அன்பு நண்பர்களே!

திரு பாஸ்கர பாரதி, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் கொண்ட நாயகர் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூரைச் சேர்ந்தவர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரி அலுவலர் பதவியில் உள்ளவர். இவர் திருக்குறள் 1330 குறள்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வல்லுநர். ”வல்லமை தாராயோ” என்ற இவருடைய மேடை நாடகம் , தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய அகில இந்திய நாடக விழாவில் , ‘வித்தியாசமான நாடகம்’ என்ற பரிசும் பெற்றது. மக்கள் டிவியில் ‘மகாபாரதத்தில் மேலாண்மை ‘ என்ற தொடர் நிகழ்ச்சியை கடந்த ஓராண்டாக நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. I.A.S. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்து வருகிறார். மேலாண்மை குறித்த கருத்தரங்குகளும் நடத்திக் கொண்டிருக்கிறார். இவை அனைத்திற்கும் மேலாக ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நல்ல பல குறுஞ்செய்திகளை தம் அலைபேசி மூலம் அன்றாடம் தம் நண்பர்களுக்கும், அன்பு வட்டங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அதனை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். இப்புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. பன்முக வித்தகரான திரு பாஸ்கர பாரதி, நம் மேன்மை தங்கிய, வல்லமை மின்னிதழின் ஆலோசகர்களின் ஒருவரான திரு விஜய திருவேங்கடம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க நம் வல்லமையிலும் தொடர்ந்து எழுத சம்மதம் தெரிவித்துள்ளார். அவரை நம் வல்லமை மின்னிதழ் வாழ்த்தி வரவேற்கிறது!

அன்புடன்

ஆசிரியர்.

 

பாரதிப் பெருங்கடல் – 1

பன்னெடுங் காலமாய் மிகப் பெருமையாய் வாழ்ந்திருந்த தேசம். இயற்கை அன்னை வாரி வழங்கிய அள்ளஅள்ளக் குறையாத ஐஸ்வர்யங்களை அபரிமிதமாய்த் தன்னுள் அடக்கி வைத்திருந்த அட்சய பூமி.

வளம் கொழிக்கும் வண்டல் மண்ணில், செழுமையின் கொடி உச்சியில் பறக்கும்; நெடிதுயர்ந்த விருட்சங்களின் அடர்த்தியில் நடுப்பகலை நள்ளிரவாக்கிக் காட்டும் கானகங்கள்;

விண் முட்ட எழுந்து நிற்கும் மாமலைகள்; காலங்காலமாய் ஓடும் மிக நீண்ட ஜீவ நதிகள்;

பரந்துபட்ட நிலப் பிரதேசம்; முத்திசைகளில் சூழ்ந்து நிற்கும் முப்பெருங்கடல்கள்; தூசு படாத காற்று; மனதில் சற்றும் மாசு படாத மனிதர்கள்.

‘அமைதியான வாழ்க்கை; அன்பே அதன் அடிப்படை’ என்று ஜகத்திற்கே சாந்தி தவழுகிற நற்பாதையை அடையாளம் காட்டிய அற்புத பூமி.

‘தான் உண்டு, தன் வேலையுண்டு’ என்றிருந்த போதும், பிறர் துயரில் தாமும் மனமுவந்து பங்கெடுக்கும் பக்குவம் பரம்பரையாய்த் தம்முள் கைவரப்பட்ட கள்ளமில்லா உள்ளத்தோரைத் தன் உடைமையாக்கிக் கொண்ட உன்னத பூமி!

‘யார்க்கும் எதற்கும் அஞ்சிடோம்’ என்று அச்சமின்மையை அறிவுறுத்திய, அறிமுகப்படுத்திய ஆண்மை திகழ் பூமி! உண்மைதான். ஆனால்…

ஐயகோ..! மெய்ஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுக்கத் தெரிந்த மேதைமை இருந்தும், திறந்த விழிகளுடனே படுகுழியில் வீழ்ந்த பேதைமை எப்படி அரங்கேறியது?

‘உலகம் மொத்தமும் ஒரு வீடு; உலக மக்கள் நம் சகோதரர்கள்’ என்று உரக்கப் பேசிக் கொண்டே, தமக்குள் உட்பகையை உலவ விட்டது எங்ஙனம்? ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாகக் கண்டும்’,பந்த பாசங்களைக் களைந்தெடுக்கிற வேதாந்த உபதேசங்களை, வெற்று வார்த்தைகளைப் பேசி யதார்த்தங்களை மூடி மறைக்க முயன்றது எதன் பொருட்டு?

மிகத் தொன்மை வாழ்ந்த தேசத்தின் வாழ்வில், ஒரு சில நூற்றாண்டுகள் என்பது கண்ணிமைக்கும் நேரத்திலும் குறுகியதுதான். ஆனாலும், அதற்குள்ளாகவே கண்களில் புகுந்து விட்ட, நெருடுகிற, வருத்துகிற, உறுத்துகிற சிறு துகள் வெளியே வர ஏதேனும் செய்தாக வேண்டுமே..

இதற்கெல்லாம் அறுவை சிகிச்சை வேண்டாம்; ஆயுளுக்கும் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளத் தேவையில்லை; பத்தியமில்லை; ஒரு வைத்தியமும் இல்லை; ‘தூசி’யை வெளியேற்றுகிற லாகவம் தெரிந்தால் போதும்.

தெரிந்திருந்தது. ஒரு மாமனிதருக்குத் தெரிந்திருந்தது. இதர் அவயங்களுக்கு இடையூறு இல்லாமலே, வலியின்றி, வேதனையின்றி ‘உபத்திரவம்’ நீக்கும் உபாயம் அந்த உத்தம புருஷருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

யார் அவர்?
பாரதியின் பாடல் விளக்கும்..

 

மஹாத்மா காந்தி பஞ்சகம்

வாழ்க நீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்ம! நீ வாழ்க! வாழ்க!

அடிமைவாழ் வகன்றிந் நாட்டார்
விடுதலை யார்ந்து செல்வம்,
குடிமையி லுயர்வு, கல்வி,
ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசை தலைமை யெய்தும்
படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்!
புவிக்குளே முதன்மை பெற்றாய்!

கொடியவெந் நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவ னென்கோ?
இடிமினல் காக்கும் குடைசெய்தா னென்கோ?
என்சொலிப் புக்ழ்வதிங் குனையே?
விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசைப் புதிதாச் சாலவு மெளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீபடைத்தாய்!

தன்னுயிர் போலே தனக்கழி வென்னும்
பிறனுயிர் தன்னையுங் கணித்தல்;
மன்னுயிரெல்லாங் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்
கிழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனிற்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்!

பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்,
அதலினுந் திறன்பொ¢ துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்றுநீ யறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழை யாமை’
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே!

 தொடரும்..

 

படத்திற்கு நன்றி: http://worldphotocollections.blogspot.com/2011/01/mahatma-gandhiji-very-rare-photo.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "அள்ளக் குறையாத ஐஸ்வர்யங்கள்!"

  1. வருக வருக! மெய் சிலிர்க்க வைக்கிற சொல்லாற்றல். படிக்குந்தோரும் புல்லரிக்க வைக்கும் பாரதியை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  2. படிக்குந்தோறும்…எழுத்துப் பிழைக்கு மன்னிக்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.