மனைவியும் மந்திரிதான்
பிச்சினிக்காடு இளங்கோ
நூலிழையாய்ச் சத்தமின்றிக்
குளியலறைக் குழாய் நீர்…
நிரம்பிச் சிரித்தது
வாளி
திருந்த மாட்டீர்கள்…
திட்டித் திருத்தினாள் மனைவி
குளியல் முடிந்ததும்
அணைக்காத விளக்கைக் கண்டு
ஆத்திரத்தின் எல்லையில்
அவள்.
தொலைபேசியில்
கொஞ்சமாய்ச் சிரியுங்கள்
கட்டணம் கட்ட முடியாமல்
அழ வேண்டியிருக்கிறது
இதுவும் அவளுடைய
சங்கீதத்தின் சரணம்தான்
எரிச்சலின் விளிம்பில்
நெளிந்து கொண்டு நான்
தொலைக்காட்சியில்
இந்த ஆண்டு
அதிக லாபம் ஈட்டிய
நிறுவன விருதை
நிர்வாக இயக்குநரிடம்
அமைச்சர் வழங்கினார்
குடும்பத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்
நிறுவன லாபத்திற்கு
வருமானம் மட்டும் வழியல்ல
சிக்கனமும்
சிறந்த நிர்வாகமும் காரணம்
மந்திரி சொன்னபோது
மனைவி சொன்னவை
சுறுக்கென்றது
மனைவியும்
மந்திரிதான்
படத்திற்கு நன்றி:http://www.smsglitz.com/wife-sms/woman-speaks-30000-words-in-a-day