ஏஞ்சலினா ஜோலி கலக்கும் ‘சால்ட்’

0

ஒரு பெண்ணின் கற்பை சந்தேகப்பட்டால் எப்படி இருக்கும்?  கொதித்து எழுவாள் அல்லவா? ஒர் உயர் அதிகாரியின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பினால்.. நிஜமான நேர்மையான அதிகாரி கோபப்படவே செய்வார்.

உயர் பொறுப்புள்ளவர் மீது சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளி பழி சுமத்தினால் அவரால் தாங்கிக்கொள்ள முடியுமா?

அப்படி ஒரு பழிதான் எவ்லின் சால்ட் மீது விழுந்தது. சால்ட் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி பொறுப்பு, பணிகள் எல்லாமே நாட்டுக்காகவே என்று சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டு உயர் பொறுப்பில் இருப்பவள் நாட்டு ரகசியக் காப்புக்காக உறுதி  எடுத்துக் கொண்டுள்ளவள்.அப்படிப்பட்ட எவ்லின் சால்ட் மீது ரஷ்ய  உளவாளிகளுக்கு ஏஜெண்டாக செயல்படுகிறாள் என்கிற பழி வருகிறது.

ரஷ்யாவிலிருந்து உளவாளிகள் அமெரிக்காவில் ஊடுருவியுள்ளனர். சதிகாரர்கள் அமெரிக்க அதிபரைக் கொலை செய்ய தலைநகருக்குள் நுழைந்து விட்டனர் என்ற தகவல் நாட்டு மக்களிடம் தீயாய் பற்றிக் கொள்கிறது. ரஷ்ய  உளவாளிகளின் ஏஜெண்ட் எல்வின் சால்ட் தான் என்கிற பழி மேலும் வெப்பமாகப் பரவுகிறது.

ரஷ்ய சதிகாரன் என்ற சந்தேகத்தில் பிடிபடும் ஒருவனிடம் சால்ட்  விசாரனை நடத்துகிறாள். நான் தான் ‘வாஸிலி ஆர்லோவ்’ ( Vassily Orlov) என் கிற அவன், ரஷ்ய உளவாளி நியூயார்க் வந்திருப்பதாகவும் அதிபரைக் கொல்ல  வந்திருப்பதாகவும் கூறுகிறான். இந்த ஏஜெண்ட் KA-12 என்றும் இத்திட்டத்திற்கு KA திட்டம் என்றும் கூறுகிறான். தன் நாட்டு பாதுகாப்பின் மீதுள்ள நம்பிக்கையில் KA திட்டமெல்லாம் பொய். கட்டுக் கதை மாயை என்கிறாள் சால்ட். அதை ஏளனம் செய்தபடி அவன் கூறுகிறான். இத்திட்டத்திற்கு உதவி செய்யும் அமெரிக்க ஏஜெண்ட் யாரென்று தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? அந்த ஏஜெண்ட் பெயர் எவ்லின் சால்ட் என்று கொளுத்திப் போடுகிறான். ‘ நான் தான் எவ்லின் சால்ட்’ என்று சால்ட் கூற, ‘அப்ப அந்த ஏஜெண்ட் நீதான்’ என்கிறான் அவன்.

இப்படி முகத்துக்கு நேராகவே தேசத் துரோகப் பழி விழுந்தால் என்ன செய்வாள் சால்ட்? தன்னைச் சுற்றி ஏதோ சதிவலை பின்னப்பட்டிருப்பதை உணர்கிறாள். கைதாவதோ, குற்றவாளிக் கூண்டில் நிற்பதோ, நாட்டுக்காக உயிர்விடுவதோ பெரிதில்லை. தன் மீதுள்ள அவப்பெயரை, களங்கத்தை முதலில் துடைக்க வேண்டும். இதன் பின்னால் உள்ள சதிகாரர்களை வேரறுக்க வேண்டும் என்று சிலிர்த்து எழுகிறாள். போலீஸ் பிடியிலிருந்து
ஓடுகிறாள். ஓடிக்கொண்டே இருக்கிறாள். தன்னை ஒரு  நிரபராதி என்று நிரூபிக்க அவள் செய்யும் போராட்டங்கள், சாகசங்கள், பரபரப்பான திருப்பங்கள், இப்படித் தான் போகிறது ‘சால்ட்’ படக்கதை.

ஒரு சமகால ஆக்சன்  திரில்லராக உருவாகி இருக்கும் ஹாலிவுட் படமிது. ஏஞ்சலினா ஜோலினா சால்ட்டாக பிரதான வேடமேற்க, பிலிப்நாய்ஸ் இயக்கியிருக்கிறார். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் படத்தை உலகெங்கும் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. சால்ட் படத்தின் பெரும் பலமே நாயகி ஏஞ்சலினா ஜோலிதான்.

நடிகைகளைப் பொறுத்தவரை கனவுக் கன்னிகளாக இருப்பவர்கள் நடிப்பாற்றலில் சிறந்து விளங்குவதில்லை. நடிப்பு ராணிகள் கனவுக் கன்னி தகுதியைப் பெறுவதில்லை. இதுதான் நம்மூர் சூத்திரம். ஆனால் ஜோலி அப்படிப் பட்டவர் இல்லை. கனவுக் கன்னிகளில் தர வரிசையில்பலமுறை முதலிடம் பிடித்தவர். மிகச் சிறந்த நடிகை என்கிற விருதும் பெற்றவர். தன் 11ஆவது வயதிலேயே தியேட்டர் இன்ஸ்டிடியூட் என்கிற நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து 16ஆவது வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுப்பட்டவர். ஆரம்பத்தில் இசை வீடியோக்களில் தலைகாட்டினார். ஹாலிவுட்டில் “Lara Croft” வரிசையில் வந்த படங்கள் மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தன. அதன் பிறகு இவரது வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

மிகவும் அழகான பெண்கள் பட்டியலில் பலமுறை இடம் பெற்றவர். வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. சுமார் 40 படங்களில் நடித்துள்ள  இவர், ஆஸ்கார், எம்மி, கோல்டன் குளோப் (3 முறைகள்)  போன்ற 60-க்கும் மேற்பட்ட விருதுகளைக்  குவித்தவர். A  Mighty Heart  படத்துக்காக மிகச் சிறந்த நடிப்புக்கான விருதான ” Outstanding performance Award”  2008இல் பெற்றவர்.

நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களை எடுத்த ஜோலி, A Place in Time என்கிற படத்தின் இயக்குநரும் கூட. இத்தனை விஸ்தாரமான ஆளுமை  கொண்ட ஜோலி, ‘சால்ட்’ படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

தீப் பொறி பறக்க வரும் ‘சால்ட்’, 2010 ஜுலை மாதம் தமிழிலும் வெளியாகிறது. வெளியிடுவது, சோனி பிக்சர்ஸ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *