சு.கோதண்டராமன்

பக்தி இயக்கத்துக்கு முன்னோடி அம்மையார். 

இறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று அம்மையார் கூறினார். துன்பக் கடலிலிருந்து விடுபட விரும்புவோரை அவர் அழைத்து எண்தோளன் தாள் பணியுமாறு அறிவுறுத்தினார். வேத வல்லுநர்களையும் அறிவுத் திறம் மிக்கோரையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, அவர் எளிய மக்களுக்கே உபதேசம் செய்கிறார். அதனால் எல்லாத் தரப்பு மக்களும் இறையன்பில் ஈடுபடலானார்கள். சிவநெறி மக்கள் இயக்கமாக மாறியது. பிற்காலத்தில் பல வேறு சாதி மக்களும் நாயன்மார் ஆவதற்கு அம்மையாரே வழி காட்டினார் எனலாம்.  

வட இந்தியாவில் புத்த மத எழுச்சியால் நலிவடைந்திருந்த வைதிக சமயம் மீண்டும் தழைக்க உதவியவை புதிதாக எழுதப்பட்ட புராணங்களே. மஹாராஷ்டிரத்தில் இஸ்லாம் மேலோங்கிய நிலையில் அங்கு தோன்றிய சான்றோர்களின் அபங்கங்களே இந்து சமயத்தை நிலை நிறுத்தின. அது போலத் தமிழ் நாட்டில் சமணத்துக்கு எதிராகச் சைவத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை தேவார, திருவாசகங்களுக்கு உண்டு எனினும் அவற்றிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவை அம்மையாரின் பாடல்களே. 

அம்மையாரின் பாடல்களின் மொழியும் நடையும் சாதாரண மக்களின் அன்றாட அனுபவத்துக்கு ஒட்டி இருப்பதால் அது மக்களை விரைவாகக் கவர்ந்ததில் வியப்பு இல்லை. 

பக்தி இலக்கியங்கள், இசை முதலிய கலைகளின் துணை பெறும்போது இவற்றின் தாக்கம் அதிகமாகிறது. அம்மையார் இசை நுணுக்கங்களைப் பற்றிக் கூறியிருப்பதால் அவர் இசை வல்லுநராக இருந்திருக்கக் கூடும். தனது படைப்புகளை அவர் இசையோடு பாடக் கேட்ட மக்கள் அவரைச் சூழ்ந்திருப்பர். அவரைப் பின்பற்றியே அப்பர் முதலானோர் மக்களை நல்வழிப்படுத்தத் தங்கள் பனுவல்களை இசையுடன் பாடும் வழக்கத்தை மேற்கொண்டனர்.  பதிகம் பாடும் முறை, கடைக்காப்பு பாடுதல் முதலியனவற்றையும் அம்மையாரிடமிருந்து பின்னர் வந்த சமயக் குரவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

‘சிவன் மாலுக்கும் அயனுக்கும் அளக்க முடியாதவன்’ என்று சொன்னார் அம்மையார். ‘சோதி வடிவில் என் சிந்தனையில் சுழல்கின்றான்’ எனவும் கூறினார். அப்பரும் சம்பந்தரும் இவை இரண்டையும் இணைத்து ‘மாலயன் அறிய முடியாமல் சோதி வடிவமாய் நின்றான்’ என விரித்தனர். 

அம்மையார் காட்டிய இறைவனின் சோதி வடிவத்தையும், கருணைப் பண்பையும் மிக அதிகமாகப் பெருமைப்படுத்தி மனமுருகினார் மணிவாசகர். அவரைத் தொடர்ந்து வள்ளலாரோ ‘அருட் பெரும் சோதி தனிப் பெருங்கருணை’ என்பதை ஒரு மந்திரமாகவே உருவாக்கினார். 

பிறவா நிலை விரும்பத்தக்கது தான். ஆனால் இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அம்மையார் கூறி இவ்வுலக வாழ்வை இடர் எனக் கருதும் சமண, சாக்கியச் சமயங்களின் கருத்தை மக்கள் மனதிலிருந்து அகற்றினார். அவரைப் பின்பற்றிய சம்பந்தர் சிவ பெருமானை வணங்குவோர் மண்ணிலும் நல்ல வண்ணம் வாழலாம், வானுலகில் நல்ல கதிக்கும் யாதும் ஓர் குறைவில்லை என்ற கருத்தைத் தன்  பாடல்கள் முழுவதும் பாடியுள்ளார். அப்பரும் உன் திருவுருவத்தைக் காணும் வாய்ப்புக் கிட்டுமானால் பிறவியை வெறுக்காமல் ஏற்றுக் கொள்வேன் என்று இறைவனிடம் குழைகிறார். 

அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் என்ற அம்மையாரின் கருத்து பின்னர் வந்த அப்பர் பிரானின் வாக்கில் எதிரொலிப்பதைக் காண்கிறோம். ‘அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்கிறார் அவர். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் பாடியதிலும் அம்மையாரின் தாக்கத்தைக் காண்கிறோம். 

சுந்தரரின் முதல் பாடல் ‘பித்தா’ என்று துவங்குகிறது. சிவனைப் பித்தன் என்று முதன் முதலாக அழைத்தவர் அம்மையாரே. (பதிகம் 2-4) 

‘பலிக்குநீர்வரும் போது நுங்கையிற்

பாம்புவேண்டா பிரானிரே’

என்ற சுந்தரரின் திருப்பைஞீலித் தேவார வரிகள், 

‘நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய

தீய அரவொழியச் செல்கண்டாய்- தூய

மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி

விடவரவம் மேல்ஆட மிக்கு’ என்ற அ-57ஐ நினைவூட்டுகிறது. 

‘கையோர் பாம்பு அரையார்த்தோர் பாம்பு

கழுத்தோர் பாம்பவை’    7.36.10

என்ற சுந்தரரின் வரிகள் அம்மையாரின், 

‘பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்

நாணாக மேல்மிளிர நன்கமைத்துக்- கோள்நாகம்

பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்

கென்முடிவ தாக இவர்’                              

என்ற அ-28 பாடலை நினைவூட்டுகிறது. 

‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்ற கருத்து கல்வியின் மூலம் அவனை அடைய முடியாது என்று உறுதிப் படுத்துகிறது. நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே என்று அப்பர் கூறுவதன் கருத்து இதுவே. ‘கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்’ என்று இதையே மணிவாசகர் கூறுகிறார். அப்பர் தன் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் ‘சுடருருவில் என்பறாக் கோலத் தான்’ என்று அம்மையாரின் (அ2 பாடலின்) சொற்றொடரை அப்படியே எடுத்தாள்கிறார்.  

இறைவன் தன்னை ஆண்டு கொண்டு அருள் செய்ததை எண்ணிப் பெருமிதமாகச் சில  பாடல்களிலும், எனக்கு எப்பொழுது அருள் செய்வானோ என்று ஏக்கமாக வேறு சில பாடல்களிலும் மணிவாசகர் பாடுவது, அம்மையாரைப் போல், தான் நற்கதி அடைந்தது போதாது, ஏனைய மக்களும் இறை அருள் பெறவேண்டும் என்ற எண்ணத்தினால் தான்.

‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் கருத்துக்கு வேர், அம்மையாரின் பாடல்களில் இருப்பதை அவரது நெஞ்சறிவுறுத்தும் பாடல்களில் கண்டோம். 

அம்மையாரின் தாக்கத்தை இஸ்லாத்திலும் காணலாம். குர் ஆனின் முதல் வசனம், ‘லா இலாஹ் இல்லில்லாஹ்’ என்பது, ஈசன் அவன் அல்லாது இல்லை என்ற அம்மையார் வாக்கின் (தி-2) நேர் மொழி பெயர்ப்பே. சங்க காலத்திலிருந்தே அராபிய வாணிகர்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாணிகம் செய்து வந்தனர். அவர்கள் அம்மையாரைப் பற்றி அறிந்திருக்கக் கூடும்.  “நான் அந்தந்த இன மக்களிடமும் அவரவர் மொழியிலேயே பேசுகிறேன்” என்று குர் ஆனில் கூறப்பட்டுள்ளதால் அம்மையாரை “ஈசன் அவன் அல்லாது இல்லை” என்று பேச வைத்த இறைவனே நபிகள் நாயகத்திடமும் அக் கருத்தை அரபி மொழியில் கூறியதாகக் கொள்ளலாம்.   

 

படத்திற்கு நன்றி:  http://www.ballygunge.info/about-the-lord-shiva

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.