தை மாதமே உன் சிறப்புத்தான் என்ன! (பாகம்- 1)

விசாலம்மா

தை மாதம் வந்தாலே மிகச் சிறப்புத்தான். 

சூரிய பகவான் பூஜையிலிருந்து ஆரம்பித்துப் பின், “ஸ்வாமியே சரணமய்யப்பா” என்ற கோஷம் முழங்க சபரிமலையில் அந்த மகரஜோதி தரிசனம் கண்டு ஜன்ம சாபல்யம் பெறும் பக்தர்கள், தன் உடலில் சகல தேவதைகள், மும்மூர்த்திகள், தேவிகளையும் கொண்ட அந்தக் கோமாதாவின் பூஜையுடன் கூடிய மாட்டுப் பொங்கல்  தினம், நம்  பசிக்கு அன்னம் வழங்கும் அந்த உழவர்களுக்காக ஒரு திரு நாள் என்று இந்த மாதம் ஆரம்பமே களை கட்டுகிறது. அதன் பின் மிகச் சிறப்பாக வருவது  தை வெள்ளிக்கிழமை. அம்பாள் கோயில்கள்  எல்லாம் பெண்மணிகளின் கூட்டம் நிரம்பி வழிய, பட்டுப்புடவைகள் சலசலக்க  கையில் பூக்கூடையுடன் வலம் வரும்  மாமிகள், பக்தி பெருக அம்பாளின் அருளுக்காகக் காத்திருக்கின்றனர். 

கோயில்களில்   பல சிறு கோலங்கள் போடப்பட்டு அதில் குத்துவிளக்குப் பூஜை மிகப் பிரமாதமாக நடத்தப் படுகிறது. அங்கு ஒலிக்கும் “லலிதா சஹஸ்ரநாமம்” நம் அடி மனதில் நுழைந்து அந்தப் பராசக்தி தான் நாம் போகும் வழிக்குத் துணை என்று உணர வைக்கின்றது.   அந்த அம்பாளை அலங்கரிக்கும் புரோகிதர்களை நான் மிகவும் வியக்கிறேன். 

கொசுவம் புடவையை மிக நேர்த்தியாகக் கட்டி, பின் ஒட்டியாணம் இட்டு, காதில் பெரிய அளவு தோடு,  மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு, காலில் கொலுசு என்று அணிவித்து அந்த ராஜராஜேஸ்வரி கொலு இருப்பதை அப்படியே தத்ரூபமாய் அமைத்து விடுகிறார்கள். அந்தத் தேவியைப் பார்த்தால் “சகலமும் நீதான் அம்மா  என்ற நினைப்பில்  நாம் இருக்க, மாயை நம்மை விட்டுச் சில வினாடிகள் விலகிப் போகிறது. 

இந்தத் தை  மாதத்தில் தான் பல முகூர்த்தங்கள் இருக்கும். எல்லாத் திருமண மண்டபங்களிலும் ” பீ..  பீ.. டும்.. டும். கெட்டி மேளம்   கெட்டி மேளம்”  என்ற சத்தம் கேட்க, மாப்பிள்ளை மனதில் பல கனவுகள் மிதக்க, மணமகளின் கைத்தலம் பற்றுகிறான் மணவாளன். குரு பலன் என்பது  தை மாதத்தில் அதிகம் தெரிய வரும் போலிருக்கிறது. 

அடுத்து வரும்  சிறந்த திருநாள் “தைப்பூசம்”. அந்த ஆறெழுத்து மந்திரத்தின் சக்திதான் என்ன ! ஒரு தரம் “சரவணபவ” என்றுரைத்தால் போதுமே. அந்த முருகன் ஓடோடி அருள் புரிய வந்து விடுவான். எங்கும்  காவடித்  தரிசனம்.  பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி எனப் பல காவடிகள் வீதி வலம் வர, “வேல் முருகனுக்கு அரோஹரா” என்ற முழக்கம்  நம் உடலையெல்லாம் சிலிர்க்க வைக்கிறது. 

குன்றின் மேல் நின்று அருள் புரியும் கார்த்திகேயன். குடம் குடமாக அவனுக்குப் பாலாபிஷேகம். பார்க்கப் பார்க்க மனம் நிறைந்து போகிறது, பரவசமாகிறது.   தை மாதக் கிருத்திகையும் அந்தச் சிவகுமாரனுக்கு உகந்த நாள்.

நம்  வாழ்க்கை  உயர   நம்   முன்னோர்களின் ஆசிகளும் வேண்டுமே. இதற்கென்றே தை அமாவாசை வருகிறது, இந்தத் தினத்தில் பித்ருக்களுக்குச் சிறப்புப் பிரார்த்தனையும் செய்யப் படுகின்றன. புண்ய நதிகளின் தீரத்தில் தர்ப்பணங்கள் செய்து முன்னோர்களின் ஆசிகளையும்  பெறும் தினமாக இந்த அமாவாசை   அமைகிறது.

மும்மூர்த்திகளில் ஒருவரான   ஸ்ரீ தியாகராஜஸ்வாமி அவர்களின் திதியான புஷ்ய பகுள பஞ்சமி வருவதும் இந்த மாதத்தில் தான். “எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு” என்ற பஞ்ச ரத்னக் கீர்த்தனையைத்தான் மறக்க முடியுமா? அந்த மஹான் கடைசியில் பாடிய கீர்த்தனை “சஹானா” ராகத்தில் அமைந்த “கிரிபைநெல கொந்த ராமுனி” யாகும். ” பத்து நாட்களில் உன்னைக் காப்பேன்” என்று  சொன்ன ராமனைக் கண்டேன் என்ற அர்த்தத்தில் அந்தப் பாடல் இருக்கிறது, திருவையாற்றில் அவர் இயற்றிய பஞ்சரத்தினக் கீர்த்தங்கள் பாடப்படுகின்றன.

 ஜகதானந்தகா – நாட்டை 

சாதிஞ்சனே – ஆரபி, 

துடுகுகல –கௌளை,   

கனகன ருசிரா – வராளி,

எந்தரோ மஹானுபாவ – ஸ்ரீராகம்.

இன்றைய தினம், பூஜைகள் விமரிசையாக செய்யப்படுகின்றன, ஸ்ரீதியாக ராஜ ஸ்வாமிகளுக்குக் கிரமமாகப் பல அபிஷேகங்களும் பின் அஷ்டோத்தர பூஜையும் நடத்தப் படுகின்றன. 

ஸ்ரீ ராமனையே தன் மூச்சாகக் கருதிப் பின் ஸ்ரீராமருடனேயே ஜோதியாகக் கலந்த  அந்த மஹானை வணங்குகிறோம்.

 

மகர ஜோதிப் படத்திற்கு நன்றி: http://mangaloretoday.com/mt/index.php?action=headlines&type=2581

தைப்பூசப் படத்திற்கு நன்றி: http://palani.org/taippucam.htm

தியாகராஜ சுவாமிகள் படத்திற்கு நன்றி: http://www.naamasankeerthanam.com/SriThyagarajaSwamigal.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *