தமிழ்த்தேனீ                  

காலையிலிருந்தே கூட்டம் கூட்டமாய்க் காக்காய் கத்திக் கொண்டிருந்தது. பல வேலைக்கு நடுவே இந்தக் காக்காய்க் கூச்சலும் அவரை அலுப்பாக்கியது,  ஒரு நிமிடமும்  ஓய்வு கிடைக்காத அளவுக்கு வேலை.  நாற்காலியில் வந்து அப்பாடா என்று உட்கார்ந்து சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டார் ரங்கநாதன்.  உள்ளே இருந்து லக்ஷ்மி,  “ஏங்க, இந்தத் துளசி மாலையைக் கொஞ்சம் கட்டிக் குடுங்களேன். நம்ம வீட்டிலேயே இருக்கேன்னு பறிச்சுட்டேன்,  பேசாம கடையிலேயே துளசி மாலை வாங்கிண்டு வந்திருக்கலாம். வேலை நெக்கு வாங்கறது” என்றாள்.

“சரி, இதோ வரேன்” என்றபடி உள்ளே போய்த் துளசி மாலையைக் கட்ட ஆரம்பித்தார். இன்னிக்கு ஹனுமத் ஜெயந்தி. நேற்றே லிஸ்ட் போட்டுத் தேவையான எல்லாப் பொருளையும் வாங்கியாச்சு,  அப்பிடி இருந்தும் வீட்டிலே இருக்கற வேலையே அதிகமாத்தான் இருக்கு. ஒவ்வொரு பண்டிகைக்கும் வீட்டிலே இருக்கறவங்களுக்கு நிறைய வேலை சேந்து போறது. முறையாப் பக்தி ஸ்ரத்தையாச் செய்யணும்னு நெனைச்சாச் செஞ்சு தான் ஆகணும்” என்றபடி வேலையைத் தொடர்ந்தார் ரங்கநாதன்.

ஆயிற்று, வடைகள் செய்து அதை மாலையாகக் கோர்த்து அனுமன் படத்துக்குப் பக்தி ஸ்ரத்தையுடன் அணிவித்து மற்ற நைவேத்யங்களைப் பூஜை அறையில் கொண்டு போய் வைத்து ஹனுமன் சாலீசா ஸ்லோகத்தைச் சொல்லி முறையாகப் பூஜை செய்து எல்லாம் முடித்தாயிற்று.

“சரி, வாங்கோ. இந்தக் கற்பூர ஹாரத்தியை எல்லாப் பெருமாளுக்கும் காட்டிட்டு  எல்லாத்தையும் பகவான்  அனுக்ரஹம் பண்ணி அமிசைப் பண்ணிட்டு நமக்குப் ப்ரசாதமாக் குடுக்கும்படி அப்பிடியே மனசாலே வேண்டிக்கோங்கோ” என்றாள் லக்ஷ்மி.  அடுத்து உக்காந்து சாப்பிட வேண்டியதுதான்.

தோட்டத்துப் பக்கம் காத்தாலேருந்தே காக்காய்கள் ஏறுக்கு மாறாய்ப் பறந்து கொண்டு “கா.. கா” என்று ஒரே சத்தம் போட்டுக் கொண்டு இருந்தன.  “ஏங்க, காக்காய் இந்த மாதிரிக் கத்தினா விருந்தாளி யாரோ வராங்கன்னு அர்த்தம்” என்ற லக்ஷ்மி,  தலைவாழை இலை போட்டு முறையாகப் பரிமாறினாள் . பக்கத்தில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்து விட்டு, “ உக்காந்து சாப்பிடுங்கோ”  என்றாள்.

“நீயும் வந்து உக்காரு, நாம ரெண்டு பேர்தானே இருக்கோம், எல்லாத்தையும் இங்கே கொண்டு வந்து வைக்கறேன், போட்டுண்டு சாப்டலாம்” என்றபடி அவரும் லக்ஷ்மியும் உட்கார்ந்தார்கள். வாசலில் அழைப்பு மணி அடித்தது. போய்க் கதவைத் திறந்தார்,  வாசலில் அவருடைய ஆப்த நண்பர் ராமேசம். “அடேடே வாப்பா, ரொம்ப நாளாச்சு, சரியான நேரத்துக்குதான் வந்திருக்கே, போயிக் கை கால் அலம்பிண்டு வா சாப்டலாம்” என்றார் ரங்கநாதன்.

