இலக்கியம்சிறுகதைகள்

நீலகண்டன்

நாகை.வை. ராமஸ்வாமி 

ஆலகால விஷத்தை அருந்தி அது கழுத்திலேயே தங்கி, அதனால் நீலகண்டன் என்ற நாமமும் தரித்த அந்தப் பரமனின் கதையல்ல இது.  அது தான் பாமரனுக்கும் தெரியுமே.  இது வேறு ஒரு நீலகண்டன். 

நீலகண்டன் சர்வராக அந்த ஹோட்டலில் சேர்ந்தது முதல், கஸ்டமர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்தது. அது முதலாளிக்கு நீலகண்டன் மீது நம்பிக்கையை வளர்த்தது.  நீலகண்டனுக்கு டிப்ஸ் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. மற்ற சர்வர்களுக்குப் பொறாமையை வளர்த்தது.   

நீலகண்டன் ஒரு மலையாளப் பிராமணப் பையன்.  12வது வரை படித்து விட்டுச் சரியான வேலை கிடைக்காததால், தமிழ்நாட்டுக்கு வந்து, விரும்பி ஹோட்டல் சர்வர் வேலை பார்த்து வந்தான்.  வரும் குறைந்த வருமானத்தில் தன் செலவையும் பார்த்துக் கொண்டு விதவை அம்மாவுக்கு ஊருக்கு ஐம்பது ரூபாய் மாதம் அனுப்பி விடுவான். 

மலையாள நாட்டுக்கே உள்ள சிறப்பு அது.  வேலை என்றால், உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லத் தயங்காதவர்கள்.  முதலில் என்ன வேலை கிடைத்தாலும் அதை ஒப்புக் கொண்டு, திறமையாகச் செயல்படுத்தி முன்னேற்றத்திற்கு அஸ்திவாரம் போட்டு விடுவார்கள்.  நீலகண்டனும் அதே ரகம்.  நகைச்சுவைக்காகக் கூட சொல்வதுண்டு, ஆளே இல்லாத சந்திரக் கிரகத்தில் கூட ஒரு மலையாளி டீக்கடை வைத்து விடுவாராம். 

நீலகண்டன் கஸ்டமரைக் கவரும் பாணியே தனி.  நபருக்கு நபர் வித்தியாசப்படும்.

“எந்தா சாரே, சுகந்தன்னே?  சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் தரட்டே?  நம்ப சிங்கப்பூர் மணி அய்யர் மக்மல் பூரின்னு ஒரு ஸ்வீட் பண்ணியிருக்கார்.  இந்தாங்கோ சாப்பிடுங்க சாரே” என்று சாப்பிட வைத்து விடும் அழகே தனி.  சில அதிகாரிகள் சாப்பிட வந்தால், “வெல்கம் சாரே.  வோட் கேன் ஐ கிவ் யூ ப்ளீஸ்?” என்று அசத்தி விடுவான்.  அதே மாதிரி வடநாட்டுக் காரர்களாக இருந்தால், ஹிந்தியில், “ஆயியே சாப்.  க்யா லேயேங்கே ஆப்”  என்று அவர்களையும் மயக்கும் சாமர்த்தியம்.   

மக்மல் பூரி என்றால் என்ன என்று நீலகண்டனுக்குத் தெரியும். ஒரு வாரத்தில் மீதமுள்ள மைசூர் பாகு முதலிய எல்லா ஸ்வீட் அயிட்டங்களையும் மீண்டும் ஒன்றாகச் சூடாக்கி, அதைப் பூரிக்குள் வைத்து மடித்து டால்டாவில் பொரித்து அதன் மேல் சர்க்கரைப் பாகு ஊற்றி,  சீவிய முந்திரி தூவி அழகு படுத்திக் கொடுப்பது.  கெட்டது ஒன்றுமில்லை.  ‘ஓல்ட் ஒயின் இன் நியூ பாட்டில்’ என்பார்களே அது போலத்தான்.  ஆனால், இந்த மக்மல் பூரியும் மீதமாகி விட்டால், முதலாளிக்கு நஷ்டம் என்று தெரியும்.  அதனால், அவனுக்குத் தெரிந்த மார்கெடிங் ஸ்ட்ராடெஜியை உபயோகித்து மக்மல் பூரி ஸ்டாக்கின் பெரும் பகுதியை அவனே விற்று விடுவான். 

நீலகண்டன் வேலை பார்த்தது ஆறு மாதமோ பத்து மாதமோ தான்.  அதற்குள் அவன் வேலை பார்த்து வந்த ஹோட்டல் முதலாளி கடன் தொல்லை தாங்காமல், ஹோட்டலை மூடி விட்டார். 

ஒரு சில மாதங்களுக்குப் பின் நீலகண்டனுக்கு வேறு சில சிறிய ஹோட்டல்களில் தான் வேலை கிடைத்தது.  சம்பளமும் குறைவு.   சாப்பாடும் சரியில்லை.  உடல் நலம் கெட்டு, அந்த ஊரிலுள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தான்.

“எந்தா நீலகண்டன், ஏனிந்த சுகக்கேடு?” உடல் மெலிந்த நோயாளி நீலகண்டன், ஹாஸ்பிடல் படுக்கையிலிருந்து, அனாதை மாதிரியான தன்னைத் தேடி யார் வந்திருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தான்.  ஒரு இன்ப அதிர்ச்சி. 

அவன் வேலை பார்த்த மூடப்பட்ட முதல் ஹோட்டல் முதலாளி. 

“சாரே, மன்னிச்சுடுங்கோ, என்னால் எழுந்திருக்க முடியாது.  யாரையாவது பார்க்க வன்னோ?  எப்படி, நீங்க எப்டி இங்கே..”  என்று  தழுதழுத்த குரலில் கேட்டான். 

“நோ, நோ, படுத்துக்கோப்பா.  உனக்குத் தான் உடம்பு சரியில்லை, எனக்கு இல்லை.  ஹோட்டல் மூடிய பின் எனக்குப் பொழுது போவதில்லை.  நான் இப்பொழுது ஒரு ஆஃபீசில் வேலை பார்க்கிறேன்.  மாலை வேளையில், இப்படி ஆஸ்பத்திரி பக்கம் வந்து, யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டால், என்னால் முடிந்ததைச் செய்வேன்.  உடலால் மட்டும் தான்.  இப்பொழுதெல்லாம் என்னிடம் முந்தைய மாதிரி காசு இல்லையே.   நீ இங்கே உடம்பு சரியில்லாமல் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்.  நீ என்னுடைய விசுவாசமான ஆள் இல்லையா?  அதனால் தான் உன்னைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன்.” என்று முதலாளி சொன்னவுடன், நீலகண்டனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. 

“சாரே, நீங்க, நீங்க வந்து என்னப் பார்க்க வந்தேளே.  நான் யார் சார்?.  சம்பளம் வாங்கி வேலை பார்த்த ஒரு சாதாரண சர்வர் அல்லே?  வேலைலே இருந்தாலே எந்த முதலாளியும் கவனிக்கிறதில்லே.  நீங்க எப்படி இருந்தேள், எப்படி ஆகிட்டேள்?  உங்க மாதிரி நல்ல முதலாளிக்கெல்லாம் ஏன் பகவான் இப்படி சோதனை செஞ்சு?”என்று நெகிழ்ந்து அழுததைப் பக்கத்துப் படுக்கையிலிருந்தவர்களெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டனர். 

முதலாளி தான் வாங்கி வந்த இரண்டு ஆரஞ்சுப் பழங்களையும், அவர் நிலையிலும் கூட இருபத்தைந்து ரூபாய் பணமும் வைத்து, “நீலகண்டன், என்னால் முடிந்தது இது, வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்.  நடப்பது எல்லாம் நன்மைக்கே, ஏனென்றால், நாம் எதையும் நடத்தவில்லை.  நமை ஆளும் ஆண்டவன் அல்லவோ நடத்துகிறான்.  இப்பொழுது நாமிருவரும் சந்திப்பதே அவன் அருளால் தான்.  ஸாய்ராம்.” என்று அவன் கையில் கொடுத்தது, நீலகண்டன் விசித்து விசித்து அழுதது, இவற்றைப் பார்த்த அனைவரும் கண் கலங்கினர். 

அதோடு இல்லாமல், முதலாளி அவனிடம், “நீலகண்டன், ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.  நான் முயற்சி செய்த ஒரு ஏஜன்ஸி எனக்குக் கிடைத்திருக்கிறது.  அனேகமாக, அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க வேண்டும்.  அதைக் கவனித்துக் கொள்ள உன்னை விட்டால் வேறு நம்பிக்கையான ஆள் எனக்குக் கிடைக்கவில்லை.  உனக்குச் சம்மதம் என்றால், ஹாஸ்பிடலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், என்னை வந்து பார்க்கிறாயா?” என்று கேட்டார். 

பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் வாயில் விழுந்தால்?  நீலகண்டனுக்கு சம்மதம் என்று சொல்வதற்குக் கூட நாக்கு எழவில்லை. முதலாளி கைகளைப் பிடித்தவாறே தேம்பித் தேம்பி அழுது கை கூப்பி நமஸ்கரித்தான். 

அந்த மனித நேயம்,  இம்மாதிரி நம்மால் முடிந்த ஏதாவது நல்ல காரியம் நாமும் செய்ய வேண்டும் என்று சுற்றியிருந்தவர்களுக்கு உணர்த்தியது.  நல்லது தானே?  நீங்களும் செய்யுங்களேன்.

 

படத்திற்கு நன்றி: http://www.inmagine.com/ojsi013/pe0070264-photo

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  சிறிய கதை ஆயினும் சீரிய கதை. கடைசி இரண்டு வரிகளைத் தவிர்த்திருக்கலாம். நேரடி அறிவுரைகளைப் பலர் விரும்புவதில்லை. மேலும், சொல்லாமலே புரிய வைப்பது, உயர்ந்த இலக்கியக் கலை அன்றோ.

 2. Avatar

  Maanudam elloridumum undu, kurippaaga keezh mattathil ullavargalidam adhigam undu. Maanudam iyer yenro dalit enro veru pattu velippaduvathillai. Aanal andha maanudam, samya sandharpangalukku eatravaru nadai murai aagradhu. Maanudam
  Author should show his concern with all HUMANS.
  Nagalingam

 3. Avatar

  Thank you Sir. ABSOLUTELY CORRECT. It so happens that Neelakantan in this story happens to be a Kerala Brahmin. The Author has no discrimination whatsoever about caste or creed.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க