வியதீபாத யோகத்தில் நடராஜனின் திருநடனம்

விசாலம்

“அம்மா நான்வேறு வீடு மாற்றப் போறேன் ஒரு நல்ல நாளாகப் பார்த்துச் சொல்” என்று என் மகன் போனில் பேசினான்.  நானும் ஒரு நல்ல யோகம் இருக்கும் நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.  

அப்போது பஞ்சாங்கம் பார்க்கும் போது வியதீ என்ற யோகத்தையும் பார்த்தேன். அமிருத யோகம் சித்தயோகத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க வேண்டும். மரணயோகம் வரும் நேரத்தில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த வியதீ யோகத்தைப் பற்றி அத்தனை எனக்குத் தெரியாது. ஆகையால் அதைக் குடைந்தேன். “வியதீபாதயோகம்” என்பதைச் சுருக்கி வியதீயோகம் என்கிறார்கள். இதற்கும் திருவாதிரை நன்னாளுக்கும் மிகுந்த சம்பந்தமிருக்கிறது.

இந்த வியதீபாத யோகத்தில் மார்கழி மாதம் வரும் நேரத்தில் நடராஜரைத் தரிசிக்க வாழ்வில் முன்னேற்றமும் சுப பலன்களுமுண்டாகும். இந்த ஆசீர்வாதத்தை வழங்கியவர் சாக்ஷாத் மகேசன் தான்.

இதன் புராணக் கதையைப் பார்ப்போமா!

தேவகுரு பிரஹஸ்பதியின் மனைவி தாரை மிக அழகு. அந்தத் தாரையின் அழகில் மயங்கிப் போனான் சந்திரன். இதைப் பற்றியே சிந்தித்த சந்திரனைப் பார்த்தான் சூரியன்.

“என்ன ஒரு மாதிரி சோகமாக இருக்கிறாய்? என்ன வருத்தமோ உனக்கு?”

“குரு பிரஹஸ்பதியின் மனைவி தாரையைக் கண்டேன்.என்ன அழகு என்ன அழகு !”

“வேண்டாம் சந்திரா இந்த எண்ணத்தை விட்டு விடு. குருவின் மனைவி அவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்”

சூரிய சந்திரர் ஒருவருக்கொருவர் பார்த்ததில் ஒரு ஒளி வெளிப்பட்டது. சின்ன ஒளி அசுரனைப் போல் வளர்ந்து பூமியை விழுங்குமளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. 

அவர்கள் அந்த ஒளியை அழைத்து “வேண்டாம் இந்தச் செய்கை. உலகத்தை விழுங்காதே.  உனக்கு யோகங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கும் பதவியை அளிக்கிறோம். நீ “வியதீபாதம்” என்ற பெயரோடு விளங்குவாய் ” 

இந்த யோகத்தின் சிறப்பைப் பற்றி அப்பய்ய தீக்ஷதர் எழுதிய சிவார்ச்சனா சந்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறதாம். தவிர திரு.  உமாபதி சிவாச்சாரியார் தான் எழுதிய “குஞ்சிதாங்கிரிஸ்தவம்”  என்னும் நூலிலும் எழுதியிருக்கிறார்.

வியதீபாதன் தலைவனாக இருந்தாலும் உலகத்தையே விழுங்கும் தீய எண்ணம் கொண்டிருந்ததால், அந்த யோகத்தில் எல்லோரும் சுபகாரியங்கள்செய்வதைத் தடுத்தார்கள்.

மனமுடைந்து போன வியதிபாதன் மகேசனை வழிப்பட்டு சரணடைந்தான். 

பரமேஸ்வரனும் அவன் முன் தோன்றி “வருத்தம் கொள்ளாதே வியதீபாதனே என் சிறப்பு நாளான திருவாதிரையின் போது வியதீபாத யோகத்தில் நான் நடராஜா திருக்கோலம் கொண்டு நடனம் ஆடுவேன். இந்த சுபயோகத்தில் என்னைப் பூஜித்து வழிபடுவர்களுக்கு  எல்லா மங்களமும் உண்டாகும்” என்றார்.  

திருவாதிரை நாளன்று ஒவ்வொருவரும் சிவாலயம் சென்று இந்தச் சிறப்பு யோகத்தில் வழிபட்டு மகேசனின் அருள் பெறலாம்.

 

படத்திற்கு நன்றி: http://blogs.astroved.com/arudra-darshan-%E2%80%93-lord-nataraja%E2%80%99s-day

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.