வடநாட்டில் சூரியனது கோயில்கள்

0

விசாலம்

Vishalamமார்கழி மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர வைக்கின்றது. “தை பிறக்க, வழி  பிறக்கும்” என்றபடி தை மாதத்தில் பல “பீ பீ டும் டும்” என்ற சத்தம், பல திருமணங்கள், பல முகூர்த்தங்கள்….. இனிய கனவு காணும் இளைஞர்கள் மனம் பூரிக்க, குயில் இசைபாட, மயில் நடனமாட, எங்கும் குதுகூலம். எங்கும் ஆட்டம் பாட்டத்துடன் தை மாதம் பிறக்க, சூரிய பகவான் உத்திராயணத்தில் பிரவேசிக்கிறார். சூரிய நாராயணரது பூஜையுடன் பொங்கல் பானை வைக்க்கப்பட்டு, “பொங்கலோ பொங்கல்” என்ற கோஷத்துடன் பாலும் பொங்கி வழிகிறது. பால் பொங்கி வழியும் திசை நல்லதாக இருந்தால் அந்த வருடம் மேன்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையும் கூடவே பிறக்கிறது.

சூரிய பூஜை மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும்
மேலும் மனத்தில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று. யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரியனது கோயில் வெளிநாட்டிலும் இருந்ததாகவும் சூரிய வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருகிறது என்றும் சரித்திரத்தில் தெரிய வருகிறது

நான் அஸ்ஸாம் போனபோது ஒரு வித்தியாசமான சூரியனது கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இங்கு சூரியன் கோயில் வட்ட வடிவமாக “சூரிய பஹார்” என்னும் மலைமேல் ‘கோல்புரா’ என்ற இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலில் சூரியன் இருக்கும் அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது. பன்னிரண்டு சூரிய உருவங்கள் சுற்றி நிற்க, நடுவில் சூரியனின் தந்தை “கச்யபர்” அமர்ந்திருக்கிறார். புதைபொருள் ஆராய்ச்சியில் இங்கு சில லிங்கங்களும் கிடைத்தனவாம். சூரியன் அருள் புரியும் இடம் தான் இந்தச் சூரியமலை என்று இங்கிருக்கும் மக்கள் நம்புகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் உனாவோ {unao} என்ற இடத்தில் பிரமண்ய தேவ கோயில் என்பது சூரியனுக்காகக் கட்டப்பட்டக்கோயில். ஒரு செங்கல் மேடையின் மேல் கறுப்பு வண்ண சிலேட்டுகள் பதிக்கப்பட்டு, அதன் மேல் சூரிய பகவான் அருள்புரிகிறார். சிலையைச் சுற்றி இருபத்தொன்று முக்கோணங்கள் செம்பினால் செய்யப்பட்டு, சிலைக்குப் பாதுகாப்பாக அவை அமைகின்றன. பீஷ்வாக்களும் இந்தக் கோயிலில் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள்.

மிகப் பழைமையான சூரியனது கோயில் குஜராத்திலும் மோதேரா என்ற இடத்தில் காண முடிகிறது. 1026ஆம் ஆண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. சூரியனின் கதிர்கள், உள்ளிருக்கும் சிலைமேல் சில நாட்கள் விழுகின்றன. உள்ளிருக்கும் மண்டபத்தில் பல சித்திரங்கள் தத்ரூபமாய்ச் செதுக்கப்பட்டிருக்கின்றன. நடனக் கலைஞர்கள் பலர் இங்கு இருக்கும் மண்டபத்தில் இயற்கைச் சூழலில் நடனங்கள் ஆடுகின்றனர்.

sun-temple-konarkஆந்திராவில் அரசவில்லி என்ற இடத்தில் ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த சூர்ய நாராயணஸ்வாமி கோயில் ஒன்று இருக்கிறது. இதைக் கலிங்க ராஜா கட்டினாராம். உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுமார் ஐந்து அடி உயரம் கொண்ட கறுப்பு கிரனைட் கல்லில், சூரிய பகவான் நிற்கிறார். அவரது இரு புறமும் இரு மனைவிகள் உஷாவும் சாயாவும் நின்று அருள் பாலிக்கின்றனர். சூரிய பகவான் ஒரு தாமரை மொட்டைக் கையில் பிடித்திருக்கிறார். ஆகையால் இவரைப் “பத்மபாணி” என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோயில், “ஸ்ரீகாக்குலம்” என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இப்போது மிகவும் புகழ் வாய்ந்த கொனாரக் சூரிய கோயிலைப் பார்ப்போம். இது, ஒரிஸ்ஸா மாகாணத்தில் உள்ளது. அடுத்து வரும் சூரியன் கோயில் ஒரிஸ்ஸாவில் இருக்கும் கொனாரக். இது, கங்கை நதி தீரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், பல தடவைகள் அன்னியர்களது படையெடுப்பால் சூறையாடப்பட்டு, அதன் பல பாகங்கள் சிதிலமடைந்து, வீணாகிப் போய்விட்டன. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாழ்பட்டுவிட்டது. எஞ்சி இருக்கும் கோயிலைப் பார்க்க, வெளிநாட்டவர்கள் பலர் வருகின்றனர்.

இதன் கட்டடக் கலை, மிகச் சிறப்பு வாய்ந்தது. இதன் கலை நுட்பத்தைச் சொல்ல இயலாது. அங்கு இருக்கும் சிற்பங்களும் செதுக்கின விதமும் நம்மை மிகவும் வியப்படைய வைக்கின்றன. முதலாம் நரசிம்மதேவன் 13ஆம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான்.  கற்கள் நடுவே இரும்புத் துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக் கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான்.
அந்தத் தேரின் சக்கிரங்கள் 24. அந்தச் சக்கரங்களின் வேலைப்பாடு மனதை மிகவும் கவர்கிறது. பிற்காலத்தில் சூரியனின் சிலை அகற்றப்பட்டு
தற்போது பூரியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த கோயிலில் விலங்குகளின் சிலைகள், பறவைகளின் சிலைகள்… இவற்றைத் தவிர தேவ தேவிகள், அபசரஸ் போன்ற அழகிகள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளும் இந்த விலங்குகள், பறவைகளால் ஈர்க்கப்படுகின்றனர். இளைஞர்களுக்குக்  காம சூத்ராவின் அடிப்படையில் பல சிற்பங்கள் அங்கே காணப்படுகின்றன. வயதானவர்களுக்கும் தேவ தேவிகள் அருள் புரிகின்றனர்.

கோயில், மூன்று பிரிவுகளாக உள்ளது. சூரியன் ஒவ்வொரு நாலு மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் வழியாக தன் ஒளியைச் சூரியனார் மீது வீச வைக்கிறான். இந்தக் கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாத்து வருகிறது.

இத்தனை சூரியன் கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் இருக்கும் ஸ்ரீ சூரியனாரது கோவிலுக்கு இணை வேறொன்றுமில்லை. இந்த ஒரு கோயிலில் தான் நவகிரஹங்களுக்குத் தனித்தனி சன்னதி இருக்கிறது. சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோயில், மிகப் புராதனமானது. விநாயகர், சூரியன், காசிவிசுவநாதர், விசாலாக்ஷி, சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி,  ராகு, கேது என்று இங்கு இருக்க, ஒரே சமயத்தில் எல்லா கிரகங்களையும் பிரார்த்திக்க முடிகிறது. சூரியன் நடுவில் அமர்ந்திருக்க, அவருக்குக் கிழக்கே சுக்கிரன்,
தெற்கே செவ்வாய், மேற்கே சனீச்வரன், வடக்கே குரு, தென்கிழக்கே சந்திரன், தென்மேற்கே ராகு, வடமேற்கே கேது என
ஆகமப்படி எல்லாம் அமைந்திருக்கின்றன.

சூரிய பகவானின் அழகைச்சொல்ல இயலாது ,
கோயிலினுள் போனாலே ஒரு தெய்வீக உணர்வு
நம்மை ஆட்கொள்வதை நன்கு உணரமுடிகிறது

சூரிய காயத்ரி

அஸ்வத் வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ:சூர்ய பிரசோதயாத்

================================

படத் திற்கு நன்றி – http://www.indialine.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *