பத்மஸ்ரீ விருது பெற்ற ஈரோடு கோபால் அவர்களுக்கு சித்தார்த்தா பள்ளியில் பாராட்டு விழா!
அண்ணல் காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் என்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் என்றும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக முனைவர் திரு. பி. கே. கோபால் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவிலும், 18 உலக நாடுகளிலும் தொடர்ந்து சமூக சேவை ஆற்றி வருவதற்காக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு “பத்மஸ்ரீ விருது” வழங்க இந்த ஆண்டு குடியரசு தினத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய்க்கான விழிப்புணர்வு சேவைக்கென கௌரவிக்கப்பட்டுள்ள திரு கோபால் அவர்களை தொழுநோய் விழிப்புணர்வு தினத்தில் ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் பாராட்டிச் சிறப்பித்துள்ளது. சுதந்திரப் போராட்டத் தியாகி. திரு. எஸ். பி. வெங்கடாசலம் விழாவிற்குத் தலைமையேற்று பாராட்டு மடல் வழங்கி வாழ்த்தினார். பள்ளி மாணவர்களின் பெற்றோர் சார்பாக திரு. ஜாஹிர் உசேன் அவர்களும் ஆசிரியர்கள் சார்பாக துணை முதல்வர் திருமதி. கண்ணகி அவர்களும், மாணவர்கள் சார்பாக கோகுலும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
காந்தியடிகள் தொழுநோயாளிகளுக்கு ஆற்றிய சேவையுடன் திரு. கோபால் அவர்களின் சேவையையும் ஒப்பிட்டு “யார் கடவுள்” என்ற தலைப்பில் Rtn. டி. ஜெகதீசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவின் வரவேற்புரையை பள்ளித் தாளாளர் திருமதி. ஜெ. ஜெயபாரதி வழங்கினார். விழாவின் துவக்கமாக காந்தியடிகளின் சர்வோதயப் பிரார்த்தனைக் கூட்டத்தைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்தினர். விழாவை ஆசிரியை திருமதி. சுபா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவசக்தி, சங்கரமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். பள்ளி முதல்வர் திரு. முகமது கௌஸ் நன்றியுரை வழங்கினார். பத்மஸ்ரீ விருது பெற்றதன் மூலம் ஈரோடு நகருக்கு இந்திய அளவில் பெருமை சேர்த்த முனைவர் திரு. பி. கே. கோபால் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அது இளம் மாணவர்கள் மனதில் சமூக நலம் நாடும் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கான தூண்டுதலாக இருந்தது. அவரது நல்ல முன் மாதிரியான வாழ்க்கை பல இளம் சமூக சேவகர்களை உருவாக்கும் என்ற நம்பிக்கையை இத்தினம் அளித்துள்ளது.