கட்டாந்தரையும் காரணிகளும்
சாந்தி மாரியப்பன்
ஒரு மனிதனின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அவனது தேவைகளும் விருப்பங்களும் மட்டுமே.
பொறுமை, நம்பிக்கை, பொறுப்புணர்வு இவைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா?…. ஒரு செடியை வளர்க்க ஆரம்பியுங்கள். பொறுப்பில்லாமல் ஒரு நாள் தண்ணீர் ஊற்ற மறந்தால் கூட, வாடி வதங்கி இது பிழைக்குமா இல்லையா என்று நம் பொறுமையையும், எப்படியும் பிழைத்து விடும் என்ற நமது நம்பிக்கையையும் ரொம்பவே சோதித்து விடும்.
நாம் எப்போதும் வளமான எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்களாக இருக்கிறோம்,.. அதற்கான விதைகள் நிகழ்காலத்தில் மட்டுமே ஊன்றப்படுகிறது என்பதை மறந்து விட்டு.
வளர்ந்தபின் இந்த உலகத்தையே மாற்றி குறைகளில்லாத ஒரு புது உலகைப் படைப்பேன் என்பதே ஒவ்வொரு இளம் மொட்டின் கனவாக இருக்கிறது. வளர்ந்தபின்தான் புரிகிறது, உலகத்தில் நாமும் அடக்கமென்பது. சோப்பானது தன்னையும் சுத்தமாக வைத்துக் கொண்டு நம்மையும் சுத்தப்படுத்துவதைப் போல், முதலில் நாம் குறையில்லாத மனிதராய் மாறி உலகைக் குறைகளற்றதாக்குவோம்.
அறைகளில் அடைத்து வைத்துக் கற்பிக்கப்படுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், பொறுமையையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்வதும் கல்வியே.
அளவுக்கு மீறிப் பராமரித்தாலும் கெடும், பராமரிப்பின்றி விட்டாலும் கெடும் மனித உறவுகளும் தாவரங்களும் ஒன்றே. ‘பீலிபெய் சாகாடும்’ என்று வள்ளுவரும் ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று தமிழ்ப்பாட்டியும் எச்சரித்தது இதைத்தானோ..
அன்றைய தினத்தை மிகவும் மன நிறைவுடனும் திருப்தியுடனும் கழித்தவனுக்குத் தூக்கம் வர மெத்தையின் சொகுசும், மாத்திரையின் துணையும் தேவையில்லை.
நம்மீது உண்மையான அன்பு கொண்டவர் மனதில் நமக்கென்று விசாலமான நிலையான இடத்தை விடவும் விலையுயர்ந்த சொத்தை, வாழ்நாளில் நம்மால் சம்பாதித்து விட முடிவதில்லை.
உள்ளுணர்வென்பதும் கடவுளின் கொடைதான். கணவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்பதை மனைவியும், மனைவி அதைக் கண்டுபிடித்து விட்டாள் என்றறிந்து எதிராளி தன்னைக் கேள்வி கேட்குமுன் கணவனும் உள்ளுணர்வால் எச்சரிக்கப்பட்டுச் சுதாரித்துக் கொள்கிறார்கள்.
கட்டாந்தரையைப் பார்த்துப் பூந்தோட்டம் அழகாயில்லை என்பவனும், வாழ்க்கையில் சுவாரஸ்யமே இல்லை என்று அலுத்துக் கொள்பவனும், அதை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதைக் கடைசிவரை புரிந்து கொள்வதேயில்லை.
அன்பின் சாந்தி,
//அறைகளில் அடைத்து வைத்துக் கற்பிக்கப்படுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், பொறுமையையும் தன்னம்பிக்கையையும் இழந்து விடாமல் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கற்றுக்கொள்வதும் கல்வியே.// சத்தியமான வார்த்தைகள்! தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள். வாழ்த்துகள். அழகான புகைப்படம்…. பின் நவீனத்துவம்….? அருமை.
வாசித்தமைக்கு எடிட்டருக்கு நன்றி..
சிறிது பழுது பட்டிருந்தாலும் அழகில் குறைவேதும் ஏற்படவில்லை அந்தப்பூவுக்கு. அதுவே அதைப் புகைப்படமெடுக்கவும் தூண்டியது.
பின்னால் நவீனக் கட்டிடங்கள் இருப்பதால் இது பின் நவீனத்துவப் புகைப்படமே. உடைந்திருக்கும் பூ வழியே சற்றுச் சிறப்புக் கண்ணோட்டத்துடன் நோக்கினால் மட்டுமே இது புலப்படும் 🙂
திறந்தவுடன் என் கண்ணில் பட்டு, சிந்தனையை தூண்டியது, பின்னால் இருக்கும் மாடமாளிகைகள். நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.
கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.