காயத்ரி பாலசுப்ரமணியன்

மீரா தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியில், ஒரு முறை பார்த்துக் கொண்டாள். அதற்குள் அப்பாவும், அம்மாவும் கூப்பிடும் குரல் கேட்டது. “இதோ வந்துட்டேன்” என்று சொன்னவள், அவர்களுடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். மீராவிற்குத் திருமணம். அதற்குத் தன் தாய் வழித் தாத்தாவை நேரில் சந்தித்து, அவரின் ஆசி பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும் செல்கிறார்கள். இதற்கு மீராவின் அப்பா, லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.

“இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, உனக்கு உன் அப்பாவைப் பார்க்கப் போக வேண்டும்” என்று அம்மாவைச் சாடிக் கொண்டிருந்தார். அம்மாவின் கண்களில் கண்ணீர். ஆனாலும், அம்மா ஏதும் பேசவில்லை. 22 வருடங்களாக அவளுக்கு இது பழகி விட்டது. பல நாட்கள் அம்மாவின் முகம் வாடியிருப்பதைக் கண்டு மீரா கேட்டிருக்கிறாள். ஆனால் அம்மா ஏதும் இல்லை என்று மழுப்பி விடுவாள். முக்கியமான விழா, விசேஷம் தவிர, மீராவும், அவள் அம்மாவும் தாத்தா வீட்டுக்குச் செல்வதே இல்லை.அப்படிச் செல்லும் போது கூட, அங்கு தங்குவதில்லை. அங்கு தங்க அப்பாவும் விட மாட்டார். தாத்தாவும் கேட்டுக் கேட்டு ஓய்ந்து விட்டார். இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாத்தா மிகவும் மகிழ்ச்சியோடு, தன்னுடைய பேத்தி. மாப்பிள்ளை, மகள் மூவரையும் வரவேற்றார். “வாங்க மாப்பிள்ளை வாங்க. மீரா கண்ணு, நல்லாயிருக்கியா? உனக்குக் கல்யாணமா? மாப்பிள்ளை எல்லாம் பிடிச்சிருக்கா?” “ம்.ம்” என்று மீராவின் அப்பா ஓரிரு வார்த்தைகளில் பதில் தந்து கொண்டிருந்தார். பின்பு, தாத்தாவிற்குத் தன் மகளைப் பார்த்ததும், கண்களில் கண்ணீர் ததும்பியது. “அம்மா, நல்லாயிருக்கியா? ரொம்ப இளைச்சுப் போய்ட்டியே, உடம்பை நல்ல பார்த்துக்கம்மா”

“சரிப்பா”என்ற மகளும் தலை அசைத்தாள்.

ஓரிரு மாதங்களில், மீராவின் திருமணம் நல்லபடியாக நடந்தது. மீராவும், கணவன் வீட்டுக்குச் சென்று விட்டாள். மீரா ஓரிரு தடவை வீட்டுக்கு வந்த போதும், தங்கும் படியான சூழலில்லை. மீராவின் அப்பாவிற்கு வருத்தம். தன் மனைவியிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். மீராவின் அம்மா, அவரைத் தேற்றிக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் அனைவரும் மீரா வீட்டிற்குச் சென்றிருந்தனர். பேசிக்கொண்டே இருக்கும் போது மீரா தன் கணவனிடம், “ஏங்க, அடுத்த வாரம் ஊர்ல தேர்த்திருவிழா வருதுங்க. போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டாள்.

உடனே மீராவின் கணவர், “இப்பத்தானே ஊருக்குப் போய்ட்டு வந்த? அதுக்குள்ள அப்பாவைப் பார்க்க, ஒரு சாக்கு கிடைச்சாச்சு” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். பார்த்துக் கொண்டிருந்த மீராவின் அப்பாவிற்கு ஒரே வருத்தம். “என்னம்மா? மாப்பிள்ளை ஒரு தடவை உன்னை நம்ம வீட்டுக்கு அனுப்பக் கூடாதா?” என்ற் ஆதங்கத்துடன் கேட்டார். உடனே மகள் மெல்லிய குரலில், “இதையே தானே தாத்தாவும், உங்களிடம் கேட்டார் அப்பா? எத்தனைத் தடவை அம்மாவை நீங்க அனுப்பி வைச்சீங்க? பல நாள் சண்டை போட்டிருக்கீங்க. அம்மாவை நீங்க, உங்க, மனைவியாத்தான் பார்த்தீங்க, தாத்தாவின் மகளாப் பார்க்க மறந்துட்டீங்க. அதேதாம்ப்பா இங்க, நடக்குது. கவலைப்படாதீங்க, நான் என் கணவரிடம் புரிய வைத்து அனுமதி வாங்கி வருகிறேன். நிம்மதியா இருங்கப்பா” என்றாள் மகள்.

மீராவின் அப்பாவிற்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. இதையெல்லாம் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த மீராவின் கணவர், “பாவம், அப்பா” என்றார். மீரா, “எனக்கும் புரியுதுங்க. ஆனா இத்தனை வருஷமா, எங்க அம்மா பட்ட கஷ்டம் அவருக்குப் புரியணும். அதனால்தான் இந்தச் சின்ன நாடகம்” என்றாள் சிரித்தபடி.

வீட்டுக்கு வந்தவுடன், மீராவின் அப்பா முதல் வேலையாகத் தன் மாமனாருக்குப் போன் செய்து மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், “மாமா, நாளைக்கே உங்க பெண்ணை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன். ஒரு வாரம் அங்க தங்கியிருக்கட்டும்.” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மீராவின் தாயாருக்கு ஆச்சரியம்! ஆனால் ஏதும் பேசவில்லை. தாத்தாவின் ஊரை நெருங்குகையில், மீரா போனில் பேசினாள். “என்ன அம்மா, தாத்தாவைப் பார்க்கப் போறீயா” என்று கேட்டாள்.

“அட, இது எப்படி உனக்கு தெரியும்?” என்று அம்மா திரும்பக் கேட்டாள்.

மீரா, “அட என் அருமை அம்மாவே, எதற்கும் மசியாத யானை அங்குசத்தைப் பார்த்தவுடன் அடங்கி விடுவதில்லையா? அந்த மாதிரிதான். மகள் பாசம், என்ற அங்குசத்தை நேரம் பார்த்துப் போட்டேன். யானை அடங்கி விட்டது. இனிமேல். அது நல்ல யானையாக இருக்கும். அம்மா. பத்திரமாப் பார்த்துக் கொள்” என்று கேலி செய்தபடி மீரா போனை வைத்தாள்.

மீராவின் அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

படத்திற்கு நன்றி:http://www.coventrytelegraph.net/news/coventry-news/2011/10/26/proms-performance-celebrates-nuneaton-man-s-100th-birthday-92746-29665247

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *