பாரதி- மனித குல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!

1

அவ்வை மகள்

அட்லாண்டாவில் நமது தமிழ் நண்பர்களுக்கிடையே எனது உரை.  

கன்னலெனத் தகும் இன்னமுதத் தமிழ் வண்டமிழ் முத்தமிழே.. 

கல்வி, கலைகளை அள்ளி வழங்கிடும் வெள்ளுடைக் கலைமகளே.. 

முக்கடல் தீண்டும், மலையுடை கொள்ளும் என்னருந்தமிழகமே! 

பாருக்குள்ளே- நல்ல நாடே எனதுயிர் தாயகமே 

இச்சபையிடை அமர்ந்து ஆசி அளிக்கும் திறமிகு சான்றோரே! 

என்னில் மூத்தோரே!

என்னையொத்தோரே!

என்னில் இளையோரே! 

உம்மை வணங்கி, இயற்கையை வணங்கி இனிதே துவங்குகிறேன்! பாரதியின் சிந்தனை எனும் முத்தாய்ப்பானதொரு தலைப்பில்! 

இத்தலைப்பில், எனது சிந்தனையின் தீவிரத்தில் நான் திரட்டிய கருத்துக்களின் அடிப்படையில், 

பாரதி ஒரு பொறுப்பு மிகுந்த தேசியப் பாதுகாவலன்!

மனித குல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!

 உலகின் ஒப்பற்றதொரு அறிவியலாளன் – விஞ்ஞானி. 

எனும் முத்தான மூன்று குணாதிசயங்களை இச்சபையில் பதிய வைக்கிறேன்! 

இந்த மூன்று நிலைகளிலும் பார்த்தால், தொண்ணூற்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்தாலும் சாதிக்க முடியாததைத் தன் ஆயுளான முப்பத்தொன்பதே ஆண்டுகளில் சாதித்த அதிசய மனிதன் பாரதி. 

இந்தச் சாதனை அவனது உயர்சிந்தனையின் வெளிப்பாடு; தனது ஒரே சொந்த மூளையின் இயக்கத்தின் இடையே அவன் பிழிந்தெடுத்த கற்பகச் சாறு அது!

சிந்தனைச் சேற்றிலே அவன் இட்ட தரமான வித்துக்களின் நெற்றுக்கள் அவை. எண்ணமெனும் இயந்திரத்தில் அவன் அரைத்தெடுத்த வித்தக விழுது அது! தமிழர் சமுதாயம் தரணியில் என்றும் சிரஞ்சீவியாய் வாழுமென அவன் நிறுத்தி விட்டுச் சென்றிருக்கிற விழுதுகள் அவை! 

‘கவிஞன் நானோர் காலக்கணிதம்’ என்பதனை ஞானவாசகமாய்க் கொள்ளுவது நம் வழக்கம். ஆனால், கவிஞன் நானோர் திரிகால ஞான விஞ்ஞானியென வாழ்ந்து காட்டித் தனது சிந்தையின் பெற்றியைத் திடமாய்ப் பதிவு செய்து போயிருக்கிறவன் பாரதி! 

“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!”

இது ஆரூடம் அல்ல! கணிப்பு அல்ல!! எதிர்பார்ப்பு அல்ல!!

உரமேறிய உறுதி! குருதியில் சுரமேற்றும் உத்தமக்களியாட்டம்! 

நடக்கப் போவது இது தான் என்பதனை உரைக்க அமானுஷ்ய சக்தி வேண்டும்! தீர்க்கதரிசி என்பது கதாபாத்திரம் அல்ல; எவரையும் காப்பியடித்தோ அல்லது சிறப்புப் பயிற்சிகளுக்குச் சென்றோ அதனை அடைந்து விட முடியாது; அது ஒரு சுயவேள்வி!

சொல், செயல், சிந்தனை என மூன்று நிலையிலும் தன்னைத்தானே சமுதாயமெனும் குடத்திலிட்டுப் புடம் போட்டுப் பார்க்கும் அக்கினிப் பரீட்சையது.

அந்த வேதனை எத்தனைக் கடுமையானது எத்தனைக் கொடுமையானது என்பதனைச் சிந்தனைச் சிற்பிகள் மட்டுமே அறிவர். ஆக, காலம் கடந்த சிந்தனையென்பது மனிதர்களிடையே அரிதானதொரு குணாதிசயம்! எவரொருவருக்கும் அது எளிதில் வாய்க்கப் பெறாது!! 

பரம்பொருள் எனும் இறையருள், தான் தேர்ந்தெடுத்த சில நபர்களுக்கு மட்டும்,  இடம், பொருள் ஏவல் பார்த்து வழங்குகின்ற சிறப்பானதொரு வரப்பிரசாதமாகும் அது. 

அத்தகைய பிதாமகர்களின் எண்ணிக்கை உலகில் மிகவும் குறைவு. அந்தக் குறைச்சல் எண்ணிக்கையிலும் மிகக்குறைவானவர்களே, மிகவும் இளைய வயதில், தன் வயதிற்கும், தான் வாழ்ந்து வந்த கால சமுதாயத்தின் தன்மைக்கும் நேரெதிரான சிந்தனைப் புரட்டலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிகக் குறைந்த எண்ணிக்கையான நபர்களில் பாரதியும் ஒருவன்!!!! 

அதுவும் பாரதி தோன்றி, வளர்ந்து, வாழ்ந்த காலம் மிகச்சரியானதொரு நெருக்கடியான காலகட்டமாகும்! அதற்கு முன்பு, அதற்குப் பின்பு, அதாவது இப்போது என்கிற இரு நிலைகளிலுமே இந்தியச் சமுதாயம் அத்தனை நெருக்கடியில் சிக்கிக் கொள்ளவில்லை. 

அன்று மிகக் காட்டமான, வீரியமான, ஆற்றல் மிகுத்த உந்து சக்தி மக்களுக்குத் தேவைப்பட்டது!! தேவைப்பட்ட நேரத்தில், என்ன தேவையோ அதை மிகச்சரியாகத் தரவென்றே நம்மிடையில் தோன்றியவன் பாரதி!  

அது மட்டுமல்ல, அவனையொத்தவர் பிறந்தாரும் இல்லை. பிறக்கப் போவதும் இல்லை எனும் அளவுக்கு அவன் செய்து காட்டிப் போயிருக்கிறான்!! 

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்- Brainstorming என்று நாம் சொல்லுகின்ற சிந்தனைப் புரட்டலில், தற்போதைய நிலையைப் பற்றின முழுதான, பார்வை, புரிந்து கொள்ளல், கணிப்பு ஆகியன வேண்டும். இந்த ஒட்டு,மொத்த ஞானம் மட்டுமே விஷன் (Vision) என்கின்ற எதிர்கால ஆராய்ச்சிக்கு ஒருவனை இட்டுச்செல்ல முடியும். 

இவ்வகையில் பாரதிக்குக் குழந்தைப்பருவம் என்கிற இளம் பிராயத்திலேயே அதிகமான தேர்ச்சி இருந்தது எனலாம். அப்போதே அவருக்கிருந்த கூர்மையான அறிவாற்றலும் மொழிவளமும் இத்தேர்ச்சிக்குத் துணையாய் இருந்தன என்றால் அது மிகையில்லை. தமிழ் மொழியை வளர்ப்பது முதல், விடுதலை வேட்கை, ஆன்மீகம், தாம்பத்யம், பெண்கள் முன்னேற்றம் எனப் பல பரிமாணங்களிலும் மிகப்பொறுப்பானதொரு கவியாய், தலைவனாய், குடிமகனாய் எனப் பல நிலைகளில் தன்னைப் பொருத்திப் பார்த்து உயரிய சிந்தனை செய்து தனது முத்திரையைப் பதித்துச் சென்றிருக்கின்றவன் பாரதி. 

தனது தனிப்பட்ட வாழ்விற்காகத் தனி மனிதர்கள் சுயநலச் சிந்தனையோடு வாழ்வது இயல்பு. சமுதாயத்திற்காக, உலகிற்காக,  பிரபஞ்சத்திற்காக, சுய நலத்தோடு வாழ்ந்த சான்றாண்மை பாரதிக்கு மட்டுமே உண்டு. 

இது என் மொழி, இது என் மாநிலம், எனக் கனல் தெறிக்க வீராப்புடன் பேசிய வீரபாண்டியன் பாரதி. பொங்கியெழுவது அவன் குல ஒழுக்கமல்ல. பரம்பரைச் சொத்தும் அல்ல. பிறப்பால் அவன் மன்னனும் அல்ல, மறவனும் அல்ல. சண்டையென்றால் என்ன விலையென்று கேட்கும் சாத்வீகமான பார்ப்பனன். ஆனால் மறவனாய், மன்னனாய்த் தகிக்கிறான், கொதிக்கிறான், பொங்கியெழுகிறான். 

“எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!”

எத்தனை அருமையாய்க் கேட்கிறான் பாருங்கள்! அந்த வேகத்திலே விவேகம் மேலோங்கியிருக்கிறது!! சுவாசத்திலும் கூடத் தேச பக்தியையும், பிதா பக்தியையும் இழைத்து நெய்கிறான் கவி பாரதி. சொல் விற்பன்னத்தில் தமிழை அலங்கரிப்பது அவனது இலக்கு அல்ல. அவன் இங்கே பயன்படுத்தியிருக்கிற ஒவ்வொரு சொல்லிலும் நிறையச் சூட்சுமம் தெரிகிறது!! 

நாட்டையும் நதியையும் தாயாகப் பாவிப்பது நம் மரபு. ஆனால் மேலை நாட்டவர்களின் நிலையோ வேறானது. நாட்டையும் நதியையும் ஆண்பாலாக, தந்தையாகப் பாவிப்பது அவர்கள் வழக்கம். 

அவரவர்களுக்கு அவரவர் பாஷையிலே சொன்னால் தான் புரியும் என்பார்கள்!! பாஷை என்பது மொழியல்ல; அது பேச்சு வழக்கு!!

பக்கம் பக்கமாக எழுதினால்தான் விளக்க முடியும் என்கிற ஒன்றை விலாவரியாக விவரித்துப் பேசினாலொழிய விளங்க மாட்டாது என்கிற ஒன்றை, ஒரே ஒரு வாசகத்தில் சொல்லிப் போவது பாஷை!   

ஒரு எடுத்துக் காட்டு அவ்வையின் “மோனம் என்பது ஞான வரம்பு”  இது ஒரு பாஷை. இது சங்கேதமா? இல்லை.

இது எழுத்தா? இல்லை. இது சொல்லா?  இல்லை! ஆனால் இது பொருள் – அர்த்தம் – ஞானம்!! 

knowledge என்கிற அறிவும், understanding  என்கிற புரிந்து கொள்ளலும், comprehension எனப்படுகின்ற இடம், பொருள், ஏவல் கொண்ட சூழலும் இந்த ஞானத்தில் உள்ளன என்றாலும் இவை மட்டுமே அதில் இல்லை. இவற்றின் சாறு தனித்தனியேக் கசிந்து, அவை பதமாய்க் கலந்தபடி வழிந்து வெளி வந்து, ஆனால் தனியே வெளி வராது நறுக்கிய கனியில் பிரியாது செறிந்து நிற்கும் ரசமாய்ச் சாறாய், பார்வைக்குத் தெரிந்தும், தொட்டால் புரிந்தும், சுவைத்தால் மட்டுமே உணரத் தக்கதான அதிசய எளிமையும் அதிசயக் கடினமும் பாஷையின் பண்புகள்!! 

பாரதிக்கு வருவோம்! நம்மைப் பிடித்திருப்பவனோ பரங்கியன்!! பரங்கியரின் வழக்கு மொழியில் அவனுக்கு உரைக்குமாறு சொல்ல வேண்டும்! இதுதான் பாரதியின் தீர்மானம். 

இந்தத் தீர்மானத்தோடு, தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் பாரதி பகருகின்றான்: “எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!”     

இத்தனை ஞானத்தோடு பாரதி உரைத்திருப்பது அவனது கடமை உணர்ச்சியையும், பொறுப்புணர்ச்சியையும் மட்டுமா காட்டுகிறது! மனிதர்களின் உடல் ரசாயனம் அறிந்த ஒரு மானுட உடல் மருத்துவ விஞ்ஞானியாக, மருத்துவனாக அவன் சித்து விளையாடுகிறான்!!     

“எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!”  எனத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பாருங்கள்!  இவ்வாசகத்தைச் சொல்லச் சொல்ல உண்மையிலேயே நம் மூச்சிலும், நாவிலும், கண்ணிலும், கனல் கனிகிறது!!  

இது ஒரு ஆக்க சக்தி (positive energy)!  தமிழர் யாவரும் ஒன்று கூடி “எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!” என ஒரே நேரத்தில் ஒரே தன்மையதான தொனியோடு உரைத்துப் பார்த்தால் தெரியும் இந்த வாசகத்தின் தீப்பொறித் திறன்!! 

“கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர்! அங்கு மாபெரும் வீரர் பெருந்திரட் கூட்டம்! நம்பற்குரியர் நம் வீரர்” என அவன் கூறும் வாசகம் ஆய்வுக்குரியது.   

நம்பற்குரியர் நம் வீரர் என அவன் காட்டுவது ராணுவ வீரர்களையா?

“இல்லை.” 

இந்தியச் சமுதாயத்திலே இருக்கிற ஒவ்வொரு மனிதரையும் நம்பற்குரியர் நம் வீரர் என்கிறான் பாரதி. 

நாடு பரங்கியனுக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையிலே தாய் நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் தாயின் மணிக்கொடி ஏற்றப்பட வேண்டும். அவ்வாறு கொடி ஏற்றப்பட்டு அது பட்டொளி வீசிப் பறக்க,  அக்கம்பத்தின் கீழ் நின்று இந்தியர் யாவரும், “எங்கள் தந்தையர் நாடெனும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!” என்று ஒருங்கே முழங்க வேண்டும். அந்த முழக்கம் கேட்டுப் பரங்கியன் கதி கலங்க வேண்டும் என்கிற காட்சியைக் கற்பனையிலே கண்டு திளைத்தவன் பாரதி.  அத்தகையதொரு ஒருமித்த முழக்கம் எத்தனைப் பலமாய் எழும்பி விண்ணைப் பிளக்கும். அந்தச் சத்தம் கேட்டுப் பரங்கியன் எவ்வாறு சித்தம் கலங்குவான் எனப் பாரதி உணர்ச்சி நிலையில் அனுபவித்துப் பார்த்திருக்கிறான். 

அது வெற்றி! வெற்றி! வெற்றி!! எனத் திசைகள் தோறும் ஆர்ப்பரிக்க, அந்த வெற்றிக் காட்சி நனவாக வேண்டுமே என உள்ளம் முழுவதும் கரிசனம் கொண்டவன் பாரதி!! அந்தக் கரிசனம் ததும்பி வழியத் தன் சுதந்திரக் கனவை நனவாக்கும் வழி காணப் பாடல் புனைந்தவன், பாதை முனைந்தவன் பாரதி!! 

தாயகத்திலே மக்கள் வாழ்வு,  தரணிக்கு எடுத்துக்காட்டாய்த் திலகமாய் அமைய வேண்டும் என்பதிலே பாரதிக்கு இருந்த அக்கறை வேறு எவருக்கும் இல்லை என்றே கூறலாம். 

மக்களின் வாழ்வு எவ்வாறு சிறக்கும்? நிலைக்கும்? என்றால் அது புவியின் தனித்துவப் படைப்பில் பொருந்தி அத்தனித்துவத்தை அரவணைத்துப் போற்றிப் பாதுகாத்துச் சென்றால் தான்!! இந்த இயற்கை விதியைப் பாரதி ஒரு விதக் கர்வ எழுச்சியுடன் பெருமிதமாகப் பாடுகின்றான்: காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று!! 

அது மட்டுமா? இன்னமும் ஒருபடி மேலே சென்று, “நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று கூறுகிறான். 

மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்கு, இது ஒரு பொருளற்ற உணர்வு நிலைக் கூற்றாய்த் தோன்றக் கூடும்!! ஆனால் இது அறிவியல் ஞானம் நிரம்பிய வாசகம்!. இன்றைக்கு Biodiversity, Conservation of Biodiversity என ஏதேதோ பேசுகிறோம்! 

மேடையேறிப் பேசுகிற காரணத்தினாலேயே நாம் சொல்லுகிற எல்லாவற்றையும் அரங்கேற்றி விட்டதாய் நினைப்பவர்கள் நாம்! ஆனால் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரில்லாத் தொகுதிகளையும் கூட எங்கள் கூட்டம் என்று பாரதி கூறியது சிறப்பான அறிவியல் அணுகுமுறை!

ஒவ்வொரு உயிரும், அது தாவரமோ அல்லது விலங்கோ அதற்கென்று ஒரு பொருத்தமான வசிப்பிடம் உள்ளது. இதனை அறிவியலில் நிஷ் என்கிறோம் இது முதல் நிலை சிறு வசிப்பிடம், அடுத்த நிலையில் விரிந்த வசிப்பிடத்தை ஹேபிடட் என்கிறோம். 

உயிரில்லாப் பொருட்களான, மண், கல், நீர், காற்று இவற்றைப் பற்றி வாழ்பவையே தாவரச்சங்கமம் முதலான விலங்குத் தொகுதிகள். வசிப்பிடங்களில்லாமல் எந்த உயிரினம் வாழ முடியும்?

வானும், மண்ணும், கடலும் அன்றி இங்கே எவ்வுயிரும் சாத்தியம் இல்லையல்லவா? 

உயிர் வகை, உயிரிலா வகை. இவையிரண்டும் ஒரு விதையின் இரு வித்திலைகள் போன்றவை என்பதையும், உயிரிலாப் பொருட்கள் யாவும் பிற உயிர்களும் மனிதனின் கூட்டாளிகள் எனவும் எளிதாய், இயல்பாய், எவ்வித ஆரவாரமும் அலட்டலும் இல்லாமல் போகிற போக்கில் பாரதி சொல்லிப் போயிருக்கிற பாங்கு நம்மை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் வியக்க வைக்கிறது.

“அன்னை – அன்னை

ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை”   

எனும் அவனது ஊழிக்கூத்தும் கூட, பிரபஞ்சத்தின் இயக்கத்தை விளக்கி எங்கே விஞ்ஞானம் நின்று விடுகிறதோ அங்கிருந்து தொடர்வது மெய்ஞானம் என்கிற உண்மையைப் பறை சாற்றி விட்டுச் சென்றிருக்கிறது!! 

இவ்வுரையின் எனது அடக்கத்தை ஒரு மீள்பார்வையாகப் பார்க்கிற போது, 

பாரதி ஒரு பொறுப்பு மிகுந்த தேசியப் பாதுகாவலன்!

மனிதகுல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!

உலகின் ஒப்பற்றதொரு அறிவியலாளன் – விஞ்ஞானி

என்பதை மீண்டும் வலியுறுத்தி வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். 

வணக்கம்.

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathi

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதி- மனித குல மறுமலர்ச்சியாளர்களில் உலகின் மிக இளைய தீர்க்க தரிசி!

  1. “நல்லதொரு உரை கேட்டு மனம் மகிழ்ந்தது. யாம் தாமதமாக வந்தாலும், அனுபவித்துப் படித்தோம். எம்மை நன்கு புரிந்துகொண்டாய், கொடை வள்ளல் அதியமானின் நண்பரின் மகளே!நான் ஆத்திரக்காரன். ஆனால் எமக்கு புத்தி மட்டு அல்ல என்பார், ஜி.சுப்ரமண்ய ஐயர். உணர்ச்சி பிரவாகமே கவிதா வேகம். அதை புரிந்து கொண்டு தான் பேசியிருக்கிறாய்.பராசக்தி! இங்கு வா. என் பேச்சை கேள். எம்முடைய புகழ் பாடிய ரேணுகாவுக்கும், அதை பிரசுரித்த பவளசங்கரிக்கும் வல்லமை தா. வல்லமை இதழுக்கு வல்லமை கூட்டு. இது என் ஆணை, தாயே! அன்னைக்கு ஆணையிடுவது அருமை மைந்தனின் உரிமையன்றோ!”
    ~ இது கற்பனை. நான் புரிந்து கொண்ட மஹாகவி பாரதி இப்படித்தான் பேசியிருப்பார். ஒரு உண்மை சம்பவம். சத்யாக்ரஹ தினத்தன்று, ஒரு நீண்ட ஊர்வலம் குஹானந்த நிலையம் அடைந்தது, ராயப்பேட்டையில். திரு.வி.க. தலைமை. பாரதியார் தற்செயலாக வருகிறார். திரு.வி.க. அவரை பாடச்சொல்கிறார். அவரும் ‘முருகா’ முருகா’ என்று பாடுகிறார், உருக்கமாக. சபையே கண்ணீர் வடித்த வண்ணம். பாரதி ஒரு உணர்ச்சி காட்டாறு. பிரவாஹமோ தேசாபிமானம். அட்லாண்டாவில் என்ன? உலகெங்கும் எங்கள் பாரதி பாட்டு ஒலிக்கவேண்டும், பராசக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *