தீதும் நன்றும் பிறர் தர வாரா!

 முனைவர் நாக பூஷணம்

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – (பகுதி – 6)

சட்ட நுணுக்கங்களுக்குப் போகும்முன் என்னுடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். என் எண்ண ஓட்டம் தன்போக்கில் ஓடாவிட்டால் , எண்ணிறந்த கருத்துக்களைக் கண்டறிந்து எங்ஙனம் பகிர்ந்துகொள்ள இயலும்? இதில் வரலாறு எதற்கு? இன்றுள்ள நிலை என்ன? எதற்கு இந்த இலக்கிய நடை? என்பது போன்று உணர்த்த முற்படுவோர் உளர் என அறிகின்றேன். வரவேற்கின்றேன். என்றாலும் வரலாறு அறியாமல் வளர் நிலைக்கு வழிகாணல் இயல்பாக இருக்காது என்று நம்புவோரில் நானும் அடக்கம். நேற்றைய வளமையும் , நாளைய வளர் நிலையும் இணைக்கப் பெறுவது இன்றைய நிலைமையைப் பொறுத்தே இருக்கும். எனவே வரல் ஆறு அறிவது நாம் போக இருக்கும் ஆறு/வழியை நிர்ணயிக்க உதவக் கூடும். எங்கே என்ன வித்திட்டோம்? என்றறிந்தாலே விளைவு குறித்துத் தெளிவாக இருக்க இயலும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” . நாம் விதைத்த வினைகளே விளைந்து நம் கண் முன்னே வளர்ந்து நிற்கும்.

அடுத்து எழுத்து நடையைக் குறித்து. வட்டார வழக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இதில் எது யாருக்கு எப்படிப் புரியும்? என்பது எனக்குத் தெரியாது. எனவே எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய இலக்கிய நடை ஏற்புடையதென்று எண்ணுகின்றேன்.

இனி சட்டத்துள் செல்வோம்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம். என்றாலும் சமுதாய அளவில் பல ஆண்டுகளாக உரிமை மறுக்கப் பட்டு , சமமான வாய்ப்பு வழியடைக்கப்பட்டு , காலம் காலமாக ஒடுக்கப் பட்டு , சமுதாய நீரோட்டத்தில் தன்னலமிகளால் தேக்கமுற முடக்கப் பட்டோர் பலர். இவர்களை அடையாளம் கண்டு அவர்களும் சமுதாய நீரோட்டத்தில் சம நிலை பெற வேண்டுவதே சட்டத்தின் சமமான பாதுகாப்பு.

இந்த இரு நிலைகளையும் எடுத்துரைப்பதே Equality before law – சட்டத்தின் முன் எல்லோரும் சமம். Equal protection of law – சட்டத்தின் சமமான பாதுகாப்பு என்ற சட்டப் பிரிவுகள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி , 14ஆவது பிரிவு முதல் வழி வகை செய்யப் பெற்றிருக்கக் காணலாம்.

சட்டத்தின் சம பாதுகாப்புப் பெற உரியவர்களை அடையாளம் காண ஏற்பட்ட பிரிவுகள் இவர்களை சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் என்று வகுக்கின்றன. இவர்களுள் பின் தங்கிய வகுப்பினர் , மகளிர் , சிறார் , அடங்கக் காணலாம். இவருள் மகளிர் குறித்த பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தே காண இருக்கின்றோம். மகளிர்கான சமுதாயச் சம நீதிக்கென்று சில பிரிவுகளை அரசியல் அமைப்புச் சட்டத்தில் அமைத்திருக்க காணலாம். Article – 14 – சட்டத்தின் சமமான பாதுகாப்பை உறுதி செய்யும். Articles – 15&16 , சம வாய்ப்புக்கு வழி வகுக்கும். 15 (3) , மகளிர்க்கென்று சிறப்புப் பாதுகாப்பிற்கு வழிவகை செய்யும் சட்டங்களுக்கு வகை செய்யும். பிற பகுதிகள் யாவும் , ஆண்/பெண் இரு பாலருக்கும் சமமாகக் கொள்ளப்பெற வேண்டியவை.

அரசு நெறிசெய் சட்டங்கள் கொண்ட 4ஆம் பகுதியில் சம வேலை வாய்ப்பு , சமமான வேலைக்கு சமமான ஊதியம் , சிறார்க்கு ஆரம்பக் கல்வி , கட்டாயமாக அளிக்கப் பெறல் வேண்டும் என்பனவற்றைக் காணலாம். பெண்களுக்கும் , உழைக்கும் மக்களுக்கும் , “மறைக்கப்”பட்ட , மறுக்கப்பட்ட கல்வி பாகுபாடின்றி வாய்ப்பளிக்கப் பெற இச்சட்டங்கள் வகை செய்யும்.

நாடுகளும் , உலக நாடுகளும் சட்டத்தால் சமமாக்க முனையும் ஏற்றத்தாழ்வுகளைக் ,காலம் காலமாகப் பின் பற்றப்பெற்று வரும் சமுதாயப் பழக்க வழக்கங்கள் அவ்வளவு எளிதாக இதற்கு வழி விடுவதாக இல்லை. வழக்காறு வழி வந்த customary law , அவற்றைத் தொகுத்து அவரவர் நம்பிக்கை அடிப்படையிலான குடும்ப நலச் சட்டங்கள் , தன்னலத்தின் அடிப்படையில் உருவாகி சமுதாய அளவில் ஊறி நிலைத்து விட்ட சில பல சடங்குகள் என்று இன்னமும் பெண்கள்/ மகளிர் சம வாய்ப்பு , சம நீதி , சமுதாயச் சம நோக்கு , ஆகியவை மறுக்கப் பெற்றோ , ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படுத்தப் பட்டோ வருவதை இன்னமும் காணலாம்.

பின் வரும் சட்டங்களே இதற்குச் சான்று பகரும்.

1. மகளிருக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் சட்டங்கள்.

2. மகளிர் பாதுகாப்பிற்கான குற்றவியல் சட்டங்கள்.

3.மணக்கொடை தடுப்புச் சட்டம். (Dowry Prohibition Act)

4. மகளிர் / சிறார் சார்ந்த இழிதொழில் வணிகத் தடுப்புக்கானச் சட்டங்கள்.

5. மகளிரை இழிவு படுத்துவதற்கெதிரான பாதுகாப்புச் சட்டம்.

இன்ன பிற சமுதாயப் பாதுகாப்பிற்கானவை.

ஜீவனாம்சம் , சொத்துரிமை , விதவைகள் சொத்துரிமை , வயதானவர்களுக்கான வாழ்வாதார உரிமைக்கு வழி வகை, பரம்பரைச் சொத்தில் உரிய பாகம் பெற மகளிருக்கு உரிமை (copercenary (பங்காளி) right to ancestral property) , உடன் கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க Abolition of Sati , குழந்தை மணத்தைத் தடை செய்ய Abolition of Child Marraiage Act ,என்று பல்வேறு சட்டங்களும் சட்ட வரைவுகளும் , சட்டச் சீரமைப்புகளும் , காலத்தின் தேவையறிந்து பிறப்பிக்கப் பெறுகின்றன.இத்தனை பாதுகாப்புச் சட்டங்கள் இருப்பதே மகளிருக்கு எதிராக உள்ள கொடுமைகள் பலவற்றிற்கும் சான்று பகர்கின்றன.

மகளிருக்கெதிரான தவறுகளைத் தடுக்கச் சட்டங்கள் மட்டுமே போதா. அவை குறித்து அறிந்து தங்களுக்கு அரணாக அவற்றைப் பயன் படுத்திக் கொள்ளும் தெளிவு மகளிர்க்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் வேண்டும். அதே தெளிவு சட்டம் செய்வோர்க்கும் , சட்டத்தைச் செயல் முறையில் பயன் படச் செய்வோருக்கும் குறிப்பாக காவல், மற்றும் நீதி சார்ந்த துறையினருக்குக் கட்டாயம் வேண்டும்.

தனி மனித மன மாற்றம் , சமுதாயச் சிந்தனை மற்றும் செயலாக்க மாற்றம் ஆகியவையே மனித உரிமை , மனித மாண்பு , மனித மதிப்பு , ஆகியவற்றைக் காக்க இன்றியமையாதவையாகும். மனிதம் என்பதுள் ஆண் பெண் அடக்கம். Human Rights என்பது முழுமை பெற Woman’s Rights காக்கப் பெறுதல் வேண்டும்.

இத்தகைய நன்னாள் வரும் காலமே சமுதாயச் சமநீதி முழுமையாக அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் நன்னாளாக அமையும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.