“சாலைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் சாலைப் பணிக்கே”
சித்திரை சிங்கர்
சென்னை.
சென்னையைச் சுற்றியுள்ள சில பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால், இணைந்தபின், இணைக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் கட்டாயமாக பாதிக்கப்படும் எனவே அந்தந்த பகுதிகளை இணைத்து புதிதாக ஒரு தனி மாநகராட்சிதனை உருவாக்கலாம் என்று சொன்னவர்கள் வாயில் சர்க்கரையைத்தான் போட வேண்டும். சென்னையில் இப்போது புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக அம்பத்தூர் நகரில், அதன் உள்பகுதியாகட்டும் மெயின் ரோடுகள் ஆகட்டும் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாகாவா இருக்கிறது. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகன “ஸ்பேர் பார்ட்ஸ்” விற்பனை செய்யும் கடைகளில்தான் கூட்டம் அதிகமாக உள்ளது.
இப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்களும் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. விளையாட்டுப் போட்டிகள் வைத்து அவர்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்துக்கு சென்னை மாநகராட்சியின் நிலைமை உள்ளது. முன்பு இருந்த உறுப்பினர்கள் எவ்வளவோ பரவாயில்லை. (ஏதோ கொஞ்சம் வேலைகளும் நடந்தது உறுப்பினர்களையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது) என்கின்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புதியதாக இணைக்கப்பட்ட அம்பத்தூரில் மண்டலக்குழு கூட்டம் நடைபெறுவதில் கூட பல சிக்கல்கள் உள்ளதால் கூட்டம் நடைபெறாமல் இப்பகுதியின் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், பாதிக்கப்படுவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து ஓட்டு போட்ட பொது ஜனம்தானே..? இருப்பினும், இத்தகு சிக்கல்களுக்கு இடையில் நமது மேயர் அவர்கள் புதிதாக இணைக்கப்பட்ட “அம்பத்தூரில் சாலைப் பணிக்கு” இருபத்திநான்கு கோடி ரூபாய்கள் ஒதுக்கியுள்ளது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதே. இப்போது ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக “சாலைப்பணிக்கு ” முறையாக சென்று அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீராக வேண்டும் என்பதே நகர மக்களின் ஆசை. இப்போது கோரப்பட்டுள்ள ஒப்பந்தம் மாநகராட்சியின் வழியாக போடப்பட்டாலும், நடக்கும் சாலைப் பணிகளை மேற்பார்வை இட சமுதாய அக்கறையுள்ள சிலரையும் இப்பகுதியில் செயல்படும் நல சங்க சார்பில் அதன் நிர்வாகத்தினர்களில் ஓரிருவரையும், பகுதி வணிக சங்கங்களின் சார்பாக ஒருவரையும் என்னதான் பெரிய பெரிய நாளிதழ்களில் செய்திகள் வந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக பகுதியின் அவல நிலைகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்ட உதவிய உள்ளூர் பத்திரிக்கைகள் சார்பாக ஓரிருவரையும் கொண்டு ஒரு குழுவினை உருவாக்கி அவர்களின் மேற்பார்வையில் இச்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் இப்போது சாலைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் நிறைவாக சாலைப் பணிக்கே உபயோகமாக இருக்கும்.
மாநகராட்சி மேயர் அவர்கள் கட்டாயமாக இதனைச் செயல் படுத்துவார்கள் என்று நம்புவோம்