பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 34

0

இ. அண்ணாமலை

கேள்வி:அல்ல என்ற சொல்லைப் பன்மையில் மட்டுமின்றி, ஒருமையிலும் பலர் பயன்படுத்துகிறார்கள் (அப்படி அல்ல, நான் சொல்வது அது அல்ல); இல்லை, அல்ல, அன்று ஆகிய சொற்கள், எந்தெந்த இடங்களில் இடம் பெற வேண்டும்? – அண்ணாகண்ணன்

பதில்: தமிழ் வாழும் மொழி. உயிருள்ள எதுவும் வளரும்; மாறும். மொழியில் தோன்றும் மாற்றங்களும் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. நம் வீட்டுப் பையனுக்கு மீசை வளருவது தடுக்க முடியாத இயற்கையான வளர்ச்சி. மீசை வளர வேண்டாம் என்று மனிதன் விதி வகுக்க முடியாது. மீசையை வைத்துக் கொள்வதும் எடுப்பதும் ஒவ்வொருவரின் ஆளுமையைப் பொறுத்தது. நம் வீட்டுப் பெண் தன் நீண்ட சடையைக் குட்டையாக வெட்டி விரித்துத் தொங்க விட்டுக்- கொள்ளலாம். மற்றவர்களைப் பார்த்து அவள் இப்படித் தன் முடியை மாற்றி அமைக்கலாம். இதை முடியைப் பேணும் வசதி காரணமாகவோ அழகுணர்ச்சி காரணமாகவோ அவள் செய்யலாம்.

மொழியில் வரும் மாற்றங்களுக்கும் சில காரணங்கள் உண்டு. ஒன்று இயற்கையான வளர்ச்சி. மற்றொன்று, மற்றொரு மொழியுடன் தொடர்பு. இரண்டையும் தடுக்க முடியாது. ஆனால், மாற்றங்களைத் தடுக்க முயல வேண்டுமா என்பதும், மாற்றங்களை ஏற்றுக் கொள்பவர்களைத் கண்டிக்க வேண்டுமா என்பதும் கேள்விகள். முன் காலத்தில் சீனப் பெண்களின் பாதங்களைக் குறுகிய காலணிகளால் இறுகக் கட்டி நடையை நளினமாக்கும் வழக்கம் தவறானது என்பது இப்போது எல்லாரும் ஒத்துக் கொள்ளும் கருத்து. பெண்ணடிமை கூடாது என்னும் கருத்தாக்கத்தால் இந்த ஒருமித்த கருத்து உருப்பெற்றது. இதைப் போல் மொழியின் காலைக் கட்டிப் போடுவதிலும் மொழி பற்றிய கலாச்சாரப் பார்வையின் பங்கு இருக்கிறது.

மேலே சொன்ன மாதிரியான சமூகப் பழக்கங்களில் மாற்றங்களை ஒப்புவதும் ஒப்பாததும் பெண்ணைப் பற்றிய நம் கலாச்சார நம்பிக்கைகளை (cultural beliefs) பொறுத்தது. மொழி மாற்றத்தை ஒப்புவதும் ஒப்பாததும் தமிழ் பற்றிய நம் கலாச்சார நம்பிக்கைகளைப் பொறுத்தது. என்றும் மாறாத தமிழ் என்பது இப்படி ஒரு நம்பிக்கை. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தமிழ் இலக்கண மாற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு விடையை மொழி வடிவத்தைத் தரமிடுவதில் தேட முடியாது. மொழி பற்றிய பழம் ஆசிரியர்களின் கருத்துகளிலும் தேட முடியாது, தமிழ் இலக்கண ஆசிரியன் தமிழின் அமைப்பை விளக்குவான்; தமிழ் பேசும் மக்களே தமிழை உருவாக்குகிறார்கள்; தமிழில் மாற்றங்களை உண்டு பண்ணுகிறார்கள்.

இவர்கள் இலக்கண மாற்றங்களை எப்படி உள் வாங்கிக் கொள்கிறார்கள்; மாற்றங்கள் இவர்களுக்கு என்ன பயன் தருகின்றன என்னும் கேள்விகளே மாற்றங்களை ஒப்புவது பற்றி விடை அளிக்கும்.. இருப்பினும், பல மாற்றங்கள் மக்களின் உணர்வு நிலைக்கு வராமலே இயல்பாக நடக்கும். அப்படி நடக்கும் போது முடிவு செய்யும் அவசியம் மக்களுக்கு இல்லை.. மொழி வளர்ச்சி பற்றிய சில கலாச்சாரக் கொள்கைகள் மாற்றத்தை அழிவுப் பாதை என்று நினைக்க வைக்கலாம். ஆனால், தமிழ் பற்றிய நம் கலாச்சாரக் கொள்கை தன்னம்பிக்கை நிறைந்ததாக, ஆரோக்கியமானதாக இருந்தால் இத்தகைய பயம் வராது.  

இப்போது மேலே உள்ள கேள்வியை வரலாற்று ரீதியில் பார்க்கலாம். அப்படிப் பார்க்கும்போது இலக்கண மாற்றத்தின் இயல்பான வளர்ச்சி தெரியும். தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் பால் இயைபு உண்டு. இந்த இயைபு காலப்போக்கில் மாறுகிறது. மூலத் திராவிடத்தில் படர்க்கையில் பெண்பாலுக்கும் அஃறிணைக்கும் பால் இயைபில் வித்தியாசம் இல்லை; இரண்டுக்கும் ஒரே விகுதியே. இன்றைய தெலுங்கில் இந்த வழக்கு இருக்கிறது. தமிழ் தனி மொழியானபோது பயனிலையில் பெண்பால் தனி விகுதி பெற்றது. இலக்கணத்தைப் பொறுத்தவரை பெண் மனித வர்க்கத்தில் சேர்க்கப்பட்டாள்! சங்கத் தமிழில் பெயர்ப்பயனிலை எழுவாய்க்கு ஏற்றபடி மூவிட வேற்றுமை காட்டும். எடுத்துக்காட்டு: யான் மலையென், நீ மலையை, அவன் மலையன். இடைக்காலத் தமிழில் மூவிட எழுவாய்க்கும் பயனிலை ஒன்றே (நான் / நீ / அவன் மலையன்). எதிர்மறைப் பயனிலையும் இப்படியே: யான் பொருள் இலேன், நீ பொருள் இலாய், அவன் பொருள் இலான். இடைக்காலத்தில் பல பயனிலை இயைபு மறைந்து மூவிடத்திற்கும் இல்லான் / இல்லாதான் என்ற ஒன்றே பயனிலை. இக்காலத் தமிழில் இந்தப் பயனிலையின் வடிவம் இல்லாதவன். இக்காலத் தமிழில், அஃறிணையில் ஒருமை பன்மை வேறுபாடு மறைந்து வருகிறது. (பேச்சுத் தமிழில் ஆண்பால் பன்மை(எ-டு மருகன்கள்), பெண்பால் பன்மை (எ-டு. மருகள்கள்), ஆண்பால் மரியாதை ஒருமை (அவர்), பெண்பால் மரியாதை ஒருமை (அவங்க) என்று பால் பாகுபாடும் பயனிலை இயைபும் மாறியிருக்கின்றன). ஒருமைப் பயனிலையைப் பன்மை எழுவாயோடு இயைபுபடுத்தும் வழக்கு மிகுந்திருக்கிறது. சில எடுத்துக்காட்டுகள்: எனக்குக் காய்ச்சலும் தலைவலியும் இருக்கிறது, மழையும் பனியும் கொட்டியது, நான் வந்து நான்கு நாள் ஆகிறது, காய்ச்சலும் தலைவலியும் வராது, புத்தகங்கள் நல்லதாகவும் பிடித்ததாகவும் இருக்க வேண்டும்.

இக்காலத் தமிழில் காலம் காட்டாத எதிர்மறைப் பயனிலை பால் பாகுபாடு காட்டாமல் ஒரே வடிவம் கொண்டிருக்கிறது. இன்று, இல என்னும் ஒருமை, பன்மை வடிவங்களுக்குப் பதில் எல்லா எழுவாய்க்கும் இல்லை என்னும் ஒரே பயனிலைதான். இதே போல் அல்லன், அல்லள், அன்று, அல்ல என்னும் பால் காட்டும் பல பயனிலைகளுக்குப் பதில் அல்ல என்னும் ஒரே பயனிலை வடிவம் தான். அல்ல பால்காட்டாத பயனிலை என்று சொல்ல வேண்டும். தமிழ் இலக்கண மரபை ஒட்டிப் பெயரிட வேண்டுமென்றால் விரவு வினை எனலாம். மரபிலக்கணம் விரவுப் பெயருக்கு இடம் தரும்போது விரவு வினைமுற்றை ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றையப் பேச்சு வழக்கில் அக்கா சொல்கிறாள், தம்பி சொல்கிறான் என்பதைவிட (இது என்பனவற்றைவிட இயல்பாக உள்ளது!) அக்கா சொல்லுது, தம்பி சொல்லுது என்பதில் ஒரு பாந்தம் இருக்கிறது. எழுவாய்-பயனிலை இயைபு இல்லாததால் இந்த வாக்கியங்கள் பிழை என்று சொல்ல மாட்டோம்.

கேள்வியில் உள்ள மொழி வழக்கு மாற்றம், மேலே சொன்ன வரலாற்றின் தொடர்ச்சியாக வந்த, இயற்கையான தமிழ் வளர்ச்சி. பெயர்ப் பயனிலையில் மூவிட வேற்றுமை மறைந்தது போல் காலம் காட்டாத எதிர்மறைப் பயனிலையில் மூவிட வேற்றுமையும், ஈரெண் வேற்றுமையும் மறைந்து அல்ல எல்லா எழுவாய்க்கும் பொதுவாக வருகிறது. . இந்த மறைவு தமிழ் இலக்கணத்தைக் கற்பதற்கு எளிமையாக்குகிறது. எளிமையாக்கம் மொழி வரலாற்றில் மொழி மாற்றத்தின் உந்து சக்திகளில் ஒன்று

இல்லை ஒன்றின் இருப்பை எதிர்மறித்து உரைப்பது (இங்கே மரம் இல்லை). அல்ல ஒன்றின் அடையாளத்தை எதிர் மறித்து உரைப்பது (இது மரம் அல்ல). இது பொருளடிப்படையில் அமைந்த வேறுபாடு. இந்தப் பொருள் வேறுபாடு இக்காலத் தமிழில் மறைந்து வருகிறது (இங்கே மரம் இல்லை, இது மரம் இல்லை). இரண்டு சொற்களின் பொருள் வேறுபாடு மறைந்து ஒரே பொருளாவது மொழிகளில் காணக்கிடைக்கும் மாற்றம். கொடு, தா என்ற வினைகள் பொருளை வாங்குபவன் படர்க்கையா அல்லவா என்பதைப் பொறுத்துப் பயன்படுத்தப்படும் என்னும் வேறுபாடு பிற்காலத் தமிழில் மறைந்து விட்டது. இங்கே பொருள் மாற்றம் இலக்கண வேறுபாட்டைச் சார்ந்தது. அல்ல, இல்லை என்ற சொற்களின் பொருள் மாற்றம் ஒரு இலக்கண வேறுபாட்டைப் போக்குகிறது.  இலக்கணம் மாறுவது மொழியின் இயற்கை என்று மேலே பார்த்தோம்.

‘நான் மாற்றத்தின் எதிரி இல்லை’ என்று தமிழர்கள் இயல்பாக எழுதினால் அது தமிழ் இல்லையா? (இன்றா, அன்றா அல்லவா என்பதை விட இல்லையா இயல்பான தமிழாகத்தான் இருக்கிறது!).

பழைய வழக்கு மட்டுமே நல்லது என்று சொல்லத் தேவை இல்லை. புதிய வழக்கும் தமிழுக்கு ஏற்ற வழியாக இருக்கலாம்.  ‘மாறுவது தமிழ்’ என்னும் புதிய ஆத்திசூடியை ஏற்றுக் கொள்வோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *