ஜோதி ஸ்வரூபிணி (ஓரங்க நாடகம்)

0

விசாலம்

இடம்- புதுக்கோட்டை அரண்மனை

பாத்திரங்கள்- “ஸ்ரீ தியாகராஜர்”, அவரின் குரு, பல வித்துவான்கள், புதுக்கோட்டை மன்னன், சேவகர்கள். 

திரை விலகுகிறது – அரண்மனைக் காட்சி 

மன்னர்: கைத்தட்டியபடி -“யார் அங்கே உள்ளே வா. நான் இங்கு வந்திருக்கும் இசை மேதைகளுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். இது ஒரு சோதனை தான். விரைவாகப் போய் ஒரு ஏற்றாத விளக்கை எடுத்து வா ” 

சேவகன்: “உத்தரவு அரசே” 

சேவகன் ஒரு விளக்கை எடுத்து வந்து வைக்கிறான். 

மன்னர்: “இசை மேதைகளே நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருப்பது என்பாக்கியம் தான். நான் இப்போது உங்கள் நடுவில் இந்த விளக்கை வைப்பேன். அதை நீங்கள் யாராவது ஒருவர் எரிய விட வேண்டும். இதை ஏற்ற நீங்கள் தீக்குச்சி உபயோகப் படுத்தக் கூடாது. நீங்கள் பாடும் பாடலின் இசையினால் இது எரிய வேண்டும். யாராவது செய்ய முடிந்தால் பாடல் ஆரம்பிக்கலாம்” 

கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்க்க ரொம்ப நேரத்திற்குச் சபை அமைதியாக இருக்கிறது. ஸ்ரீ தியாகராஜர் அந்த ராம ஸ்மிருதியிலேயே அமர்ந்திருக்கிறார். பின் தன் குருவைப் பார்க்கிறார்.  குருவும் கண் சாடையினால் அவரைப் பாட அனுமதிக்கிறார், கணீர் என்ற குரலில் அழகான ஜோதி ஸ்வரூபிணி ராகம் நீர் வீழ்ச்சிப் போல் கொட்ட அவரும் தன்னை மறந்து கண்களை மூடியபடிப் பாடிக் கொண்டிருக்கிறார். 

அப்போது ஒரு அதிசயம் நடக்கிறது. அந்த எரியாத விளக்கு சுடர் விட்டுப் பிரகாசமாக எரிய ஆரம்பிக்கிறது. 

மன்னர்: மிகவும் வியப்புடன் “ஆஹா என்ன அருமையான காட்சி! மெய் சிலிர்க்கிறது என்ன சங்கீதம்! அந்த ராமச்சந்த்ர மூர்த்தியின் கருணையே கருணை” 

குரு: “ஆமாம் அரசே, எல்லாம் அந்த ராமரின் கருணைதான்” 

மன்னர்: “தியாகராஜா நீங்கள் இங்கு வந்தது என் பாக்கியம் தான். என்ன இசை மழை! உங்கள் இசையில் இந்த விளக்குமல்லவா எரிந்தது” 

ஸ்ரீ தியாகராஜர்: “எல்லாம் ராமநாமத்தின் மகிமைதான் ஹே ராமா! உன்னை வணங்குகிறேன். இந்தப் போட்டியை வைத்ததனால் அல்லவா என் ராமனின் மகிமை எல்லோருக்கும் தெரிய வந்தது” 

மன்னர்: “ராமரின் மகிமையுடன் உங்கள் இசையில் இருந்த பக்தி ,சக்தி ஞானம் எல்லாம் சேர்ந்து இந்த விளக்கு எரிந்தது. இந்தப் பொன்னாளை நான் மறக்கவே மாட்டேன்” 

மன்னர் கைக்கூப்பிக் கும்பிடுகிறார்.  

இந்த வியப்பான சம்பவத்தை எல்லோரும் பேசிக் கொண்டே ஸ்ரீதியாகராஜரின் ஸ்ரீராம பக்தியையும் அவரது இசையையும் புகழ்கின்றனர். எல்லோரும் உள்ளே செல்கின்றனர். 

திரை விழுகிறது. 

பின் குறிப்பு – புஷ்ய பகுள பஞ்சமி

ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை நாள். சுவாமிகளுக்கு இதைச் சமர்ப்பிக்கிறேன். 

  

படத்திற்கு நன்றி: http://bharathipayilagam.blogspot.com/2010/05/blog-post_1999.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.