அகங்காரத்தின் உச்சக் கட்டம் விவேகம்

0

நீலகண்டன் (செம்பூர் நீலு, மும்பை) 

“ரகு, சித்திரை பொறந்தால் ரமேஷுக்கு 27 முடிந்து 28 வயசு ஆரம்பிக்கிறது அவனுக்குக் கலியாணம் பண்ண வேண்டும் என்ற நினைப்பே இல்லையா? ஏண்டி ராஜி, நீயாவது உன் அருமைப் பிள்ளை கிட்டே கேட்கப்டாது? இரண்டு பேரும் பேசாமல் இருக்கேள்” என்று ஆரம்பித்தாள் அம்மா (பகவதி மாமி) . பேசுகிற தொனியில் ஒரு அதிகாரம் வெளிப்பட்டது. அம்மாவுக்கு என்றைக்குமே தான் சொன்னது நடக்கணும், இல்லையென்றால் கோபம் மூக்கிற்கு மேல் வந்து விடும். 

ராஜி ரகுவைப் பார்த்து கண் ஜாடையாக “இப்போதைக்கு நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லி விட்டு “இல்லை அம்மா, அவனுடைய ஜாதகத்தை நேற்றைக்குத்தான் சிருங்கேரி சங்கர மடத்தில் ரெஜிஸ்டர் செய்து விட்டு வந்தேன்” என்று சொல்லவே கொஞ்சம் சாந்தமடைந்தாள் பகவதி மாமி, ஆனாலும் பேச்சை நிறுத்தவில்லை. “சனிக்கிழமை/ஞாயிற்றுக் கிழமைகளில் சங்கரமடத்துக்குப் போய் நமக்கு வேண்டிய நல்ல பெண் ஜாதகங்களைப் பார்த்து எடுத்து ஜோசியரிடம் கொடுத்துப் பொருத்தம் பார்க்கணம். ரெஜிஸ்டர் பண்ணியாச்சு என்று மச மசவென்று
உட்கார்ந்து இருக்கிறதில் அர்த்தமில்லை” என்று ஒரு பாராயணத்தைச் சொல்லி நிறுத்தினாள். ரகுவோ ஒன்றும் சொல்லவில்லை. அப்பாவைப் பார்த்தான், அவரோ பகவத் கீதை புஸ்தகத்தில் இருந்தார். ராஜியால் வாயைத் திறக்க முடியவில்லை. ரகுவை பார்த்து “சரி வாங்கோ மணி 12 ஆகப் போகிறது. சாப்பாட்டுக் கடையை முடிக்கலாம்” என்று பேச்சைத் திருப்பினாள். 

சாப்பிட்டு முடிந்த பிற்பாடு அம்மா திருப்புகழ் கிளாசுக்குக் கிளம்பிப் போனாள். அப்பாவின் அறைக்குப் போய் “அப்பா, இப்போ தான் ஜாதகமே எடுத்திருக்கு. நேரம் வந்தால் எல்லாமே தானாக வரும். எதுக்கு அம்மா இப்படி அலட்டிக்கிறாள் என்றே தெரியவில்லை” என்று அப்பாவிடம் புலம்பிய ரகுவையும் ராஜியையும் பார்த்து “ரகு உனக்குத் தான் அம்மாவின் குணம் தெரியுமே, ஏதாவது அவளுக்குப் போட்டியா எதிர்த்துச் சொன்னால் ஹிஸ்டீரியா  வந்த மாதிரி கத்துவாள். அதனால் தான் நான் ஒன்றுமே சொல்லாமல் என்னுடைய காலத்தைக் கழித்து விட்டேன். நீயும் என்னை மாதிரியே பழகிட்டே. ஆனால் ரமேஷ் அப்படியில்லை. அவன் இந்த காலத்துப் பிள்ளை. நீ எதற்கும் கவலைப்படாதே, எல்லாம் அந்த பகவான் பார்த்துப்பார்.” என்று சொல்லி விட்டு கீதைப் புஸ்தகத்தில் கவனம் செலுத்தினார். 

ரமேஷ் ஒரு வாரமாக ஊரில் இல்லை. எதோ ஒரு ப்ராஜெக்ட் விஷயமா பெங்களூர் போயிருந்தான். “ராஜி, ரமேஷ் என்றைக்கு வருகிறான்? எதற்கும் அவனிடம் கலியாணத்தைப் பற்றிப் பேசி, அவனுடைய எண்ணத்தையும் தெரிந்து கொள். அவனுக்கு ஏதாவது காதல், இல்லை அவனுக்கு விருப்பமா யாராவது மனதில் வைத்துக் கொண்டிருக்கானா என்று. அப்பா சொல்லற மாதிரி அவன் இந்த காலத்துப் பிள்ளை அவனுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கிறதுக்கு  அவனுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. நீயே அவனிடம் பேசிப் பார் பின்னர் என்ன செய்யணம் என்று தீர்மானிக்கலாம்” என்று சொல்லி விட்டு ரகு ஜிம்கானாவை நோக்கிச் சென்றான். 

ராத்திரி ரமேஷ் வந்தான். எல்லாரும் டைனிங் டேபிளில் சாப்பிடுவதற்காகத் தயாராக இருந்தார்கள். பகவதி மாமி தான் ஆரம்பித்தாள். “ஏண்டா ரமேஷ் எப்போ வந்தே? நீ எப்ப வருகிறாய்! எப்ப போகிறாய்! என்றே தெரியவில்லை. நான் கண்ணை மூடுவதற்குள் உனக்குக் கலியாணம் பண்ண வேண்டும் அதைத்தான் மத்தியானம் ஒங்க அப்பாவிடமும் அம்மாவிடமும் பேசிக் கொண்டிருந்தேன். உன்னுடைய ஜாதகத்தை என்னுடைய திருப்புகழ் கிளாஸ் மாமிகள் எல்லாரும் கேட்கிறா. நான் ‘சரி தரேன்’ என்று சொல்லி விட்டேன்” என்று சொல்லவே, 

“பாட்டி, எனக்கு இப்போ கலியாணம் வேண்டாம். நான் வேலையில் சேர்ந்து இரண்டு வருஷம் தான் ஆகிறது. ஒரு நல்ல பொசிஷன் வரவரைக்கும் கலியாணம் ஒன்றும் வேண்டாம். இனிமே ஒரு வருஷத்துக்கு வெளியூர் டூர் எல்லாம் ஜாஸ்தி. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் நீயும் தாத்தாவும் நல்ல திடமாகத்தான் இருக்கிறீர்கள். சும்மா அலுத்துக்காதே” என்று சொல்லி விட்டு ரமேஷ் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்று விட்டான்.  

“ரகு, பார்த்தியா ரமேஷ் எப்படிப் பேசிவிட்டு போகிறான்? எல்லாம் ராஜியும் நீயும் ஒங்க அப்பாவும் செல்லம் கொடுத்து  வளர்த்திருக்கிறீர்கள். என் பேச்சை என்றைக்குத்தான் அவன் கேட்டிருக்கான்” என்று பகவதி மாமி கோபத்துடன் அலுத்துக் கொண்டாள் அதற்குப் பதிலாகத் தாத்தா “இப்ப ரமேஷ் என்ன சொல்லி விட்டான் என்று கோபித்துக் கொள்கிறாய்.கலியாணம் வேண்டாம் என்று அவன் சொல்லவே இல்லை. இந்த வருஷம் வேண்டாம் அடுத்த வருஷம் பார்க்கலாம் என்று தானே சொன்னான்” என்று சொல்லவே பகவதி மாமி முணு முணுத்துக் கொண்டே தன்னுடைய ரூமிற்குச் சென்று விட்டாள். 

அடுத்த 2 மாதத்திற்கு யாருமே கல்யாணப் பேச்சை எடுக்கவில்லை. பகவதி மாமி தான் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு ரகுவிடமும் ராஜியிடமும் அடிக்கடி தன்னுடைய புலம்பலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ராஜியும் ரமேஷும் ஒரு நாள் ரமேஷின் கிளாஸ் மேட்டின் கல்யாணத்திற்காகப் பூனாவிற்கு சென்றிருந்தார்கள். ரகு அலுவலகத்தில் ஆடிட் இருந்ததால் பூனாவிற்கு வரவில்லை என்று சொல்லி விட்டான்.

ரமேஷ் கல்யாண மேடையில் நண்பர்களுடன் இருந்தான், ராஜி மேடையின் முன்னால் அமர்ந்து கலியாண  வைபவத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் பின்னால் நான்கைந்து இளவட்டங்கள் அரட்டை  அடித்துக் கொண்டிருந்தனர். இடையில் ரமேஷின் பெயர் அடிபடவே அவர்களுடைய பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கேட்டாள். அதிலிருந்து ஒன்று புரிய ஆரம்பித்தது. ரமேஷ் ஷாலினி என்ற பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் அடுத்த கலியாணம் ரமேஷ்-ஷாலினியுடையதாகத்தான் இருக்கும், அதற்கு நன்றாக என்ஜாய் பண்ண வேண்டும் என்று நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். முதலில் அதிர்ச்சியடைந்த ராஜி இரண்டு மாதம் முன்னால் ரகு சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்தினாள். ரகுவிடம் இது பற்றிப் பேசிவிட்டுப் பின்னர் ரமேஷிடம் பேசலாம் என்று முடிவெடுத்தாள். ராஜி. அன்றைக்கு ராத்திரியே பூனாவில் கேட்டதை ரகுவிடம் சொன்னாள்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை வந்ததால் சேர்ந்தால் போல் எல்லாருக்கும் மூன்று நாள் லீவு. ரமேஷும் வெளியூருக்கு ஒன்றும் போகவில்லை, வீட்டில் தான் இருந்தான் நன்றாக ரெஸ்ட் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அம்மாவும் அப்பாவும் இரண்டு நாள் பண்டரிபுரம் டூர் போவதாக முதலிலேயே தீர்மானித்திருந்ததால் இரண்டு பேரும் வெள்ளிக்கிழமை காலையிலேயே கிளம்பிப் போனார்கள்.

“ராஜி இது தான் நல்ல சமயம். நீ நாசுக்காக ரமேஷிடம் பேசிப்பார் அவன் என்ன பதில் சொல்லுகிறான்.ஷாலினி விஷயத்தில் ஒரு முடிவோடு இருக்கானா என்று அறிய முயற்சி செய். என்னால் அவனிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச முடியாது. பின்னர் அப்பாவிடம் பேசி விட்டு ஒரு முடிவு எடுக்கலாம்” என்று ரகு கூறினான்.

சனிக்கிழமை மத்தியானம் சாப்பாட்டுக் கடை முடிந்த பிறகு ரகு ஒரு ப்ரெண்டைப் பார்ப்பதற்குப் பன்வேலுக்குப் போனார். இது தான் தக்க சமயம் என்று கருதிய ராஜி ரமேஷிடம் பூனா கல்யாணத்தைப் பற்றியும் அவனுடைய வேறு நண்பர்கள் யாருக்கெல்லாம் எப்போ கல்யாணம் நடக்கப் போகிறது என்று பேச்சை ஆரம்பித்தாள்.

“ரமேஷ் உனக்கு கலியாணம் பண்ணனம் என்று பாட்டி சொல்லிண்டே இருக்கா. அவளுடைய தொந்தரவு தாங்காமல் நானும் அப்பாவும் உன்னுடைய ஜாதகத்தைச் ச்ருங்கேரி சங்கர மடத்தில் ரெஜிஸ்டேர் பண்ணியிருக்கோம், நீ என்ன சொல்லறே? உன் மனசில் ஏதாவது ப்ளான் இருந்தால் அம்மாவிடம் சொல்லு, எதுவானாலும் நானும் அப்பாவும்  உன்னுடைய முடிவுக்குத் தடையாக இருக்க மாட்டோம். தாத்தாவே அன்றைக்கு ஒருநாள் என்னிடமும் அப்பாவிடமும் “ரமேஷ் இந்த காலத்துப் பிள்ளை. நீங்களாக அம்மா ஏதாவது சொன்னாள் என்று ஒரு முடிவும் எடுக்காதேங்கோ. ரமேஷுடைய விருப்பம் ஏதாவது இருக்கா? என்று கேட்டுக் கொண்டு அதன் பின்னர் முடிவெடுங்கோ. பொண்ணாத்துக்காரா யாராவது வந்தால் அதற்கு ஏற்றால் போல் பதில் சொல்லி அனுப்புங்கள் பொண்ணைப் பெத்தவாளை அது இதுன்னு சொல்லி அலைக்கழிக்கக் கூடாது” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். அதனால் தான் கேட்கிறேன்” என்று ராஜி சொன்னாள். 

ஐந்து நிமிஷத்திற்கு ரமேஷ் ஒன்றும் சொல்லவில்லை “அம்மா நீ என்னை தப்பா எடுத்துக்கப்படாது. நீ ஷாலினியைப்  பார்த்திருக்கயா. போன மாதம் என்னுடைய பிரெண்ட்ஸ் எல்லாம் நம்ப ஆத்துக்கு வந்திருந்தா இல்லையா அதில ஒரு பெண் ஷாலினி. இன்னொரு பெண் மஞ்சுளா. இரண்டு பேரும் கன்னடக்காரா என்கூட MBA  படிச்சவா. நானும் ஷாலினியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். ஷாலினி மும்பையில் ஒரு நல்ல மல்டி நேஷனல் கம்பனியில்  வேலையாய் இருக்கா. எங்களுடைய காதல் விஷயம் அவளுடைய வீட்டில் எல்லோருக்கும் தெரியும். அவா சைடில் நோ அப்ஜெக்ஷன், அவா ஓ.கே என்று சொல்லி விட்டா.அவள் அப்பா ஒரு டாக்டர் அம்மா பிசியோதெரபிஸ்ட். ஷாலினிக்கு ஒரு அண்ணா அவன் கலியாணம் முடிந்து பெங்களூரில் வேலையா இருக்கான். நான் சமயம் வரும் போது உன்னிடம் சொல்லலாம் என்று இருந்தேன். நீயாக் கேட்டதற்கு அப்புறம் நான் சொல்லா விட்டால் அது என்னுடைய மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். எனக்குத் தெரியும் நீ, அப்பா, தாத்தா எல்லாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேள். பாட்டியை நினைத்தால்தான் பயமாக இருக்கு. பாட்டி ஒரு போதும் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதிக்க மாட்டாள், நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டும். உன்னை தான் நம்பிக் கொண்டிருக்கிறேன்” என்று ரமேஷ் சொன்னவுடன் அப்படியே அவனை அன்போடு தழுவிக் கொண்டாள் ராஜி. 

“ரமேஷ் நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே. பாட்டி சம்மதித்தாலும் சம்மதிக்கா விட்டாலும் அம்மா நான் இருக்கேன். உன்னுடைய விருப்பத்துக்கு நானும் அப்பாவும், தாத்தாவும் தடையாய் என்றைக்குமே இருக்க மாட்டோம். ஷாலினி  தான் உனக்கு மனைவி. இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி டென்ஷன் பட்டுக்காதே. எல்லாவற்றையும் என்னிடம்  விட்டுவிடு” என்று சொல்லி விட்டு ரகுவிடமும் தாத்தாவிடமும் இதைச் சொல்ல வேண்டும் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.

அன்று ராத்திரியே ரகுவிடம் மத்தியானம் தனக்கும் ரமேஷுக்கும் இடையில் நடந்த பேச்சை ஒன்று விடாமல் கூறினாள். ரகு ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்தால், “பிடிச்சதோ பிடிச்சான் ஒரு தமிழ்ப் பெண்ணைப் பிடிச்சிருக்கப்டாதா? சரி, அவனிஷ்டம் போல் கலியாணம் பண்ணிக்கட்டும் எனக்கு அப்பாவை பற்றிக் கவலை இல்லை. அம்மாதான் இந்தக் காதல் விஷயத்தைக் கேள்விப்பட்டால் தைய தக்க என்று குதிப்பாள். இப்போ இதைப் பற்றி அம்மாவிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம். அப்பாவிடம் நாம் சொல்லிக்கிறோம். அம்மாவை எப்படிச் சமாளிப்பது என்று பின்னர் தீர்மானிக்கலாம்.” என்ற ரகுவின் பதிலைக் கேட்ட ராஜிக்கு மனது சமாதானமாயிற்று.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு யாருமே ரமேஷ் ஷாலினி விஷயத்தைப் பற்றிப் பகவதி மாமியிடம் பேசவில்லை. ஒரு நாள் பகவதி மாமி “ரகூ/ராஜி, அடுத்த ஞாயிற்றுக் கிழமை என்னுடைய திருப்புகழ் கிளாஸ் மாமியின் பெண்ணும்  மாப்பிள்ளையும் கலியாணம் பேச வரா. அவாளுடைய பெண்ணின் ஜாதகமும் ரமேஷின் ஜாதகமும் நல்லாப் பொருந்தியிருக்குன்னு அந்த மாமி நேற்றைக்கு கிளாசில் வைத்துச் சொன்னா. நல்ல பசையுள்ள பார்ட்டி. ஒரே பெண், நம்ம அந்தஸ்துக்கு ஏற்ற வரன்” என்று சொன்னாள். உடனே தாத்தா “ஏன் பகவதி, பசையுள்ள பார்ட்டி என்றால் அவா கோந்து பாக்டரி வைத்திருக்கப் பட்டவாளா என்ன?” என்று கிண்டலாகப் பாட்டியை வாரவும் பகவதி மாமிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

“ஏன்னா பேச்சு கொஞ்சம் இளக்காரமா போறது. நான் சொல்லியாச்சு இல்லையா. அதற்கு மேல் ஒருவரும் பேசக் கூடாது” என்று சொல்லவே “அம்மா அவாளை வர வேண்டாம் என்று சொல்லிவிடு. ரமேஷ் இப்போ கலியாணம் வேண்டாம் என்று சொல்லறான் அவன் எப்போ சரின்னு சொல்லறானோ அப்போப் பார்த்துக்கலாம். நீ இனிமேல் ஜாதகத்தை ஒருத்தருக்கும் கொடுக்க வேண்டாம். கொடுத்தவர்கள் யாராவது வந்து கேட்டால் ஜாதகம் பொருந்தவில்லை என்று ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர்களை அனுப்பி விடு” என்று ரகு சொல்லவே பகவதி மாமி “ரகு நீயா இப்படியெல்லாம் பேசுகிறாய்? ராஜி உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்திருக்காளா?” என்று ராஜியை இழுக்கவே, ராஜி உடனே “அம்மா இவருக்கு நான் ஒன்னும் சொல்லித் தர வேண்டியது இல்லை.அவருக்கு தெரியாதா என்ன?” என்று சொல்லவே, பகவதி மாமி “நீங்க எல்லாரும் மனசிலே என்ன நினைத்துக் கொண்டிருக்கேள்? என்னுடைய பேரனுக்கு நான் கலியாண ஆலோசனை சொல்லக் கூடாதா?? எல்லாரும் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருங்கோ. ஆக வேண்டிய காரியங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்“ பாட்டி கத்த ஆரம்பித்தாள். 

நிலைமை சீரியசாகப் போகிறது என்று நினைத்த ரமேஷ் ” பாட்டி, இப்போதைக்குப் பொண்ணாத்துக்காரா யாரும்  கல்யாணம் பேச வர வேண்டாம். என்னுடைய கல்யாணத்தை நான் தான் தீர்மானிக்கணம். எனக்கு யார் மனைவியாக வரப் போகிறாள் என்பதை நான்தான் முடிவெடுக்கணம். அது வரை கொஞ்சம் சும்மா இரு, எப்போப் பார்த்தாலும் தொண தொண வென்று ஏதாவது சொல்லி எல்லாரையும் அடக்கப் பார்க்காதே” என்று சொல்லவே, பாட்டி “என்ன ரமேஷ் நீயும் காதல் கீதல் என்று ஆரம்பிச்சுட்டியா! நான் இருக்கும் வரை அது நடக்காது” என்று கத்தினாள். தாத்தா உடனே குறுக்கிட்டு “பகவதி நீ கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியா? இத்தோடு இந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வை. பின்ன பார்த்துக்கலாம்.” என்று தாத்தா சொன்னதும் பாட்டி கோபத்துடன் தன்னுடைய ரூமில் சென்று கதவைப் படார் என்று சாத்தினாள்.  

“ரகு, ராஜி, ரமேஷ், இப்போதைக்குக் கொஞ்ச நாள் யாருமே கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம். பின்னே பார்த்துக் கொள்ளலாம். அவளோடு அகங்காரத்திற்கு அளவே இல்லாமல் போயாச்சு ” என்று தாத்தா சொல்லவே அன்றைய விவகாரம் அப்படியே முடிந்தது.   

அடுத்த இரண்டு வாரத்திற்கு யாரும் ஒன்றுமே பேசவில்லை. பகவதி மாமிதான் முணு முணுத்துக் கொண்டிருந்தாள். ஒரு சனிக்கிழமை எல்லோருக்கும் லீவு. ரகு காலையிலேயே ஜிம்கானாவுக்குச் சென்று விட்டான். திடீரென்று பாட்டியின் உசந்த குரல் கேட்டு ரமேஷ் அடுக்களைக்கு வந்தால் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பாட்டி ராஜியின் தலையைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தாள். “உன்னால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது. எனக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லாத ரகுவே மாறிப் பேச ஆரம்பித்து விட்டான். அவரும் உங்களுக்குச் சப்போர்ட் பண்ணிண்டு இருக்கார். ரமேஷோ சின்ன வயசு முதலே என்னை மதிக்கிறது கிடையாது, எல்லாரும் எதிர்த்துப் பேச ஆரம்பித்து விட்டேள். எல்லாரையும் உன் கைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறாய். என்னவாக்கம் உன் மனசில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கத்திக் கொண்டிருந்தாள். பாட்டியின் கண்ணில் கோபத்தின் உச்சம் தாண்டவமாடியது. 

உடனே தாமதிக்காமல் ரமேஷ் பாட்டியின் கையைப் பிடித்து ராஜியை விடுவித்தான். தாத்தாவும் அடுக்களை வாசலில் நின்று கொண்டு நடக்கிற கூத்தைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். 

“பாட்டி ஒன்னு சொல்லறேன் கேட்டுக்கோ. இவ்வளவு நாள் என் அம்மாவைப் படுத்தின பாட்டை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன். இனி மேலும் நான் சும்மா இருக்க மாட்டேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன். பேச்சுக்குப் பேச்சு அம்மாவின் குடும்பத்தைப் பழிப்பது, அம்மாவுடைய அப்பாவோ இல்லை மாமாவோ வந்தால் அவர்களுடன் முகம் கூட கொடுத்துப் பேசாமல் ஏதோ காரியத்தில் இருப்பது போல் பாவனை செய்வது. எப்போப் பார்த்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று அம்மாவுடைய சமையலைக் குற்றம் சொல்லுவது, அதுக்கும் மேல மாமா எந்தப் பண்டிகைக்குப் பட்சணம் பண்ணிக் கொண்டு வந்தாலும் அதைக் கச்சராப் பெட்டியில் போடுவது/வேலைக்காரியிடம் கொடுப்பது, இன்னும் என்னவெல்லாமோ நடந்தது. அப்பாவும் உன்னுடைய கோபத்திற்குப் பயந்து ஒன்றுமே சொல்லாமல் விட்டது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் உனக்கு என் அம்மாவை அவ்வளவு இளக்காரமாகப் போய் விட்டதா? அவளை ஏன் இப்படி வெறுத்து ஒத்துக்கறே. என் அம்மாவிற்கே இந்த மாதிரி நடக்கிறது என்றால் நாளைக்கு எனக்கு வரப்பட்ட மனைவியிடமும் இந்த மாதிரிதான் நடந்துப்பாய் என்பதில் எனக்குத் துளி கூடச் சந்தேகம் இல்லை. அதனால் நான் எப்போதே தீர்மானித்து விட்டேன். எனக்குக் கலியாணம் கழிந்த மறு நாள் முதல் நான் இந்த நரகத்தில் இருக்க மாட்டேன்” என்று கோபத்தின் உச்சகட்டத்தில் பேசின ரமேஷின் பேச்சைக் கேட்டு பகவதி மாமி ஸ்தம்பித்து நின்று விட்டாள். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, “பகவதி உனக்கு விவேஹமே வராதா? இத்தனை வயசாயிட்டும் உன்னுடைய அகங்காரம் குறையவே குறையாதா? போ உன்னுடைய ரூமுக்கு. ரூமை விட்டு வெளியில் வராதே” என்று கத்தவே பாட்டி தன்னுடைய ரூமிற்குப் போய் விட்டாள். இதற்குள் ரகுவும் வந்து விடவே தாத்தா ரகுவிடம் நடந்த விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லி அவனுக்குக் கோபம் வராத மாதிரிச் சமாளித்தார். ராஜி அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்று கொண்டு ரமேஷ் பேசியதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

கொஞ்ச நேரத்துக்கு யாரும் ஒன்றுமே பேசவில்லை மயான அமைதி நிலவியது. தாத்தாதான் ராஜியிடம் வந்து “ராஜி, பகவதி இந்த மாதிரி நடந்துப்பா என்று நான் கனவில் கூட நினைச்சது கிடையாது. அவளுக்காக நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீ ஒன்றும்மனசில் வைத்துக் கொள்ளாதே” என்று சொல்லவே “அப்பா நான் 25  வருஷமா எவ்வளவோ அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது வரைக்கும் உங்களிடமோ, அவரிடமோ,  இல்லை என்னோடு பொறந்தாத்துக் காராளிடமோ ஒரு வார்த்தை.. அம்மாவை பற்றி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. எல்லாவற்றையும் எனக்குள்ளே அடக்கி வைத்திருந்தேன். ஆனால் ரமேஷின் மனசில் பாட்டியைப் பற்றி இந்த அபிப்பிராயம் இருக்கு என்று இன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன். நீங்க ரமேஷை அன்பால் வளர்த்தேள். அம்மாவோ அதிகாரத்துடன் ரமேஷை அடக்கி வளர்த்தாள் அதனால் சின்ன வயசு முதலே அவனுக்குப் பாட்டியிடம் பாசம் கிடையாது, ஒரு பயம் தான் நிலைத்து நின்றது. அது இன்றைக்கு அருவி மாதிரி வெளியில் வந்து விட்டது. அவ்வளவு தான். எனக்கு எல்லாமே ரமேஷ் தான் அவன் நன்னா இருந்தாச் சரி. அவனுடைய வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு ஒரு போதும் குறுக்கே நிற்க மாட்டேன், இது நிச்சயம். அவருக்கும் இது தெரியும்” என்று சொல்லித் தன்னுடைய துக்கத்தைக் கண்ணீரோடு வெளிப்படுத்தினாள்.  

ரகு என்ன சொல்லணும் என்று தெரியாமல் ரமேஷுடன் நின்று கொண்டிருந்தான். “அப்பா, ரமேஷ், இப்போ சொல்லறேன். ஷாலினி தான் எனக்கு மாட்டுப்பெண் இதில் எந்த மாற்றமும் இல்லை. இவருக்கும் இந்த விஷயத்தில் பூரண சம்மதம் நீங்களும் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று ராஜி சொன்னவுடன் தாத்தா ரமேஷை அணைத்துக் கொண்டு “ரமேஷ் நான் வளர்த்த பேரன், அவனுடைய முடிவுக்கு நான் என்றைக்குமே மறுப்புச் சொன்னது கிடையாது” என்று சொன்னார். ரகு கண்களைத் துடைத்துக் கொண்டான். 

பகவதி மாமி ரூமை விட்டு வெளியில் வரவே இல்லை. யாருடனும் பேசவில்லை உம் என்று மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் என்றைக்கும்போல் திருப்புகழ் கிளாசிற்குப் புறப்பட்டுச் சென்றாள். எல்லோரும் சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். காலிங் பெல் அடித்தவுடன் ரகு கதவை திறந்தான்” வெளியில் நின்றிருந்த வாட்ச்மேன் “ஸாப் மாஜிகோ ஆட்டோ டக்கர் லகாயா. அவுர் மாஜி நீச்சே கிர் கயே. ஆப் ஜல்தி ஆவோ மாஜிக்கோ ஹஸ்பத்தால் லேகே ஜானே கா ஹை (பெரியம்மாவை ஆட்டோ இடித்து விட்டது, அவர்கள் கீழே விழுந்து விட்டார்கள். சீக்கிரம் வாருங்கள், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும்)” என்று சொல்லி விட்டுச் சென்றான். எல்லோரும் சென்று அம்மாவைத் தூக்கி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றோம். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கால் தொடை எலும்பு முறிந்திருந்தது.

ரமேஷ், “அம்மா ஷாலினியின் அப்பா அம்மாவுக்கு நான் போன் செய்யறேன். அவா இரண்டு பேருமே ஆர்தொபெடிக் ஸ்பெசலிஸ்ட்” என்று சொல்லி விட்டுப் போன் செய்த பத்து நிமிஷங்களில் ஷாலினி, அவளுடைய அம்மா அப்பா எல்லோரும் வந்தார்கள். உடனே ஹாஸ்பிடல் சர்ஜனிடம் பேசி விட்டு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்தார்கள். அப்போது தான் முதல் முறையாக ரகுவும் ராஜியும் ஷாலினியைப் பார்த்தார்கள். ரமேஷ் ஒரு பார்மாலிட்டிக்காக அவர்கள் எல்லாரையும் ரகுவிற்கும், ராஜிக்கும் தாத்தாவிற்கும் அறிமுகப் படுத்தினான். 

ஷாலினியின் அப்பாவும் அம்மாவும் தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு “அங்கிள் ஆப் பிகர் மத் கரோ. ஹம் ஹைனா! ஹம் சப் சமால்லேகா(அங்கிள் நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். நாங்கள் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்கிறோம்)” என்று ஆறுதல் கூறி விட்டுச் சென்றார்கள். அடுத்த நாள் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருக்க வேண்டும், பின்னர் ஆறு முதல் எட்டு வாரம் பாண்டேஜில் இருக்க வேண்டும். ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை என்று டாக்டர் சொன்னவுடன் தாத்தாவிற்கும் ரகுவிற்கும் நிம்மதியாயிற்று.

பகவதி மாமி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தாள். இந்த விபத்து பகவதி மாமியை மிக்க வேதனைக்குள்ளாகியது. ஆடிப் போய்விட்டாள். ராஜிதான் ராத்திரியும் பகலும் நன்றாகக் கவனித்துக் கொண்டாள். வாரத்திற்கு இரு முறை ஷாலினியின் அம்மாவும் அப்பாவும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் பாட்டிக்கு அமுதமாய் இனித்தது. ரொம்ப நல்ல மனிதர்கள் என்று வாய்க்கு ஒருதரம் புகழ ஆரம்பித்தாள்.ராஜி அவர்களை ஒரு டாக்டராகத்தான் அறிமுகப் படுத்தினாள். ஆறு வாரம் கழிந்து பாண்டேஜ் பிரிக்கப்பட்டு ஒரு மாதம் பிசியோதெரபி பண்ண வேண்டும் என்று டாக்டர் சொன்னவுடனே ஷாலினியின் அம்மா “மாஜி நீங்கள் ஒண்ணுக்கும் கவலைப்படாதேங்கோ தினமும் நான் வந்து உங்களுக்கு எக்செர்சைஸ் சொல்லித் தருகிறேன்” என்று கன்னடத்தில் சொன்னவுடன் பகவதி மாமியும் தனக்குத் தெரிந்த அரைகுறைக் கன்னடத்தில் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு நன்றி சொன்னாள். அப்படியே பிசியோ தெரேபி எக்செர்சைஸ் எல்லாம் நன்றாக நடந்து பகவதி மாமி கையில் கம்பு வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் தாத்தா ஒரு நாள் மத்தியானம் பகவதி மாமியின் ரூமில் இருந்தார். இந்த ஆக்சிடெண்டிற்கு அப்புறம் பகவதி மாமியின் நடத்தையில் அநேக மாறுதல்களைக் கண்டார். சமயம் வரும் போதெல்லாம் தாத்தா பகவதி மாமியின் குணத்தையும் ராஜியைக் கலியாணம் கழிந்தது முதல் அவளைக் கஷ்டப்படுத்தி நோகடித்ததையும் அடிக்கடிச் சொல்லி பகவதி மாமியைக் கண்டித்தார். இவ்வளவு நாள் பகவதி மாமியைக் கண்டிக்காத தன்னுடைய குணத்தை நொந்து கொண்டார். பகவதி மாமியும் தான் செய்ததெல்லாம் தப்பு என்று உணர ஆரம்பித்தாள்.

இதற்கிடையில் ஒரு நாள் “பகவதி நான் ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். அது சரியா தப்பா என்று உன்னிடம் ஆலோசனையும் கேட்கப் போவதில்லை. இன்னும் மூன்று மாதங்களில் நானும் நீயும் கோயம்புத்தூரிலுள்ள சீனியர் சிடிசன் ஹோமிற்குப் போகப் போகிறோம். இவ்வளவு நாள் ராஜி உன்னிடம் பட்ட கஷ்டம் போதும். இனிமேலாவது ரகுவும் ராஜியும் நிம்மதியாக வாழட்டும். உன்னுடைய மஞ்சக்காணிச் சொத்தா இருந்த சின்ன ப்ளாட்டை விற்று விட்டு கோயம்புத்தூரில் சீனியர் சிடிசென் காட்டேஜே வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டுப் பகவதியுடைய பதிலுக்குக் காத்திராமல் வெளியில் சென்று விட்டார். 

இந்த அதிர்ச்சியான தீர்மானத்தைக் கேட்டவுடன் பகவதி மாமி அழுது கொண்டே, “என்னாங்கோ தயவு செய்து உங்களுடைய முடிவை மாற்றிக் கொள்ளுங்கோ. நான் சாகற மட்டும் இங்கு தான் இருக்க விரும்புகிறேன். நான் ராஜியை எவ்வளவோ படுத்தியிருக்கேன். இல்லை என்று சொல்லவில்லை. நான் இந்த விபத்துக்கு அப்புறம் ரொம்ப நொந்து போயிருக்கேன். பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லுவா. நான் ராஜியைப் படுத்தினதுக்கு எனக்குத் தண்டனை இந்த ஜன்மத்திலே கிடைத்து விட்டது. நான் என்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டேன்.என்னை இங்கிருந்து கோயம்பத்தூருக்கு மட்டும் கூட்டிக் கொண்டு போகாதேங்கோ. என்னுடைய பேரனுக்குக் கலியாணம் கழிந்து அவனுடன் நான் இருக்க ரொம்ப ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டிராதேங்கோ. நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அழ ஆரம்பித்தாள். தாத்தா அதைக் கண்டு கொள்ளாமல் வெளியில் சென்றார். தான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்கிறது என்று தாத்தா புரிந்து கொண்டார். 

இரண்டு நாட்கள் கழித்து ராஜியும் ரகுவையும் கூப்பிட்டுத் தன்னுடைய கட்டிலின் அருகில் உட்காரச் சொன்னாள் பகவதி மாமி. கண்கள் அழுது சிவந்திருந்தன. ராஜி “ஏனம்மா ஒங்க கண் இரண்டும் சிவந்து வீங்கியிருக்கே. சரியாத் தூங்கலையா” என்று கேட்டவுடன் பகவதி மாமி அழ ஆரம்பித்தாள். அழுது கொண்டே தாத்தாவின் கோயம்புத்தூர் பிளானைச் சொல்லித் திரும்பவும்  அழுதாள். “ராஜி, ரகு நீங்க இரண்டு பேரும் அப்பாவிடம் சொல்லுங்கோ. கோயம்புத்தூர் போக வேண்டாம் என்று”, பின்னர் ராஜியின் கையைப் பிடித்துக் கொண்டு “ராஜி நான் உன்னை  ரொம்பப் படுத்தியிருக்கேன். இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு எனக்குப் பகவானே தண்டனையைக் கொடுத்து விட்டார். உங்களையெல்லாம் விட்டு விட்டுக் கோயம்புத்தூருக்குப் போக எனக்கு மனசில்லை. நான் சாகற மட்டும் இந்த வீட்டில் தான் இருக்க விரும்புகிறேன். அன்றைக்கு ரமேஷ் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என்னை ஈட்டி போல் தாக்கியது. இதுவரை நான் எல்லோரையும் குற்றம் சொல்லித்தான் பழக்கம். அன்று ரமேஷிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஹாஸ்பிடலில் படுத்திருந்த போது அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நினைத்துப் பார்த்தேன்.அவன் சொன்னதில் ஒரு தப்பும் இல்லை. எல்லாம் என்னோட தப்பு என்று உணர ஆரம்பித்தேன். என்னுடைய தப்பை நான் உணர்ந்து அழுது அழுது இனி முதல் அந்தத் தப்பை பண்ணவே கூடாது என்று முடிவெடுத்திருக்கேன்” என்று ராஜியின் கையைப் பிடித்துக் கொண்டுக் கண்ணீர் விட்டு அழுதாள். 

ராஜியும் “அம்மா நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் படாதேங்கோ. நான் அப்பாவிடம் சொல்லி அப்பாவுடைய முடிவை மாற்ற முயற்சிக்கிறேன்” என்று சொல்லி விட்டு நேரே அவரிடம் சென்று “அப்பா நீங்கள் பண்ணறது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. யாரைக் கேட்டுக் கொண்டு இந்த முடிவை எடுத்தேள். நாங்கள் உங்களையும் அம்மாவையும் சீனியர் சிடிசன் ஹோமிற்கு அனுப்ப வேண்டும் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. உங்க முடிவை மாற்றுங்கோ. அம்மா ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் விட்டாள்” என்று அழாத குறையாகக் கூறினாள். 

“ராஜி, ரகு, இந்தக் கோயம்பத்தூர் சீனியர் சிடிசன் போகிற ஐடியா அம்மாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம். இந்த விபத்துக்குப் பிறகு அம்மா ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் விட்டாள், எனக்கும் தெரியும். அவளுடைய அஹங்காரமும் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்திருக்கு. அவள் முழுசா மாறுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை நீங்கள் ஒன்றையும் கண்டுக்காமல் இருங்கோ” என்று அப்பா சொன்னதும் ராஜிக்கும் ரகுவுக்கும் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அதே சமயம் அம்மா மாறிக்கொண்டு வருகிறாள் என்பதை அறிந்த ராஜிக்குச் சந்தோஷமாக இருந்தது. 

ஒரு நாள் பகவதி மாமி “ராஜி ஒன்று சொல்லுகிறேன். ரமேஷுக்குக் கலியாணம் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கு. நான் சாகறதுக்கு முன்னால் அவனை மாலையும் கழுத்துமாப் பார்க்கணம் என்று என் மனசு அடிச்சுக்கிறது” என்று சொன்னவுடன் “அம்மா நீங்க ஒன்றும் கவலைப் படாதேங்கோ. நீங்கள் நூறு வயசு வரை இருப்பேள். நான் ரமேஷிடம் சொல்லி அவனைச் சம்மதிக்க வைக்கிறேன்” என்று சொன்னாள். அன்று ராத்திரியே ரகுவிடமும் தாத்தாவிடமும் “இனிமேலும் ரமேஷுடைய காதல் விஷயத்தை மூடி மறைக்கிறதிலே அர்த்தமில்லை. ஒரு நாள் சமயம் பார்த்து அம்மாவிடம் சொல்லுங்கோ.அம்மா இந்தக் காதல் கலியாணத்திற்குச் சம்மதம் கொடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது” என்று கூறினாள். தாத்தாவும் ரகுவும் ராஜியுடைய இந்தக் கருத்தை ஆமோதித்தார்கள். “ராஜி, நான் பகவதியிடம் இந்த விஷயத்தைச் சமயம் பார்த்துச் சொல்லுகிறேன்” என்று தாத்தா கூறினார்.   

ஒருநாள் ராத்திரி தாத்தாவும் பகவதி மாமியும் ரூமில் இருந்து பேசிக் கொடிருந்தார்கள். தாத்தா இதுதான் சமயம் என்று நினைத்து “பகவதி, ரமேஷ் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கான். இரண்டு பேரும் MBA இல் ஒன்றாகப் படித்தார்கள். அவள் பெயர் ஷாலினி. அவா கன்னடகாரா. ஹாஸ்பிடலில் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்தாரே, அந்த டாக்டரும் அவருடைய மனைவியும் தான் ஷாலினியின் அம்மா அப்பா. ராஜிக்கும் ரகுவிற்கும் சம்மதம், எனக்கும் சம்மதம். ரமேஷ் இந்த காலத்துப் பிள்ளை. அவனுடைய விருப்பத்திற்கு இடைஞ்சலாக இருக்க யாருமே விரும்பவில்லை. நீ என்ன சொல்கிறாய்” என்று கேட்டவுடன் பகவதி மாமி, “அந்த டாக்டராலும் அவருடைய மனைவியினாலும்தான் நான் இன்றைக்கு நடக்கிறேன். அவா ஹாஸ்பிடலில் என்னை எவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். எனக்குப் பூரண சம்மதம். இப்போதாவது ரமேஷ் கலியாணத்திற்குச் சம்மதித்தானே அது போதும். ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். நீங்க கோயம்பத்தூர் போகிற பிளானை விட்டுருங்கோ என் பேரன் கலியாணம் கழிந்து அவனோடு இருக்க மனசு அடிச்சுக்கிறது” என்று சொன்னவுடன் தாத்தா, “சரி, பார்க்கலாம்” என்று சொன்னவுடனே பகவதி மாமியின் முகத்தில் ஒரு சந்தோஷம் தாண்டவமாடியது.

அடுத்த நாளே பகவதி மாமி “ரகு, ராஜி என்னை அந்த டாக்டராத்துக்குக் கூட்டிக்கொண்டு போ. என் பேரன் பார்த்து வைத்திருக்கிற பொண்ணைப் பார்க்கணம். அப்படியே நிச்சய தாம்பூலம் என்றைக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிப் பேசி விட்டு வரலாம்” என்று சொன்னவுடனே ராஜிக்கும் ரகுவிற்கும் என்ன சொல்லறது என்றே தெரியவில்லை. அப்படியே பகவதி மாமியின் கையைப் பிடித்துக் கொண்டு “அம்மா இன்றைக்கு தான் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நாளைக்கு வெள்ளிக்கிழமை சாயங்காலம் போறோம் ” என்று கூறவே தாத்தா ஒரு புன்சிரிப்புடன், “ரகு/ராஜி ரமேஷுக்குப் போன் பண்ணி இந்தச் சந்தோஷமான செய்தியைச் சொல்லி விடு” என்று சொன்னார்.  

ரமேஷின் நிச்சய தாம்பூலம் நல்ல விமரிசையாக நடந்தது. பகவதி மாமி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து, “இது அப்படி பண்ணனம், அது அப்படி பண்ணனம்” என்று ராஜியிடம் ஒன்றிற்கு இரண்டு முறை கேட்டுப் பண்ணினாள். இரண்டு மாதத்தில் ரமேஷ் ஷாலினியின் கலியாணமும் நன்றாக நடந்தது. பேரனின் மனைவியைப் பார்த்துப் பார்த்து பகவதி மாமி பூரித்துப் போனாள். இப்படியாகப் பகவதி மாமியின் அகங்காரம் உச்சகட்டத்தை அடைந்து, பின்னர் அந்த அஹங்காரம் எங்கு போயிற்று என்று தெரியாமல் விவேஹமாய் நடந்து கொள்ள ஆரம்பித்தாள். தானுண்டு தன் பூஜையுண்டு என்று இருக்க ஆரம்பித்தாள். ஒரு விஷயத்திலும் மூக்கை நுழைக்காமல் ராஜியையும் ஷாலினியையும் அவர்கள் விரும்பியபடி நடக்க அனுமதித்த பகவதி மாமியை எல்லோரும் பாராட்டினார்கள். 

படத்திற்கு நன்றி:http://www.canstockphoto.com/a-happy-family-%3A-a-old-couple-and-their-4813975.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.