ஸ்ரவாணி

மாந்தோப்பிற்கு ஒத்தையில் வா என
மறைவாய் சேதி சொல்லிப் போனவரே
ஓடோடி நான் வந்தேன் -தோப்பில்
மாங்காயும் இல்லை மன்மதரும் இல்லை
மங்கை நான் தனிமரமாய்த்
தான் நின்றேன் …..

ஆத்தங்கரைப் பக்கம் நீராடும்
சாக்கில் வா விஷயம் ஒண்ணு காத்திருக்கு
என சொல்லிப் போனவரே
மஞ்சத் தேய்ச்சுக் குளிச்சாச்சு
ஆத்துல மீனையும் காணல
கள்வரையும் தான் காணல ….

சந்தைப் பக்கம் சந்தடி
இல்லாம நீ மட்டும் தனியா வா
எனக் கட்டளை இட்டுப் போனவரே
வளையல் வாங்கியாச்சு சுத்தி
வளைச்சிப் பேசியவரே சுத்துமுத்தும்
காணலையே ….

என்னைத் தான் ஏமாற்ற
எத்தனை நாளாய் எண்ணம்
நம்பி நம்பி மோசம் போனேனே
கண்ணும் மனசும் கலங்குதே
ஏனிந்த கண்ணாமூச்சி
விடை சொல்லிப் போவீரோ ?

தோப்புக்குத் தான் துள்ளி வந்தவளே
ஆத்துக்குத் தான் அவசரமாய் வந்தவளே
சந்தைக்குத் தான் சட்டுன்னு வந்தவளே
வேறு யாரும் அழைத்தால் இப்படி
நீ வருவாயோ சம்மதம் தான்
தருவாயோ சொல்லடி என் பைங்கிளியே ….

என் மனத்தில் மலராய் வாசம் வீசுபவளே
இந்த மல்லிகைச் சரம் சூடிக் கொள்ளடி
என் கரம் பற்ற சம்மதம் என்றால்
இந்த வளையல் பூட்டிக் கொள்ளடி
இனிப்பான காதல் சேதி காதில் சொன்னால்
இந்த மாங்கனி உனக்குத் தானே மானே …

மல்லிகையும் மணக்குது மச்சான் மனசும்
புரியுது கையில் வளையல் கலகலக்குது
மாங்கனியும் தேனாய் இனிக்குது
மாரியம்மன் கோவில் தான் நாமும்
சென்றே ஆசி பெற்று வருவோம்
வா என் காதலனே !

 http://sravanitamilkavithaigal.blogspot.in/

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க