அவ்வை மகள்

“பரம்பொருளுக்கு மட்டுமே நான் அடிபணிபவள்; எந்த எஜமானனுக்கும், எந்த விதிக்கும், எந்தச் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நான் அடிமை செய்வதில்லை. எனது சித்தமும், எனது வாழ்வும், நான் எனும் சுயமும் பரம்பொருளுக்கு அர்ப்பணமாகி விட்டன. அப்பரம்பொருளின் விருப்பம் அதுதானென்றால், எனது இரத்தம் முழுவதையும் சொட்டுச் சொட்டாய் வழங்க நான் என்னைத் தயார் செய்து கொண்டு விட்டேன். பரம்பொருளின் சேவையில் எந்த ஒன்றும் தியாகமில்லை. அது ஒரு பேரானந்தம்.” இது அன்னை (அன்னை – அரபிந்தோ) வாக்கு

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.”
என்ற நாவுக்கரசரின் வரிகளில் வெளிப்படும் அதே இன்பத்தை அன்னையின் வாக்கும் வழங்குகிறது.

நம் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் சந்திக்கத் தேவையான பலம், அர்ப்பணிப்பு மனப்பான்மையும், கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளும் சுபாவமுமே என்ற அன்னையின் சமூகச் சிந்தனையோடு-நம் வாழ்நாட்களைச் சுமையாக்கிக் கொள்ளாமல், சுலபமாக்கிக் கொள்வோம் தோழியரே!

இன்னாளில்-ஒரு உத்தமப் பெண்ணை நாம் நினைத்து வணங்குவது நம் கடமை. நம் உள்ளமெல்லாம் நிறைந்த அவள் உலக அரங்கில் ஒரு மாபெரும் தலைவி. நம் கண் முன்னே வாழ்ந்து, நம் முன்னே-தனது இல்லத்தின் முகப்பிலேயே, அரசுத் தலைமைப் பணி எனும் உயர்வான, சவாலான பணியை ஆற்றிக் கொண்டிருக்கும்போது, கயமை தாக்கிக் கொடுமை நிகழ கடமைப் பெண்ணாள் அவள், தனது இரத்தத்தைக் கடைசிச் சொட்டு வரையிலும் இம்மண்ணிலே வார்த்துச் சிந்திச் சென்றாள்.

அவள் உயிர் துறந்த காலை அவள் முகத்திலே அத்தனைப் பிரகாசம் தோன்றியதாம்!

அவள் எத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்ந்தாள் என்பதற்கு இது சான்று.

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம் உடம்பிலே வீரம் பொங்கும் எழுச்சியை அவள் வீர மரணம் எனும் மாபெரும் உருக்கமான நிகழ்வு உருவாக்குகிறது.

தோழியரே! மாளிகையை அனுபவிப்பவனுக்கு அதனைக் கட்டியவனுடைய கஷ்டம் தெரியாது என்பார்கள். இன்றைய இந்திய இளம் பெண்களில் பலரும் விவரம் தெரியாத குழந்தைகளாகவே வளர்க்கப் பட்டிருக்கிறார்கள், வளர்க்கப் படுகிறார்கள். இது ஆரோக்கியமான போக்கா?

கண்ணதாசன் சொல்லுவார்: “மகாராஜாக்களும், பிச்சைக்காரர்களும், பாம்புகளுமாக மண்டிக்கிடந்த ஒரு நாட்டைப் பள்ளிகளும், கல்லூரிகளும், தொழிற்கூடங்களும் நிறைந்த ஒரு நாடாக்க நம் மூதாதையர்கள் படாத பாடு பட்டார்கள்” என்று.

அன்னை இந்திரா இந்நாட்டின் பல திறப்பட்ட வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் திறமை சாலி, கடமை உணர்வு மிக்கவர், தைரியம் நிறைந்தவர்! பல்லாற்றானும் ஒரு நல்ல பெண்மணி!

உலக அரங்கிலே, அன்னை இந்திராவுக்குத் தனி மதிப்பு உண்டு. ‘இந்தியா என்றால் இந்திரா’ என்று வாயாரப் புகழும் உலகோர் நாவுகள். இந்நாளில் அவரை நினைந்து நாமும் உத்வேகம் அடைவோம்!

நமது குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் நல்ல பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிப் பேசுங்கள்.

தரணி தழைக்க வேண்டுமெனில் தரணிகள் தயாராக வேண்டும்.

தரணிகள் தயாராக வேண்டுமெனில் அவர்களது தாயார்கள் தயாராக வேண்டும்!

மாதர்களும் “மதர்களும்” தரவேண்டியது மாற்றம்-ஏமாற்றமல்ல!

 

படத்திற்கு நன்றி:http://www.thefamouspeople.com/profiles/indira-gandhi-47.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.