம் அந்தச் சொற்களின் வேர்களைக் காண்பதில் இல்லை. முதலாவதில் ஆய்வு இனி தொடங்க வேண்டும். சொல் பிறப்பில் தமிழறிஞர்களுக்கு உள்ள ஆர்வம் (தொகை நீக்கிய) சொல்லாக்கத்தில் (word formation) இல்லாதது, இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் (புதிய சொல்லாக்கத்தில் (word creation) இருக்கும் மிகுந்த ஈடுபாடு வேறு). சொல் பிறப்பில் உள்ள ஆர்வம் தமிழில் வழங்கும் ஒரு சொல் பிற மொழியில் பிறந்ததா என்று அறிவதில் இருக்குமளவு ஒரு சொல்லின் மூலமான அதன் வேரை அறிவதில் இல்லை. சொல்லின் வேர் பற்றிய உணர்வு, தொல்காப்பியர் காலத்திலிருந்தே இருக்கிறது. தமிழில் வட சொற்கள் இருந்ததும் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவையும் இதற்குக் காரணம்.
தமிழ் இலக்கண மரபில் சொல்லமைப்பு விளக்கம், சமஸ்கிருத இலக்கண மரபில் போல, சொல்லின் வேரை அடிப்படையாகக் கொள்ளாதது, வேர்ச்சொல் ஆய்வையோ, வேர்ச்சொல் அகராதியையோ இலக்கணத்தின் ஒரு பகுதியாக அல்லது இலக்கணத்தின் துணைக் கருவியாக எடுப்பதைத் தேவையில்லாததாக ஆக்கிவிட்டது என்று நினைக்கிறேன். காலனிய காலத்தில் முக்கியத்துவம் பெற்ற திராவிட மொழிக் குடும்ப ஆய்வு, வேர்ச்சொல் ஆராய்ச்சியில் ஆர்வத்தை உண்டு பண்ணியது.
வேர்ச்சொல் ஆய்வில் முக்கியமான நெறிமுறையில் கீழ் வருபவை அடங்கும். வேர்ச்சொல்லிருந்து பிறக்கும் சொற்களை – அவை ஒரு மொழிக்குள்ளே இருந்தாலும் சரி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் இருந்தாலும் சரி – இணைக்கும் விதிகள் பொது விதிகளாக இருக்கும். அதாவது, ஒரு விதி ஒரு சொல்லுக்கு மட்டுமே பொருந்தும் விதியாக இருந்தால் அது சந்தேகப்படக்கூடியதாக இருக்கும். ஒரு வேர்ச்சொல்லிலிருந்து
பிறக்கும் பல சொற்களின் பொருள்கள் தர்க்கரீதியாக நியாயப்படுத்தக் கூடியவையாக இருக்கும். வேர்ச்சொற்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாக அல்லது சிறு வேறுபாடு மட்டுமே கொண்டவையாக இருக்கும்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் கருத்து:
மொழியியல், மொழிசார் ஒலியியல், கணினி மொழியியல், பேச்சு – எழுத்துரை, எழுத்துரை – பேச்சு, எழுத்துப் பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, இவற்றில் தராதரம், இவை தொடர்பான தங்களின் கருத்துகளை அறிய விழைகிறேன்.
பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:
இவை எல்லாவற்றையும் பற்றிச் சொல்ல ஒரு பெரிய கட்டுரையே எழுத வேண்டும். இங்கு சுருக்கமாகச் சில கருத்துகளைச் சொல்கிறேன். மொழி கருத்துப் பரிமாற்றத்திற்கு ஒரு கருவி, மொழி மனத்தின் கட்டமைப்பை (cognitive structure) அறிந்துகொள்ள ஒரு கருவி, மொழி சமூகத்தின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஒரு கருவி என்று பல பரிமாணங்களில் மொழியை ஆய்வு செய்யும் அறிவியல் மொழியியல். முதல் இரண்டு ஆய்விலும் இலக்கணம் முக்கிய இடம் பெறும். இலக்கணம் மொழிசார் ஒலியை உலகுசார் பொருளுடன் இணக்கும், தட்டுகளுடன் கூடிய, ஒரு கட்டமைப்பு.
இலக்கணவியல், தமிழில் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்த மரபு மொழியை இலக்கியத்தின் கருவியாகப் பார்க்கும் ஒன்று. அதாவது, மொழியின் இலக்கணம் செய்யுளின் இலக்கணத்தை அறிந்துகொள்ளத் தேவையான ஒன்று என்ற கருத்தைக் கொண்டது. இக்கால மொழியியல் இதிலிருந்து பரந்துபட்டது. கணினியைக் கருவியாகக் கொண்டு மொழி என்ற கருவியை ஆராய்வதே கணினி மொழியியல். Natural Language Processing ஒரு உதாரணம். மனிதனின் குறுக்கீட்டைக் குறைத்துக் கணினி மூலமே மனிதன் மொழியின் மூலம் செய்யும் வேலைகளைச் செய்வதும்
இதில் அடங்கும். Machine Aided Translation, Synthetic Speech முதலியன இதற்குச் சில உதாரணங்கள். மொழியியலிருந்து தமிழ் ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றில் பின்வருவனவற்றைச் சேர்க்கலாம்.
இலக்கணத்தின் தன்மையைப் பொறுத்தவரை மொழிகளிடையே ஏற்றத் தாழ்வு இல்லை. இது பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் பொருந்தும்; பண்டித மொழிக்கும் பாமரரின் கிளை மொழிக்கும் பொருந்தும். செந்தமிழ் இலக்கணத்தின் வன்மையும் வளமையும் பள்ளி செல்லாதவரின் பேச்சின் இலக்கணத்திலும் உண்டு. மொழிகளுக்கிடையே, ஒரு மொழியின் வகைகளுக்கிடையே உள்ளதாகக் கருதப்ப்டும் ஏற்றத் தாழ்வுகள் அவை
பேசுவோரின் அரசியல் அதிகார ஏற்றத் தாழ்வுகளின் பிரதிபலிப்பு.
மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியம், அறிவியல் ஆகியவற்றில் உள்ள ஏற்றத் தாழ்வுகளின் பிரதிபலிப்பு. இதுவே மொழி ஆய்வில் மொழியியலின் அடிப்படை அணுகுமுறை. மொழியில் – மொழியின் இலக்கணத்தில் – மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடக்கும் ஒன்று; மக்களுடைய மொழிப் பயன்பாட்டினால் நிகழும் ஒன்று. இதைத் தடுக்கும் அரசியல் சார்ந்த முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. இது மொழியியல் கண்ட ஒரு அடிப்படை உண்மை. மொழி பற்றிய இந்தப் புரிதல், தமிழ் (அல்லது ஆங்கில) மொழி மற்ற மொழிகளைவிட உயர்ந்தது; தமிழ் மொழி என்றும் மாறாதது என்ற நம்பிக்கைகளுக்கு மாறுபட்டது.
(பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)
அடிச்சொல், வேர்ச்சொல், பகுதி, முன்னொட்டு இவற்றிற்கான வேறுபாடு என்ன ஐயா.