நிலவொளியில் ஒரு குளியல் – 11

6

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshமார்கழி முடிந்து தை பிறக்கப் போகும் இந்தச் சமயத்திலும் சென்னையில் திடீரென மழை பெய்கிறது. சாதாரணமாக இந்தச் சமயங்களில் தான் எங்கள் கிராமங்களில் அறுப்பு (அறுவடை) நடக்கும். அப்போது பனியோடு வெயிலும் இருக்கும் என்பதால் நெற்கதிர்கள் நொறுங்கிப் போகாமல் இருக்கும் என்பதாலோ என்னவோ, இந்த மாதங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அறுவடைக் காலங்களில் நாங்கள் கண்டு, மகிழ்ந்த நிகழ்வுகளின் பதிவுதான் இந்தப் பத்தி.

நான் முன்பே சொல்லியிருந்தது போல எங்கள் ஊர்க் குளத்தையொட்டி நீண்ட வயல்கள் உண்டு. குளத்தை ஒட்டி ஒரு தார்ச் சாலை. அதில் தான் ஆம்பூர், அம்பாசமுத்திரம் போகும் பேருந்துகள் செல்லும். அந்தச் சாலையை ஒட்டி இரு மருங்கிலும் பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் நெல் வயல்கள். சாலை ஓரங்களில் தென்னை மரங்கள் வேறு இருக்கும். அதனால் அந்தச் சாலையில் நடப்பதே ஒரு இனிய அனுபவமாக இருக்கும். அந்தச் சாலை “ரோஜா” திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியிலும் இன்னும் சில காட்சிகளிலும் இடம் பெற்றிருக்கிறது. அது தான் எங்கள் ஊரில் முதன்முதலில் நடந்த படப்பிடிப்பு. அதன் பிறகு நிறையப் படங்களில் வந்துவிட்டது. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் அந்தச் சாலையில் தான் அறுப்புக் களம் போடுவார்கள். அறுப்பு ஆரம்பிக்கும் முன்னரே அறுப்புக் கடை வந்து விடும். ஒரு கொட்டகை போட்டு, சில பொருட்கள் வைத்து வியாபாரம் செய்தால் கடைதானே? அந்தச் சாலையில் நிறைய வயல்கள் இருந்ததால் அறுவடை வெவ்வேறு நாட்களில் நடைபெறும். அறுவடை செய்யும் வயல்கள் மாறுமே ஒழிய, ஆட்கள் மாற மாட்டார்கள். அவர்களேதான் எல்லா வயல்களுக்கும் அறுப்பார்கள். ஒரு சிலர் கூடுதலாக வரலாம் அவ்வளவே.

roja movieஅறுப்பு அறுத்துக் களைத்துப் போன ஆட்களுக்காகவே தோன்றியது தான் அந்த அறுப்புக் கடை. அறுப்பு முடிந்ததும் கடையை சுருட்டி எடுத்துக் கொண்டு போய் விடுவார் கடையின் சொந்தக்காரர். சுக்குக்காபி (ஆறினால் கூட நன்றாக இருக்கும்), முறுக்கு, அறுப்பு ரொட்டி எனப்படும் பொறை, அவித்த பனங்கிழங்கு, அவித்த வள்ளிக் கிழங்கு, சீனிக் கிழங்கு முதலிவை தான் விலைபடு பொருட்கள். அந்தக் கடையின் மீது எங்களுக்கு ஒரு இனம் தெரியாத வசீகரம் இருந்தது.

எங்கள் தெரு முனையில் தான் அறுப்புக் களம் என்பதால் விடுமுறை நாட்களில் காலையில் போனோம் என்றால் மதியச் சாப்பாட்டுக்கு அண்ணன் வந்து கூப்பிடும் வரை அங்கிருந்து நகர மாட்டோம். மற்ற தெருக்களிலிருந்து வரும் சில பையன்கள் பத்து பைசாவுக்கு முறுக்கும், இருபது பைசாவுக்கு வள்ளிக் கிழங்கும் வாங்கித் தின்பதை ஏக்கத்தோடு பார்ப்போம். எங்களுக்கும் சில சமயம் காசு கிடைத்தால், நாங்களும் அவர்கள் எதிரே சீனிக் கிழங்கு வாங்கித் தின்போம். ஏனோ எங்கள் பெற்றோர்களுக்கு நாங்கள் அறுப்புக் கடையில் வாங்கிச் சாப்பிடுவது பிடித்ததேயில்லை. அறுப்புக் காலங்களில் காசு கொடுக்க நேரும் போதெல்லாம் “சம்முவம் பிள்ள கடையில போயி ஏதாவது வாங்கிக்கோ, அறுப்புக் கடையில வாங்கக் கூடாது என்ன புரிஞ்சிதா?” என்ற எச்சரிக்கையோடு தான் தருவார்கள். நாங்களும் சரி சரியென்று மண்டையை ஆட்டி விட்டு, அறுப்புக் கடையில்தான் வாங்குவோம்.

நாங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் சமயம் அறுப்பு ஆட்கள் சிலர் அந்தக் கடைக்கு வருவதுண்டு. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அவர்கள் எங்களோடு பேசுவார்கள். என்ன படிக்கிறோம்? எங்கே படிக்கிறோம் இப்படி. நாங்களும் பெருமையோடு பதில் சொல்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களுக்குச் சொன்னது இன்னமும் எனக்குப் பசுமையாக நினைவில் உள்ளது. “பிள்ளைகளா! நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். அப்படி பெரிய ஆளா வந்தப்புறம் எங்கள மாதி ஏழைங்களுக்கு நல்லது பண்ணணும் என்ன தாயி நாங்க சொல்றது” என்பார்கள். முகத்தில் உலகத்தனை வருத்தம் தென்படும்.

அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று யோசிக்கத் தெரியாத வயது எங்களுக்கு. அதனால் சிரித்து விட்டு அப்படியே செய்வதாகச் சொல்லுவோம். இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த வாக்கியம் செயல்படுத்தப்படாமல் இருப்பது கண்கூடு. இது குறித்து அவர்கள் யாரிடம் முறையிட வேண்டும்?

ஒரு நாள் நான் என் அம்மாவிடம்  பத்து காசு வேண்டுமென்று கேட்டேன். அவர்களும் மறுத்தார்கள். நானும் விடாமல் கெஞ்சி, அழுது அடம் பிடித்தேன். அவர்களும் போனால் போகிறதென்று கொடுத்துவிட்டு, என்னிடம் முன்னே நான் குறிப்பிட்ட நிபந்தனையும் போட்டார்கள். நானும் ரொம்ப நல்ல பிள்ளை போல சரியென்று சொல்லி, காசு வாங்கி அதை அறுப்புக் கடையில் சீனிக் கிழங்கு வாங்கித் தின்றுவிட்டேன். நான் அப்படிச் செய்வதை இராமகிருஷ்ணன் என்ற பையன் பார்த்து விட்டு, என் அம்மாவிடம் கோள் சொல்லிவிட்டான். அதைக் கேட்டு என் அம்மாவும் என்னை அடி பின்னியெடுத்ததும் இல்லாமல் “இனிமே காசு கேளு, ஒன்னை அப்ப பாத்துக்கறேன்” என்ற எச்சரிக்கை விடுத்தார்கள்.

எனக்கு அடி வாங்கியது கூட பெரிய விஷயமாகப் படவில்லை. அது சாதாரணமாக நிகழ்வது தான். ஆனால் இனிமேல் எப்போதாவது கிடைத்துக் கொண்டிருந்த ஐந்து பைசா, பத்து பைசாவுக்கும் வழியில்லாமல் செய்து விட்டானே என்று இராமகிருஷ்ணன் மீது கடுங்கோபம் வந்தது. அவன் எங்கள் பள்ளித் தமிழாசிரியர் மகன். அதுவும் குறிப்பாக அவர் எங்கள் வகுப்புக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அவனோடு சண்டை போடவும் பயம். அவனை எப்படியாவது பழி வாங்கியே தீர வேண்டும் என்ற வன்மம் மட்டும் எனக்குக் குறையவேயில்லை.

ஒரு தடவை நானும் என் தோழி வனிதாவும் என்ன காரணம் என்று நினைவில்லை, சேர்ந்து விடுப்பு எடுத்தோம் பள்ளிக்கு. எங்கள் தெருவில் இராமகிருஷ்ணன் ஒருவன்தான் நாங்கள் படிக்கும் அதே வகுப்பு, அதே பிரிவில் படித்தான். அதனால் அவனிடம் அன்று நடத்திய பாடத்தைக் குறித்தும் எழுதிப் போட்ட பாடங்களை எழுதிக்கொள்வதற்கும் நானும் வனிதாவும் அவன் வீடு சென்றோம். அவனும் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எல்லாம் விவரமாகச் சொன்னான். அறிவியல், வரலாறு ஆகிய நோட்டுப் புத்தகங்களையும் கொடுத்தான்.

நான் அவனிடம் கோபமாக இருந்ததால் வனிதாவிடம் அவனைப் பற்றித் தாறுமாறாகச் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் அவன் எளிதாக நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்துவிடவே வனிதாவுக்கு ஆச்சரியம். எனக்கும் கூடத்தான். ஏனென்றால் என் மனமே நான் சொன்ன பொய்களை நம்ப ஆரம்பிதுவிட்டதுதான் காரணம். அவன் கொடுத்தவற்றை வாங்கிக்கொண்டு வீடு வந்தோம். என் வீட்டின் வாசலில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு அவனிடம் அவற்றைத் திருப்பிக் கொடுக்கச் சென்றோம். அப்போதுதான் அவனைப் பழிவாங்கும் சந்தர்ப்பம் அமைந்தது.

இராமகிருஷ்ணனின் வீடு, நீண்ட வடிவம் உடையது. ஒரு அறையிலிருந்து ஒரு அறை ரயில் பெட்டி போல தொடர்ந்து இருக்கும். ஆனால் அறைகள் பெரிதாக இருக்கும். நாங்கள் போகும் போது வீட்டில் இராமகிருஷ்ணன் மட்டுமேயிருந்தான். அவன் அம்மா பின்புறத்தில் இருந்தார்கள் என நினைக்கிறேன். தமிழாசிரியர் வெளியில் செல்வதை நாங்கள் பார்த்தோம். அப்போது இருட்டத் தொடங்கி விட்ட நேரம். அதை விடச் சிறந்த சந்தர்ப்பம் அமைவது கடினம் என்று முடிவு செய்து, என் திட்டத்தை வனிதாவிடம் கூறினேன். அவளும் உற்சாகத்தோடு சரியென்று சொல்லிவிட்டாள்.

திட்டம் இது தான். இருவரும் குரலை மாற்றி, கடூரமான ஆனால் மெதுவான குரலில் அவனைக் கூப்பிட வேண்டும், அவன் வெளியில் வருவதற்குள் ஓடிவிட வேண்டும். அதன்படி நாங்கள் ஒன், டூ, த்ரீ சொல்லி மெதுவான கரகரத்த குரலில் “றாஆமா கிருஷ்ணாஆ…” என்று கூப்பிட்டோம். உள்ளே படித்துக் கொண்டிருந்தவன் அதை நிறுத்திவிட்டு, மௌனமானான். நாங்கள் மறுபடியும் அதே போல் அழைக்கவே, இம்முறை “யாரு?” என்றான். நாங்கள் பதிலே சொல்லாமல் இருந்தோம். அவன் மீண்டும் படிக்கத் தொடங்கினான். சற்று இடைவெளி விட்டு நாங்கள் மீண்டும் குரல் கொடுத்தோம். அவன் “யாரு” என்ற குரலோடு எழுந்து வருவான் போலத் தோன்றவே நாங்கள் ஒரே ஓட்டமாக ஓடி, எங்கள் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்துகொண்டோம். அவன் வெளியில் வந்து பார்த்து விட்டு, உள்ளே போய்விட்டான்.

இப்போது எங்கள் முறை. இந்தத் தடவை அவன் பெயரோடு சேர்த்து “டேய் வெளில வாடா” என்ற வசனத்தையும் சேர்த்துக்கொண்டோம். அவன் அம்மா பின்கட்டிலிருந்து வந்து விட்டார்கள் போலும், அவர்களிடம் யாரோ பெயர் சொல்லி அழைப்பதாகவும் அவனுக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தான்.
எங்களால் உந்துதலை அடக்க முடியாமல் “டேய் றாஆம கிருஷ்ணா, வாடா வெளிய” என்று குரல் கொடுத்தோம். அவன் அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “யார் அது எம்மகன இப்படி பயமுறுத்தறது?” என்ற கேள்வியோடு எழுந்து வந்தார். நாங்கள் அதற்குள் வெளியில் ஓடிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கண்மண் தெரியாமல் ஓடி, வீட்டு வாசலில் வந்துகொண்டிருந்த தமிழாசிரியர் மேல் முட்டி, மோதி ஒரு வழியாக எங்கள் வீடு வந்தோம். எங்களுக்கு பயமான பயம். எந்நேரத்திலும் தமிழாசிரியர் வீட்டிலிருந்து ஆள் வரலாம் என்று எதிர்பார்த்தோம். என் தோழி வேறு, ‘எல்லாம் உன்னால்தான்னு நான் சொல்லிடுவேன்’ என்று என்னைக் கை கழுவினாள். என்ன காரணம் என்று தெரியவில்லை ஒருவரும் வரவில்லை. மறு நாள் பள்ளியில் பார்த்து அவன் நோட்டு புத்தகங்களை அவனிடம் திருப்பிக் கொடுத்தேன்.

இந்த சம்பவம், எனக்கு ஒவ்வொரு அறுவடைக் காலத்திலும் நினைவுக்கு வரும். அன்று ஏன் அவர்கள் எங்களிடம் சண்டைக்கு வரவில்லை என்று காரணம் அறிய ஆசையாக இருக்கும். எப்போதாவது அவர்களோடு தொடர்பு ஏற்பட்டால் கண்டிப்பாகக் கேட்பேன். என்ன ஒன்று, அவர்களுக்கும் இந்தச் சம்பவம் நினைவிருக்க வேண்டும், அவ்வளவுதான். இது போல இயற்கையின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு இன்றைய குழந்தைகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. இயற்கையோடு கூடி வாழ்ந்த அந்த இனிய நாட்களை நினைத்துக்கொண்டே நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

=======================================

ரோஜா படத்திற்கு நன்றி – http://downloadsguru.com

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on "நிலவொளியில் ஒரு குளியல் – 11"

  1. நன்றாக எழுதியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது போல் இன்னும் சமுதாயத்தில் அடிமட்ட தொழிலாளர்கள் வாழ்வு முன்னேறாமல் அப்படியேதான் உள்ளது. அரசாங்கம் அவர்களுக்கு தகுந்த திட்டங்கள் கொண்டு வர வேண்டும். லஞ்சம் ஒழிய வேண்டும். காசு வாங்கி கொண்டு செய்யும் ஊழல் பெருச்சாளிகளை நாடு விட்டே அனுப்பவேண்டும். அப்பொழுது தான் ஏழைகளின் வாழ்வு முன்னேறும்.

  2. Today children don’t get oppurtunities to enjoy their childhood days like this. It reminded me about my childhood days. Good work madam. Keep it up.

  3. மிகவும் அருமை. ராமகிருஷ்ணன் என்ற பையனை பயமுறுத்தியது மிகவும் தமாஷாகவும், ரசிக்க தக்கதாகவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

  4. நன்றாக எழுதியதற்குப் பாராட்டுகள்.

  5. பள்ளி நாட்களில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பயமுறுத்துவது மிகவும் சகஜம். அந்தப் பருவத்தில் மூட நம்பிக்கைகள் அதிகமாக இருக்கும். இப்பொழுதும் நமது நினைவுகளில் அது பசுமையாக இருக்கும்.

    யதார்த்த நடையில் மிக அழகாக எழுதியதற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.