கனமலர்க் கொன்றையும் புனமலர் மாலையும்

வே.முத்துக்குமார் 

சண்முகம் மாமா இறந்த செய்தியை முதலில் அப்பாவிடம் சொன்னது காந்தி அக்கா வீட்டு அத்தான் தான். எதுவும் பேசாமல் அப்பா அமைதியாக இருக்க கையிலிருந்த அன்றைய தினசரியை விரித்துப் பிடித்தவாறு சொன்னார்.

‘மாணிக்க வாசகர் மன்றத்துலேர்ந்து திருவாசக முற்றோதுதலுக்காக திருநெல்வேலியிலிருந்து பன்னிரெண்டு பேரு தஞ்சாவூருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போயிருக்காங்க. அதுல நம்ம சண்முகம் அண்ணாச்சியும் கூட போயிருக்காங்க. முற்றோதுதலை முடிச்சுகிட்டு ராத்திரி ஏழு மணிக்கு அங்கேயிருந்து கிளம்பியிருக்காங்க. அதிகாலையில கங்கைகொண்டான் செக்போஸ்ட் பக்கத்துல வரும் போது இவங்க வந்த வேன் விபத்துக்குள்ளாகியிருக்கு. டிரைவர் கொஞ்சம் கண் அசந்துட்டானாம். எதிர்த்தாப்புல வந்த லாரி மேல வேன் மோதியிருக்கு. ஆறு பேரூ ஸ்பாட்டூலேயே இறந்து போயிட்டாங்களாம். ஆறு பேரை மட்டும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. பேப்பர்ல போட்டோவோட விவரமாப் போட்டிருக்கான் பாருங்க’

தினசரியை அத்தானிடமிருந்து அப்பா வாங்கினாரே தவிர விரித்தெல்லாம் பார்க்கவில்லை. அப்படியே அமர்ந்த நிலையில் அமைதியாக இருந்தார்.

சண்முகம் மாமாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பாபநாசம் கோவிலும், பிரகாரங்களில் சுற்றித் திரிகிற குரங்குகளும் தாம் நினைவுக்கு வரும். கோவிலுக்கு வருகிற எல்லோரும் முன்பக்கமுள்ள கல்மண்டபப் படித்துறையில் தான் குளிப்பார்கள். சண்முகம் மாமாவோ எப்போதும் கோவிலுக்குத் தெற்குப் பக்கமுள்ள படித்துறையில் குளிப்பார். ‘அங்கனயே குளிக்க வேண்டியது தானே சண்முகம்’ என்று அப்பா ஒருமுறை சொன்ன போது, ‘இங்கன தண்ணி ஓட்டம் கொஞ்சம் நல்லா இருக்கும். இழுப்பு ஜாஸ்தியா இருக்கும்ன்னு ஒரு பயலும் குளிக்க வரமாட்டான். நாம நிம்மதியாக் குளிக்கலாம் அண்ணாச்சி’ என்றார்.

கோவிலுக்குள் செல்லும் முன்பு இரண்டு சீப்புப் பழமும், நான்கைந்து கார்த்திகைப் பொரி பாக்கெட்டுகளும் வாங்கி வைத்துக் கொள்வார் மாமா. பாபநாசர் சன்னதியில் பாபநாசரைத் தரிசனம் பண்ணி விட்டு அப்படியே திரும்பி வந்து நின்ற வாக்கில் உள்பிரகாரத் தூண்களின் மேல்பகுதியில் மாட்டப்பட்டிருக்கும் நமச்சிவாயக் கவிராயரின் வாழ்க்கை வரலாற்று ஓவியங்களைப் பார்ப்பார். உலகம்மனுக்கு இரவு ஆராதனை செய்து விட்டு நமச்சிவாயக் கவிராயர் பாடிக் கொண்டே வீடு திரும்பும் போது அவருடைய பாடலில் மயங்கி வீடு வரையில் பின்னாடியே வந்திருக்கிறாள் உலகம்மன். இதையறியாத கவிராயர் வீட்டுக்குள் நுழையும் முன்பு வாசலில் நின்று கொண்டு வாயில் குதைத்துக் கொண்டிருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பியிருக்கிறார்.

மறுநாள் காலை கோவில் நடையைத் திறந்த போது உலகம்மனின் வெண்பட்டுச் சேலையில் தெறித்திருந்த வெற்றிலை எச்சிலைப் பார்த்த பிறகு தான் உலகம்மன் தன் பின்னால் வந்த கதை கவிராயருக்கு தெரிய வந்திருக்கிறது. ‘என் பாடலில் மனமுருகி பக்கத்துணையாக வீடு வரையில் வந்தாயோ தேவி’ என உணர்ச்சிமயமாகி உலகம்மனை நோக்கிச் சில கவிகளைப் பாடுகிறார் கவிராயர். இந்தக் காட்சியை விளக்குகின்ற ஓவியத்தை பார்க்கும் போது மட்டும் மாமாவின் முகம் ஆழ்நிலை தியானத்தின் உச்சகட்ட சாந்தமாக இருக்கும். அந்தக் கணத்தில்   ‘வாழ்ந்தா இப்படி ஒரு மனுஷன் வாழ்ந்த வாழ்க்கையை வாழணும்’ என்பது தான் மாமாவின் மனதுக்குள் ஒலிக்கும் குரலாக இருக்கும்.

பாபநாசர் சன்னதியைக் காட்டிலும் உலகம்மன் சன்னதியில் அமர்வதற்கே அதிகம் பிரியப்படுவார் மாமா. அதுவும் உலகம்மன் சன்னதிக்கு இடப்புறமுள்ள பைரவருக்குத் தெற்கேயுள்ள வாசலுக்கருகில் அமர்ந்து கொள்வார். உலகம்மனுக்கு நேரெதிராக அமர்ந்து தேவாரம் பாடுகிற தேசிகரின் குரலின் மீது மாமாவிற்கு மிகுந்த லயிப்பு உண்டு. அவருக்குப் பின்புறமிருந்து அவருடைய பாடலை ரசித்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில் கண்களை மூடிக் கொண்டு இரு கைகளையும் புடதியில் கட்டிக் கொண்டு மெய்மறந்து விடுவார்.

அப்பாவின் நண்பர் அடிக்கடி சொல்வார். ‘அண்ணாச்சி, தேசிகருக்கு நாக்குல சரஸ்வதி குடியிருக்கிறத பாத்தீயளா. ஏதாவதொரு விஷேசத்தன்னைக்கு நம்ம வீட்டுக்கு அவரக் கூட்டிட்டு வந்து பாட வச்சு ஏகாந்த நிலையை அனுபவிக்கணும்’

தேசிகர் பாடுவதை நிறுத்தி விட்டுச் சுருதிப் பெட்டியை உறையைப் போட்டு மூடும் வரையில் சன்னதியில் அமர்ந்திருக்கிற மாமா பின்பு அங்கிருந்து எழும்பி வெளிப்பிரகாரம் வந்துவிடுவார். வெளிப்பிரகாரத்தின் மூலையிலிருக்கிற வன்னி விநாயகருக்கும், புலத்தியார் சமாதிக்கும் இடையிலிருக்கிற நீண்ட கல்திண்டில் அமர்ந்து கொண்டு கையில் கொண்டு வந்த பையைத் திறந்து பழச்சீப்புகளை எடுப்பார். கோபுரத்திலும், பலா மரங்களிலும் ஒய்யாரமாக ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிற குரங்குகள் மாமாவை நோக்கி ஓடி வரும். முதலில் பழங்களைக் குரங்குகளுக்குக் கொடுப்பார். பிறகு பொரி பாக்கெட்டைப் பிரித்து கையில் குத்தாக அள்ளி வைத்துக் கொள்வார். குரங்குகள் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு கைகளிலிருந்து பொரிகளை அள்ளித் திங்க ஆரம்பிக்கும்.

பொரி காலியானவுடன் சில குரங்குகள் ஓடி விடும். ஒன்றிரெண்டு குரங்குகள் அப்படியே அமர்ந்து கொள்ளும். சில குரங்குகள் மாமாவின் மடியிலேறி அமர்ந்து கொண்டு அவரது சட்டைப் பையைத் துழாவிப் பார்க்கும். பேனாவை உருவும். மூக்குக் கண்ணாடியை எடுத்துப் பார்க்கும். குரங்கின் கையைப் மெலிதாகப் பிடித்துக் கொண்டு மாமா ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்.

ஒருமுறை மாமாவோடு பாபநாசம் சென்றிருந்த போது அவரது இந்தப் பழக்க வழக்கத்தைப் பீதியோடு பார்த்தேன். வீடு திரும்புகையில் பஸ் அகஸ்தியர்பட்டி அருகில் வரும்போது கேட்டேன்.

‘உங்களுக்குக் குரங்கு பாஷையெல்லாம் தெரியுமா மாமா’ .

‘குரங்குக்குன்னு தனி பாஷையெல்லாம் கெடையாதுடே. மனுஷப்பய நம்ம பாஷை தான் அதுக்கும். என்ன ஒண்ணு. நாம பேசுறதக் கேட்டுக்கிட்டே இருக்கும், பதிலொன்னும் பேசாம … ‘

‘குரங்கோட கையைப் பிடிச்சுகிட்டு பேசுறீங்களே. அது உங்களக் கடிக்காதா மாமா … ‘

‘அதேண்டே நம்மளக் கடிக்குது, நாம அதையொண்ணும் பண்ணாத போது. ஆனா ஒண்ணுடே. குரங்குட்ட விளையாடும் போது கையை மட்டும் ஓங்கிடக் கூடாது’

அப்போது டூ இன் ஒன் டேப் ரிக்கார்டர் ஒன்று எங்கள் வீட்டில் இருந்தது. கண்ணதாசனின் பழைய பாடல்களை டேப் ரிக்கார்டரில் சன்னமாக ஒலிக்க விட்டு, அப்பாவும் மாமாவும் நேரம் தொலைவது தெரியாமல் விவாதிப்பார்கள். ‘பாக்கியலெட்சுமி ‘ படத்தில் வருகிற ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலில் வருகின்ற ‘இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம், ஒரு தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்’ என்ற வரிகள் ஒலிப்பரப்பாகும் போதெல்லாம், ‘அண்ணாச்சி, கண்ணதாசன் எப்படி எழுதியிருக்கான் பாத்தீங்களா?’ எனக் கீறல் விழுந்த ரிக்கார்ட் போல அப்பாவிடம் அடிக்கடி வியப்பார். கண்ணதாசன் பாடல்களைப் போன்று பட்டினத்தார் பாடல்கள் மீதும் இருவருக்கும் அதீத ரசிப்பிருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஒரு மழை நாளொன்றில் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு இரு குடும்பத்தாரும் தாசாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். உலக விஷயங்கள், நாட்டு நடப்பு எனப் பேசிக் கொண்டிருந்த சண்முகம் மாமாவின் பேச்சு மெல்ல பிள்ளைகள் எங்களின் படிப்பு பக்கம் திரும்பியது. அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறந்த சமயமாதலால், நான் பெற்றிருந்த அதிகப்படியான மதிப்பெண்களைப் பாடவாரியாக மாமாவிடம் பெருமை பொங்கச் சொன்னாள் என் அக்கா. அதோடு கூடவே ஆங்கில வார்த்தைகளைத் தனித்தனியாக ஸ்பெல்லிங் சொல்லி உச்சரிப்பதில் எனக்கிருந்த தனித்திறமையைச் சற்றுப் பெருமையுடன் அக்கா அழுத்திச் சொல்ல, அவசரமாகக் குறுக்கிட்ட சண்முகம் மாமா என்னிடம் ‘அப்ப செக்கோஸ்லோவேக்கியா’ விற்கு ஸ்பெல்லிங் சொல்லு பார்ப்போம்’ என்றார்.

நான் ‘சி , இசெட், ஈ , சி’ என்று சொல்ல ஆரம்பிக்க அதற்குள் இடைமறித்த மாமா ‘தப்பு, தப்பு’ என்றார். மற்ற எல்லோரும் சிரிக்க எனக்கும் அக்காவுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. இரவு தூங்காமல் தூங்கி காலையில் என் பழைய வரலாற்றுப் புத்தகத்தைத் தேடிப் பிடித்து எடுத்து அதில் செக்கோஸ்லோவேக்கியா வார்த்தையைக் கண்டுபிடித்து நேராக அக்காவிடம் சென்று காண்பித்தேன். அதை அவள் அப்படியே மாமாவிடம் எடுத்துச் சென்று காண்பித்து ‘என் தம்பி, சரியாகத் தான் ஸ்பெல்லிங் சொல்லியிருக்கிறான் ‘ என்றாள்.

கால ஓட்டத்தில் துண்டிக்கப்பட்டுப் போன உறவுகளில் ஒன்றாகிப் போனது சண்முகம் மாமா குடும்பத்தாரின் நட்பு. மாமாவோடு நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தது என் மூன்றாவது அக்கா திருமணத்தின் போது தான். கல்யாணத்துக்கு முந்தைய நாள் வரையில் அப்பா வேலைக்குச் சென்று கொண்டிருக்க , மாமாவும் அத்தையும் ஒரு வாரத்திற்கு முன்னமே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டிருந்தனர். பெண் வீட்டுக் கட்டுகளைச் செய்தது அவர்களிருவரும் தான். கல்யாண மண்டபத்துக்கும், பந்தலுக்கும் பணம் கொடுத்து விட்டு இரவு தாமதமாக வீடு திரும்பிய போது மாமா தான் எனக்குச் சாப்பாடு பரிமாறினார்.

‘முதல்ல அண்ணாச்சிப்பழ ஜாமைச் சாப்புட்டு அப்புறம் இட்லியை சாப்புடுடே. உனக்குப் பிடிக்குமேன்னு மத்தியானமே எடுத்து வச்சுட்டேன் ‘

அக்காவின் திருமணத்திற்குப் பிந்தைய நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சண்முகம் மாமாவை கடைசியாகத் தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் வைத்துப் பார்த்தேன். அதே நெடிய உருவம். சற்றும் நரைக்காத முடி. முகத்தில் மட்டும் முதுமையின் சில ரேகைக் கோடுகள். கழுத்து நரம்பு சற்றுப் புடைத்தால் தெறித்து விடும் என்கிற கதியில் அத்தனை இறுக்கமாக கழுத்தையொட்டி ருத்ராட்ச மாலை. நெற்றி நிறைய அகண்ட விரல் விபூதிப்பட்டை. கையில் சுருட்டிப் பிடிக்கப்பட்ட நிலையில் ராமகிருஷ்ண விஜயம் இதழ்.

ராமகிருஷ்ண விஜயத்தை மாமாவின் கையில் பார்த்த போது மாதந்தோறும் எங்கள் வீட்டுக்கு தபாலில் வந்து கொண்டிருக்கிற ராமகிருஷ்ண விஜயத்தைப் பற்றிய நினைப்பு வந்தது. எங்கள் வீட்டுக்கும் சேர்த்து மாமா தான் ஆயுள் சந்தாவைக் கட்டியிருந்தார். புத்தகங்களுக்கு அட்டை போட்டு பராமரிக்கும் பழக்கம் மாமாவிற்கு இருந்தது. வளவு வீட்டு வாசல் நுழைவாயிலில் பூத்திருக்கும் கொன்றைகள் உதிர்ந்து முடுக்கு முனைவரையில் சிதறிக் கிடக்கும், அவரது கொக்கிரகுளம் வீட்டு முன்னறை அலமாரியில் அட்டை போட்ட புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருக்கும். ‘குற்றாலம் திரு.வி.கஇல்லத்துலேந்து எங்கப்பா வாங்கி வந்து நட்டு வச்ச கண்ணு எப்படி மரமாப் பூத்துக் குலுங்குது பார்த்தீங்களாக்கா’ என்று சச்சு ஒருமுறை என் அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வளவு வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தில் யாரோ ஒருவர் சைக்கிளை ஸ்டாண்ட் போடாமல் கொன்றை மரத்தின் மீது சாய்த்து வைத்திருக்கிறார்கள். மாமாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

‘முடுக்கு நிறைய மானாவாரியா இடம் கெடக்குது. சைக்கிளை சாய்க்கிறதுக்கா இடம் இல்லை’ என்று வளவு வாசலில் நின்று கத்தியிருக்கிறார். அச்சம்பவத்திற்குப் பிறகு வளவு வீட்டுக்காரர்கள் மரத்தின் நிழலில் கூட சைக்கிளை நிறுத்தவில்லை.

மாமாவின் அருகில் சென்று, ‘மாமா எப்படியிருக்கீங்க?’ என்றேன். என்னை அடையாளம் தெரியாமல், ‘நீங்க?’ என்று மரியாதையுடன் கேட்டார். அவர் புரிந்து கொள்கிற வகையில் எளிதாகச் சில விவரங்களைச் சொன்னேன். பிறகு ’ஏ .. நீயாடே! எப்படி இருக்க?’ என்று ஒருமையில் அழைத்துப் பரபரப்படைந்து என் கைகளைப் பற்றிக் கொண்டார். அவசரகதியாக வீட்டிலுள்ளவர்களைப் பற்றி அவர் விசாரிக்க, செக்கோஸ்லோவேக்கியாவிற்கு ஸ்பெல்லிங் கேட்டு நடந்த சம்பவம் அவருக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டேன். ‘அடப்பாவி…. நீ அதை இன்னும் மறக்கலையாடே’ என்று கேட்க, ‘எப்படி மாமா மறக்க முடியும். என்னோட முதல் வெற்றியாச்சே அது?’ என்று நான் சொல்ல, பஸ் ஸ்டாண்ட் என்றும் பார்க்காமல் தனக்கே உரிய பாணியில் சத்தமாகப் பாசாங்கில்லாமல் சிரித்தார்.

வீட்டை விட்டு அத்தான் சென்று நெடுந்நேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் அப்பா. இயல்பில் அவர் அப்படி நடப்பவரில்லை. ஒரு கட்டத்தில் நடப்பதை நிறுத்தி விட்டு சாமி படத்தின் முன் நின்று வணங்கத் தொடங்கினார். பிறகு ஏதோ யோசித்தவராக, அருகிலிருந்த தொலைபேசி ரீசிவரை எடுத்து டயல் பண்ணினார். எதிர்முனை தொடர்பு கிடைக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்பா தொடர்ந்து டயல் பண்ணிக் கொண்டே இருந்தார். யாருக்கெனத் தெரியவில்லை.

அழைப்பு மணியோசை ஒலித்தது. வாசலில் கிருஷ்ணன் மாமா நின்று கொண்டிருப்பது நிழலாக தெரிந்தது. அவர் வீட்டுக்குள் வந்ததும் வராதுமாக சண்முகம் மாமா இறந்த செய்தியை அப்பா சொல்ல, தனக்கு முன்னமே தெரியுமெனச் சொன்னார்.

‘நல்மரணத்தை உடனே சொல்லலாம். துர்மரணத்தை அப்படிச் சொல்ல முடியுமா சார். அதான் கொஞ்சம் தாமதமாகச் சொல்லலாம்ன்னு வந்தேன். சண்முகம் சமாச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு மனசைப் போட்டு நிறைய குழப்பியிருக்கீங்க போலிருக்கு. முகமெல்லாம் என்னவோ போலல்லவா இருக்கு. விபத்தைக் கேள்விப்பட்டவுடனேயே எனக்கு இப்படித் தான் இருந்துச்சு. நாம மூணு பேரும் சேர்ந்து பேசின விஷயங்களெல்லாம் ஞாபகத்துக்கு வந்து போச்சு. கடைசியா நாம திருச்செந்தூருக்கு போயிட்டு வந்த பயணத்தோட நின்னு போச்சு. நிறைய நேரம் யோசனை பண்ணிட்டு அப்புறம் தெளிவாயிட்டேன். ஆனா என்னுடைய வருத்தமெல்லாம் செத்துப் போன அந்த வேன் டிரைவரைப் பத்தி தான்.

விபத்துக்கான காரணத்தைப் பேப்பர்ல படிச்சுப் பார்த்தீங்களா சார். மதுரை தாண்டி வரும் போது தூக்கம் வருது, கொஞ்சம் ஓய்வு எடுத்துகிட்டுப் போகலாம்ன்னு டிரைவர் சொல்லியிருக்கான். அதெல்லாம் கிடையாது. அதிகாலையில விஸ்வரூப தரிசனத்துல நெல்லையப்பரைத் தரிசனம் பண்ணின பிறகு தான் தூக்கமெல்லாம்ன்னு வேனில் வந்தவங்க எல்லாரும் சொல்லியிருக்காங்க. டிரைவருடைய வார்த்தைக்குக் கொஞ்சம் செவி சாய்ச்சிருந்தாங்கன்னா இந்த விபத்தும், இத்தனை உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. அளவுக்கதிகமான இறை சிந்தனைக்கு மத்தியில் அடிப்படை மனிதத்தை இவங்களெல்லாம் மறந்துட்டாங்களே என்பது தான் என் ஆதங்கமெல்லாம்..’ எனக் கிருஷ்ணன் மாமா சொல்லிக் கொண்டே போக, சண்முகம் மாமா இறந்த செய்தியைக் காந்தி அக்கா வீட்டு அத்தான் சொன்ன போது இருந்த அதே அமைதியான நிலையிலேயே அப்பா இப்போதும் இருந்தார்.

 

 கல்கி வார இதழ் வெளியீடு.

படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_8526044_orchha-india–march-29-2007-indian-man-feeding-wild-languor-monkeys.html

5 thoughts on “கனமலர்க் கொன்றையும் புனமலர் மாலையும்

  1. yatharthamana vaazhvai sithirppathaka ikkathai amainthullathu. Ik kadhaiyin moolam Thiru.Muthu kumar avargal nammai nam baliya kalathukku kai pidithu azhaithu selkiraar.

  2. கனமலர் கொன்றையும் புனமலர் மாலையும் – சிறுகதை மனதை வெகுவாக நெகிழ வைக்கிறது . கதையின் நிகழ்வுகள் நமது பக்கத்துக்கு வீட்டில் நடந்ததை போன்று உள்ளது . திரு .வே .முத்துக்குமார் அவர்களின் எழுத்து மனதை வசியப்படுத்துகிறது

  3. The Story is very lively and reflecting the observation on every single moment of life.
    The way of presenting the story is like Manirathnam’s style.
    The Author correlated the live incident with needs of “Manitha Unarvugal” in final touch. Excellent story , touches the heart..

Leave a Reply

Your email address will not be published.