இலக்கியம்……. !!!
பிச்சினிக்காடு இளங்கோ
கரைகளே இல்லாமல்
குளிர்ந்த நீரோடு
ஓடிக்கொண்டிருக்கும் நதி
நானும் என் உடலும்
வெப்பமடைந்து வியர்க்கையில்
அதில் விழுந்துதான் குளிர்கிறோம்
குதூகலமடைகிறோம்
நான் நதியில் விழுந்து
அலையெழுப்பாமல்
நதி என்னுள் விழுந்து
அலையெழுப்புகிறது
கண்ணுக்குள் நுழைந்து
தாகம் தீர்க்கிறது
தாகத்தைத் தருகிறது
மாய மூலிகையாய்
மருத்துவம் செய்கிறது
இருள் நெஞ்சங்களில்
வெள்ளையடிக்கிறது
கைகாட்டி எனக்கு
வழிகாட்டுகிறது
கலங்கரை விளக்காய்
கரைசேர்க்கிறது
கல்லாய் இருந்த என்னை
சிலை செய்த சிற்பி
கற்காலமாய் இருந்தேன்
நிகழ்காலமாகவும்
எதிர்காலமாகவும்
நிரந்தரமானவனாகவும்
ஆக்கியது அதுதான்
இந்தப்புல்லாங்குழலுக்குள்
புகுந்து
இசையானக் காற்று
மனதைத்தொட்டபோது
என்னுள்
மகரந்தங்கள் விளைந்தன
உதிர ஓட்டத்தையும்
நாடித்துடிப்பையும்
சீர் செய்யும் சிறந்த கருவி
இளமையிலும் முழுமை
முதுமையிலும் இளமை
கொட்டிக்கொடுக்கும் வங்கி
கட்டிக்காக்கும் லேகியம்
கவலைகள் தேங்கினால்
வடிகாலும் அதுதான்
நிவாரணியும் அதுதான்
காதலின் பெட்டகம்
கருவூலம்
என் தளர்ச்சி நாள்களின்
ஊன்றுகோல்
கிளர்ச்சிப் பருவத்தின்
திறவுகோல்
அதன்கையில்
நானொரு தூரிகை
ஓவியமாக்கியது
என்கையில்
அதுவொரு ஆயுதம்
காவியம் ஆக்கினேன்
அதுதான் என்னை
வானவில்லுக்கு
வண்ணம்தீட்ட வைத்தது
அதன் நட்பால்
என் நா
சமாதானம் கற்றது
பின்
சமாதானத்திற்கே
தலையாட்டியது
கண்கள்
கருணையைப்பேசின
கைகள்
சேவையாயின
மனம்
மலரானது
‘நான்’ என்னிடம்
இல்லாமல் போனது
‘நாம்’
என்னுள் விளைந்தது
இறுக்கமும் சுருக்கமும்
இல்லாமல் என்னை
வைத்திருக்கும் காயகல்பம்
இலக்கியம்தான்
http://www.flickr.com/photos/clemsonunivlibrary/galleries/72157622410875215/