வெள்ளித் திரையில் வன்முறை

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

தொNageswari Annamalaiலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து எந்த சேனலை எப்போது திருப்பினாலும் ஏதாவது சண்டைக் காட்சிகள் நடந்துகொண்டிருக்கும், அல்லது ஆபாசப் பாடல் காட்சி நடந்துகொண்டிருக்கும். இப்போது திரைக்கு வரும் தமிழ்ப் படங்களில் சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அதே மாதிரி கதாநாயகியோ அல்லது ஆடல் பாடலுக்கென்றே அமர்த்தப்பட்ட நடிகையோ அரைகுறை உடையில் நடனமாடுவதையும் தவறாமல் படங்களில் பார்க்கலாம். ஏன் இந்த நிலைமை?

‘ரேணிகுண்டா’ என்ற படத்தைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது எப்போது வெளிவந்தது என்று தெரியவில்லை. படம் ஆரம்பித்ததிலிருந்து படம் முழுக்க வன்முறைக் காட்சிகள்தான். கதாநாயகனின் தந்தை தன் மனைவியை ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்த ஸ்கூட்டரின் மீது தன் காரை மோதி, வில்லன் அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே கொன்றுவிடுகிறான். செய்தி அறிந்து கதாநாயகன், தந்தை – தாயின் உடல்களைக் கண்டு கதறி அழுகிறான். அதைச் சுற்றி நின்று பார்க்கும் பொது ஜனங்களில் ஒருவர் கூட காவல் துறையைக் கூப்பிடவோ, கதாநாயகனுக்கு ஆறுதல் கூறவோ வரவில்லை. தமிழ்நாடு இந்த அளவிற்குத் தாழ்ந்துவிட்டதா? செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ்க் கலாசாரத்தைப் பற்றிப் பெருமை அடித்துக்கொள்கிறார்களே, இதுதான் தமிழ்க் கலாச்சாரமா? அதன் பிறகு படம் முழுக்க வன்முறைதான். காவலர் ஒருவர் தாறுமாறாகக் கதாநாயகனை அடித்து நொறுக்குகிறார். இப்படித்தான் தமிழ்நாட்டில் காவல் துறை செயல்படுகிறதா? அல்லது சினிமாவில் இதை மிகைப்படுத்துகிறார்களா? காவலர்கள் சிறைக் கைதிகளை அடிப்பதும் சிறைக் கைதிகள் அவர்களைத் திருப்பி அடிப்பதுமாக ஒரே வன்முறை. இப்படித்தான் நம் சமூகம் செயல்படுகிறதா? எதிரிகளை அவ்வளவு எளிதில் அரசியல்வாதிகளால் தீர்த்துக் கட்ட முடியுமா?

எந்தப் படத்தை எடுத்தாலும் கதாநாயகன் ஏதாவது ஒரு கட்டத்திலாவது – கதைக்குத் தேவையா, இல்லையா என்றெல்லாம் பார்ப்பதில்லை – சண்டை போடுகிறான். கடைசியாக காவல் துறை அதிகாரிகள் பிரசன்னமாகி, வில்லனையோ அல்லது வில்லன்களையோ கைது செய்துகொண்டு போனாலும் கதாநாயகன் மாத்திரம் நிறைய நேரம் சண்டை போட்ட பிறகுதான் காவல் துறை வரும். எல்லாச் சண்டைகளும் முடிந்த பிறகு காவல் துறையினர் வருவதாகக் காட்டுவது காவல் துறையை அவமதிப்பதாக இல்லையா? இதை எப்படி சென்சார் அனுமதிக்கிறார்கள்?

புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் எதிரிகளை எதிர் நின்று வென்று மார்பில் காயம் பட்டவர்களை அந்தக் காலச் சமூகம் பாராட்டியது. அன்றைய சமூகமே வேறு. அது போர்ச் சமூகம். அன்றைய முடியாட்சியில் நாட்டைக் காக்க வேண்டியது அரசனின் கடமை, அரசனுக்குத் துணை போக வேண்டியது சமூகத்தில் உள்ள இளைஞர்களின் கடமை. இன்றைய சமூகத்தில் அதற்கென்று படைவீரர்கள் இருக்கிறார்கள். மற்ற தொழில் செய்பவர்கள் எதிரிகளோடு சண்டை போடும் தேவை இல்லை, பலசாலிகளாக இருக்கத் தேவை இல்லை. சினிமாவில் கதாநாயகனை, எந்தத் தொழில் செய்பவனாக இருந்தாலும் சண்டை போடத் தெரிந்தவனாகச் சித்திரிக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கதாநாயகன் கமல், எல்லா இணைப்புகளையும் துண்டித்துவிட்டு சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். அமெரிக்காவில் ஸாப்ட்வேர் என்ஜினியராக இருப்பவனானாலும் இந்தியாவிற்கு வந்தவுடன் வில்லன்களோடு சண்டை போடத் தயாராகிவிடுகிறான். இந்த அளவிற்குப் போக வேண்டுமா?

கதாநாயகனைச் சகலகலாவல்லவன் என்று சித்திரிக்கட்டும். அதற்காக அவனைத் தேவையில்லாத இடங்களில் எல்லம் சண்டை போடவைத்து வன்முறைக் காட்சிகளைப் புகுத்த வேண்டுமா? தமிழில் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மொழிப் படங்களிலும் இதே கதைதான்.

மணிரத்னம் போன்ற பெயர்பெற்ற இயக்குநர்கள் படங்களில் வன்முறையைக் கெட்டிக்காரத்தனமாகப் புகுத்துகிறார்கள். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒரு சிலவற்றைத் தவிர எல்லாப் படங்களிலும் வன்முறை நிறைய உண்டு. மணிரத்னம் படம் என்றாலே வன்முறைக் காட்சிகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு அவர் படங்கள் பெயர் வாங்கியுள்ளன. ராவணன் படம் இதில் கடைசிப் படமாக இருக்காது.

ஒவ்வொரு மனிதனிடமும் மிருகக் குணங்கள் நிறையவே இருக்கின்றன. இவை அவ்வப்போது மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த உணர்ச்சிகளைத் தூண்டுமாறு தமிழ்ப் படங்களில் காட்சிகளை அமைக்க வேண்டுமா? தங்களுக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது என்பதை படம் எடுப்பவர்கள் ஏன் உணர்வதில்லை? மணிரத்னம் போன்ற இயக்குநர்கள் படங்களில் வன்முறைக் காட்சிகளைக் குறைப்பதால் பட வசூல் குறைந்துவிடுமா? அப்படியே குறைந்தாலும் அதைச் சமூகத்தின் நன்மைக்காக விட்டுக் கொடுக்கக் கூடாதா? சமூகத்தின் நன்மையில் ஒரு அக்கறையும் கிடையாதா? இவர்களுக்குப் பணம் பண்ணுவது ஒன்றுதான் குறியா?

இந்தியாவில் பொதுமக்கள் சாதாரணமாகத் துப்பாக்கி வைத்திருப்பதில்லை. படங்களில் என்னவோ எல்லோரிடமும் சர்வ சாதாரணமாகத் துப்பாக்கி இருப்பதாகக் காட்டுகிறார்கள். என்ன அபத்தம்? சினிமா சமூக நடப்புகளை மிகைப்படுத்திக் காட்டும் என்பது என்பது ஓரளவு உண்மைதான். தன்னலமற்ற காதல், அண்ணன் – தங்கை பாசம், ஊழல் என்பதற்கே அர்த்தம் தெரியாத அரசியல் அதிகாரி என்று எதையெதையோ மிகைப்படுத்துகிறார்கள். அவற்றையெல்லாம் செய்துவிட்டுப் போகட்டும். இதனால் பெரிதாக சமூகத்தில் தீங்கு விளையப் போவதில்லை. ஆனால் வன்முறையை மிகைப்படுத்துவதால் எவ்வளவு தீமைகள் விளையும் என்பதைத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உணர்ந்தால் தேவலை.

பழைய படங்களைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இப்போது படங்களில் எவ்வளவு வன்முறைக் காட்சிகள் இருக்கின்றன என்று. அந்தக் காலத்திலும் வெற்றிப் படங்கள் வந்துகொண்டுதானே இருந்தன. வன்முறைக் காட்சிகளைப் புகுத்தினால்தான் படங்கள் வெற்றி அடையும் என்ற நிலை அப்போது இல்லையே. இப்போது மட்டும் ஏன் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒரு படத்தின் வெற்றிக்கு வன்முறைக் காட்சிகள் வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

ஆங்கிலப் படங்களை தமிழ்ப்படுத்தி சில சேனல்களில் வெளியிடுகிறார்கள். அவையும் சண்டைக் காட்சிகள் நிரம்பிய படங்கள்தான். சண்டைக் காட்சிகள் இல்லாத, மனித இயல்பைச் சித்தரிக்கும் படங்கள் எத்தனையோ ஆங்கிலத்தில் வெளிவருகின்றனவே, அவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்த முடியாதா? அவற்றைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டால் நிறைய லாபம் கிடைக்காதா? பணம் பண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இயங்கும் சினிமா சம்பந்தப்பட்டவர்கள், சினிமா என்ற மீடியத்தின் மூலம் சமூகத்தைத் திருத்த வேண்டாம், சமூகத்திலுள்ள சில வக்கிரங்களின் மிருக உணர்ச்சிகளைத் தூண்டாமலாவது இருக்கலாமல்லவா? தயவுசெய்து சிந்தியுங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெள்ளித் திரையில் வன்முறை

 1. உங்கள் பத்தியை முழுசா படிக்கல… 🙂 ஆனா தலைப்பும்,மேலோட்டமா படிச்சதயும் வெச்சு, எனக்கு தோன்றதென்னனா…
  இப்போ வரும் படங்கள்ல நீங்க சொல்றமாரி, காவல்துரை ஒப்புக்கு சப்பானி மாதிரிதான் காட்ராங்க… கதாநாயகனே, அவன் எவ்வளவு மாக்கானா இருந்தாலும், சன்டைல பராக்ரமசாலியா இருப்பான்.. திமிர்பிடிச்சவுங்கள அட்க்கி நல்வழிபடுத்துல… சம்ஹாரம் பன்ராங்க…
  இதுக்கு உண்மை நிலை பெரும் காரனம்.
  பொதுமக்களுக்கு காவல்துரைமீதோ சட்டம்மீதோ நம்பிக்கை குறைஞ்சிட்டிருக்கு,, த
  னிமனித நீதிகள் எல்லா பக்கமும் விரிச்சாடிட்டிருக்கு, அதாவது திமிர் கலாச்சாரம்.. பலம்மில்லாதவுங்க மனசுல இருக்கர ஏக்கம்தா திரைல வர்ர கதாநாயகன் செய்யரான்..
  காவல் நிலயத்துல பூந்து, காவலர்கள அடிச்சு பின்றார் நாயகன்… அந்த படம் வெற்றிகரமா ஓடுது,,, ஒரு திமிர்பிடிச்சவனால பாதிப்படஞ்ச நாயகன் காவல்துரைல புகார் குடுக்காம நேரா போய் பழி வாங்கரார்.. இது மக்களோட ஆதங்கம் திரைல வெளிப்படரத ரசிக்கராங்கனு என் அபிப்ராயம்..
  மக்கள் உனர்வுக்கு எதிரான கருத்துக்கள் நிலைக்காது..

Leave a Reply

Your email address will not be published.