“நான் பரிமாறுறேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ” என்றபடிப் பறிமாறி விட்டு, “உள்ளே போயி குடிக்கத் தண்ணி கொண்டு வரேன்.” என்றபடி லக்ஷ்மி போனாள். இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்,  முறையான குசல விசாரிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர்,  பேச்சு ஆன்மீகத்தைப் பற்றித் திரும்பியது. “ஏண்டா ரங்கா, நாம பகவானுக்கு நைவேத்யம் செய்யறோமே, அதெல்லாம் பகவான் சாப்டுட்டு நமக்குப் ப்ரசாதமாத் திருப்பித் தரார்ன்னு நம்பறோம்,  ஆனா உண்மையாவே நாம நைவேத்யம் செய்யற உணவுப் பொருட்களிலே நாம நம்பறா மாதிரி பகவான் கொஞ்சம் சாப்டார்ன்னு வெச்சிக்கோ, எல்லாத்திலேயும் கொஞ்சம் அளவு குறையும் இல்லையா! அப்பிடிக் குறைஞ்சா நாம பகவானுக்கு நைவேத்யம் செய்வோமா?”  என்றார் ராமேஷம்.

“அதெல்லாம் மனசைப் பொறுத்து இருக்கு,  உண்மையாவே பகவான் சாப்பிடறதாதான் ஐதீகம், உண்மையாவே பகவான் சாப்ட்டா நான் சந்தோஷப்படுவேன்.” என்றார் ரங்கநாதன். “ஏங்க, இங்கே வாங்களேன் தோட்டத்துப் பக்கம்” என்றாள் ல‌ஷ்மி. சாப்பாட்டை வைத்து விட்டு ஓடினார் ரங்கநாதன். “இங்கே பாருங்கோ, ஹனுமத் ஜெயந்தியும் அதுவுமா குரங்கு வந்திருக்கு,  ஹனுமானே நேர்லே வந்தா மாதிரி இருக்கு” என்றாள் லக்ஷ்மி. “அட ஆமாம். சரி, ஒரு தட்டிலே கொஞ்சம் சாதம், வடை எல்லாத்தையும் வெச்சு எடுத்துண்டு வா குடுக்கலாம்” என்றார் ரங்கநாதன். லக்ஷ்மியும் ஒரு தட்டில் எல்லாவற்றையும் வெச்சு எடுத்துக் கொண்டு பின் பக்கம் போனாள்.

அங்கே வந்த ராமேஷம், “டேய் ரங்கா, நாயைப் பார்த்தா பைரவர்,  மீனைப் பார்த்தா மச்சாவதாரம்,  ஆமையைப் பார்த்தா கூர்மாவதாரம்,  பன்றியைப் பார்த்தா வராக மூர்த்தி, குதிரையைப் பார்த்தா ஹயக்ரீவர்,  கருடனைப் பார்த்தா நாராயணோட வாகனம்,  குரங்கைப் பார்த்தா ஹனுமன் அப்பிடீன்னு நமக்கெல்லாம் மனசிலே படிஞ்சு போயிருக்கு,  ஆனா இயல்பான வாழ்க்கையிலே அதெல்லாத்தையும் அப்பிடியே நாம மதிக்கறோமான்னு கேட்டா இல்லைங்கறதுதான் என் பதில். என்ன செய்யறது அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது.

“அதுனாலே வேண்டாம். இப்பிடிக் குடுக்காதீங்கோ. இந்தக் குரங்குக்கு, ஒரு நாள் குடுத்துப் பழக்கம் பண்ணியாச்சுன்னா தினமும் நிறையக் குரங்கு வரும், கதவு திறந்திருந்தா வீட்டுக்குள்ளேயே வந்துடும்”  என்றார். “அட ஆமாம். ராமேஷம் சொல்றதும் சரிதான். ஏற்கெனவே மரத்திலே ஒரு மாங்காயை விடறதில்லே.  செடியெல்லாம் பிச்சுப் போடறது”  என்றார் ரங்கநாதன்.

“அதுனாலேதான் சொல்றேன், எல்லாக் குரங்கும் ஹனுமன் இல்லடா.  இதெல்லாம் குடுக்காதே, உள்ளேயே கொண்டு போயி வெச்சிடு” என்றார் ராமேஷம். “ நீ சொல்றதும் சரிதான்” என்று லக்ஷ்மியிடமிருந்த தட்டை வாங்கிக் கொண்டு உள்ளே கொண்டு போய் வைத்த ரங்கன், “லக்ஷ்மி,  புழக்கடைக் கதவைத் தாள் போட்டுண்டு வா .ஆன்மீகத்துக்கும்  ஆழ்மீகத்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கு” என்றார்.

 

படத்திற்கு நன்றி: http://blog.travelpod.com/travel-photo/suenson_taylors/1/1278726890/a-city-monkey-eating-mango.jpg/tpod.html

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஆழ்மீகம்

  1. ஆன்மிகம் அருமை.

    இப்படித்தான் சிலர் புதிதாய் நகைகள் வாங்கி வந்த பின் அவற்றை விட்டில் உள்ள ஸ்வாமி படத்துக்கோ உருவச் சிலைகளுக்கோ அணிவிப்பர்.  அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று ஸ்வாமிக்குப் போட்டு விட்டுத் தாருங்கள் என குருக்களிடம் கொடுப்பார்கள்.  இறைவன் அவற்றை விரும்பி உண்மையிலேயே  அணிவானாகி அப்படிச் செய்வார்களா?

  2. வேகம்.. குதிரை வேகம்…எழுத்தில்…படிப்பவர் ஓடித்தான் படிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் அந்த மூன்றாவது பாராவை மறுபடியும் ஒரு தரம் படியுங்களேன். எத்துனை செயல்கள், ஒரு வாக்கியத்தில்.. நன்கு நிதானமாய் அனுபவித்து படிக்க வேண்டிய கதையில் ஏன் இந்த வேகம்?

  3. திரு இளங்கோ நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லைமீண்டும் ஒரு முறை தெளிவாகச் சொல்லுங்களேன்

    rkc1947@gmail.com

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

  4. ஆழ்மீக, ஆன்மீகப் புதிர்கள் அவிழ்க்க முடியாதவை

    . அப்படியே அவிழ்த்தாலும் அனைவராலும் ஒப்புக்கொள்ளாமல் போய்விடும் அபாயம் உண்டு. ஏனென்றால் ஆன்மீகமும் ,ஆழ்மீகமும் அனுபவித்து உள்ளுக்குள்ளேயே உணரும் புதிர்கள்

    அன்புடன் தமிழ்த்தேனீ

  5. குரங்கு தினம் தினம் வந்ததெனில் புதுமை ஏதும் இல்லைதான். ஒரு நாள் உணவு கொடுத்தால் அடுத்த நாளும் வருவதோடு வீட்டுக்குள்ளும் நுழையும். சமாளிக்க முடியாது.  ராமேசம் யதார்த்தவாதியாகத் தெரிகிறார்.

    நிவேதனம் என்பதே நாம் காட்டுவது தானே;  உன் பெயரைச் சொல்லி இத்தனை எல்லாம் பண்ணி இருக்கோம். நாங்க தான் சாப்பிடப் போறோம்;  அதனால் இந்த உணவின் மூலம் எங்களுக்கு நல்ல புத்தியும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுனு வேண்டிக்கிறதுக்குத் தானே நிவேதனமே செய்யறோம்.  இறைவன் அருட்பார்வையால் நாம் சமைக்கும் உணவு பிரசாதமாக ஆகிவிடுகிறது. 

    மேலும் இது நம்மால் சம்பாதித்தது என்ற கர்வமும் வராமல் இறைவன் அளித்தது என்ற உணர்வோடும் இருப்போம்.  ஆக நிவேதனம் என்பதின் பொருளே சமைத்தவற்றை இறைவனுக்குக் காட்டிவிட்டு ,எல்லாமும் நீ அளித்த பிச்சை; அதைத் தான் நாங்க சாப்பிடறோம் என்பது தான்.  இல்லையா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *