வே.முத்துக்குமார்

சமாது கோவிலுக்குப் பூசை செய்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் சாமிக்கண்ணு ஓதுவார். கோவில் வாசலில் இருந்த கருவேலமரத்தில் நெடுநாட்களாகச் சினை பிடிக்காமல் இருந்த தனது ஆட்டைக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சீனி. சாமிக்கண்ணு ஓதுவாரைப் பார்த்தவுடன் வடக்குப் பக்கமிருக்கிற கருவேல மரக்காட்டுப் பாதை வழியாக வாய்க்காலை நோக்கி வேகமாக நடந்து சென்று விட்டான். தன்னைப் பார்த்தவுடன்தான் சீனி ஒளிந்து செல்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது. இன்று மட்டும் இப்படியில்லை. கடந்த ஒரு வார காலமாகவே சாமிக்கண்ணு ஓதுவாரைப் பார்க்கும் போதெல்லாம் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துச் சென்று விடுகிறான் சீனி.

கோவில் வெளிவாசல் மர அழிக்கதவைத் திறந்து சைக்கிளை உள்ளே ஏற்றி வைத்து விட்டுக் கிணற்றடிப் பக்கம் வந்தார். முக்காலத்திலும் வற்றாத முத்துக் கிணறு அது. எட்டிப் பார்த்தார். கிணற்றடி மஞ்சணத்தி மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளும், பூக்களும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. தோளில் கிடந்த துண்டை எடுத்துத் தலைப்பாகை கட்டிக் கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க ஆரம்பித்தார். வெட்டப்பட்டிருக்கின்ற பாத்திகள் வழியாகத் தண்ணீர் பாய்ந்தோடி, தோட்டத்திலிருந்த கருவேப்பிலை மர மூடுகளை நனைத்துத் தேங்க ஆரம்பித்தது.

சாமிகண்ணு ஓதுவாரின் கைகள்தான் துலாவைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்ததே தவிர அவரது கவனமெல்லாம் வாசல் பக்கம் தான் இருந்தது. ‘ஏன், நம்மைப் பார்த்தவுடன் கொஞ்ச நாளாகவே இந்த சீனிப்பய விலகிச் செல்கிறான் … ‘ சதா இதே வார்த்தைகள் அவருக்குள் திரும்பத் திரும்ப ஓடி ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்த, சில நிமிட நேரங்களில் மனச்சோர்வு அதிகமாகி உடம்பையும் அழுத்த ஆரம்பித்திருந்தது.

எல்லாச் சோர்வுக்கும் சாமிகண்ணு ஓதுவாரின் கைவசம் மருந்து உண்டு. கோவிலின் பின்புறமிருந்த வில்வ மரத்திலிருந்து ஒன்றிரண்டு இலைகளையும், வடபுறம் வளர்ந்திருந்த துளசிச் செடியிலிருந்து சில இலைகளையும் , செம்பருத்திச் செடிகளுக்கு மத்தியில் முளைத்திருந்த அருகம்புற்களைக் கொஞ்சமாகவும் பிடுங்கி எடுத்துக் கொண்டார் . கிணற்று வாளித் தண்ணீரில் அவைகளைக் கழுவி உள்ளங்கையில் வைத்து அழுந்தத் தேய்த்து ஒரு சிறு கவளம் போன்று உருண்டையாக உருட்டி வாயில் போட்டுக் கொண்டார். சில மணித்துளிகளில் நரம்பெல்லாம் முறுக்கேறி, சீரான ரத்தவோட்டம் பாய்ந்ததைப் போன்று சுறுசுறுப்பாக இருந்தது. கை கழுவும் போது வாசலில் ஆடு கத்தும் சத்தம் கேட்டது. ‘ சீனிப்பய வந்துருப்பான் போல ‘ என நினைத்து அவசரசரமாக வாசல் பக்கம் வந்தவருக்கு, அவனது சம்சாரம் ஆட்டை இழுத்துக் கொண்டு செல்வது தெரிந்தது.

தலைமுறைக் கணக்கு வைத்துப் பார்த்தால் சமாது கோவிலுக்கு சாமிக்கண்ணு ஓதுவார் பூசை செய்ய வந்தது மூன்றாவது தலைமுறை. ஆரம்பக் காலத்தில் ஒப்பந்த முறையில் சமையல் வேலைகளை எடுத்துச் செய்து வந்தார் . அப்பாவின் மறைவையொட்டிய காலக்கிரமத்தில், சாமியே கனவில் வந்து உத்தரவிட்டு விட பூசாரியாக வந்து விட்டார் . இடைப்பட்ட சில காலத்தில் ஊர் சமூகத்தினருக்குப் பொதுவாகப் பாத்தியப்பட்டிருக்கின்ற காந்தாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். அம்மன் கோவிலில் பூசை செய்து வந்த காலத்தில், கர்ப்பக்கிரகத்திற்குள் நல்ல பாம்பொன்று குடி கொண்டிருந்தது. காலையில் மூலஸ்தானக் கதவைத் திறந்த மாத்திரத்தில் மடை வழியாக அது வெளியே சென்று விடும். இரவு கதவைச் சாத்திய பிறகு அது உள்வந்து அடைந்து விடும். அவர் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

ஊரெல்லாம் காந்தாரி அம்மனை ‘ அம்மா … தாயே ..’ என்றழைத்து வழிபட, சாமிக்கண்ணு ஓதுவாரோ அவளைக் ‘கல் வீட்டுக்காரி ‘ என்று தான் அழைப்பார். கோவில் பிரகாரத்தில் நின்று யாராவது மனமுருகி வேண்டுவதைப் பார்த்து விட்டால் அவர்களைக் கூப்பிட்டு ‘ கல் வீட்டுக்காரி லேசுப்பட்டவள் இல்லை. அவளுக்கு எல்லாம் தெரியும் .. ‘ என்பார்.

மூத்த மகன் பூ கட்டும் தொழிலில் மும்முரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள, இளைய மகன் அப்பா வழியில் பூசை செய்யக் காந்தாரி அம்மன் கோவிலுக்கு வந்தான். அம்மன் கோவில் பொறுப்பை மகனிடம் கொடுக்கும் போது சில உத்தரவுகளையும், பயபக்தியுடன் பூசை செய்வதெப்படி எனவும் சொன்னாரே தவிர நல்லபாம்பு வந்து போவதைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ‘சின்னப்பயலுவோ … பாம்பிருக்குன்னு தெரிஞ்சாக் கோயில் பக்கமே வர மாட்டானுவோ ‘ என்று யோசித்திருந்தார். பின்னொரு நெருக்கடிச் சூழ்நிலையில் அவரது மகன் மீது பொய்க் குற்றஞ் சாட்டப்பட்டு அம்மன் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்ட அன்றைய தினம் அப்பாம்பு கோவில் நடுவீதியில் அடிபட்டுச் செத்துக் கிடந்தது. அதையும் அவர் தான் எடுத்துச் சென்று பால் ஊற்றிப் புதைத்தார்.

நேர்ந்து விட்ட மாதிரி சமாது கோவிலுக்கென்றே மட்டும் பூசை செய்ய வந்த பிறகு சாமிக்கண்ணு ஓதுவார் எங்கேயும் செல்வதில்லை. அதுவும் வாழ்பனுபவத்திலிருந்து அவர் கற்றுக் கொண்ட படிப்பினை தான். ஒருமுறை சற்றுத் தொலைவிலிருந்த ஊருக்குத் ‘துட்டி’ என்று சென்றிருந்தார். குறிப்பிட்ட நேரத்திற்கு அவரால் திரும்ப முடியவில்லை. ‘ சாமிய பட்டினி போட முடியாதே ‘ என்கிற மனபாரத்தோடு அவர் சமாது கோவில் நடையைத் திறந்த போது இரவு மணி ஒன்பதரை. கதவைத் திறந்த மாத்திரத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மானசீகமாக மன்னிப்புக் கேட்ட பிறகே நைவேத்திய அடுப்பைப் பற்ற வைத்தார். அன்றிலிருந்து அவர் எங்கும் செல்வதில்லை. காலையில் காப்பித் தண்ணியைக் குடித்து விட்டுச் சமாது கோவிலுக்கு வந்து, தோட்டத்துக்கு நீர் பாய்ச்சி, பூசையெல்லாம் முடித்து வீடு திரும்ப எப்படியும் மணி பன்னிரெண்டு ஆகி விடும். காலை ஆகாரமெல்லாம் கிடையாது. ஒரேயடியாக மதியச் சாப்பாடுதான். பிறகு ஒரு மணி நேரம் ஒய்வெடுத்து விட்டுப் பூ கட்ட உட்கார்ந்தால் பொழுது சாய்ந்து விடும். அதன் பின் சாயங்காலம் சமாது கோவில் வந்து பூசை முடித்து வீடு திரும்பினால் இரவுச் சாப்பாடு முடித்து விட்டு நித்திரைதான்.

சமாது கோவில் உள்வாசல் நடைக்கதவைத் திறந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார். பிறகு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குளித்து விட்டு ஈர எட்டு முழத் துண்டை இடுப்பில் கட்டியவாறு இரண்டு குடம் தண்ணீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்தார். விளக்கேற்றி விட்டு வந்து அடுப்பைப் பற்ற வைத்தார். சுள்ளிகள் புகைய ஆரம்பித்து ஊத ஊத தீப்பற்றிக் கொண்டன. நெற்றி நிறையத் திருநீறை அள்ளிப் பூசி விட்டு, அரிசியைக் களைந்து போட்டு விட்டு திண்ணையில் வந்து அமர்ந்தார்.

ஜீவசமாதியான சாமி அமர்ந்த திண்ணை அது. மனசஞ்சலமோ, குழப்பமோ, நெருக்கடியோ இருக்கின்ற சமயங்களிலெல்லாம் அத்திண்ணையில் அமர்ந்து சிந்தையைச் சுற்ற விடுவது சாமிக்கண்ணு ஓதுவாரின் வழக்கம். முன்பொரு முறை இப்படித்தான். பூ நார்கட்டு வாங்க ஆயிரம் ரூபாய் குறைகிறதென்றும் அப்பாவிடம் வாங்கித் தருமாறும் அம்மாவிடம் சொன்னான் மூத்த மகன். திருமணமான பிறகு பையன்கள் இருவரும் எதையும் அவரிடம் நேரிடையாகக் கேட்பதில்லை . எல்லாம் அம்மாக்காரி வழியாகத் தான். அவன் கேட்டது அவரது காதிலும் விழத்தான் செய்தது . ‘ கைவசம் ஒன்றும் இல்லை ‘ என்றார். தர்மகர்த்தா வேம்புப்பிள்ளையிடம் கேட்டால் கிடைக்கும் என்று அவன் சொல்ல அதுவரையில் குனிந்து பூ கட்டிக் கொண்டிருந்தவர் அவனை நிமிர்ந்து பார்த்தார்.

‘ அவருட்ட கடனா கேக்க சொல்லுத … ‘

‘ கடன் என்ன கடன். அவசரத்துக்குக் கேக்கறோம். நாளைக்கே பணம் வந்துச்சுன்னா திருப்பிக் கொடுத்துடப் போறோம். நீங்க கேட்டீங்கன்னா அவரு தட்டாம கொடுத்துடுவாரு ‘ இந்த முறை அவரது முகம் பார்த்துச் சொன்னான். ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டார்.

‘ ரொம்பச் சாதாரணமாக நம்ம பையன் கடன் வாங்கச் சொல்றானே. அவருட்ட நம்ம அப்பா கையேந்தி நிப்பாரேன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தானா இந்தப் பய. இந்த வாழ்நாள்ல எப்படி கடன் கேட்கிறதுங்கிற பள்ளிக்கூடத்துப் படியை நாம ஒருக்காலும் மதிச்சதில்லையே … ‘ சைக்கிள் மிதித்து வரும் போது யோசித்துக் கொண்டார்.

திண்ணையில் அமர்ந்து கொண்டு ‘ சாமி என்னியக் கையேந்த வச்சுராதீரும் .. ‘ என்றார் . அன்று இரவு கோவில் நடை சாத்தி விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் கீழத்தெரு சண்முகம் நின்று கொண்டிருந்தார். ஒரு வார காலத்தில் தன் கடைசி மகளுக்குச் சடங்கு வைத்திருப்பதாகவும் அதற்குப் பூ கட்டித் தருமாறு சொல்லி ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்தார். ‘ சாமி .. நீரு ஆளுய்யா ‘ என மனதுக்குள் பேசிக் கொண்டே முற்றத்திலிருந்தவாறு அவளை அழைத்தார்.

‘ ஏட்டி … இந்தா உம் மவன் கிட்ட அப்படியே கொடுத்துடு ..’

