டியூஷன் வகுப்பை எதிர்பார்ப்புடன் எண்ணியபடியே!!

3

 

அவ்வை மகள்

“செரியாத “ கல்வியின் சுமை..! (5)

பள்ளி முடிந்த பின்பு டியூஷன் சென்டரிலோ அல்லது தன் வீட்டிலோ தான் எடுக்கும் டியூஷன் வகுப்பிற்காய்ப் பள்ளியில் பரிதவிப்புடன் காத்திருக்கும் கணித ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுக்கு எட்டும் வகையில் கணிதத்தைக் கற்பிக்கும் கடைமை துறந்து – சதா சர்வகாலமும் வேறெந்தச் சிந்தனையிலோ செயலிலோ ஈடுபட்டவராய் மெய்மறந்த நிலையில் தென்படும் – அற்புதக் காட்சி கண்டோம்.

ஆசிரியர்களின் நிலை இவ்வாறனதென்றால் மாணாக்கரின் நிலையும் இவ்வாறானதே! அவர்களும் கூட டியூஷன் வகுப்பை எதிர்பார்ப்புடன் எண்ணியபடியே தான் வகுப்பில்!

ஆக ஒட்டுதல் இல்லாமலேயே ஒரு கபட நாடகத்தில் ஆசிரியரும் மாணவரும் இருவரும் எனப் பள்ளியில் வகுப்பறைகள் இயங்குமென்றால் இந்நிலைமையை என்னென்று சொல்வது?

“அட்டண்டன்ஸ் மாத்திரம் வேண்டாம்னு ஆயிடிச்சுனா–நாங்க ஏன் ஸ்கூலுக்கு வரப் போகிறோம்?” என்பதே பல மாணாக்கர்களின் நிலை!

ஆசிரியர்களுக்குப் பற்றும் வரவும் டியூஷனில் இருப்பதால், மாணாக்கர்கள் டியூஷன் வருவதென்பது கட்டாயமாக்கப் படுகிறதல்லவா?

இதனை வர்த்தகச் சூட்சுமம் எனலாம்!

சமுதாயத்திலே தேவையில்லாமல் (unnecessary) தேவையை (demand) ஏற்படுத்தி வெகு சாமர்த்தியமாகத் தனது வர்த்தகப் பொருளை வணிகர்கள் சமுதாயத்தின் மீது திணிப்பர்.

இவ்வாறு செய்பவர்கள் சொல்வதோ வேறுவிதமாக இருக்கும்! “ஜனங்க கிட்ட டிமாண்ட் இருக்கு!”–அவங்க தேவைக்கு நாங்க சேவை செய்கிறோம். இது ஒரு சினிமாத் தந்திரம் என்று கூடச் சொல்லலாமே! மக்கள் கேட்கிறார்கள்! நாங்கள் தருகிறோம்! எனறு திரைப்படத் தயாரிப்பாளர்கள்–இயக்குனர்கள் சொல்வதுண்டு!

பொதுமக்களில் எவராவது ஒரு இயக்குனர் அல்லது–ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்குச் சென்று–கதவிடித்து–எங்களுக்கு இந்தத் திரைப்படம் வேண்டும் என்று கேட்கிறார்களா?

கன்னாபின்னாவென்று, படு ஆபாசமாய்–வக்கிரமான உரையாடல்கள்–வன்முறைக் காட்சிகள் உள்ளடக்கிப் படம் எடுத்து வெளியிட்டு விட்டு–மக்கள் கேட்கிறார்கள் தருகிறோம் என்று அவர்கள் ரீல் விடுவதற்கும் டியூஷனைக் காட்டி இவர்கள் ரீல் விடுவதற்கும்–வித்தியாசம்?

சென்டம் சுந்தரம்

ஹன்ட்ரட் ஆறுமுகம்

நூத்துக்கு நூறு கிரி

எனத் தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக்கொண்ட இந்த டியூஷன் சக்கரவர்த்திகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே “fees”  வாங்கும் பரோபகாரிகள்–பெற்றோர் மாதாமாதம் பணம் செலுத்தவேண்டிய அந்த மாபெரும் பாரத்தை இறக்கி வைப்பவர்கள்!

அடுத்த வருட டியூஷன் படிப்புக்காக இந்த வருடமே இவர்களைப் பணம் கட்டி அட்வான்ஸ் புக்கிங் செய்ய வேண்டும்–அன்றேல் அம்பேல் தான்!

பேட்ச்-அடுத்த பேட்ச்–அடுத்த பேட்ச்–எனத் தொழிற்கூடங்களில்-ஒரு எந்திரம், பொருட்களைப்–பற்பல எண்ணிக்கையில்-வெளியே கொட்டுவதைப் போல–இவர்களது–இல்லம்–அல்லது டியூஷன் மையம்–குழந்தைகளை உமிழும்!

இவர்கள் குடியிருக்கும் தெருக்களில் டியூஷனுக்காய் வரும்–வந்து போகும் மாணவர்கள் ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலும்–அவர்களது வண்டி வாகனங்களின் அடைசலும் அப்பப்பா!

பணம் கட்டிக் குழந்தையைச் சேர்த்து விட்டால்–இவர்களைப் பார்ப்பதென்பது இயலாத ஒன்று! இவர்களைப் பார்க்க வேண்டுமென்றால்–பெற்றோர் ராபர்ட் ப்ரூசாக மாறி தொடர் முயற்சி–விடாமுயற்சி என–மிகப்பெரிய வைராக்கிய வாதியாக உருமாற வேண்டும்!

அப்படியே நீங்கள் அந்த டியூஷன் வாத்தியாரைப் பார்த்து–குழந்தை சரியாக மார்க் வாங்கவில்லையே என்று கேட்டுவிட முடியாது–அவ்வாறு ஒரு வேளை நீங்கள் கேட்டீர்கள் என்றால்–அலட்டல் இல்லாத சன்னமான குரலில் வக்கணையாய்ப் பதில் வரும்.

“குழந்தை படிக்கவில்லையே என நீங்கள் என்ன முயற்சி எடுக்கிறீர்கள்? கொடுத்தனுப்புகிற அசைன்மெண்ட் செய்ய வைக்க வேண்டாமா? நீங்கள் நல்ல முன்மாதிரியாக இருந்தால் தானே நடக்கும்?–மற்ற பெற்றோர்கள் எவ்வவளவு அக்கறையோடு–தன் குழந்தை எல்லாவற்றையும் செய்தாலொழிய படுக்க முடியாது என்று பார்த்துக் கொள்கிறார்கள்! பக்கத்தில் பெற்றோர் உட்கார்ந்தால்தான் இந்தக் காலத்துப் பங்களுக்கு! நீங்க ஒங்க ஜோலின்னு போனா எப்படி? டெஸ்ட் பேப்பர்ஸ் நீங்க வாங்கிப் பார்த்திருப்பீங்களே? ஒவ்வொரு பேப்பர்லையும் எழுதியிருக்கேனே! “poor performance – must work hard” பாருங்க–டெஸ்ட் கமெண்ட்சை ரெஜிஸ்டர்ல எழுதி வெச்சிருக்கேன்! ஒங்கள மாதிரி பிசி பேரண்ட்ஸ் கையில குழந்தையோட டேட்டா இல்லாம வந்துடுவாங்க–அதுக்குத் தான் ரெஜிஸ்டர். நீங்க வீட்டுக்குப் போய் பாருங்க exact  ஆக இதத்தான் எழுதியிருக்கேன் “poor performance – must work hard” சரி நீங்க தான் பிஸி! உங்க மேடம் என்ன பண்றாங்க! அவங்க குழந்தைக்கு ஹெல்ப் பண்லாமே!”

ஆக – தந்தை கோழியும் போய் குரலும் போன கதையாக” தொங்கிய முகத்தோடு–வெளியேறும் அதே நேரம் இரவு பையனை (பெண்ணை) எப்படி வெளாசுவது என்று தீர்மானம் செய்வதோடு–இந்த ஒதவாக்கரைப் பொம்பளை ஒண்ணையுமே ஒழுங்காச் செய்யறதில்ல–அவளையும் விடக்கூடாது–என மனதில் தான் வீட்டில் இரவு போட வேண்டிய சண்டையை உருவேற்றிக் கொள்வார்.

அன்று இரவு அவர்கள் வீட்டில் நடந்த குருட்சேத்திரக் காட்சியை அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டார் மிகக் கவனமாகப் பதிவு செய்திருப்பார்கள்! சாப்பிடாமலேயே அனைவரும் படுக்க, அடுத்த நாள் காலை அந்த மிகுந்த உணவை வீட்டை விட்டு எப்படி வெளியேற்றுவது எனத்தெரியாமல் அந்த அம்மாள் பட்ட வேதனையை எழுதத் தனி அத்தியாயம் வேண்டும்!

இப்பொழுதெல்லாம் டியூஷன் போக்கு மாறிவிட்டது! டியூஷன் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை–வெறும் டெஸ்ட் மட்டுமே வைக்கிறார்கள்! இறுதிப் பரிட்சைக்கான தொடர் பயிற்சியாம்! கற்றுக்கொள்வது மாணவர்களின் பொறுப்பாம்! அவர்களை எடைபோடுவது மட்டுமே இவர்களது வேலையாம்!

இது என்னடா கொடுமை?

2009ல், தாயகம் வந்தபோது பல்கலைக் கழக Academic Staff College ஏற்பாடு செய்திருந்த ஒரு பயிற்சி வகுப்பில் என்னைப் பயிற்றுனராக அழைத்திருந்தார்கள். அனைவரும் கல்லூரிக் கணித ஆசிரியர்கள்–பேராசிரியர்கள்–அவர்களைச் சந்தித்த அந்த அரைநாள் நிகழ்ச்சியில் இடையிலும் இறுதியிலும் அவர்களுடன் உரையாடினேன்! இதில் டியூஷன் பற்றிய பேச்சும் வந்தது. பயிற்சியின் போது ஒரு “சிறு குழுப் பணியாக”  (small-group assignment) அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்தேன்-நான்கு நான்கு பேராகக்–குழு அமைத்து, கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடையளிப்பது அந்த அசைன்மெண்ட்டின் நோக்கம்.

(1) டியூஷனில் உங்கள் மாணவர்கள் நல்ல ரிசல்ட் காட்டும்போது உங்கள் பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் ஏன் அவர்களால் மதிப்பெண் வாங்க முடிவதில்லை?

(2) டியூஷனில் நீங்கள் காட்டும் ரிசல்டை வைத்து–நீங்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்-டியூஷனில் சிறப்பாகக் கற்பிக்கும் நீங்கள் உங்கள் பள்ளி அல்லது கல்லூரி வகுப்புகளில் ஏன் சிறப்பாகக் கற்பிப்பதில்லை?

(3) டியூஷனில், குழந்தைகளுக்குக் கற்றுக் கொள்வதில் இருக்கும் குறைகளை உன்னிப்பாய்க் கவனித்து நீங்கள் அதன் நிவர்த்தி செய்வதாக ஏற்றுக் கொள்கிறோம். அவ்வாறு என்னென்ன கற்றல் குறைகளை நீங்கள் உங்கள் டியூஷனில், மாணவர்களிடையே கண்டீர்கள்?

(4) கேள்வி மூன்றிற்கு நீங்கள் தந்துள்ள பதிலில் நீங்கள் பட்டியலிட்டிருக்கிற கற்றல் குறைகள் உங்கள் பள்ளி அல்லது  கல்லூரி வகுப்புகளில் காணப்படுவதுண்டா?

(5) கேள்வி நான்கிற்கு உங்களது பதில் (ஆம் / இல்லை எதுவாக இருப்பினும்). ஏன் “ஆம்” ஏன் “இல்லை” என விளக்கவும்.

(6) உங்களுக்குத் தெரிந்த நான்கு கணிதமேதைகளின் பெயரைக் குறிப்பிடவும். அவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்க சிறப்பான காரணம்-தலா ஒன்று–பதிவு செய்யவும்.

(7) கணிதத்தில் மொழி வழக்கு முக்கியமானது–நீங்கள் கணித மொழிவழக்கை எப்படி அணுகுகிறீர்கள்?

(8) பாயின் கேர் என்பவர் யார்? அவரது கண்டு பிடிப்புக்கள் எவை எவை?

இவரது குழந்தைப் பருவம்–இவருக்கிருந்த முக்கியக் குறைபாடு இவற்றைப் பற்றிச்–சிறு குறிப்பு வரைக.

(9) கார்ட்னர் பல்நிலை அறிவுத்திறன் (multiple intelligence) பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பல்நிலை அறிவுத்திறன்  ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீங்கள் எண்ணுகிறீர்களா? ஆம் எனில்–அது எவ்வாறு உங்களது கற்பிக்கும் திறனைப் பாதிக்கிறது?

(10)  Drill and Practice என்பது கணிதக் கல்வியில் அதிகமாக எடுத்தாளப்படும் வாசகம். இந்த யுக்தியை நீங்கள் எவ்வாறு உங்கள் வகுப்புகளில் பயன்படுத்துகிறீர்கள்? இந்த யுக்தியின் நிறை குறைகள் யாவை?

இந்த வினாக்களுக்காக அவர்கள் தயாரித்த விடைகள் கண்டு-எத்தனை பின்னிலையில் நம் ஆசிரியர்கள் இயங்கி வருகிறார்கள்-நாம் எத்தனை பின்னிலையில் நம் மாணவர்களை வைத்திருக்கிறோம் எனப் புரிந்தது!

 

பல் நிலை அறிவுத்திறன் படத்திற்கு நன்றி:http://wik.ed.uiuc.edu/index.php/Intelligence(s)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on "டியூஷன் வகுப்பை எதிர்பார்ப்புடன் எண்ணியபடியே!!"

  1. மிகவும் பொருத்தமான இணைப்பை ஆதாரமாக வைத்துக்கொண்டு, தேவையான கருத்துக்களை உரைத்ததிற்கு நன்றி. நீங்கள் சொல்வது ஹைதராபாதில் உள்ள அகாடமிக் ஸ்டாஃப் காலேஜா? அது தெரிந்த பின் மற்ற கருத்துக்களை சொல்கிறேன். இப்போதைக்கு,
    (8) பாயின் கேர் என்பவர் யார்? அவரது கண்டு பிடிப்புக்கள் எவை எவை? என்ற கேள்வியை ரசித்தேன்.
    ஒரு சின்ன பாயிண்ட். இணையதளத்தின் வாசகர்கள் பாய்ந்து, பாய்ந்து படிப்பதால், நீண்ட கட்டுரையானால், நுனிப்புல் மேய்வார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதே கட்டுரையை மூன்று பாகங்களாக அமைத்தால் நல்லது என்று தோன்றுகிறது.

  2. டியூஷன் வகுப்பு பற்றி…
    கல்கியின் மகள் ஆனந்தி பள்ளிக்கூடம் செல்லும் சிறுமியாக
    இருந்தபோது அல்ஜிப்ரா கணக்கைப் புரிந்து கொள்ள மிகவும்
    சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமத்தை ரசிகமணி டி கே சி
    அவர்களுக்கு கடிதத்தில் விவரித்துள்ளார். ரசிகமணி அவர்கள்
    அல்ஜிப்ரா கணக்கை எளிதாகப் போடும் முறையை கடிதத்திலே
    விவரித்து எழுதி அனுப்பியுள்ளார். அதன் பின்னர் ஆனந்தி
    அவர்கள் கணக்கில் புலியாகிவிட்டார். இது ஆனந்தியே எழுதிய
    வாக்குமூலம். “ஆசிரியர்கள் எளிமையை எடுத்துவிட்டு கடினத்தை
    புகட்டுகிறார்களே!” என்பதுதான் ரசிகமணியின் ஆதங்கம்.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

  3. காலம் சென்ற திருமதி. ஆனந்தி ராமச்சந்திரன் எமது இல்லத்தில் சில நாட்கள் விருந்தினராக வந்திருந்தார். நாள்தோரும் மணிக்கணக்காக பேசி வந்தோம். அப்போது, இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எனக்கு deschooling என்ற கருத்து உண்டு. புரட்சிகரமானது என்பார்கள், சம்பிரதாயமான ஆசிரியர்கள். அதை பற்றி விவாதித்தபோது, என் கருத்தை அவர் ஆதரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.