துளசி மாடம்
தமிழ்த்தேனீ
“அப்பா, நானும் உனக்குப் பொறந்த பொண்ணுதானா? ஏம்ப்பா என்னை மட்டும் எப்பவும் திட்டிகிட்டே இருக்கீங்க? அக்கா எது செஞ்சாலும் பாராட்டறீங்க. ஆனா நான் எது செஞ்சாலும் அதிலே ஒரு குறை கண்டுபிடிச்சிகிட்டே இருக்கீங்க? ஏம்ப்பா உங்களுக்கு இந்த பாரபட்சம்? நீங்க அடிக்கடி என்னை யார்கிட்டயோ தவிட்டுக்கு வாங்கினதா சொல்லும்போதெல்லாம் விளையாட்டா சொல்றீங்கன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன். ஆனா அது விளையாட்டு இல்லேன்னு என் மனசிலே படுது. சொல்லுங்கப்பா நானும் நீங்க பெத்த பொண்ணுதானா?” கண்களில் துளிர்த்த கண்ணீர் முத்துக்களுடன், நகம் கடித்தபடியே கேட்ட மகள் பிரியாவை நிமிர்ந்து பார்த்தார் ஷண்முகம்.
“பிரியா முதல்லே இந்த கண்ணீர், அப்புறம் நகம் கடிக்கறது ரெண்டையும் விட்டுடு. இந்த ரெண்டு வழக்கமும் இருக்கறவங்க, தன்னம்பிக்கை இல்லாதவங்க அப்பிடீன்னு பெரிய பெரிய மனோதத்துவ மேதைகள் எல்லாம் சொல்றாங்க. இங்கே வந்து உக்காரு!” என்றார் இதமான குரலில். பிரியா எதிரே வந்து உக்கார்ந்தாள். “இப்போ நல்ல பொண்ணு நீ. சரி மறுபடியும் நீ கேட்ட கேள்வியைக் கேளு!” என்றார் ஷண்முகம்.
“சரிப்பா, மறுபடியும் கேக்கறேன். நானும் நீங்க பெத்த பொண்ணுதானா?” ஆக்ரோஷமாக மீண்டும் கேட்டாள் பிரியா!
“இல்லேம்மா, நீ நான் பெத்த பொண்ணு இல்லே” என்றார் ஷண்முகம், அமைதியாக.
அதிர்ந்தாள் பிரியா! அழ ஆரம்பித்தாள்.
“போதும் உங்க விளையாட்டு. குழந்தையை ஏன் இப்பிடி கலங்க வைக்கிறீங்க? நிறுத்துங்க உங்க பேச்சை” என்ற மனைவி காமாட்சியிடம், “இல்லே காமாட்சி, நான் பிரியாவைக் குழப்பலே, தெளிய வைக்கப் போறேன். ஆமாம் எல்லாத்தையும் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அதுனாலே என்னைப் பேசவிடு காமாட்சி” என்றார் ஷண்முகம்.
காமாட்சி ஏதோ புரிந்தாற்போல் அமைதியாக உட்கார்ந்தாள்.
ஷண்முகம் மேலும் பேச ஆரம்பித்தார்.
“இப்போ நீ அழறியே இதுதான் உன் வாழ்க்கையிலே கடைசீ முறையா இருக்கணும். இனிமே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ அழக்கூடாது. பிரியா! சாதாரணமா எல்லாப் பொண்களும் இருக்கற மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு, யோசிக்காம, அழவேண்டிய பொண்னு நீ இல்லேம்மா. முதல்லே கண்ணைத் துடைச்சிக்கோ. இனிமே நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் அழக்கூடாது. இப்போ நான் சொல்றதைக் கவனமாக் கேளு . நான் சொல்லப் போற ஒவ்வொரு வார்த்தையும் இந்த நாட்டோட எதிர்காலம்.
“நம்ம நாடு பாரத நாடு, இதுலே தாயா இருந்து, நம்மையெல்லாம் காக்கற தெய்வம், பாரத தேவி! நாடு இன்னிக்கு இருக்கற நிலைமை தெரியுமா உனக்கு? இப்போ இருக்கற நிலமையிலே பெண்கள் தங்களோட இயல்பான கட்டுப்பெட்டித் தனத்தையெல்லாம் விட்டுட்டு, நாட்டையே காப்பாத்தற அளவுக்கு, நாட்டு மக்களைக் காப்பாத்தற அளவுக்கு, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைன்னு மஹாகவி பாரதியார் சொன்னா மாதிரி தீமைகளைப் பொசுக்கற மஹிஷாசுரமர்த்தினியா, ஒரு நல்ல சக்தியா, இந்த நாட்டுக்கே தாயா விளங்கணும். தீமைகளை அடியோடு ஒழிக்கணும். இப்போ நாட்டிலே இருக்கற லஞ்சம், ஊழல் இதையெல்லாம் அழிக்கிற விஸ்வரூபக் காளியா உருவெடுத்து கெட்டவங்களையெல்லாம் திருத்தி, அல்லது அழிச்சு, நல்லவங்களையும் நாட்டையும் காப்பாத்தற தீரம் மிகுந்த உக்கிர காளியா உருவெடுக்கணும். அதுக்காகத்தான் உன்னை எந்த அளவுக்குப் பண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பண்படுத்தத்தான் நான் உன்னோட சிறு வயசிலேருந்தே உன்னை மட்டும் பாத்துப் பாத்து வளத்தேன்.
“பெரியவ ரேகாவுக்கும் உனக்கும் ஒரே மாதிரிதான் சொல்லிக் குடுத்தேன். ஆனா அவளோட கிரகிக்கிற தன்மை எவ்ளோன்னு புரிஞ்சிண்டேன். அதுக்காக அவ முட்டாள்னு நான் சொல்லலை. சாதாரணமா எல்லாப் பெண்களைப் போல அவளும் நல்ல குணத்தோட இருப்பா. ஆனா அதுக்குமேலே வீராங்கனையா அவ வளர்றதுக்கு சந்தர்ப்பமில்லே அப்பிடீன்னு புரிஞ்சிண்டேன். ஆனா, உன்னை எப்பிடி வளக்கணும்னு முடிவு செஞ்சு, அப்பிடி வளர்க்கறதிலே மட்டும் ஒரு தனி அக்கறை காமிச்சேன், அதுக்கு ஒரு காரணம் இருக்கு.
“என்னோட வளர்ப்பு முறை, உன்னைப் புண்படுத்தி இருக்கலாம். ஆனா, நிச்சயமா நான் எதிர்பாக்கற அளவுக்குப் பண்படுத்தி இருக்கும் அப்பிடீங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. உனக்குன்னு ஒரு பெரிய பொறுப்பு இருக்கும்மா. இப்போ சொல்றேன் நீ யாரூன்னு! நீ யாரோட பொண்ணுன்னு சொல்றேன். உங்க அப்பா என்கிட்ட எதுக்காக உன்னைக் குடுத்து வளக்கச் சொன்னாருன்னு சொல்றேன். ஆனா நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு குடுக்கணும். சரியான நேரம் வரும் வரைக்கும் இந்த ரகசியத்தைக் காப்பாத்துவேன்னு சத்தியம் செய்யிம்மா, நான் உன்னை நம்பி உங்க அப்பா யாருன்னு சொல்றேன்” என்றார் ஷண்முகம்.
அவர் பேசுவதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பிரியா, கண்கள் மலர, “அப்பா என்னாலே இந்த உண்மையான அதிர்ச்சியை தாங்க முடியலை. இருந்தாலும் நான் உங்க பொண்ணுப்பா! உங்களோட பொண்ணுதான்! இப்போ நீங்க சொல்லப் போற யாரோ ஒருத்தரோட பொண்ணா நான் பொறந்திருக்கலாம், ஆனா பெரியாழ்வார் வளத்த பொண்ணு ஆண்டாள் மாதிரி நான் எப்பவுமே உங்க பொண்ணுதாம்ப்பா1 எனக்கு நீங்கதான் பெரியாழ்வார்! இப்பிடிப்பட்ட நேர்மையான ஒரு தகப்பனுக்கு வளர்த்த மகளா ஆனதுக்கு சந்தோஷப்படறேன். என்னை விடக் குடுத்து வெச்சவங்க வேற யாருமே இருக்க முடியாது! அதுனாலே எப்பவுமே உங்க பொண்ணுதான் நான். குடுத்த வாக்கை நிச்சயமா காப்பாத்துவேன். நீங்க நினைக்கிறா மாதிரி இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களைக் காப்பாத்தற ஒரு நல்ல சக்தியா, என்னை, என் மன உறுதியை நான் வளத்துப்பேன்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள் பிரியா!
“இங்கே வாம்மா” என்று பிரியாவை கிட்டே அழைத்து, அப்பிடியே தோளிலே சாய்த்துக்கொண்டு, தலையைத் தடவி, உச்சி முகர்ந்து, “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ என் பொண்ணுதாம்மா! எந்த ஜென்மத்துப் பந்தமோ? எப்போ நீ என் மகளாப் பொறந்து, என்கிட்ட இல்லாமப் போயி, என்னோட இருக்கணும்னு வரம் வாங்கிண்டு யாருக்கோ பொறந்தாலும் சரியா என்கிட்ட வந்து சேர்ந்து வளர ஆரம்பிச்சியோ, அப்பவே எனக்கு புரிஞ்சிடுத்தும்மா, நீ என் பொண்ணுதான்னு. குடுப்பினை இல்லாம கிடைக்குமா, உன்னை மாதிரி ஒரு பொண்ணு? நான் பெரியாழ்வாரோ, இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்தவரை நீதாம்மா ஆண்டாள்” என்றார் நெகிழ்ந்து.
சமாளித்துக்கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்ட ஷண்முகம், “இந்த வினாடிலேருந்து உன் கடமை ஆரம்பிக்குது. இனி மகளே உன் சமத்து” என்றார். மூத்தவள் ரேகாவும் காமாட்சியும் பிரியாவை அணைத்துக்கொண்டனர்.
***************************************************************************************************
தொலைக்காட்சியில் நேரடி ஓலிபரப்பு, பரபரப்பான அரசியல் நிகழ்வுகள்!
ஊழல் செய்து அவர் குற்றவாளி என்று எதிர்க் கட்சிகள் ஏகோபித்த எதிர்ப்பை தெரிவித்தும் அவரை, கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாதே என்கிற சுயநலத்தால், ஆளும் கட்சியைச் சார்ந்த அவரை நிரபராதி என்று நிரூபிக்க முயன்று கொண்டிருந்தது. ஆமாம், திரு.ராஜசேகர் பல காலமாக அரசியல்வாதியாகவே வாழ்ந்து, பல ஆண்டுகள் பதவிகள் வகித்து வந்த ராஜசேகர் அவர்களின் வீடு, புலனாய்வுத் துறையினரால் சோதனைக்கு ஆளாகிக் கொண்டிருந்த காட்சியை நேரிடையாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர். மக்கள் ஆர்வத்துடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலனாய்வுத் துறை மேலதிகாரி முழுவதுமாக அவர் வீட்டைச் சோதனை போட்டுவிட்டு, “அவர் வீட்டில் ஒரு தடயமும் கிடைக்கவில்லை, அவர் மேல் எந்தக் குற்றச்சாட்டும் சொல்ல முடியவில்லை” என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே அனுமதியுடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். அவள் பிரியா!
அவள் கொடுத்த சொத்து விவரங்கள், பத்திரங்கள், அனைத்தும் மேசையின் மேல் பரப்பப்பட்டன.
பிரியா பொது மக்களிடம் நேரிடையாக பேசத் தொடங்கினாள்
“இந்த அரசியல் மேதை திரு.ராஜசேகர், என் தந்தை. அதற்கு இதோ ஆதாரம். நான் இவருடைய ஒரே மகள் பிரியா.
“இவர் மிகவும் புத்திசாலி வருங்காலத்தைக் கணிக்கும் திறன் பெற்றவர். ஆனால் அந்தத் திறமைகளைத் தன் சொத்துகளைக் காப்பாற்றவும் தன் மகளான என் வருங்காலத்தை யோசித்தும் மிகவும் சாமர்த்தியமாக என்னைத் தன் வாழ்விலிருந்தே விலக்கி, வெகு காலத்துக்கு முன்பே ஷண்முகம் என்பவரிடம் ஒப்படைத்து மிகவும் புத்திசாலித்தனமாக இதுவரை இவர் செய்த ஊழல்களை மறைத்து, இவர் அநியாய வழியில் சம்பாதித்த அத்தனை சொத்துகளையும் காப்பாற்றிக்கொள்ள இவர் செய்த தந்திரமே என்னையும் சொத்துகளையும் ஷண்முகத்திடம் ஒப்படைத்தது.
“நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் நாட்டையே சுருட்டி, ஊழல் பல செய்து, சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும் இவர் போன்ற அரசியல்வாதிகளை இனம் காணுங்கள், மக்களே என்னைப் பெற்றவராயினும், யாராயினும் இனி அவர்களையெல்லாம் ஒருவர் பாக்கிவிடாமல் அத்தனை பேருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்து அவர்கள் கொள்ளையடித்த மொத்த சொத்துகளையும் மீண்டும் தேசத்துக்கு ஒப்படைப்பதே இனி என் குறிக்கோள். நம் நாட்டையும் நம்மையும் மீட்டு, நம் நாட்டை உலக அரங்கில் தலை நிமிரச் செய்வதே என் நோக்கம். நம் நாட்டின் சொத்தாகிய இந்த மொத்த சொத்துகளையும் மீண்டும் நாட்டிற்கே ஒப்படைக்கிறேன்.
“ஆமாம், இன்று முதல் நான் இவருக்கு மகளல்ல. இவர் அளித்த சொத்துகளில் ஒன்றையும் உபயோகப்படுத்தாமல் ஒரு நல்ல நோக்கத்துக்காக என்னை தன் உழைப்பில் சம்பாதித்த சாதாரண நடுத்தர வர்கத்தில் நேர்மையாக வாழ்கின்ற ஒரு ஆசிரியர், என்னை வளர்த்து ஆளாக்கிய ஆசிரியர் ஷண்முகத்தின் மகள், என் பெயர் பிரியா அல்ல, உக்கிரகாளி” என்றாள் ஆவேசமாய், ஒற்றை விரலை நீட்டி.
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஷண்முகம், “வந்தே மாதரம்” என்று ஓங்கி முழக்கமிட்டார்.
good one sir
‘வந்தே மாதரம்’! அருமையான கதை. பாராட்டுக்கள்.