சமாது கோவில் திண்ணையிலமர்ந்தவாறு அவர் தனக்குள் சுற்ற விட்ட பல சம்பவங்களுக்கு இப்படித் தீர்வு கிடைத்து விடும். அன்றும் அவ்வாறே சுற்ற விட்டார். ‘ ஊரில் நம்மைக் காண்கிறவனெல்லாம் நம்மைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசி விட்டோ இல்லை சிரித்து விட்டோ தான் செல்கிறான். ஆனால் இந்த சீனிப்பய நம்மைக் கண்டவுடன் இந்த ஒரு வார காலமா ஒளிஞ்சு ஒளிஞ்சு கண்டும் காணாமப் போயிக்கிட்டிருக்கான் .அப்படி நம்மளப் பார்த்து ஒளியுற அளவுக்கு நாம என்ன பண்ணிட்டோம் . சாமி … எம் மனக்குழப்பத்துக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுமய்யா …’

பலவிதமான யோசனைகளுக்குப் பிறகு , பத்து நாட்களுக்கு முன் நடந்த சம்பவமொன்று நினைவிற்கு வந்தது. சமாது கோவிலைத் திறந்து கொண்டிருந்தார் சாமிக்கண்ணு ஓதுவார். தெருவில் ஒரே கூப்பாடுச் சத்தம். என்னவென்று போய்ப் பார்க்கையில், சீனியும் அவனது சம்சாரமும் மூன்று வயசுப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பிரதான ரோட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து விசாரித்தார்.

‘ என் சின்னப்புள்ளைக்கு வலிப்பு வந்து துடிச்சுகிட்டுக் கெடக்கு. டாக்டர்கிட்ட காண்பிக்கறதுக்குத் துட்டு இல்லை. கை மாத்தா எறநூறு ரூபா வேணுமுன்னு எங் அண்ணன்கிட்ட போய் கேட்டேன் . பாவிப்பய. … ஒண்ணுமில்லன்னு மடிய விரிச்சுப் புட்டான். அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம புள்ளையத் தூக்கிகிட்டு ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்குப் போறோம். புள்ள பொழைக்குமான்னு தெரியல … ‘

‘ அடப்பாவி … இதானாடா சமாச்சாரம் . இந்தாடா எறநூறு ரூவா . போ … போயி ரெண்டு பேரும் புள்ளையக் காண்பிச்சுக் குணப்படுத்திகிட்டு வாங்க … ‘ வேட்டி மடியிலிருந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தார் சாமிக்கண்ணு ஓதுவார் .

ஆஸ்பத்திரி சென்று திரும்பிய சீனி மறுநாள் காலை அவரது வீடு தேடி வந்து சொல்லி விட்டுப் போனான் .

‘ எண்ணே … சாமிக்கண்ணன்ணே . புள்ள பொழச்சிருச்சுன்னே. நீ நல்லாயிருப்பண்ணே. நீ மட்டும் இல்ல, உங் குடும்ப வம்சமே நல்லாயிருக்கும்ணே .. ‘

‘ அன்று தான் செய்த உதவிப் பணத்தை எங்கே திருப்பிக் கேட்டு விடுவேனோ என்கிற தப்பெண்ணத்தில் தானே இந்த சீனிப்பய நம்மை கண்டதும் விலகிச் செல்கிறான். சிட்டவட்டி வசூல் செய்ய வருகிறவனைக் கண்டு பதுங்கிக் கொள்கிறவனைப் போன்று பார்த்ததும் பம்மிக் கொள்கிறான். அன்று தான் செய்த பண உதவியை அவன் தப்பாக எடுத்துக் கொண்டானோ. நாம என்ன கடனாகவா அந்தப் பணத்தைக் கொடுத்தோம். நம்ம மனசுல இருக்குற ஈரத்தை, அன்பை, ஈகையை, இரக்க சிந்தனையை அவன் புரிந்து கொள்ளவில்லையே. தன்னுடைய உதவி தவறான ஒருவனுக்குப் போய்ச் சேர்ந்து விட்டதோ… ‘ ஏதேதோ வார்த்தைகள் புலம்பல்களாக அவருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

அன்று மாலை வாய்க்காலுக்குச் சென்று கொண்டிருந்தார். இடைப்பட்ட வாய்க்கால் ஓடைத் திண்டில் உட்கார்ந்திருந்தான் சீனி . இவரைக் கண்டவுடன் மெல்ல எழுந்து நகர ஆரம்பிக்க, சாமிக்கண்ணு ஓதுவாருக்கோ மன ஆற்றாமை தாங்கவில்லை. அவன் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தார். எதிர்பரப்பில் ஆள் வராத சமயமாகப் பார்த்துச் சீனியை அழைத்தார்.

‘ ஏடே .. சீனி . இங்க வாடே ..’

‘ என்னன்ணே .. சாமிக்கண்ணன்ணே .. இந்தப் பக்கம். வயல்ல நாத்தெல்லாம் பாவியாச்சா. நானும் உங்கிட்ட வாங்குண எறநூறு ரூவாய கொடுத்துடனும்ன்னு நெனச்சுக்கிட்டே இருக்கேன். வாய்க்க மாட்டேங்குது. நாளைக்கு வாலக்கோனார் வயலுக்கு உழவுக்கு கூப்பிட்டிருக்காங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஒன் ரூவாயைத் தந்துடுறேன்ணே … ‘

‘ ஏடே .. நா ஒண்ட்ட ரூபாயயை கேட்டனாடா. அன்னைக்கு உங்கிட்ட எறநூறு ரூபாயை கொடுத்தது நீ திருப்பித் தரணுங்கிற எண்ணத்துல கெடையாதுடா . ஒன் புள்ள நல்லபடியா பொழைக்கணுமேங்கிற நெனப்பு தான்டா அப்ப எம் மனசுல ஓடுச்சு. ஆனா நீ என்னடான்னா ஏதோ நா ஒங்கிட்ட கொடுத்த ரூபாயைத் திருப்பிக் கேட்டிருவோனோன்னு என்னியக் கண்டதும் இந்த ஒரு வார காலமா ஒளிஞ்சு ஒடிக்கிட்டிருக்க. ஒதுக்கப்பட்டவன், விலக்கப்பட்டவன் வேதனையை அனுபவிச்சிப் பாத்தாத்தான்டா தெரியும். அட.. பைத்தியாரா. இந்த சாமிக்கண்ணு ஓதுவாரை நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானாடா. எனக்கொண்ணும் நீ அந்த ரூபாயைத் திருப்பித் தரவேண்டாம். அப்படித் தரணும்ன்ணு நெனைச்சேன்னா அந்த ரூபாயில ஒன் புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஏதாவது வாங்கிக் கொடு. அது போதும்டா எனக்கு … ‘

‘ அதில்லேண்ண … நீங்களும் கஷ்டப்படுற ஆளு . அதான் ரூவாயைத் திருப்பி தந்துட்டு ஒங்கிட்ட பேசணும்ன்னு இருந்தேன் .. ‘

‘ நீ ஒண்ணும் தரவேண்டாம்டே. எனக்குப் படியளக்கிறதுக்கு சமாது கோவில் தலைவரும், கல்வீட்டுக்காரியும் இருக்காங்க. என் நல்லது பொல்லதை அவங்க பார்த்துகிடுவாங்க. அதப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம். ஒண்ணு தெரிஞ்சிக்கடா. மனுசனுக்கு பணம் காசு முக்கியமில்ல, வாஞ்சையும், கருணையும், நன்றியுணர்வும்தான்டா முக்கியம் .. ‘ சொல்லி விட்டு வாய்க்காலை நோக்கிச் சாமிக்கண்ணு ஓதுவார் நடக்க ஆரம்பிக்க, கீழ்வானம் சிவக்கத் தொடங்கியிருந்தது .

28-08-2011 தேதியிட்ட கல்கி வார இதழ் வெளியீடு.

படத்திற்கு நன்றி:http://www.kalviyankadu.tk/home/photogallerycbm_328553/9

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆத்ம ஜெயம்

  1. வே.முத்துக்குமார்! என்ன வே! என்ன நடை! என்ன நடை! அதுவால்லெ நடக்கது! ‘மனுசனுக்கு பணம் காசு முக்கியமில்ல, வாஞ்சையும், கருணையும், நன்றியுணர்வும்தான்டா முக்கியம் .. ‘  ஆத்ம ஜெயம் தான். மிகவும் ரசித்துப் படித்தேன். 

  2. கல்கியில் வந்தபோதே மிகவும் பிடித்திருந்தது…

    அதிலும் //அவருட்ட நம்ம அப்பா கையேந்தி நிப்பாரேன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தானா இந்தப் பய// என்ற வரி மிகவும் பிடித்திருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *