தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் 158வது பிறந்த நாள்!

0

 

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், என, பல்வேறு வகைப்பட்ட 90 க்கும் மேற்பட்ட அழிந்து கொண்டிருந்த ஓலைச்சுவடிகளுக்கு நூல் வடிவம் கொடுத்ததோடு, தம் வருங்காலச் சந்ததியினர் அறியும் வகையில், சமண சமய நூலான சீவக சிந்தாமணி நூலைக் கண்டறிந்து, சேகரித்ததோடு, அதனைப் பகுத்தாய்ந்து, அதற்கான தெளிவான உரையும் எழுதி, தம்முடைய 84வது வயது வரையிலான இறுதிக் காலம் வரை ஓய்வில்லாது உழைத்து அரும்பாடுபட்டு எழுதி வழங்கியுள்ளார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்டை, போன்றவற்றை அச்சிதழாகக் கொண்டு வந்தவர்.

மண்ணிப்படிக்கரைப் புராணம், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்,  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் திருத்தணிகைத் திருவிருத்தம் பரிபாடல், களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை, உதயணன் சரித்திரச் சுருக்கம் , பெருங்கதை நன்னூல், சங்கர நமச்சிவாயருரை நன்னூல் மயிலை நாதருரை ,சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் , தக்கயாகப் பரணி தமிழ்விடு தூது, போன்ற பல இலக்கியங்கள், அச்சில் பதிவிட்டதன் மூலம் அழிவிலிருந்து காக்கப்பட்டு, இன்றும் நம் தமிழ் நூலகங்களின் பொக்கிசமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

மிகச் சிறந்த பேச்சாளரான உ.வே.சாமிநாதையர் அவர்களின் பேச்சில் நகைச்சுவை மட்டுமன்றி, கருத்தாழமும் இருக்கும். அதற்கான சான்றாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா அவர்கள் ஆற்றிய சிறந்த உரையையே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டதே.

உ. வே. சா அவர்கள் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி 1932ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி போன்ற பட்டங்களும் அளிக்கப் பெற்றுள்ளார். இது மட்டுமன்றி இந்திய அரசு பிப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் தொடர்ந்து வாசிக்க..

 http://uvesalibrary.org/history.htm 

படத்திற்கு நன்றி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89._%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.