சு.கோதண்டராமன் 

ஆலங்காட்டிலிருந்து அம்பலம் வரை

அம்மையாருக்கும் அப்பருக்கும் இடைப்பட்ட இரு நூற்றாண்டுகளில் சைவத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்த மாற்றங்களுக்கு அம்மையார் நேரடியாகவோ மறை முகமாகவோ காரணமாக இருந்தார்.

அம்மையாரின் மிகப் பெரிய கொடை என்று ஒன்றைச் சொல்வதானால் அது ஆடற்பெருமான் வழிபாடு என்று தான் சொல்ல வேண்டும். காரைக்கால் அம்மையார் தான் இறைவனின் நாட்டியக் கோலத்தை முதன் முதலாக மிக அதிகமாகப் போற்றுகிறார். அவரது அற்புதத் திருவந்தாதியில் பத்துப் பாடல்களிலும், இரட்டை மணிமாலையில் 2 பாடல்களிலும், மூத்த திருப்பதிகங்களில் எல்லாப் (22) பாடல்களிலும் அம்மையார் ஈசனின் நாட்டியக் கோலத்தைக் கூறுகிறார். ஆனால் அவர் ஆடற்பெருமானின் புகழ்பெற்ற தலமாகிய தில்லையை எங்கும் குறிப்பிடவில்லை.

கலித்தொகை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இறைவனின் நாட்டியக் கோலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவற்றில் பாண்டரங்கம், கொடுகொட்டி, காபாலம் என்னும் மூவகை நாட்டிய வகைகளைச் சிவன் ஆடுவதாகக் காணப்படுகிறது. அம்மையார் இந்த நாட்டிய வகைகளைக் குறிப்பிடவில்லை.

கருத்துருக்களைப் பொறுத்தவரை முதலில் பருமையாகத் தோன்றிப் பின்னரே அதில் உட் பிரிவுகள் ஏற்படுவது இயல்பு. எடுத்துக்காட்டாக, கடவுள் அவதரிக்கிறார் என்ற கருத்து முதலில் தோன்றிய பிறகு தான் அவதாரங்கள் பத்து என்ற பிரிவுகள் தோன்றி இருக்க வேண்டும். பல இசைக் கருவிகளின் பெயர்களையும் இசைக்கு அடிப்படையான சுரங்களையும் பட்டியலிடும் அம்மையார் இறைவனின் நாட்டிய வகைகளைக் கூறாதது கொண்டு இவ்வகைகள் பிற்கால வளர்ச்சியாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே இந்த நாட்டிய வகைகளைக் கூறும் சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகியவை அம்மையாருக்குப் பிற்பட்டவையோ என ஐயம் எழுகிறது.

திரு ஆருர்

காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் ஆலங்காட்டில் இறைவனின் நடனமாடுவது கருத்தளவில் உருவாகி இருந்தது. தலையாலங்காடு என்னும் தலத்தில் அருவுருவமான லிங்கப் பெருமானுக்கு நர்த்தன புரீசர் எனப் பெயரிடப்பட்டது. திருவாரூரில் அது மேலும் செம்மைப் படுத்தப்பட்டு நின்ற கோலத்தில் உள்ள உலோகச் சிலையில் காட்டப்பட்டது.  

 சோழ நாட்டில் ஏழு விடங்கத் தலங்கள் உள்ளன. (‘விடங்க’ என்ற சொல்லுக்கு ‘உளியால் செதுக்கப் படாத’ என்று பொருள். கற்சிலைகளை உளியால் செதுக்கி உருவாக்குவது போல் அல்லாமல் அச்சில் வார்த்துச் செய்ததால் உலோகச் சிலைகள் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். விடங்கத் தலம் என்ற பெயர் இங்கு தான் முதன் முதலாக உலோகச் சிற்பத் தொழில் வளர்ந்தது என்று கருத இடமளிக்கிறது.) திருவாரூர், திருநள்ளாறு, நாகை, திருக்குவளை, திருக்காறாயில், திருக்கோளிலி, வேதாரண்யம் ஆகிய இந்த இடங்களில் விடங்கப் பெருமான் இன்று தியாகராஜா என்று அழைக்கப் படுகிறார். இந்தத் தலங்களில் பிற்காலத்தில் நடராஜ விக்கிரகம் இணைக்கப் பட்டது. ஆனால் தியாகராஜா எனப்படும் விடங்கப் பெருமானே இந்தத் தலங்களில் முறையே அஜபா நடனம், கமல நடனம், தரங்க நடனம், குக்குட நடனம், உன்மத்த நடனம், பிருங்க நடனம், ஹம்ச நடனம், ஆகிய வெவ்வேறு வகை நடனங்கள் ஆடுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏழு தலங்களிலும் நின்ற நிலையிலான உலோக விக்கிரகத்தில் இறைவனின் நடனக் கோலம் கற்பிக்கப்பட்டு மட்டுமே இருந்தது. முதன் முதலாக ஆடும் கோலத்தைக்  கண்ணுக்குப் புலனாக்கிக் காட்டியது தில்லையே.

இறைவனின் ஆடற் கோலத்தைச் சிற்பமாக வடிக்க இந்த ஏழு விடங்கத் தலங்களிலும் முயன்றிருக்க வேண்டும். நின்ற கோலத்தில் உள்ள சிலை வடிப்பது வரையில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தில்லைச் சிற்பிகள் இதில் முழு வெற்றி பெற்று உலோக சிற்பக் கலைத் துறையில் ஒரு பெரும் சாதனை படைத்து விட்டனர்.

திருவாரூரின் தொடர்ச்சி தில்லை

மற்ற ஆறு விடங்கத் தலங்களை விடவும் காரைக்கால் அம்மையாரின் ஆலங்காட்டை விடவும், தலையலங் காட்டை விடவும் திருவாரூருக்கு ஏற்றம் மிகக் கொடுக்கப்பட்டதற்குக் காரணம், அது அக்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக இருந்ததே. 

ஆடற்கோலப் பெருமான் வழிபாட்டைப் பொறுத்த வரை திருவாரூர் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும் தேவாரம் பாடுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று கூறித் தில்லையை வணங்கிய பின்னரே துவங்குவது வழக்கம், ஆனால் திருவாரூரில் மட்டும் அந்த வழக்கம் கடைப் பிடிக்கப் படுவதில்லை. எனவே இது தில்லையை விட மூத்த தலம் என்பது பெறப்படுகிறது.

விடங்கத் தலங்களில் தியாகராஜா என்றும் விடங்கர் என்றும் அழைக்கப்படுபவர் உமையோடும் கந்தனோடும் கூடியவர் என்ற பொருளில் சோமாஸ்கந்தர் எனப்படுகிறார். அருகில் மற்றொரு அம்மன் சிலையும் சிவகாம சுந்தரி என்ற பெயரில் உள்ளது. தில்லை நடராஜாவின் அருகில் உள்ள அம்மனும் சிவகாம சுந்தரி என்றே அழைக்கப் படுகிறார்.

திருவாரூரின் புற்றிடங் கொண்டாரும் தில்லையின் லிங்கப் பெருமானும் மூலட்டானேசுரர் என்றே அழைக்கப்படுகின்றனர். எனவே திருவாரூரின் சமய முயற்சிகளின் தொடர்ச்சியே தில்லை என்பது புலனாகிறது.

தில்லை    

அம்மையாரின் பெம்மான் ஸம்ஹிதைக் கால ருத்திரனைப் போல் அச்சம் தரும் தோற்றம் உடையவன். கண்ணுக்கு அழகற்ற எட்டி, இலவம், ஈகை, காரை, சூரை ஆகிய முட்செடிகளுக்கு இடையிலும், காதிற்கு இனிமையற்ற நரி, ஆந்தை, கூகை, ஓமன் ஆகிய பிராணிகளின் ஓலத்துக்கு இடையிலும், நெடும்பல் குழிக்கட்பேய் சூழவும், மலையமான் மகள் மருண்டு நோக்கவும் பிணப் புகையினூடே நடனமாடுகிறான்.

தில்லை மூவாயிரவர் ஏத்திய அம்பலத்தாடியோ ஆனந்தமே வடிவானவன். அவன் தன் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்பால் அடியார்களுக்கும் ஆனந்தம் அளிப்பவன். ஆனந்தமே பிரம்மம் என்று உபநிடதங்கள் கூறும். வேதம் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கு இணையாக இறைவனின் தோற்றம் பற்றிய கருத்தும் மாறி வருவதைப் பார்க்கிறோம்.

தில்லையில் ஏற்பட்ட நடராஜர் வழிபாடு எப்படி எல்லாக் கோவில்களுக்கும் பரவியது? எல்லாக் கோவில்களிலும் உள்ள மூர்த்திகள் அர்த்த ஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாகக் கூறப்படுவது ஏன்?

சோழ அரசர்கள் ஆடல் வல்லான் வழிபாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் காலத்தில் நெல் அளக்கும் மரக்காலுக்குக் கூட ஆடல் வல்லான் என்று பெயரிடப்பட்டது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் விநாயகருக்கும் முன்பாக நடராஜருக்குப் பூஜை செய்யப்படுகிறது. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செந்தளைக் கல்வெட்டு, சோழ நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் முதன்மையாகப் புலியூர்ச் சிற்றம்பலம் விளங்கியதால் கோயில் தேவ காரியங்களைக் கவனிப்பவர்களே, நாட்டிலுள்ள ஏனைய சிவ ஸ்தலங்களின் வழிபாட்டு முறைகளையும் கண்காணித்து வந்துள்ளனர் என்று கூறுகிறது. எனவே சோழ அரசர் ஆணைப்படி எல்லாக் கோவில்களிலும் ஆடற்பெருமானின் சிலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 இவ்வாறு அம்மையாரால் ஏற்படுத்தப்பட்ட ஆடற்பெருமான் வழிபாடு தில்லையில் மையம் கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவியது.

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Nataraja

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *