நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-3

1

பெருவை பார்த்தசாரதி

பள்ளிக்கூடங்கள்

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் போது சிறப்பானப் பள்ளிக் கூடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வையுங்கள். குறைந்த பட்சம் திறமையுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுங்கள். அறிவுத் திறம் குறைந்த மோசமான ஆசிரியரிடம் குழந்தையை ஒப்படைக்காதீர்கள்அனுபவத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற கவியரசரின் சிந்தனையில் சிதறிய முத்துக்களில் இதுவும் ஒன்று.

கல்யாணம் ஆகிக், குழந்தையோடு புது வாழ்க்கையைப் பள்ளிக் கூடங்களிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பயன்படக் கூடிய பொன்மொழிகள் அல்லவா இது.           

பொதுவாக எல்லாப் பெற்றோர்களும், தங்களது குழந்தைகளைத் தரமான பள்ளியில் சேர்த்து நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்றுதான் நினைப்பார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் வயது நெருங்கும் போது நல்ல பள்ளிகளைப் பற்றியச் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். 

புதிதாக வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதிகளின் நினைவுகள்!, குழந்தைகளின் ஒளி மிக்க எதிர்காலம்ஒரு நல்ல பள்ளியில் கல்வி கற்பதைப் பொருத்தே அமையும்என்ற வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பதைப் பின் வரும் உரையாடல் விளக்குகிறது. 

மனைவி – ‘ஏங்க நம்ம குழந்தைக்கு ஒரு வயது பூர்த்தியாகி விட்டது, எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்னு யோசிச்சீங்களா?’ 

கணவன் – ‘இன்னும் இரண்டு வருஷம் இருக்குது, அதுக்குள்ள உனக்கு ஏன் இவ்வளவு அவசரம்?’ 

மனைவி – ‘கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ள இரண்டு வருடம் ஓடிடும், கடைசி நேரத்தில் யோசிக்கறத விட இப்பவே யோசிச்சாத்தாங்க நல்லது!’ 

கணவன் – ‘எது நல்ல ஸ்கூல் என்று என் நண்பர்களிடம் விசாரித்தேன், வேளச்சேரியிலும், அடையாரிலும் இருக்கும் ஸ்கூல் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்றாங்க.’ 

மனைவி – ‘என்னோட பிரண்டு சொன்னா, கே.கே நகர்ல்ல இருக்கற ஸ்கூல் மத்த எல்லாத்தையும் விட பெட்டர்னு சொன்னா.’ 

கணவன் – ‘எப்படிச் சொல்ற?’ 

மனைவி – ‘அந்த ஸ்கூல்ல படிப்போடச் சேர்த்து மத்த பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கறாங்களாம், குழந்தைகளப் போட்டு படி?.. படின்னு ஒரேயடியாப் படுத்தறது இல்லயாம், அடிக்கறதும் இல்லயாம். அஞ்சாவது வரைக்கும் வீட்டுப் பாடம் கிடையாதாம். ஸ்கூல் போக மாட்டேன்னு எந்தக் குழந்தையும் அழவே அழாதாம். கேக்கறதுக்கே ரொம்ப அழகா இருக்கு இல்லங்க.’

ஒரு ஏக்கத்தோடு!  ‘ஏங்க நம்ம பையனும் அங்கே படிச்சா எப்படி இருக்கும்.’

 கணவன் – ‘சரி! சரி!, ஆனா அங்கஇடம்கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்னு சொல்றாங்க, அந்த ஸ்கூல்ல குழந்த பொறந்துப் பேர் வச்ச உடனே, இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே நேர்ல போய் பதிவு செஞ்சுட்டு வரணும். நாம இன்டர்நெட் உலகத்துல இருந்தாலும் கூட, அப்ளிகேஷன் வாங்க, ஸ்கூலுக்கு மூணு தெரு முன்னாடியே, ராப்பகலா நின்னுக் கியூல இடம் பிடிக்கணும். ஃபீஸ் கூடக் கொஞ்சம் அதிகம்னு பேசிக்கிறாங்க, நம்ம வருமானத்துல இதெல்லாம் முடியுமா? பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு ஒண்ணும் குறச்சலில்லஅங்கேயே போட்டுறலாம்.’ 

மனைவி – ‘என்னங்க, பத்து வருஷமாக் குழந்த இல்லாம, நாமக்கல் ஆஞ்சனேயரோட அருளால ஒரு குழந்தைப் பிச்சை கிடச்சிருக்கு, அவனை ஒரு நல்ல தரமான ஸ்கூல்ல சேத்து, நல்லாப் படிக்க வச்சு, அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கறது நம்ம கடமைங்க. நம்மளோட வருமானம் பத்தலன்னாச் சொல்லுங்க, நா வேணா வேலைக்குப் போகட்டுமா? எங்க அம்மா, அப்பா சீர் செனத்தி எல்லாம் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கலன்னாலும், என்னப் படிக்க வச்சு, நல்லது கெட்டது எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்ததுக்காவது ஒரு பிரயோசனம் இருக்கும். இரண்டு பேரும் வேலைக்கு போனா? நாம அந்த ஸ்கூல்ல எப்படியாவது சேத்துடலாங்க?’ 

கணவன் – ‘ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால் வேண்டாம்’, இப்ப நாம வாழற வாழ்க்கைல எல்லாச் சந்தோஷமும் நிறைஞ்சு இருக்கு, நீ வேலைக்கெல்லாம் போகாத. குழந்தய நல்லாக் கவனிச்சிக்க, நா ஆபீஸ் போய்ட்டு, டயர்டா வரும் போது, இப்ப நீ என்னையும் குழந்தையையும் நல்லாக் கவனிச்சுக்கற பாரு, அதுக்கு எந்தக் குந்தகம் வந்துடாம பாத்துக்க. என்னோடச் சம்பளத்துலேயே, நீ சொல்ற ஸ்கூல்ல நம்ம பையன நல்லாப் படிக்க வைப்போம்சரி சரி, நீ இப்பவே பையனுக்குக் கேள்வி கேட்டாப் பதில் சொல்லக் கத்துக் கொடு. நீ விருப்பப்படற ஸ்கூல்ல இண்டர் வியூ வேற பண்ணுவாங்க. “குழந்தை இன்டலிஜெண்டா? இல்லியான்னு”. எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னாத்தான் இடம் கிடைக்கும். ஆமா? சொல்ல மறந்துட்டேன். எல்லாத்தையும் இங்கிலீஷ்லேயே சொல்லிக் குடு”.

ஒரு வழியாகக் குழந்தை ஸ்கூல் இண்டர்வியூவுக்குத் தயாராகி விட்டது.

what is your name?, what is your father name?, what are your hobbies?, tell the names of these toys, tell me some rymes, do you know how to kick the football?. டீச்சர் கேட்ட எல்லாக் கேள்விக்கும், குழந்த பட் பட்டுன்னுச் சொன்னப் பதிலக் கேட்டுப் பெற்றோர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.

அடுத்த நாள் ‘The child is not up to the level’ என்ற வாசகங்களோடு  ரிக்ரெட் கார்டு (Regret Card) பெற்றோர்களை வந்தடைகிறது.

இண்டர்வியூல கடைசியா, “what is your grandpa’s name?” டீச்சரம்மா கேட்டிருந்த அந்தக் கேள்விக்குப், பச்சிளங்குழந்தையின் பதில், 

எங்க அம்மா இந்தக் கேள்விக்கு மட்டும் எனக்குப் பதில் சொல்லித் தரலியேன்னுசொன்ன இந்தப் பதிலேரிக்ரெட் கார்டுக்கானக் காரணம். 

ஒரு பள்ளியில் குழந்தையைச் சேர்க்கும் தருணத்தில் பெற்றோர்களுக்கு இடையே நடக்கும் இந்த யதார்த்தமான உரையாடல், பள்ளிக்கூடங்களைப் பற்றிய பெற்றோர்களின் கனவு எவ்வாறு இருக்கும் என்பதை விளக்குகிறது. இந்த அனுபவ உரையாடலைச் சற்றுக் கூர்ந்து படித்தோமானால்! மனதில் பின்வரும் சிந்தனைகளும் கூடவே தொடர்ந்து வரும்.         

குழந்தைக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தோடு, மேலும் சில நல்ல பள்ளிகளைத் தேடும் படலத்தை ஒவ்வொரு பெற்றோர்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் எந்தப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்படுகிறதோ அது அடையாளம் காணப்படும் போது, குழந்தைகளுக்கு அங்கே இடம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்பதே உண்மை நிலை. இன்று சென்னையில் இயங்குகின்ற அனைத்துப் பள்ளிகளுமே, சிந்தனை முளைக்கும் பருவத்திலேயே (மூன்று வயது), நேர்காணல் (interview) என்ற முறையைக் கட்டாயமாக்கி, அதிக அளவில் வந்து குவியும் விண்ணப்பங்களை வடிகட்டுவதற்கு (Filtering technique), இந்த உத்தியைக் (Strategie) கையாளுகிறது என்றே சொல்லலாம். 

புத்தகங்களே எங்கள் குழந்தைகளைக் கிழிக்காதீர்கள்

என்று கவிஞர் அப்துல் ரஹ்மான் அவர்கள் சொன்னதைப் போலத், தரமற்ற பள்ளிக் கூடங்களிலிருந்து, வெறும் மதிப்பெண்களை மட்டும் எதிர்பார்க்கும் பெற்றோர்கள் தங்களையும் இது போல் வருத்திக் கொண்டு, ஏகப்பட்டப் புத்தகங்களையும் சுமக்க வைத்துக் குழந்தைகளையும் வருந்தச் செய்கிறார்கள் என்பது அனுபவம் மிகுந்த பெரியோர்களின் கருத்து.

குழந்தையின் எதிர்காலத்தை விட மற்ற பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், வீட்டிலே விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அள்ளி அடுக்காமல், பொழுதெல்லாம் மெகா சீரியல் பார்த்துக் கொண்டு, (சிந்திக்க விடாமல் எரிச்சலூட்டும், பக்கத்து வீட்டு ஹோம் தியேட்டரும், நம் வீட்டில் அலறிக் கொண்டிருக்கும் மெகா சீரியலும் கூட இந்தத் தொடரில் இரண்டு வார்த்தை எழுத உதவுகிறது) உலகத்தைத் தெரிந்துக் கொள்ளப் போகிறேன் என்று கண்ட கண்ட நாளிதழ்களிலும், ஒன்றுக்கும் உருப்படாத கதைப் புத்தகங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தாமல் இருப்பதை வைத்துக் கொண்டு, தமது குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமே பூதாகரமாகத் தெரியும் கண்ணாடியையும் கையில் வைத்துக் கொண்டு, யதார்த்தமான வாழ்க்கை வாழ்பவர்களும், ஆரம்பிப்பவர்களும் இன்றும் நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதையே, இந்த உரையாடல் விளக்குவதோடு, ஒரு பள்ளிக்கூடத்தின் தரத்தை அறிந்து கொள்வதற்கும், நல்ல பள்ளிக்கூடங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதையும் படம் பிடித்துப், படிப்பினையை ஊட்டுகிறது. 

சிறந்த மாணவனை உருவாக்குகின்ற பள்ளிகளைப், பெற்றோர்கள் விரும்புவது இயற்கை. அதற்குப் பள்ளிகளின் கல்வித் தரம் மிகவும் அவசியம் என்பதை நான்காவது இதழில் தொடருவோம்.

 

படத்திற்கு நன்றி: http://schooladmissions.hubpages.com/hub/Nursery-Admission-Interview-Questions-For-A-Child

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *