பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18

2

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ் எழுத்துப் பாதுகாப்பியக்கம், தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஆகியவை சேர்ந்து கிரந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயத்தமாக, பொதுக் கூட்டத்துக்கு அழைத்த பிரசுரத்தின் சுருக்கம்:

“……….செம்மொழி தமிழுக்கு அரசால் பெறப்பட்டுள்ள குறியீடுகள் வெறும் 48 குறியீடுகளே. மொத்த ஒதுக்கீடு 128 இடங்கள். இந்த 48 குறியீடுகளில் 41 குறியீடுகள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படுவன. ………. தமிழுக்கேயான குறியீடுகளைக் கிரந்தத்திற்கு வழங்க வேண்டுமென ஒரு முயற்சி நடைபெறுகின்றது. காஞ்சி மடத்து சிறி ரமண சர்மா என்பவர், தமிழுக்கான ஒதுக்கீட்டு இடத்தில் 27 கிரந்த குறியீடுகளைச் சேர்த்து அதை விரிவாக்கப்பட்ட தமிழ் என்று அழைக்கவேண்டும் என முயல்கிறார். ……. இறுதியாக 27 கிரந்த குறியீடுகள் தமிழ்க் குறியீட்டுக்கான இடத்தில் சேர்க்கப்படவுள்ளன. எனவே இந்த அரசாணை மூலம்  தமிழ்  வரிவடிவம்  கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கி விடுகின்றது.

கிரந்தக் கலப்பிற்கு முனைய……… தமிழின் துய்மையைக் கெடுத்து தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை குன்றச் செய்து அன்னிய சொற்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி காலப் போக்கில் தமிழை அழித்திடும் துரோக எண்ணங்களே காரணம்………. பண்டைய கல்வெட்டு, மத நூல்கள் ஆகிய ஆய்வுகளுக்கு கிரந்தம் தேவை என்ற வெற்றுரைகளை முன் வைத்து மொழிக் கலப்பை ஞாயப்படுத்தும் தந்திரமும் கையாளப்படுகிறது.”

நடக்கும் விவாதத்தின் ஒரு அடையாளமாகப் பொதுக் கூட்ட அழைப்பு வாசகத்தைச் சுருக்கி மேலே தந்திருக்கிறேன். (முழு அழைப்பையும் இங்கே பார்க்கலாம்: https://groups.google.com/group/tamilmanram/browse_frm/thread/76cd68044e7e0705?hl=en).

இன்னொரு உதாரணமாக, ஒருங்குறியில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதை எதிர்த்து அந்தக் குழுமியத்திற்கு மின்னஞ்சல் அனுப்பக் கோரிப் பலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் தலைப்பு:

Subject: எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – இந்திய ஏகாதிபத்தியத்தின் மொழி அழிப்பு முயற்சியை “Unicode Consortium” – திற்கு தெரிவிக்க மின்னஞ்சல் அனுப்புவோம்

பேராசிரியர் இ.அண்ணாமலை விளக்கப் பதில்:

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது ஒரு கருத்தை விவாதிக்க, வள்ளுவர் காட்டிய வழி. இன்று ஒருங்குறியில் கிரந்தம் பற்றிப் பொது மேடைகளிலும் இணைய அரங்குகளிலும் சிலர் நடத்தும் விவாதம், சொன்னது என்ன என்பதன் உண்மையை நாடாமல், சொன்னது யார் என்பதை வைத்தே நடப்பது போல் தோன்றுகிறது. இதனால், உண்மை விபரங்களை அறியும் முயற்சி இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறது. கிரந்தப் பிரச்சனையில் கட்சி கட்டாதவர்களிடம் இது தவறான எண்ணத்தையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. விபரங்களை உள்ளபடி தருவதே இந்தப் பதிலின் நோக்கம். கிரந்தம் பற்றி நான் முன்னொரு முறை எழுதியபோது என்னிடம் முழு விபரமும் இல்லை. கூடுதல் விபரங்கள் தந்து, வாசகர்கள் தாங்களே ஒரு முடிவுக்கு வரவே இந்த விளக்கமான பதில். இந்த விவாதத்தில் உண்மையான விபரங்களை வெளிப்படுத்தாவிட்டால், விவாதத்தின் பயன் தமிழுக்குப் போகாது; அரசியல் ஆதாயத்திற்கே துணை செய்யும்.

மேலே உள்ள அழைப்பு, “ஒருங்குறியில் சீன மொழிக்கு 25000 (சரியான எண்ணிக்கை 20902) குறியீட்டு இடங்கள், சிங்களத்திற்கு 400 (சரியான எண்ணிக்கை, தமிழைப் போல், 128) இடங்கள், செம்மொழித் தமிழுக்கு 128 இடங்கள்தானா?” என்ற கேள்வியுடன் துவங்குகிறது. இந்தக் கேள்வி, ஒருங்குறி பற்றிய அடிப்படையான புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருங்குறி ஒரு கருவி; உலகத்து மொழிகளை அவற்றின் எழுத்தில் கணினியில் கையாள உதவும் கருவி; எழுதுவதைத் தரப்படுத்தும் கருவி. ஒரு வரிசையில் ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடம் கொடுத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீட்டு எண் (code point) கொடுக்கிறது ஒருங்குறிக் குழுமியம். சொல்லை அலகாகக் கொண்டு எழுத்து முறை அமைந்த சீன மொழியில் எழுத்துகள் அதிகமாக இருப்பது இயற்கை. தமிழ், ஒலியின் அடிப்படையில் குறைந்த எழுத்துகளைக் கொண்டு எல்லாச் சொற்களையும் படைக்கிறது. எழுத்துகள் குறைவாக இருப்பதால், தமிழுக்கு ஒருங்குறியில் குறைந்த இடங்கள். ஒருங்குறியில் இடம், மொழியின் தகுதியைப் பொறுத்து அமைவதல்ல. அதனால் குறைந்த இடங்கள் தமிழின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது.

தமிழ் எழுத்துகளுக்கு அதிக இடம் வேண்டும் என்று கணித்தமிழ் சங்கம் முதலான அமைப்புகளும், தமிழக அரசும் கேட்பது தொழில்நுட்ப அடிப்படையில். (இந்தத் திட்டத்தை இங்கே பார்க்கலாம்: www.tamilnet.com/img/publish/2010/11/TACE16_Report_English.pdf) தற்போது ஒருங்குறியில் தமிழ் உயிரெழுத்துகளும் அகரமேறிய மெய்யெழுத்துகளும் தனித்தனியே குறியீட்டு எண்கள் பெறுகின்றன. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனி எண் கிடையாது. (தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சொல்லும் தொல்காப்பியம் உயிர்மெய்யெழுத்துகளைச் சேர்க்கவில்லை என்பதை இங்கே மனத்தில் கொள்ளலாம்). உயிர்மெய் எழுத்துகளைக் கணினி ஒரு மென்பொருளால், (இதற்கு rendering engine என்று பெயர்), அகரமேறிய மெய்யையும் உயிர்க்குறியையும் சேர்த்து, உருவாக்குகிறது. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனியே குறியீட்டு எண்கள் ஒதுக்க வேண்டும் என்பதே மேலே சொன்ன கோரிக்கையின் மூலக் கருத்து.

தமிழ் எழுத்துகளுக்குக் குறியீட்டு எண், ஒருங்குறியில், மற்ற இந்திய மொழிகளைப் போல, 7 பிட் அலகைப் பயன்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. (இது எல்லா இந்திய மொழிகளுக்கும் இந்திய அரசு அங்கீரித்த ISCII எனப்படும் குறியீட்டு முறை). அதாவது, 0, 1 என்ற இரண்டே எண்களைப் பயன்படுத்தி எந்தத் தகவலையும் எண்வயப்படுத்தும் கணினியில், 27 தகவல்களை இந்த அலகால் எண்வயப்படுத்த முடியும். கணினித் துறையில் இந்த அலகு காலாவதி ஆகி வருகிறது. இப்போது 16 பிட் அலகே (216) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் எழுத்துகளை எண்வயப்படுத்த இந்த விரிந்த அலகை வேண்டுகிறது மேலே சொன்ன கோரிக்கை. தமிழ் எழுத்துகளின் விரிந்த எண்வய முறைக்கு TACE (Tamil All Character Encoding) என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது ஒருங்குறியில் தனியார் பயன்படுத்த மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இடப்பட்டிருக்கிறது.

ஒருங்குறிக் குழுமியம், இப்போது தமிழ் எழுத்துகளுக்குக் கொடுத்துள்ள எண்வய முறையை மாற்ற விரும்பவில்லை. ஏற்கனவே முடிவு செய்த தமிழ் எழுத்துக்கான  எண்வய முறையை மாற்றுவதால் எழும் நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். முதலாவது, ஒருங்குறியில் ஒரே மாதிரியாக இந்திய மொழிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உள்ளமைப்பை இந்த மாற்றம் பாதிக்கும். இரண்டாவது, விரிந்த எண்வய முறை அமுலுக்கு வந்தால், தமிழில் பழைய முறையில் கோர்க்கப்பட்ட ஆவணங்களை எளிதாகப் படிக்க முடியாது. மூன்றாவது, புதிய எண்வயமுறை இல்லாமல், சில பயனேற்ற மென்பொருள்களை (application software) – குறுஞ்செய்தி அனுப்ப, அச்சிடத் தேவையானவை – தமிழில் பிசிறில்லாமல் பயன்படுத்த முடியாது என்று சொல்லும் குறை ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை; கணினி வல்லுநர்கள் தீர்வு காணக் கூடிய பிரச்சனை. ஒருங்குறிக் குழுமியத்தின் இந்தச் சிந்தனை, தமிழின் தகுதி பற்றியது அல்ல.

ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 128 இடங்களில் 41 இடங்கள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பது அழைப்பில் காணப்படும் மற்றொரு தவறான விபரம். வழக்கில் உள்ள சில கிரந்த எழுத்துகளோடு சேர்த்துத் தமிழ் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் 48. மீதியுள்ள இடங்கள் தமிழ் எண்களுக்கும் வேறு சில குறிகளுக்கும் கொடுக்கப்பட்டு, சில இடங்கள் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதற்காகக் காலியாக விடப்பட்டுள்ளன. 41 இடங்களில் புதிய கிரந்த எழுத்துகள் இல்லை. அப்படிச் சேர்க்கும்படி யாரும் சொல்லவும் இல்லை. (ஒருங்குறியின் தமிழ்க் குறியீட்டுப் பட்டியலை இங்கே பார்க்கலாம்: http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf )

டாக்டர் ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ் (Extended Tamil) பற்றிய முன்வரைவில் கிரந்த எழுத்துகளை அப்படியே தமிழ் எழுத்துகளோடு சேர்த்து எழுதும்படி சொல்லவில்லை. (அதை இங்கே பார்க்கலாம்: http://www.tamilnet.com/img/publish/2010/11/20100710-
extended-tamil-proposal.pdf
). சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும்போது, அதில் உள்ள, ஆனால் தமிழில் இல்லாத, வர்க்க எழுத்துகளையும் வேறு சில எழுத்துகளையும் (மொத்தம் 26 எழுத்துகள்; 27 அல்ல) இணையான தமிழ் எழுத்துகளில் மேல்குறியிட்டு (super script) எழுதலாம் என்றே சொல்லியிருக்கிறார். அதாவது, சமஸ்கிருதத்தில் உள்ள kha, ga, gha போன்ற வர்க்க ஒலிகளை க2 க3, க4 என்றும் உயிர்ப்புடைய ரு, லு போன்ற ஒலிகளை ரு2, ல2 என்றும் எழுதலாம் என்றே சொல்கிறார். சமஸ்கிருதத்தின் இந்த ஒலிகளை கிரந்த எழுத்துகளால் எழுதும் சாத்தியத்தோடு ஒப்பிட்டு, எண்குறியிட்ட தமிழ் எழுத்துகளே ஏற்றவை என்ற தன் முடிவைச் சொல்கிறார்.

சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரை, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும், இன்றும் உள்ள, ஒரு மரபிற்குக் கணினியின் துணையை நாடுகிறது; புதிதாக ஒரு எழுத்து வழக்கைப் பரிந்துரைக்கவில்லை. இந்த மரபில் தமிழ் எழுத்துகளில் எண்குறியிட்டு எழுதும் வழக்கம் இருக்கிறது. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும் மரபு, அதை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபிலிருந்து வேறுபட்டது.
இந்தப் பரிந்துரை சமஸ்கிருதத்தை, தேவநாகரியில் அல்லாமல், தமிழ் எழுத்துகளில் எழுதும் முறை பற்றிய பிரச்சனை. இங்கு மொழி வேறு, எழுத்துரு வேறு என்ற உண்மையைச் சுட்ட வேண்டும். தேவநாகரி, ரோமன் போன்ற எழுத்துருக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படுவது பலரும் அறிந்த உண்மை. ஒரு மொழி ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களில் எழுதப்படுவதும் உண்மை. வலைப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் சிலர், தமிழ் எழுத்துரு அவர்களுக்குக் கிடைக்காததால், தமிழை ரோமன் எழுத்துகளில் எழுதினாலும் அது தமிழ் மொழிதான்.  சமஸ்கிருதத்தை, தமிழ் எழுத்துரு உட்பட, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்கும் பல எழுத்துருக்களில் எழுதுவது வரலாறு காட்டும் உண்மை.

சமஸ்கிருதத்தை தமிழ் எழுத்துருவில் எழுதுவதைத் தமிழ் மொழியின் பிரச்சனையாகப் பார்ப்பது, அது தமிழ் நெடுங்கணக்கை நீட்டிக்கிறது என்ற எண்ணத்தால்; தமிழ் மக்கள் (தோசை, தலித், போகம் (‘crop’) போன்று) தாங்கள் பேசும் சொற்களில் உள்ள ஒலிப்புடைய (voiced) எழுத்துகளை (ga, da, dha, ba என்ற அவற்றின் உச்சரிப்பைக் காட்டும் முறையில்) எழுத விரும்பி, கிரந்த எழுத்துகளை (அல்லது எண் மேலேற்றிய தமிழ் எழுத்துகளை (க2, ட2, த2, ப2)) பயன்படுத்திவிடலாம் என்னும் பயத்தால்.

சர்மாவின் முன்வரைவை உத்தமம் (INFITT) என்னும் தமிழைக் கணினியில் பயன்படுத்தும் முயற்சிகளில் முன்னணியில் நிற்கும் அமைப்பும், சில நிறுவனங்களும், சில தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் விரிவுத் தமிழ் ஒருங்குறியில் இடம்பெற வேண்டாம் என்று ஒருங்குறிக் குழுமியத்திற்குக் கோரிக்கை அனுப்பினார்கள். (இதை இங்கே பார்க்கலாம்: http://www.infitt.org/pressrelease/INFITT_Response_to_Extended_Tamil_
proposal.pdf
). இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள தமிழ் நெடுங்கணக்கை இது மாற்றுகிறது என்னும் வாதம், சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டில் எழுதும் மரபில் உள்ள பிரச்சனையைத் தமிழ் நெடுங்கணக்கிற்குள் கொண்டுவர வேண்டாம் என்னும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

விரிவுத் தமிழை எதிர்க்கும் வாதத்தின் நிலைப்பாடு இதுவே: “தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவை இல்லை; தமிழர்கள் தங்கள் தமிழ் உச்சரிப்பில் காட்டும் சில புதிய ஒலிகளை வடிக்க எழுத்து வேண்டாம்; தமிழ்நாட்டில் வழங்கும் தமிழல்லாத எந்த மொழியையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதத் தேவை இல்லை; அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படும் ரோமன், தேவநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு விரிவாக்கப்பட்ட எழுத்து (Extended Roman, Extended  Devanagari) இருப்பது போல், தமிழுக்கு எழுத்துமுறை விரிவு, கணினிக்கு மட்டுமே என்றாலும், தேவை இல்லை.”

ஒருங்குறிக் குழுமியம், சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் அது ஒரு சதித் திட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டது அல்ல; தொழில்நுட்ப ரீதியில் தேவை இல்லை என்பதே. புதிய ஒலிகளை எண் குறியீடாக ஒருங்குறியில் ஏற்கனவே இருக்கும் எண்களை வைத்தே எழுதலாம் என்பது அதன் கருத்து.

தமிழ் எழுத்துகளுக்கு யாரும் எண்குறியிட்டுப் புதிய உச்சரிப்புகளைக் காட்ட விரும்பினால், கிரந்தம் தேவை இல்லை. இப்போது ஒருங்குறியில் உள்ள எண்களை வைத்தே, விரிவுத் தமிழ் இல்லாமலே, எழுதலாம். ஒருங்குறியில் கிரந்தத்தைத் தடுத்தாலும் இதைத் தடுக்க முடியாது.
கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பது தனியான வேறு கோரிக்கை. ஒருங்குறியில் உள்ள எத்தனையோ எழுத்துருக்களைப் போல, கிரந்தத்திற்கும் இடம் வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு, கிரந்த எழுத்து முறை வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒருங்குறிக் குழுமியத்திற்கு அனுப்பியது. (அதை இங்கே பார்க்கலாம்: http://dakshinatya.blogspot.com/2010/12/grantha-goi-chart.html) கிரந்தக் கோரிக்கையில் சில தமிழ் எழுத்துகளைக் கிரந்த நெடுங்கணக்கில் சேர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தமிழக அரசு நேரம் கேட்டதால், இதன் மீது முடிவெடுப்பதைக் குழுமியம் தள்ளிவைத்திருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இது தமிழ் பற்றிய பிரச்சனை அல்ல; கிரந்தம் பற்றிய பிரச்சனை. எனவே, இது தமிழைப் பாதிக்கும் என்ற வாதத்தை ஒப்புக்கொள்ளாது.

ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் இடம் பெறும் தேவைக்கான பல காரணங்களில் சமஸ்கிருத்தை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபு ஒன்று.
சர்மா இந்த மரபின் தேவைக்காகவே ஒருங்குறியில் கிரந்தத்தைச் சேர்ப்பது பற்றித் தனியாக வேறு ஒரு முன்வரைவு அனுப்பினார். டாக்டர் நா. கணேசன் ஒரு முன்வரைவை அனுப்பினார். ஒருங்குறிக்கு யாரும் பரிந்துரைகள் அனுப்பலாம். தமிழும் தகவல் தொழில்நுட்பமும் அறிந்த சிலர் அனுப்புகிறார்கள். குழுமியம் தொழில்நுட்ப அடிப்படையில் – அரசியல் அடிப்படையில் அல்ல – பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கிறது.  அது  நடைமுறைச் சிக்கல் உட்பட எல்லாவற்றையும் சீர்தூக்கி முடிவு செய்யும். அரசின் பலமோ, அரசியல் விளவுகளோ அந்த முடிவில் முக்கிய இடம் வகிப்பதில்லை.

தமிழுக்கே உரிய மூன்று (ழ, ற ன) எழுத்துக்களையும், எ, ஒ என்ற இரண்டு உயிர்கள் மெய்யோடு சேரும்போது எழுதும் இரண்டு உயிர்க்குறிகளையும் விரிவாக்கப்பட்ட கிரந்தத்தில் சேர்க்கும் பரிந்துரை, இந்திய அரசின் கோரிக்கையில் இருக்கிறது. (எ, ஒ என்ற  இரண்டு உயிர் எழுத்துகளுக்கு கிரந்த எழுத்திலேயே கூடுதல் குறியிட்டு (diacritic marks) எழுதவே பரிந்துரை இருக்கிறது). இது, கிரந்த வல்லுநர்கள் பலர் சேர்ந்த ஒரு குழு செய்த முடிவு. மேலே துவக்கத்தில் காட்டிய அழைப்பிதழில், ‘தமிழ் வரிவடிவம் கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கிவிடுகின்றது’ என்று தவறாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது இதைத்தான்.

சர்மாவின் முன்வரைவில் தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகளைக் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும் பரிந்துரை இல்லை. அவர் நவீன சமஸ்கிருத்தில் தமிழ் உட்பட பிறமொழிச் சொற்களை, முக்கியமாகப் பெயர்களை (names), எழுதும் தேவை ஏற்படும்; அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிரந்த விரிவு (Extended Grantha) தேவைப்படும்; அதில் கூடுதல் குறி சேர்த்த கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாம் என்று சொல்கிறார். எடுத்துக்காட்டாக, z என்ற ஒலியுள்ள Xerox, zebra என்ற ஆங்கிலச் சொற்களை ஜ-இன் கீழ் இருபுள்ளி இட்டுக் காட்டலாம் என்று சொல்கிறார். தொல்காப்பியர், தமிழ் என்ற தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத்தில் எழுதும்போது, தமிழ்நாட்டில் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தமிழும் படிக்கத் தெரியும் என்பதால், கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளையும் உயிர்க் குறிகளையும் ஒருங்குறியில் உள்ள தமிழ் எழுத்துப் பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால், இது ஒருங்குறிக் குழுமியத்தின் ஒவ்வொரு எழுத்து முறைக்கும் தனிப்பகுதி (block) இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு  முரணானது. எனவே, இந்திய அரசின் கோரிக்கையில் தமிழில் உள்ள மூன்று எழுத்துகள் கிரந்தப் பகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிரந்த எழுத்துகளில் பல காலமாக தமிழ் எழுத்துகளோடு ஒரே அல்லது ஒத்த வரிவடிவம் உடைய உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருந்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின்படி மூன்று எழுத்துகள் அதிகமாக இருக்கும்.

கிரந்த எழுத்து முறை பற்றிய பிரச்சனையைத் தமிழின் பிரச்சனை ஆக்கத் தேவை இல்லை. இது கிரந்த எழுத்து முறையை நவீனமாக்கும் முயற்சி. தமிழ் நெடுங்கணக்கின் சில எழுத்துகள் கிரந்த எழுத்து முறையில் சேர்வது தமிழைக் கெடுப்பது ஆகாது; தமிழைத் தீட்டுப்படுத்தாது. தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் உச்சரிப்பில் Tamil என்று எழுதுகிறார்கள்; தமிழ் உச்சரிப்பின்படி எழுத வேண்டும் என்றால் Thamizh என்று எழுதலாம்; ஒரு ஆங்கிலேயர் Thamiழ் என்று எழுதலாம் என்று சொன்னால், தமிழ் கெட்டுப் போகும் என்று சொல்ல மாட்டோம், அல்லவா? ஆங்கிலத்தைக் கெடுக்கிறது என்று ஆங்கிலேயர்கள் சொல்லலாம். இதே போல், புதிய எழுத்துகள் கிரந்தத்தைக் கெடுக்கிறது என்று பழமையைப் போற்றும் சில கிரந்தவாதிகள் சொல்லலாம்.

தமிழுக்குக் கேடு என்று சிலர் சொல்லும்போது தமிழ்ச் சொற்களில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது சுலபமாகிவிடும் என்பதையே குறிக்க முடியும் என்று மேலே சொன்ன விபரங்கள் காட்டும். தமிழ் எழுத்துகளும் ரோமன் எழுத்துகளும் ஒருங்குறியில் தனித்தனியே இருந்தும், தமிழில் எழுதும்போது ரோமன் எழுத்துகளைச் சேர்க்க முடிவதுபோல, தமிழ் எழுத்துகளும் கிரந்த எழுத்துகளும் தனித்தனியே இருந்தாலும், தமிழில் எழுதும்போது கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. அவர்களைத் தடுக்க வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை முடக்குவது வழி அல்ல; அவர்களுடைய மொழி நடத்தையை மாற்ற இசைவு வழியில் முயலுவதே வழி.

கிரந்த எழுத்தோடு தமிழ் எழுத்தைச் சேர்க்கலாமா என்ற கேள்வி, சூடேறிய விவாதத்தில், ஒருங்குறியில் கிரந்தத்திற்குத் தனியிடம் வேண்டுமா என்ற கேள்வியாக உருமாற்றம் பெற்றுவிட்டது. இதற்கும் கிரந்த எழுத்துகளில் தமிழ் எழுத்துகள் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழில் ரோமன் எழுத்துகளைச் சேர்த்து எழுதுவது எப்படி சாத்தியமோ அப்படித்தான் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து எழுதுவதும் சாத்தியம். இதனால், ரோமன் எழுத்துகள் ஒருங்குறியில் வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது; சொல்லவும் மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்திற்கு இடம் தருவது பற்றிய கேள்வி, தமிழ் மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. தமிழ் மொழி வரலாறு, இலக்கிய வரலாறு உட்பட்ட வரலாற்று ஆய்வு பற்றிய கேள்வியும் ஆகும். சமஸ்கிருதம், கிரந்தம் பற்றிய கேள்வியும் ஆகும். இந்தக் கேள்விக்கான பதில் காண்பதில் தனித்தமிழ் அறிஞர்களின் கருத்து, ஒரு சிறு பகுதிதான். தமிழ் வரலாற்று ஆய்வுக்குக் கிரந்தம் தேவை என்பது வெற்றுரை என்று சொல்லி, அது ஏன் பயனற்றது என்றுகூடச் சொல்லாவிட்டால், இந்த வெறும் கூற்றை யாரும் கணிப்பில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒருங்குறியில் கிரந்தத்துக்கு இடஒதுக்கீடு பற்றித் தமிழ்நாட்டில் ஆவேசமான விவாதம் இப்படி இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. நாம் குடியிருக்கும் தெருவில் காலியாக இருக்கும் ஒரு வீட்டில் பிற சாதிக்காரன் ஒருவன் குடிவர இருக்கும்போது, அவனைக் குடிவைக்கக் கூடாது; அவன் நம் வீட்டுப் பெண்ணை வசப்படுத்திவிடுவான்; ஆகவே, கூட்டம் சேர்த்து, கூக்குரல் எழுப்பி, அவனை வராமல் செய்துவிடுவோம் என்று சொல்வதைப் போல இது இருக்கிறது. கலப்புக் கல்யாணம் நடந்துவிடுமோ என்று அதை முளையிலே கிள்ளி எடுக்கக் காட்டும் வேகம் இது. நம் வீட்டுப் பெண்மீது நமக்கு நம்பிக்கை இல்லாததன் எதிர்வினை இது.

காலம் மாறிவிட்டது. தமிழின் தற்காலம், அதன் வரலாற்றின் இடைக்காலம் அல்ல. தமிழுக்கு ஆபத்து – தமிழ் அடுப்படி மொழியாக, குழாயடி மொழியாகச் சுருங்கிவிடும் ஆபத்து – என்றால், அது இன்று ஆங்கிலத்தின் மூலம் வரலாம்; சமஸ்கிருதத்தின் மூலம் அல்ல. அட்டைப் பாம்பை அடிக்கும் ஆசையில் நிஜப் பாம்பைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் கதையாக இருக்கிறது கிரந்த எதிர்ப்பு.

பொங்கல் நன்னாளில் தமிழின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் உணர்ச்சி பொங்குவதை விடுத்து, அறிவு பொங்க வழி தேடுவது தமிழுக்கு நல்லது.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 18

  1. தமிழ் எழுத்து பற்றிய விவாதங்களில் பல முறை உணர்ச்சிகரமான, அதி கற்பனை மிகுந்த சொற்களையே இணையத்தில் பார்க்கலாம். தமிழ்த்தாய், தாயின் கற்பு, எந்த எழுத்து மாற்றங்களும் , இப்போதிருக்கும் கிரந்த எழுத்துகளொடு சேர்ந்து, தாயை மானபங்கப்படுத்த வந்தவை என்ற அடிப்படையில்தான் விவாதங்கள் நடக்கின்றன. ஒரு சமீப உதாரணம் ““தாய் பிறன் கைபட நாயென வாழேன் என்று ஆணையிட்டுக் கலப்புகளைத் துரத்துவோம்.”

    99% இணைய விவாதங்கள் சூட்டைக் கிளப்புபவையே தவிர, ஒளி காட்டுபவை அல்ல.

    விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.