சென்னை புத்தகத் திருவிழா – 34

4

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshசென்னையில் முப்பத்து நான்காவது புத்தகக் கண்காட்சி, ஜனவரி 4 முதல் 17 வரை நடந்தது, உங்களில் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். எனக்கு சென்னையில் இது முதல் வருடம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தேன். என் நண்பர் ஒரிஸ்ஸா பாலு அவர்கள் வேறு அந்தக் கண்காட்சி பற்றி நிறைய சொல்லியிருந்தார். அவர் புவனேஸ்வரில் இருக்கும்போதே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கென்று சென்னை வருவார் என்றும் தெரிவித்தார். அதோடு பல பிரபலமான எழுத்தாளர்களும் வந்திருப்பார்கள் என்றும் என்னிடம் கூறியிருந்தார்.

நாங்கள் புவனேஸ்வரில் இருக்கும்போது அந்த நகரில் புத்தகக் கண்கட்சி நடக்கும். ஆனால் அதில் ஆங்கில புத்தகங்களின் ஆதிக்கமே அதிகமிருக்கும். சில ஸ்டால்களில் ஒடிய புத்தகங்கள், இன்னும் விரல் எண்ணக்கூடிய ஸ்டால்களில் பெங்காலி புத்தகங்கள் காணக் கிடைக்கும். அவை தவிர கண்காட்சிக்கே உரித்தான டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, குப்சுப் மற்றும் சாட் கடைகள் என நிறைந்திருக்கும். இத்தகைய கடைகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். புத்தகம் வாங்குவோரை விட, சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். இது தான் நாங்கள் பார்த்த புத்தகக் கண்காட்சி.

சென்னைப் புத்தகக் காட்சி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், எங்களுக்கு. அவை பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வேறு. ஒரு கலவையான மன நிலையோடு தான் கண்காட்சியில் நுழைந்தோம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே, புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் தான் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வருடாவருடம் அங்கேதான் நடைபெறும் என்பதையும் நண்பர்கள் கூறியிருந்தனர். புத்தகக் கண்காட்சிக்கு யார் வருவார்கள்? மக்கள் அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கியிருப்பார்கள் என நினைத்த எனக்குப் பெரும் வியப்பு. சரியான கூட்டம்.

கட்டணம் செலுத்தி உள்ளே நுழையும் போதே அங்கே ஸ்டால் போட்டிருக்கும் பதிப்பகங்களின் பட்டியல் அழகாக அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு அந்த எண்களின் வரிசைப்படி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஏற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. கையிலிருக்கும் அச்சிட்ட வரைபடத்தைக் கொண்டு உங்களுக்கு வேண்டிய பதிப்பகத்துக்கு நீங்கள் நேரடியாகச் செல்லலாம். வரிசையாகப் பார்க்க விரும்புபவர்கள் ஒன்றாம் எண்ணிலிருந்து வரிசைக்கிரமாகச் சுற்றி வரலாம்.

நடந்த களைப்புத் தீர, வாசகர்கள் அமர, ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தன. அதனால் வாசகர்கள் நடைபாதையில் உட்கார்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர். பாதைகள் ஒவ்வொன்றுக்கும் இலக்கியத்தில் சாதித்த பெரும் அறிஞர்களின் பெயர்களைச் சூட்டி அழகூட்டியிருந்தார்கள். கம்பன் பாதை, ஔவையார் பாதை… போன்ற தமிழறிஞர்களின் பெயர்களோடு, ஷெல்லி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற வேற்று மொழி அறிஞர்கள் பெயரையும் சூட்டி, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று நிரூபித்திருந்தார்கள்.

34thbookfair

தமிழகத்தின் மிகப் பிரபலமான பதிப்பகங்கள் அனைத்தும் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில், மொத்தம் 646 ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றுள் பதிப்பகங்களின் எண்ணிக்கை 386. உலக முழுவதிலுமிருந்து பதிப்பகங்கள் பங்கேற்றிருந்தன. இவற்றுள் குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடைத்தவை, வெறும் எழுபது ஸ்டால்களில்தான். அதைவிடக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பெண்களுக்கான புத்தகங்கள் எனக் குறிப்பிடப்பட்ட ஸ்டால்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவையேல்லாம் சிறு குறைகள்தான். நிறைகளைக் கணக்கிடும் போது இந்தக் குறைகள் மறைந்து போய்விட்டன,

“எங்கெங்கு காணினும் சக்தியடா” என்பது போல எங்கெங்கு காணினும் தமிழ் நூல்களே தென்பட்டமை மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. தமிழகத்திலேயே வாழும் பேறு பெற்றவர்களுக்கு எங்கள் இந்த மகிழ்ச்சிக்கான காரணம் புரியாது. வட மாநிலங்களில் பத்து, பதினைந்து வருடங்கள் தமிழின் வாடையே படாமல் வாழ்ந்தவர்கள், நாங்கள். வீட்டைத் தாண்டி தெருவில் கால்வைத்தது முதல் ஹிந்தி அல்லது அந்த மாநிலத்தின் மொழியேதான் பேச வேண்டும் கேட்க வேண்டும். தமிழ்ப் புத்தகங்கள் வேண்டுமென்றால் சென்னை வந்து வாங்கினால்தான் உண்டு. இல்லை வார, மாத இதழ்களுக்குச் சந்தா கட்ட வேண்டும். இந்தச் சூழலிலிருந்து விடுபட்ட நாங்கள், எங்கும் தமிழின் ஆளுமை பார்த்துப் பரவசமடைவது இயற்கை அல்லவா?

ஒவ்வொரு பதிப்பகத்திலும் தேர்ந்தெடுக்க ஏராளமான புத்தகங்கள். பக்தி இலக்கியங்கள், சமையற்கலை நூல்கள், சுய மேம்பாட்டு நூலகள், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள், மனோ தத்துவ நூல்கள் என வானவில்லின் வரிசை போல பல ரகமான நூல்கள். மக்களும் தங்களுக்குத் தேவையானவை எவை என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

குழந்தைகளுக்குப் புது வரவாக 3D புத்தகங்கள் வந்திருந்தன. புத்தகத்தோடு ஒரு கண்ணாடியும் கொடுத்தார்கள். அதைப் போட்டால் படங்கள் 3Dயில் மேலெழும்பித் தெரியும் எனச் சொன்னார்கள். அத்தகைய புத்தகங்களுக்கு தற்போது நல்ல கிராக்கி என்று ஒரு பதிப்பாளர் சொன்னார். அதைக் கண்கூடாகப் பார்க்கவும் முடிந்தது. இத்தகைய கண்காட்சிக்கு, பொதுவாக வயதானவர்கள் தான் வருவார்கள் என்று நினைத்திருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்களே தென்பட்டனர். ஒரு ஆரோக்கியமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இதை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

சமீபத்தில் சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்ட நாஞ்சின் நாடனின் சிறுகதைத் தொகுப்பான “சூடிய பூ சூடற்க” மிக அதிகமாக விற்பனையானதாகத் தெரிகிறது. பத்து தினங்களில் மூவாயிரம் பிரதிகள் விற்றதாக அவரே குறிப்பிட்டார். மிக அருமையான கதைகளின் தொகுப்பான அந்த நூல், தமிழினி  பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் அந்த ஸ்டாலில் அமர்ந்திருந்தார். மிக எளிமையான மனிதர். அவரிடம் கையெழுத்து வாங்கக் காத்திருந்த அனைவரிடமும் நன்றாகப் பேசி, பெயர் விசாரித்து, எழுதிக் கையெழுத்திட்டார். அதே போல் உயிர்மை பதிப்பகத்தில் மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, எஸ்,ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

தமிழகமே வியந்து பார்க்கும் மிகச் சிறந்த சம கால எழுத்தாளர்களை ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு மிக மகிழ்ச்சியாகவும் அவர்களின் எளிமையான பழகும் தன்மை கண்டு நெகிழ்ச்சியாகவும் இருந்தது. கண்காட்சியில் முதுபெரும் எழுத்தாளர் கி.இராஜநாராயணன் அவர்களும் வந்திருந்தார். வயதான சிங்கம் போல கம்பீரமாக வீற்றிருந்தார். பலர், குறிப்பாக இளம் பெண்கள், அவரது கதைகளைக் குறிப்பிட்டு அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர். இந்தத் தொலைக்காட்சி யுகத்திலும் தமிழ் இலக்கியத்திற்கான வாசகர்கள் குறையவில்லை, மேலும் அதிகரித்துத்தான் இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிந்தது.

34thbookfair

கண்காட்சியின் வெளிப்புறத்தில் திறந்த வெளியில் பந்தல் போட்டு, மேடை அமைக்கப்பட்டு, தமிழறிஞர்கள் பலர் பங்கு கொண்ட, விவாதங்கள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் போன்றவை நடந்த வண்ணம் இருந்தன. அறிவுக்கும் செவிக்கும் ஒருசேர விருந்து கிடைத்ததால், வயிற்றுணவு பற்றிய ஞாபகமே வரவில்லை. குழந்தைகள் பலர், தங்கள் பெற்றோரிடம் மேலும் நிறையப் புத்தகங்கள் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தனர். குழந்தைகளின் பிறந்த நாள் போன்றவற்றிற்குப் வீடியோ கேம்ஸ் வாங்கிக் கொடுப்பதைக் காட்டிலும் நிறைய நல்ல புத்தகங்களைப் பரிசாகத் தரலாம். இதனால் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அவர்களது படிக்கும் பழக்கத்துக்கும் தூண்டுகோலாய் இருக்கும்.

14 நாட்கள் நடந்த இந்தக் கண்காட்சி, எனக்கு ஒரு இலக்கியத் திருவிழாவாகவே காட்சி அளித்தது. பார்த்து விட்டுத் திரும்பும்போது அகம் குளிர்ந்திருந்தது போலவே, மார்கழி மென்பனியால் புறமும் குளிர்ந்தது. இத்தகைய கண்காட்சிகளை பள்ளி, கல்லூரி மற்றும் இதர அலுவலகங்களும் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என்ற சிறு ஆதங்கம் தோன்றவே செய்தது.

ஆயினும் இந்தக் கண்காட்சியைக் கண்ட பிறகு “மெல்லத் தமிழ் இனிச் சாகும்” என்ற பயம் கொஞ்சம் கூடத் தேவையில்லை என்ற தைரியமும் என்னதான் தொலைக்கட்சி, வலைமனைகள், வீடியோ கேம்ஸ் வந்தாலும் படிக்கும் பழக்கத்தை நம் தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாது என்ற நம்பிக்கையும் வந்தது. இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் நன்றி. கண்காட்சியைக் கண்டு இரசித்து, புத்தகங்கள் வாங்கிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

=============================

படங்களுக்கு நன்றி – http://bapasi.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சென்னை புத்தகத் திருவிழா – 34

  1. தமிழ்ப் புத்தகங்கள் வேண்டுமென்றால் சென்னை வந்து வாங்கினால்தான் உண்டு எனச் சொல்கிறீர்கள், சென்னைக்கு வரவே வேண்டாம். http://www.tamilnool.com உங்கள் வீட்டுக்குள்ளேயே அல்லது உங்கள் மேசையிலேயே உள்ள தமிழ்ப் புத்தகக் கடை. உலகம் முழுவதும் வெளியாகும் தமிழ்நூல்களின் அங்காடி. அந்தத்தளத்தில் இல்லாத நூல்களையும் வாங்கித் தருகிறோம். இணையத்துள் நுழைக, புத்ததக் காட்சிக்குள் நுழைவீர், நன்றி

  2. புத்தகக் கண்காட்சியைப் பற்றி நன்றாக எழுதி உள்ளீர்கள். நானும் இரண்டு முறை சென்றிருந்தேன். ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்று இருந்தன. ஒரு சேர அவற்றைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிறது.

  3. என்ன தான் இணையத்தளம் மூலமாக நாம் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கினாலும் பொருட்காட்சியில் லட்சக்கணக்கான தமிழ்ப் புத்தகங்களை ஒரு சேரப் பார்த்து வாங்குவது போல வராது. நமது விருப்பத்துக்கேற்ற புத்தகங்களை அலசிப் பார்த்து வாங்கலாம். மிகவும் நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

  4. //வட மாநிலங்களில் பத்து, பதினைந்து வருடங்கள் தமிழின் வாடையே படாமல் வாழ்ந்தவர்கள், நாங்கள். வீட்டைத் தாண்டி தெருவில் கால்வைத்தது முதல் ஹிந்தி அல்லது அந்த மாநிலத்தின் மொழியேதான் பேச வேண்டும் கேட்க வேண்டும். தமிழ்ப் புத்தகங்கள் வேண்டுமென்றால் சென்னை வந்து வாங்கினால்தான் உண்டு. இல்லை வார, மாத இதழ்களுக்குச் சந்தா கட்ட வேண்டும். இந்தச் சூழலிலிருந்து விடுபட்ட நாங்கள், எங்கும் தமிழின் ஆளுமை பார்த்துப் பரவசமடைவது இயற்கை அல்லவா?//

    ஹைய்யோ!!!!!!!!!!!!! இதேதாங்க!!!!!

    தமிழ்நாட்டை விட்டும் இந்தியாவை விட்டும் வாழும் இந்த 36 வருசங்களில் சென்னைக்கு வரும்போது புத்தகக் கடைகளுக்குப் போனால்………….. ‘காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில்’ மேய்ஞ்ச கதைதான்:-)))))))

    இந்த ஒரு விஷயத்தில் (மட்டும்) சென்னைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.

    உங்கள் பதிவு அருமை. ஆற்றொழுக்கு போல நடையும் அருமை. வெகுவாக ரசித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *