காயத்ரி பாலசுப்ரமணியன்

இன்று பெண்கள் கால் பதிக்காத துறை என்று எதுவுமே இல்லை எனலாம். விமானம் ஓட்டுவது முதல், அகழ்வாராய்ச்சி வரை எல்லாவற்றிலும், பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதற்காகப் பாடுபடுவதோடு அதற்குரிய புகழையும் பெறுகிறார்கள். ஆணுக்குச் சரி நிகர் சமானமாக, வேலைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், பல தரப்பட்ட பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளையும் அள்ளித் தருகிறார்கள் மிகுந்த பெருமையாய் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கவும், கேட்கவும்!

இது ஒரு புறம் இருக்கட்டும். மற்றொருமொரு பக்கத்தில், அதுவும், குறிப்பாக, வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள், விரும்பி ஏற்கும் திருமண பந்தம் என்பது தழைத்து ஓங்கும், வாழையாக இனிப்பதில்லை. மாறாக, வேப்பங்காயாகக் கசந்து போகிறது. இது நெருடலாகவும் வேதனைக்கு உரிய விஷயமாகவும் இருக்கிறது. திருமணம் ஆன, குறுகிய காலக் கட்டத்திற்குள், சண்டை, சச்சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை வளர்ந்து கொண்டே போகிறது.

புரிதலின் அடிப்படையில்தான் வாழ்க்கை என்ற எளிய சூத்திரத்தை பெண்கள் மறந்து விடுகிறார்கள். இதற்குத் தற்கால வாழ்க்கை முறை, மற்றும் பெற்றோரின் வள்ர்ப்பு முறை மற்றும் அணுகு முறையும் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம்.

கல்வி, வேலை இவை இரண்டும், மறைமுகமாக ஒரு வித மன அழுத்தத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. அதனால், பிரச்னை என்று வரும் போது, அதனை எதிர் கொள்ளும் வழி தெரியாது உடைந்து விடுகிறார்கள். குறிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு, உடனிருக்கும் பெற்றோரும், சிறிய பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கி, கணவன், மனைவி இடையே இருக்கும் நெருக்கத்தின் அளவைக் குறைத்து விடுவதோடு, தேவையற்ற நேரங்களில் தேவையற்ற விதத்தில், பெண்களுக்குத் தவறான ஊக்கத்தைத் தந்து விடுகின்றனர்.

விளைவு- பல திருமணங்கள், மணமிழந்த மல்லிகையாகி விடுகின்றன. இதில் விந்தைக்குரிய விஷயம் என்னவென்றால், தற்காலத்தில் வாழ்க்கையில் அனுசரித்துச் செல்ல ஆண்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தயாராக இல்லை என்பதே சோகமான செய்தி.!

திருமண பந்தம் என்று வரும் போது, ஆண், பெண் இருவரும் நம்பிக்கை, விட்டுக் கொடுத்தல், பொறுமை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டால்தான் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும். எனவே சிறிய பிரச்னை, தவறான புரிதல் ஆகியவை தலை காட்டும் போது, பெற்றோர்கள் சரியான விதத்தில் வழி காட்டுவதோடு, ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்வதில்லை. மாறாகப் பெண்களைத் தங்கள் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கைப்பொம்மையாக்கி விடுகின்றனர். பலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, பெண்களைத் தங்களுடனே வைத்துக் கொண்டு விடுகின்றனர்.வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதைப் பெற்றோரோ, மற்றவர்களோ பெண்களுக்கு அளிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டாலே பல விவாகரத்துக்கள் மாயமாய் மறைந்து போகும். அத்துடன் உண்மையான அன்பு என்பது உறவுகளுக்குத் தளைகளும், தடைகளும் போடாது.

இந்த உண்மையைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதோடு, தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை என்பது ஏற்றம், இறக்கமுள்ளது, இன்பம், துன்பம் இரண்டும் சேர்ந்த கலவை, அதனை எப்படி எதிர் நோக்க வேண்டும் என்ற வழிமுறையைச் சிறு வயதிலிருந்து கற்பித்தால், பெண்களின் வாழ்க்கை வளம் பெறுவதோடு, குடும்ப உறவு என்னும் இழைகளும் வலுப் பெறும்.

மகளிர் தினம் கொண்டாடும் இந்தத் தருணத்தில், பெற்றோர்கள் சிந்திக்க ஆரம்பிக்க முனைந்தால், பெண்ணின் பெருமை மேலும் உயரும்!

 

படத்திற்கு நன்றி:http://www.allaboutindia.org/women%E2%80%99s-day-sms-womens-day-greetings-text-messages-scraps

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *