பவள சங்கரி

சௌந்திரம் ராமச்சந்திரன் (1905-1984)

நம் பாரதத் தாயின் மடியில் மலர்ந்த எண்ணற்ற மலர்களில் சேவை மணம் பரப்பி நம் தாயின் மானம் காத்த புனிதமான மலர்கள் பல. தாய்த்திரு நாட்டிற்காக தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த அத்தகைய நறுமணம் மிக்க மலர்களில் ஒரு தனிப்பெரும் மலர்தான் டாக்டர். சௌந்திரம் ராமச்சந்திரன். நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த செழுமையான கிராமத்தில்தான் வாழ்ந்தது டி.விஎஸ் நிறுவனத்தாரின் குடும்பம். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இந்த நிறுவனமும் ஒன்று.

1905ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியடிகள் ஆரம்பித்து வைத்த ஆக்கப்பூர்வமானப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சமூக சேவகி டி.வி.எஸ்.லட்சுமிக்கும், டி.வி.சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்கும் பிறந்த செல்ல மகள் சௌந்திரம். உழைப்பின் உன்னதத்தை உணர்ந்த ஓர் குடும்பம் இவருடையது. பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரைத் தம் கலையார்வம் மூலம் வியப்பில் ஆழ்த்தியவர் இவர். இவருடைய சகோதரர்கள் டி.வி.எஸ். நிறுவனங்களின் அதிர்பர்களாக இருந்தும் , அன்றாடம் பணியாட்களுடன், தாமும் ஒரு பணியாளாக, அழுக்கு கைகளும், கருப்பு ஆடையுமாக பணிபுரிவதோடு, அப்பணியாட்களுடனேயே, உண்ணுவது போன்ற சமத்துவமும், அவர்களின் மீதும் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மீதும் முழு அக்கரை செலுத்துபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தாய் லட்சுமி அம்மாள், மகாத்மா காந்தியின், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது குடும்பமே ஒட்டு மொத்தமாக, தொழிலாளர் நலப்பணிகளிலும், சத்துணவு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தியவர்கள். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில், அரசாங்கம் திட்டமிட்ட காலத்திற்கு வெகு முன்னரே இவர்கள் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.திரு டி.வி சுந்தரம் ஐயங்கார், தேசப்பற்றும் மிக்கவராக இருந்த காரணத்தினால் காங்கிரசுடன் தொடர்பு கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்ததால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசியப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. அப்படிப்பட்ட விவாதங்களின் போது சிறுமியான சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே இவர் மனதிலும் தேசப்பற்று ஆழமாக வேர் விட்டுப் பதிந்துவிட்டது. வைதீகக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது அந்தக் காலத்திய வழமையாக இருந்தது. அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜன் என்பவருக்கும் , சௌந்தரத்திற்கும் 1918ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. மணமகனுக்கோ 16 வயது. திருமணமானவுடன் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். சில வருடங்களிலேயே சௌந்தரத்திற்கு குழந்தையும் பிறந்தது. மிகச் சிறிய வயதிலேயே பிரசவமும் ஆனதால், குறைப்பிரசவமாகி ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வளர்ந்த பெண்ணிற்கு இது பெரும் சோகமானது. இருப்பினும் இந்தச் சோகத்திற்கு மருந்தாக கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது ஆறுதலளித்தது அவருக்கு.அருகிருந்த ஓர் மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெரும்பாலான நேரங்கள் பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கிய காலமது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் தொண்டாற்றினார்கள். ஒரு முறை கணவர் ஒரு பிளேக் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்து விட்டு, தம் கையுறையை நீக்கிய போது, தாம் பயன்படுத்திய ஒரு கையுறையில் ஓட்டை இருப்பதைக் கண்டவர் அருகிலிருந்த தம் உதவியாளரிடம், நகைச்சுவையாக, “ஒரு வேளை நான் செப்டிகேமியா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பேனானால் அதற்குக் காரணமாக இந்தக் கையுறையாகத்தான் இருக்கும்” என்றாராம். சில நேரங்களில் இது போன்ற வாக்குகள், பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் ‘ததாஸ்து’ என்ற ஆசியினால் அப்படியே நடந்து விடும் என்பார்கள். அதன் காரணமாகவே நல்ல வாக்கு மட்டுமே நம் வாயிலிருந்து வர வேண்டும் என்பார்கள் சான்றோர்கள். அந்த வகையில், எந்த நேரத்தில் இப்படி ஒரு வார்த்தை சொன்னாரோ, அம்மருத்துவர் அவர் சொன்னபடியே அதே செப்டிகேமியாவினால் இறந்தே போனார். இறக்கும் தருவாயில், தான் இறந்த பின்னர் மனைவி விதவைக் கோலம் பூணக் கூடாது என்பதிலும், தன்னைப் போல் மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றும்,. விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம் என்றும் வாக்குறுதிகள் பெற்றுக் கொண்டார் அவர் கணவர். இளம் பருவத்தின் வாசலில் நிற்கும் ஒரு பெண்ணிற்கு இதெல்லாம் மிக அதிர்ச்சியான விசயமானது. தாங்கொணா துயரத்தை மறந்து, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துப் படித்து, தம் கணவரின் விருப்பப்படி அவர் பணியைத் தொடர முடிவு செய்தார். திரும்பவும் கல்வியைத் தொடரும் பொருட்டு, முதலில் மெட்ரிக்குலேஷன் தேர்வை எழுதி முடித்து பின்பு 1928இல் தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். மருத்துவப் படிப்பை முடித்தவுடன் சென்னை திரும்பியவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் சென்று சேர்ந்தார். இருவரும இணைந்து குழந்தைகளுக்கான அவ்வை இல்லமும், கிராம மக்களுக்காக அவ்வை சுகாதார சேவை மையங்களும் அமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாளில் அது மிகவும் பிரபலமானது

ஏழைக் குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக பல் உதவிகள் செய்து கொண்டிருந்த சௌந்திரம் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற தம் நெருங்கியத் தோழி சுசீலா நய்யார் அவர்களின் தொடர்பால், பல தேசத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். சுசீலா நய்யார் அவர்கள் அண்ணல் காந்தியடிகளைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது அம்மையாருக்கு.தொடர்ந்து சௌந்திரம் அவர்கள்,பெண்களுக்கு பிரசவ நேர மருத்துவம் பற்றிய அறிவியல் ஆய்வு மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் பற்றிய பட்டயப் படிப்பை மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். தில்லியில் ஆரம்பித்த இவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராக பணியில் அமர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

1940ம் ஆண்டு, நவம்பர் மாதம் , இந்தியாவில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு முன்பாக சௌந்தரம் அவர்கள், டாக்டர் ஜி.ராமச்சந்திரனை விரும்பி, மறுமணம் செய்து கொண்டார். சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்தது.காந்தி இராட்டையில் தம் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நூற்ற நூலில் நெய்யப்பட்ட வேட்டியை, மணமகனும் அன்னை கஸ்தூரிபாய் நூற்ற நூலில் நெய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் திருமண ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கேரள மாநிலத்தின் கிராமங்களில் பயணம் செய்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு வித்திட்டார். 1942ம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருமதி சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். தம் தாய் வீடு நோக்கி மதுரைக்கு வந்து சேர்ந்தவரை , பெற்றோர் ஏற்க மறுத்தனர். காரணம் பிராமணர் அல்லாத வேற்று சமூகத்தவரான ராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட மனக்கசப்பு. தவிர, பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவச் செயல் என்று கருதப்பட்ட காலம் அது. ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர். பிற்காலத்தில் இவர் தாய் லட்சுமி அம்மாள் சமாதானம் ஆனாலும், இவர் தந்தையின் உறுதி சற்றும் தளர்வதாய் இல்லை. இறுதி வரை ராமச்சந்திரன மாமனார் வீட்டிற்குச் செல்ல முடியாமலே போனது. ஆயினும், தம் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையில் எந்த குறையும் வைக்கவில்லை பெற்றோர். தங்கள் மகன்களுடன் ,மகளுக்கும் சொத்தை சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தனர். தம் சொத்து முழுவதையும், இவருடைய கடின உழைப்பிற்கும், நிர்வாகத் திறமைக்கும் ஆதாரமான நினைவுச் சின்னமாக ஆத்தூர் தொகுதியில் உள்ள காந்திகிராம பயிற்சிப் பள்ளியை முன்னேற்றுவதற்கே செலவு செய்தார் என்பதும் போற்றுதலுக்குரியது. கிராமச் சேவைக்கென்றே சின்னாளப் பட்டியைத் தேர்வு செய்து 1947இல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி மற்றும் கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைகள்தான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் மென்மேலும் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன.

1940களில் நூற்றுக்கணக்கானவர்கள் அண்ணல் காந்தியடிகளின் தேசப்பற்றின் மீது ஈடுபாடு கொண்டு தங்களால் ஆன சேவையைச் செய்ய முன் வந்தவர்களுள் சௌந்திரமும் ஒருவர். பன்முகங்கள் கொண்ட காந்திகிராமம் உருவாவதற்கான இரு முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டில் நடந்தன. பிப்ரவரி 2இல், 1946ஆம் ஆண்டு, மதுரைக்குச் செல்லும் புகைவண்டியை, பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளிடம், கட்டாயப்படுத்தி, அண்ணல் காந்தியடிகள் பயணம் செய்யும் அந்த ரயிலை சின்னாளப்பட்டி என்ற கிராமத்தில் நிறுத்தி அண்ணலை தரிசித்து, ஆசி பெறும் பொருட்டு நடத்தப்பட்ட கிளர்ச்சி முதலாவது சம்பவமாகும். மற்றொன்று அவருடைய புரட்சிகரமான திருமணம் ஆகும்.

ஆரம்பத்தில் சௌந்தரம் அம்மையார், ஒரு சாதாரண குடிலில், இரண்டே படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனையையும், அனாதை ஆசிரமும் நிறுவுவதன் மூலம் ஆரம்பித்த இவர்களது சேவை, திரு ராமச்சந்திரன் பாடம் சொல்லிக் கொடுப்பதில் தொடர்ந்து, மருத்துவ உதவி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற வேலை வாய்ப்புகள், உற்பத்திப் பொருட்களின் விற்பனை வசதி, சேமிப்பு மற்றும் கடன் பெறும் திட்டங்கள், குழந்தைகள் நலம், முதியோர் இல்லம், போன்ற பல துறைகளில் இவர்களின் நேசக்கரங்களின் சேவைப்பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கதர் ஆடைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதன் மூலமாகவும், சோப் தயாரித்தல், ஆயுர்வேத மருந்துகள் தயாரித்தல் போன்றவைகள் மூலமாகவும் ஏழ்மையை விரட்ட திட்டமிட்டார். காதி மற்றும் கிராம தொழிற்சாலைகள் வாரியத்தின் துணைத்தலைவரானார் இவர்.

டாக்டர் சௌந்திரம் அவர்கள் குழந்தைகளுக்கான ஓர் அனாதை இல்லமும் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கான ஓர் இல்லமும், காந்திகிராமில் ஆரம்பித்தார். இந்த இரண்டு இல்லங்களும் இன்றளவும் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன. குடும்பக் கட்டுப்பாடு மையங்களும், சுகாதாரப் பணியாளர்களுக்கான பயிற்சி மையங்களும் மிகச்சிறந்த முறையில் நடத்தப்படுகின்றன. 1952ஆம் ஆண்டில் சௌந்தரம் அம்மையார், அரசியலில் பங்குபெற்று, சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம், அக்டோபர் 2ஆம் நாள், மதுரை மாவட்டத்தின், சமுதாய வளர்ச்சித் திட்டத்தின் பொறுப்பேற்று அத்திட்டத்தின் கௌரவ திட்டக்குழு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார்.

மதுரை மாவட்டத்தில் வினோபாஜி பாத யாத்திரை சென்றிருந்த போது பூதான இயக்கத்தில் சௌந்திரமும் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1955ம் ஆண்டின், முன்னேற்றப் பணிக்கான தேசீய விருது காந்திகிராமம் அமைந்துள்ள ஆத்தூர் தொகுதிக்கு , அதன் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. 1956இல், சௌந்திரம் அம்மையார், இந்திய – சைன நல்லுறவை வலியுறுத்தும் பிரதிநிதியாகவும், சைனாவின், கிராமப்புற வளர்ச்சி செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும் சென்றிருந்தார். 1957இல் சௌந்தரம் அம்மையார் சென்னை சட்டமன்றத்திற்கு திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த முறை மிகவும் பின் தங்கிய தொகுதியான வேடச்சந்தூரில் நின்று , கல்வி, சுகாதாரம், பேருந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு, போன்றவற்றின் வசதிகளை மக்களின் முழு ஒத்துழைப்புடன் பெருக்கிக் கொள்ளச் செய்தார்.

காந்தியின் நான்கு அருங்காட்சியகங்களில் ஒன்றை , டாக்டர் ராம சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் மதுரையில் நிறுவினார் சௌந்திரம் அம்மையார். இங்கு பள்ளி மாணவர்களுக்காக மிகச் சுவையான நிகழ்ச்சிகளுடன், நாள் முழுவதும் அங்கு பல விசயங்களைக் கற்றுக் கொள்ள செலவிடுவதுடன், திரும்பும் போது அதைப் பற்றி ஒரு சிறு குறிப்பும் எழுதி விட்டுச் செல்லும்படி திட்டமிட்டு, அந்தப் பரீட்சைத் தாள் மதிப்பிடப்பட்டு அவர்களிடமே அளிக்கப்படும். இந்த முறை மாணவர்களுக்கு காந்தியக் கொள்கைகளையும், காந்தியடிகளின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வழியாக இருக்கிறது. 1960இல், அவர் காதி மற்றும் கிராமத் தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவற்றிற்கு உப தலைவராகவும், திரு பக்தவச்சலம் அவர்கள் தலைவராகவும் இருந்தார். இரண்டே ஆண்டுகளில் காதி தன் உற்பத்தியை இரு மடங்காக்கியதுடன் தற்போதைய குறளகத்திற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

சௌந்தரம் அம்மையார் துணைக் கல்வி அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். இந்த பதவிக் காலத்தில் அவர் பெண்களுக்கான கிராமப்புற நிறுவனங்களைத் துவக்கினார். அதில் ஒன்று கஸ்தூரிபா கிராம் மற்றும் இன்றும் செயல்படுகிற இந்தூர் நிறுவனமுமாகும். கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரங்களை, கிராம சேவகர்கள் மற்றும் கிராம சேவகிகளின் தலைமைகள் மூலமாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருவதில் பெரும் பங்களித்ததால் அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கு வழிவகுத்தார். காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனை, 1971-72 மற்றும், 72-73 க்கான , குடும்ப நலத்திட்டத்திற்கான தேசீய விருதைப் பெற்றது. காதியை இவர் மிகச் சிறப்பாக ஊக்குவித்ததன் விளைவாக அதன் உற்பத்தியின் மதிப்பீடு மூன்றரை கோடியாகியது. 3000 பேர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை வாய்ப்பில் 2000 பேர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1980 முதல் 1984 வரையிலான ஆண்டுகளில் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் தலைவராகப் ப்தவி புரிந்தார்.

1980களில் இறுதியில் சௌந்திரம் அம்மையார் நோய்வாய்ப்பட்டதனால், மெல்ல மெல்ல தம் பொறுப்புகளை ஒவ்வொன்றாக விட வேண்டியதாகியது. அக்டோபர் மாதம் அதே வருடத்தில் அவருடைய இறுதி மூச்சு இம்மண்ணின் காற்றில் கரைந்தது. வறுமையும், சாதி, மதக் கலவரங்களும் நடக்கும் இடங்களுக்கெல்லாம் ஓடோடிச் சென்று தம் உதவிக் கரங்களை நீட்டும் அந்த உன்னத ஆத்மா ஆழ்ந்த அமைதி கொண்டது தீராத துயரமானது. தம்முடைய வசதியான வாழ்க்கையைத் துறந்து, ஏழை எளிய மக்களுக்காக , குறிப்பாகப் பெண்களுக்காக தம் வாழ்நாள் முழுவதையும், எண்ணற்ற தியாகங்கள் மூலமாக பல்வேறு சேவைகள் செய்தவர் இவர். காந்திகிராமம் வாழும் வரை இவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதே நிதர்சனம். எல்லையற்ற அன்பும், பொறுமையும், இரக்க குணமும், உதவும் உள்ளமும் கொண்ட பெண்மணி சௌந்தரம் அம்மையார் என்றால் அது மிகையாகாது.

 

 படத்திற்கு நன்றி : http://www.goodnewsindia.com/Pages/content/institutions/gandhigram.html

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மகளிர் வாரம்! – புடம் போட்ட தங்கம்!

  1. மகளிர் வாரத்தில் மிகச் சிறந்த ஒரு பெண்மணியைப் பற்றிய அருமையான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. அவரைப் பின்பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

  2. ஆசிரியருக்கு தனிமடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன். இந்த கட்டுரைக்கு பல சிறப்புகள் உண்டு. முதன்மையான சிறப்பு, ஒருவரின் வாழ்க்கை வரலாறு அமைப்பதற்கு மாடலாக இருப்பது. 

  3. Well written..
    Highly informative.
    Keep it up…!
                  -SJ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.