அவ்வை மகள்

இன்றைய காலகட்டத்தில், மிக அதிகமான வருவாயுள்ள ஒரு தொழில் என்றால் அது கட்டிடத் தொழிலாளர் வேலைதான். இவர்கள் கேட்கும் கூலியைக் கேட்டாலே பயம் வந்து விடும் பலருக்கு. பல சமயங்களில் பேசாமல் கட்டிட வேலைக்குப் போய் விடலாமா என்று கூட நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு இவர்கள் நாளொன்றுக்குச் சம்பாதிக்கிறார்கள். சரி இதன் மறு பக்கத்தைப் பார்ப்போமா? குடும்பமாகக் களத்தில் இறங்கி வேலை செய்து கை நிறையக் கூலி வாங்கினாலும் ஒன்றும் இல்லையெனும் கதையாகக் கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இவர்களது வாழ்க்கையை மது வியாபித்திருப்பது போன்று வேறெவர் வாழ்க்கையிலும் இல்லை எனலாம். துரிதப் பணத்திற்காய் ஆலாய்ப் பறக்கும் இவர்களில் வெகு சிலரே சுய வாழ்க்கையைக் கட்டுமானத்தோடு தக்க வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் வாழும் நிலை பற்றிய கவிதை இதோ.

கட்டிடக் கட்டிடக் கட்டிடமாம் அதிலொவ்வொரு
கட்டமும் கட்டமே தான்
கட்டுகள் உள்ளவர் கட்டளைக்குக்
கட்டுப்பட்டவர் கட்டிடும் கட்டிடங்கள்

கட்டிடும் கட்டிடம் எத்தனையோ சொந்தக்
கட்டிடம் என்றிடக் கொட்டிலில்லை
கட்டங்கள் கட்டங்கள் கட்டங்களாய் அவர்
கட்டமும் நட்டமும் கூடவரும்

கட்டி தட்டிக் கிளப்பிடும் ஆணுடனே
கட்டிய ஏரினில் மாடெனப் பெண்ணிருக்கும் அவன்
கட்டிய தாலிக்குக் கூலியென்றோ பிள்ளைக்
கட்டுத்தட்டுடன் நித்தமும்கூடக் கூடவரும்?

கட்டுத்தலையுடன் கொண்டவன் சாய்ந்திருக்கும்
கட்டுச்சோற்றுக்கும் கூட கேடிருக்கும்
கட்டிய சேலைக்கந்தலிலே காலில்
கட்டுடன் பிள்ளை படுத்திருக்கும்

கட்டுமேத்திரிக்கு அங்கே பாசம் வரும் முன்
கட்டணம் தந்திடத்தேடி வரும்
கட்டளை கட்டளை கட்டளையே அவள்
கட்டுப்படாவிடில் பட்டினியே!

கட்டிலும் மெத்தையும் தேவையில்லை
கட்டித்தொட்டிடும் ஆசைக்கும் பஞ்சமில்லை
கட்டிடம் கட்டிடும் வேளையிலும் அவர்
கட்டுடல் எண்ணுவார் குற்றம் இல்லை

கட்டு வேலைக்கு ஆலாய்ப் பறந்திடுவார்
கட்டுக்கூலியைச் சுளையாய் வாங்கிடுவார் துட்டுக்
கட்டினைக் கண்டதும் மாறிடுவார்
கட்டை சரக்குண்டு வீழுவார் மிச்சமில்லை

கட்டுதல் வாழ்க்கையென்றானதனால் சுயவாழ்வைக்
கட்டுதல் தேவையன்றோ? சிந்தனைச் சீர்படக்
கட்டுதலை முதல் வேலையென்றேயவர் கொண்டு விட்டால்
கட்டங்கள் மாறுதல் பெற்றுவிடும்; சட்டங்கள் சாதகமாகிவிடும்

கட்டுமானத்தின் வருமானத்திலே அவர்
கட்டும் மானம் உயர்மானமென்றால்
கட்டுத்தொழிலாளர்கள் உய்யுவர் வாழ்வினிலே அவர்
கட்டுப்பாட்டுடன் வெல்லுவர் தாழ்வினிலே!

 

படத்திற்கு நன்றி:http://in.reuters.com/article/2011/11/21/idINIndia-60647620111121

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கட்டுமானம்

 1. கட்டிடப் பணியாளர் வாழ்க்கைக்
  கணிப்பு மிக நன்று…!

  கட்டுமானம் உயர்ந்து நிற்குது
  கம்பீரமாய்..
  இவர்கள் மானம்
  இறங்கிகக் கிடக்குது
  பாதாளமாய்-
  கட்டுப்பாடு இல்லாததாலே…!
                  -செண்பக ஜெகதீசன்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *