தி.சுபாஷிணி

தமிழகப் பெண்களின் சாதனைப்பரல்கள் (2)

ஆண்டாள்(7-ஆம் நூற்றாண்டு இறுதி 8-ஆம் நூற்றாண்டு தொடக்கம்)

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் அன்றாடம் தம் நந்தவனத்தில் பூக்கொய்து, இறைவன் அரங்கனுக்கு மாலை தொடுத்து அணிவித்து மகிழ்வார். நளவருடம் ஆடிமாதம் சுக்கில சதுர்த்தியும் செவ்வாய்க் கிழமையும் கூடிய பூச நட்சத்திரத்தன்று, நந்தவனத்தில் மலர்களுக்கிடையே அழகிய மழலை மலரும் படுத்திருந்தது. பெரியாழ்வாருக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது. அக்குழந்தை கோவிந்தன் அருளியது என்று மகிழ்ந்து, ‘கோதை’ என்று பெயர் சூட்டி, அரங்கனின் பரிசாக எண்ணிப் பாங்காய் வளர்த்து வந்தார். தாமே தம் மகளுக்கு குருவாகி, கோதைக்குத் தமிழையும் இறை பக்தியையும் ஊட்டி வந்தார்.

அரங்கனின் அழகையும், அவன் புகழையும், அவனது திருவிளையாடல்களையும் தினந்தோறும் கதை கதையாய் அவருக்குக் கூறுவார். அதனால் கோதையும் அதைக் கேட்டுக்கேட்டு, அவருக்கு உடல் பொருள் ஆவி அனைத்தும் அரங்கன் ஆனாள்.

‘உன்னை அந்த அரங்கனுக்கே திருமணம் செய்து கொடுத்துவிடுவேன்’ என விளையாட்டாய்ப் பெரியாழ்வார் சொல்ல, கோதையும் அதை உண்மையென்று எண்ணி, ‘தான் அந்த அரங்கனுக்காகப் பிறந்தவள்’ என்றே உணரத் தொடங்கி, வாழவும் தலைப்பட்டாள். மனிதனைக் காதலிப்பது போல், மாயவனையும் காதலிக்கத் தொடங்கினாள்.

தான் சூடி அழகுபார்த்து, அந்த மாலையை அரங்கனுக்கு அணிவித்துச் சுடர்க் கொடியானாள். அரங்கனும் அகமகிழ்ந்து அதை ஏற்றுக் கொண்டார். எனவே, கோதை, ஆண்டவனையே ஆண்டதால் ‘ஆண்டாள்’ எனப் பெயர் பெற்றாள்.

 

“கருப்பூறம் நாறுமோ‘ கமலப் பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே!

இவ்வாறு தாம் இயற்றிய நாச்சியார் திருமொழியில், வெண் சங்கிடம் தம் மணாளனின் இதழ் எப்படி இருக்கும் என்று வினவுகின்றாள்; கண்ணனுடன் கொண்ட காதலை உருகி உருகி உரைக்கிறார் 143 பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழியில். கண்ணனைக் கணவனாக அடையப் பாவை நோன்பு நோற்கிறாள். அழகு வைணவத் தமிழில் முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையாக மலர்கிறாள். இதில் மானுடக் காதல் கடவுட் காதலாய் மலர்வதை நாம் உணர முடிகிறது; தன்னலம் விடுத்துச் சமுதாய நலனை அடைகிறாள். இது பரமனுக்குத் தொண்டு புரியும் பக்தியாய் மலர்கின்றது.

உள்ளம் உடல் என்ற சிந்தனை நெறியிலிருந்து மாறுபட்டுச் சரணாகதி என்னும் உயர் சிந்தனையை வெளிப்படுத்துவதாக ஆண்டாள் பாடல்கள் அமைந்திருக்கின்றன. எனவே ஆண்டாள் காதலாலும், தமிழாலும் கடவுளுக்கு ஒப்பாக உயர்ந்து நிற்கிறாள்.

படத்திற்கு நன்றி :

http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_andal

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *