திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு

அன்பு நண்பர்களே,

சிங்கப்பூரில் தற்சமயம் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு விஜயகுமார் உலக அளவில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.கல்லிலே கலை வண்ணம் கண்டோம்’ எனும் பெயரில் அருமையான வலைப் பூவை நடத்தி வருபவர். காணக் கிடைக்காத சிற்பங்களையும், அறிவறியாத சிற்பங்களையும் இந்த வலைப் பூவின் மூலம் மலரவிட்டு அந்தச் சிற்பங்களின் வளமான சுகமான வாசனையைப் பரவச் செய்தவர். கோவை செம்மொழி மாநாட்டில் இவரது சிற்ப்ங்களைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை வாசிப்பு பலரது பாராட்டைப் பெற்றது.

நம் வல்லமைக்காக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

 

சிங்கை விஜய குமார்

வெளி நாட்டில் வேலை என்றவுடனே `மார்க்கெட்டில் நம்ம பிராண்ட் பெட்ரோல் விலை மள மளவென ஏறுவது போல’ சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ வேலை இல்லை . சோழர் காலத்திலே புலிக்கொடி பறந்த தீவு – மாலத்தீவு . அங்கே ஒரு சிறிய ‘ கார்மெண்ட்ஸ் ‘ தொழிற்சாலையில் மேலாளர் வேலை. . மாலத்தீவை இது வரை நேஷனல் ஜியோக்ராபிக் புத்தகத்தில் படங்களில் பார்த்தது தான் . அப்போது டிஸ்கவரி சேனலும் இல்லை, நேஷனல் ஜியோக்ராபிக் சேனலும் இல்லை. அதனால் பெரிய எதிர்ப்பார்ப்புகள் ஒன்றும் இல்லை இருந்தாலும் நண்பர்கள் அன்புத் தொல்லை – புறப்படுவதற்கு முந்தைய நாள் நண்பர்களுடன் எங்கள் வாடிக்கையான எலியட்ஸ் பீச் குட்டிச் சுவரில் சுண்டல் வாங்கி மேலும் ஒரு மாலையை வெட்டியாகக் கழித்தோம். அப்பா அம்மாவைப் பிரிவதை விட நண்பர்களை விட்டுப் பிரிவதில் தான் அதிக வருத்தம். ஒருவேளை இங்கே இருந்தால் குட்டிச் சுவரிலேயே மகன் குதிரை ஓட்டியே காலம் கழித்து விடுவானோ என்ற பயத்தில், சாதாரணப் பிரிவுக்கெல்லாம் அழும் அம்மா கூட இந்த முறை உணர்ச்சிவசப்படவில்லை.

திருவனந்தபுரம் விமான நிலையம். முதல் வெளி நாட்டுப் பயணம். ’ஜோ பாக்ஸ்சர் உள்ளாடை ஆர்டருக்கு ரெண்டு கார்டன் நாடா-லைன் அர்ஜெண்டாக தேவை, அதனால் வரும்போது அதையும் எடுத்து வா’ என்று தகவல் வந்தது. திருப்பூர் நகரத்தில் இருந்து பஸ்ஸில் அந்த பார்சல் வந்தது. செக்-இன் பண்ணி விடு என்றார்கள். அவ்வளவு எளிதாக முடியுமா? அம்மாவை விட, நமக்கு விடை கொடுக்க இந்தியன் ஏர்லைன்ஸ் விமான அலுவல் பெண்மணி மிகவும் சிரமப்பட்டார். மாலத்தீவுக்கு வேலை பார்க்கக் கூட ஆட்கள் இங்கிருந்து போவதில் அவருக்கு அப்படி என்ன ஒரு அவநம்பிக்கையோ? திரும்பத் திரும்ப கடவுச் சீட்டை சோதனை செய்து, பிறகு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் உட்பட எல்லாவற்றையும் மனப்பாடம் செய்தார். முடிவில் நானே ”உங்களுக்கு அப்படி என்ன கவலை? அங்கே நுழைய விடவில்லை என்றால் மீண்டும் இதே விமானத்தில் திரும்ப வந்துவிடுகிறேன்” என்று வாதாடியும் அந்த அம்மணி அசரவில்லை. வரிசையில் அடுத்து நிற்பவர் பலர் நம்மை ’கஜாவுடன் கள்ளத்தோணி’யில் செல்பவனைப் போல பார்ப்பது வேறு வெறுப்பேற்றியது. அதில் இருவர் சற்று கருணையுடன் வேறு பாவமாக பார்த்தனர். அவர்கள் கைப்பையில் பல கொத்தமல்லிக்கட்டுகள், எலுமிச்சம் பழம் போன்றவை தெரிந்தன – பிறகு தான் புரிந்தது – சிங்கப்பூரில் இருந்து எலேக்ட்ரானிக் ஐட்டம் அள்ளிக் கொண்டு வரும் குருவிகள் போல இவர்கள் மாலத்தீவுக்கு காய்கறி எடுத்துச் செல்லும் குருவிகள் என்று. முடிவாக விமானத்தின் கதவை அடைக்கும் முன்னர் அந்த ஸ்ட்ரிக்ட் ஆப்பிசரம்மா என்னை தாய் மண்ணை விட்டு வெளியேற அனுமதி கொடுத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார்.

சிறிய பயணம் தான். புண்ணியவதி புண்ணியத்தில் சன்னல் சீட்டு இல்லை. விரைவிலேயே விமானம் தரை இறங்க ஆயத்தமானது. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை தான். தரையைக் காணவில்லை – என் பக்கத்தே அமர்ந்திருந்த பயணியாருக்கும் இந்தப் பயணம் முதல் முறை போல. அவரும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரையும் தாண்டி கழுத்தை வளைத்து நானும் பார்த்தேன். எங்கும் ஒரே நீல நிறம். அதை வெறும் நீல நிறம் என்று சொல்லி விட முடியாது. ஹீரோ ஹீரோயின் காதல் கொண்டவுடன் கட் செய்து சாங் காட்சிக்கு லொகேஷன் மாறுமே – அதே போல ஒரு அற்புத வண்ணம். ஆனால் அதை ரசிக்க முடியவில்லை! விமானம் மிகவும் கீழே வந்துவிட்டது, எவ்வளவு எட்டி பார்த்தும் கண்ணுக்கு தரை தென்படவில்லை! வயிறு ஒரு கலக்கு கலக்கியது. சுதாரித்துக்கொண்டு சீட் பெல்ட்டை இன்னும் கொஞ்சம் லூஸ் பண்ணிக் கொண்டு எட்டிப் பார்த்தேன். கடல், கடலில் படகு, படகில் மனிதர்கள் அனைவரும் தெரிகிறார்கள் – தரை, நிலம் எங்குமே கண்ணுக்கு தெரியவில்லை. விமானம் தண்ணீரில் தான் இறங்கப் போகிறது என்று முடிவே ஆகிவிட்டது. நெற்றியில் வியர்வைத் துளிகள் வெளிவர மீண்டும் எட்டிப் பார்த்தேன். ஒரு பக்கம் ஒரு சிறு தீவு , நிறைய தென்னை மரங்கள் . அந்தப் பக்கம் இன்னொரு தீவு – அதில் சில கட்டடங்கள் தெரிந்தன. ஆனால் விமானமோ இரு தீவுகளையும் விட்டுவிட்டு நடுவில் கடலில் இறங்கியது. ஏறத்தாழ! அங்கே பெரிய தீவுகள் இல்லையாம். அதனால் விமான நிலையம் ஒரு தனி தீவு, அதுவும் செயற்கையாக கடலை தூர்த்து ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் கடைசி நொடியில் அந்த ரன்வேயில் இறங்க கை தானாக நெஞ்சுக்கு போனது.

வெளியில் வந்த உடன் ஒரே வெளிச்சம். வெள்ளை வெளேர் என சூரிய ஒளி. இதற்குத்தான் வெள்ளைக்காரர் அனைவரும் கூலிங் க்ளாஸுடன் அலைகின்றனரோ? பெரிய கூட்டம் . எங்கும் சுற்றுலா பயணியர் – ஐரோப்பியர், ஜப்பானியர் என்று எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்தனர். ஒரு வழியாக இம்மிக்ரேஷன் முடிந்து எனது பைகளைக் கண்டு பிடித்தேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக அடுத்த பிரச்சனை! கழிவு அறை இன்னொரு பக்கத்தில் இருந்தது. உள்ளே செல்லும் முன்னரே ஆச்சரியம். பலகை படித்து தான் அந்த அறையைக் கண்டுபிடிக்க முடியும். இதுவரை பொதுக் கழிவறையை நம் நாட்டில் மூக்கை கொண்டே கண்டு பிடிக்கும் நமக்கு இந்த அனுபவம் புதுமையாகவே இருந்தது. கையில் பையுடன் உள்ளே சென்ற போது அனைவரும் என்னையே பார்ப்பது போல ஒரு உணர்வு. கண்ணாடியில் பார்த்த போது தான் புரிந்தது. அம்மா ஆசையுடன் ஆஞ்சநேயர் குங்குமம் இட்டு விட்டது இன்னும் அழியாமல் இருந்தது. தீவில் இஸ்லாமிய ஆட்சி என்பதும் நமது நாட்டின் மத சார்பற்ற சுதந்திரத்தின் மதிப்பும் நன்றாகவே புரிந்தது. வெளியில் வந்து சுங்கச் சோதனைக்கு லைனில் நின்றேன். மீண்டும் அதே உணர்வு – காவல் காக்கும் அனைவரும் என்னையே பார்ப்பது போல. சுற்றுமுற்றும் பார்த்தேன். பையை ஸ்கேன் செய்ய கருவியில் போடச் சொன்னார்கள். அவ்வளவுதான், திடீரென ஒரே களேபரம். சுற்றி வளைத்து நான்கு சுங்கத்துறையினர் வீடு கட்டினர்.

பையில் அப்படி எதைத்தான் கண்டுபிடித்தனர் என்று பதறினேன். அம்மா கொடுத்த உப்பு நாரத்தங்காயோ? பருப்புப் பொடியோ தான் இருக்கும் என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்தேன்.. பிரச்சனை என் பையில் இல்லை, பார்சல் வந்த கார்ட்டன் – பேக்கட்டில். மீண்டும் நெஞ்சு படக் படக் என அடிக்க துவங்கியது. யாரோ கொடுத்த பை, இன்னும் வேலைக்கே சேர வில்லை. இவர்களை நம்பி அந்த பேக்கட்டில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல் எடுத்து வந்து விட்டோமே என்று ஓவர் டிரைவில் வேலை செய்த அறிவு அறிவுரைத்தது. திரைப்பட வில்லனைபோல ஒரு பெரிய ஆப்பிசர் வந்தான். இஸ்லாமிய சட்டத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்று தகவல் எனக்கு சம்பந்தமே இல்லாமல் தந்தான். கையைப் பிடித்து அந்த மானிடர் பார்க்க வைத்தான். சுரக் என்று பட்டது. கார்ட்டனுக்குள் (பேக்கட்டில்) சிறு சிறு சதுரங்கள். ஒவ்வொரு சதுரத்தின் நடுவிலும் ஒரு சிறிய டப்பா போல எதோ. போச்சுடா , நம் தலையில் எங்கோ ஒரு தீவில் களி தின்றே தீர வேண்டும் என்று எழுதி உள்ளது என்று நினைக்கும்போது, வில்லன் ஆப்பிசெர் சொன்னது நினைவுக்கு வந்தது. அய்யோ, இன்னும் உலகில் அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளதே என்று கதறும் முன்னர், அவனே தன் அருகில் வர எனக்கு சைகை செய்தான்.

உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டான். ஜட்டி நாடா என்றேன். கார்ட்டனை திறந்து சோதனை செய்ய என்னிடம் ஒப்புதல் கேட்டான். தலையை ஆட்டினேன். அடுத்த ஐந்து நிமிடங்கள் என் வாழ்வின் திசையை மட்டும் அல்ல விரிவையும் நிர்ணயம் செய்யும் என்ற நினைப்பு, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆன்ட்டி சொன்ன போதே!!

இரு காவலர்கள் வந்தனர். கார்ட்டனை பிரித்து உள்ளே இருந்த ஒரு நாடா கண்டை மிகவும் மெதுவாக ஒருவன் எடுத்தான். அதன் நுனியை மற்றொருவன் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கத் துவங்கினான். திருவிளையாடல் படத்தில் நான் அசைந்தால் அசையும் பாடலில் வருவது போல எனக்கு மற்ற அனைத்துப் பொருட்களும் நின்றது போல ஒரு உணர்வு. நாடாக்கண்டு சிறிதாகிக்கொண்டே போனது. இன்னும் ரெண்டு அடி நடந்தால் உள்ளே இருப்பது தெரிந்து விடும்.

டென்ஷன் தாங்க முடியவில்லை, கண்களை மூடிக்கொண்டு அன்றுவரை கணக்குப் பாட ரிசல்ட் வரும்போது கூட வேண்டாத சாமிகள் அத்தனை பேரையும் வேண்டினேன். லப் டப் டப் என்று மேஜையில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தேன். நாடாவை பிடித்திருந்த இரு காவலர்கள் முகத்திலும் பயங்கரக் கோபம் தெரிந்தது. பதறினேன். வில்லன் ஆப்பிசர் திடீரென கல கல என்று சிரித்துக் கொண்டே என் முதுகைத் தட்டினான். இன்னும் பயம் போக வில்லை – மெதுவாகப் பார்வையை மேஜைக்கு செலுத்தினேன். அங்கே ஒரு கருங்கல் !!! திருப்பூர்க்காரன் நாடாக்கண்டைச் சுற்ற நல்ல சதுரமான கருங்கல்லைத் தேடிப் பிடித்து கட்டி இருக்கான்.

அது ஸ்கேன் கருவியில் சதுர சதுர பெட்டி போல ஒவ்வொரு கண்டின் நடுவிலும் தெரிய இந்தக் கூத்து. விட்டா போதுமடா சாமி என்று ஒரு வழியாக விமான நிலையத்தின் வெளியில் வந்தால் – நம்ம ஊரில் டாக்ஸி லைன் மாதிரி அங்கே படகு லைன். விமான நிலையம் மட்டும் தான் அந்தத் தீவில். அங்கிருந்து படகில் தான் அடுத்த தீவுக்குச் செல்ல வேண்டும். அது தான் மாலே தீவு. தலைநகரம். பத்து நிமிட படகு பயணம் தான். ஆனால் முன்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு நொடியில் மறக்க அடித்த பயணம். இயற்கை மனிதனின் கைபடாமல் இருந்தால் எத்தனை அழகாக இருக்கும் என்பதை முதல் முறை நேராக பார்த்தேன். பகலில் சூரிய ஒளி நூறு அடிக்கு மேலே கடலினுள் சென்று பிரகாசிக்கும் அளவுக்குத் தெள்ளத் தெளிந்த நீர்.

படகு கரைக்கு வந்தது. இன்னும் அருகில் செல்லும் என்று காத்து இருந்த போது, கரையில் இருந்து ஒரு சிறிய பலகையை நடுவில் போட்டனர். படகில் இருந்த அனைவரும் அதில் ஏதோ சாலையை கிராஸ் செய்வது போல அசால்டாக கிராஸ் செய்தனர். போதாக் குறைக்கு கரையில் இருந்த ஒருவர் தனது பைக்கை பலகையில் ஓட்டிக் கொண்டு இந்தப் பக்கம் வந்தார். கைப்பை , பெட்டி, கார்ட்டன் என்று அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தயங்கித் தயங்கி ஒரு வழியாக மாலத்தீவின் தலைநகரில் – தாய் மண்ணை விட்டு முதன் முதலில் வெளி நாட்டு மண்ணில் கால் வைத்தேன். ஆனால் இது மணல் போல இல்லையே? பவளம் – கோரல் தீவு என்பதால் அங்கே மண்ணே கிடையாது. எங்கும் வெள்ளை நிற கோரல் பவுடர் தான்.

 

 

 

தொடரும்

படங்களுக்கு நன்றி :

http://mostbeautifullisland.blogspot.in/2010/12/worlds-beautiful-islands-maldives.html

 

4 thoughts on “திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு

  1. சிங்கை விஜயகுமார், இந்த எழுத்தாற்றலை இவ்வளவு காலம் எங்கே ஒளித்து வைத்திருந்தார்? யாருடைய பரிசோதனையும் எந்தக் கட்டணமும் இல்லாமல், மாலத் தீவுக்கு அவருடனே பயணித்த உணர்வுதான் தோன்றியது.

    அம்மா வைத்த ஆஞ்சநேயர் குங்குமம், அழியாமல் இருந்தது, அருமையான காட்சி. கலக்குங்க விஜய்! தொடர்ந்து எழுதுங்க!

  2. யானிடுவது பட்டியல். பொறுத்தாள்க:அண்ணா கண்ணனுக்கு முன்னாலேயே தெரியும். இப்படி க்யூ தாண்டலாமோ?‘…சாதாரணப் பிரிவுக்கெல்லாம் அழும் அம்மா கூட இந்த முறை உணர்ச்சிவசப்படவில்லை…’=> அம்மாக்கோண்டு என்று தெரிகிறது.‘…ஹீரோ ஹீரோயின் காதல் கொண்டவுடன் கட் செய்து சாங் காட்சிக்கு லொகேஷன் மாறுமே – அதே போல => புரியறது. ஆனால், சரி. விடுங்க.‘…அம்மா ஆசையுடன் ஆஞ்சநேயர் குங்குமம் இட்டு விட்டது இன்னும் அழியாமல் இருந்தது…’=> அது தான் உயிரை காப்பாற்றியது.அதெல்லாம் சரி, விஜய்! உமக்கு எப்படி நேரம் கிடைத்தது? 
    எஞ்சாய்டு.இன்னும் கேட்போன்

  3. அற்புதம் விஜய், அசத்தல் கட்டுரை…தொடரட்டும் காத்திருக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published.